Press "Enter" to skip to content

அதானி விஷயத்தில் மோதியின் மௌனம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

  • இக்பால் அகமது
  • பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், SANSAD TV

நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரை மீதான விவாதத்தின் போது, பிரபல தொழிலதிபர் கௌதம் அதானியுடன் பிரதமர் நரேந்திர மோதியின் உறவு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கௌதம் அதானியின் வெற்றிக்கு முக்கிய காரணம், பிரதமர் மோதியிடம் அவருக்கு இருக்கும் நெருக்கம்தான் என்று ராகுல் காந்தி கூறினார். பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் பதிவேட்டில் இருந்து ராகுல் காந்தியின் உரையின் சில பகுதிகளை நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்காரணமாக ராகுல் காந்தியின் உரை குறித்த முழு விவரங்களையும் இங்கு தர இயலாது.

புதன்கிழமை குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதில் அளிக்க நரேந்திர மோதி எழுந்து நின்றபோது, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு மோதி என்ன பதில் சொல்லப்போகிறார் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் ஆவலாக இருந்தனர்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் மோதி சுமார் ஒன்றரை மணி நேரம் உரை நிகழ்த்தினார், ஆனால் அவர் தனது முழு உரையிலும் கெளதம் அதானியின் பெயரை எடுக்கவில்லை. அவர் பற்றி சுட்டிக்காட்டக்கூட இல்லை.

அதானி விவகாரத்தில் பிரதமரின் மெளனம் குறித்து அரசியல் தலைவர்கள் முதல் பொது மக்கள் வரை பல்வேறு வகையில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

“எனக்கு திருப்தி இல்லை. பிரதமரின் அறிக்கையால் உண்மை வெளிப்படுகிறது. (அதானி) நண்பராக இல்லையென்றால், (பிரதமர்) சரி, விசாரணைக்கு உத்தரவிடுகிறேன் என்று கூறியிருப்பார். ஆனால் விசாரணை பர்றி அவர் பேசக்கூட இல்லை. பிரதமர் அவரை பாதுகாக்கிறார், முன்னேற உதவுகிறார் என்று இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.”என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

“சிந்தனையாளர்கள்’ நான்கு கேள்விகளைக் கேட்டார்கள், ‘பிரசாரம் செய்பவரால்’ ஒன்றுக்குக்கூட பதிலளிக்க முடியவில்லை,” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேடா ட்வீட் செய்துள்ளார்.

சிவசேனையின் மாநிலங்களவை எம்.பி., பிரியங்கா சதுர்வேதி, “அதானி குழுமத்தின் இந்த ஆண்டுக்கான செய்தி தொடர்பாளர் மற்றும் விற்பனையாளர் விருது மாண்புமிகு பிரதமருக்கு” என ட்வீட் செய்துள்ளார்.

இந்த விஷயத்தை அவர் இப்படித்தான் கையாள்வார் என்பது தெரிந்த விஷயம் என்கிறார்கள் மோதியின் அரசியல் எதிரிகள். ஆனால் அவையில் பிரதமர் மோதி அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் அதானி குறித்து மெளனம் காத்தது ஏன் என்று மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.

பாஜகவின் அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் மூத்த செய்தியாளர் விஜய் திரிவேதி இதற்கு இரண்டு காரணங்களை கூறுகிறார்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், ANI

தொழில்நுட்ப மற்றும் செயல் உத்தி ஆகிய காரணங்களைக் கருத்தில் கொண்டு விஜய் திரிவேதி இதைப் பார்க்கிறார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது அரசு தனது பணிகளை விரிவாக விளக்குவது வழக்கம் என்று அவர் கூறுகிறார். இதைத்தான் மோதி செய்திருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாக மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் பெரும்பாலான பகுதிகள் மக்களவை சபாநாயகரின் உத்தரவின் பேரில் நீக்கப்பட்டன.அந்த நிலையில் பிரதமர் அதற்கு எப்படி பதில் அளிப்பார் என்று வினவுகிறார் விஜய் திரிவேதி.

ஆனால் இது ஒரு தொழில்நுட்ப விஷயம் மட்டுமல்ல. இது செயல் உத்தி சார்ந்தது என்றும் குறிப்பிடுகிறார் விஜய் திரிவேதி.

“பிரதமர், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதன் மூலம், அவருக்கு (ராகுல் காந்தி) அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை,” என்கிறார் அவர்.

மோதியும் அதானியும்

பட மூலாதாரம், Getty Images

மக்களவையில் ராகுல் காந்தி பேசும்போது, பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர் யாரும் சபையில் இருக்கவில்லை.

“இது பாஜகவின் உத்தியின் ஒரு பகுதியா இல்லையா என்று சொல்வது கடினம். ஆனால் பாஜக ராகுல் காந்தியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற அதன் செய்தி மிகவும் தெளிவாக உள்ளது,” என்று விஜய் திரிவேதி குறிப்பிட்டார். .

மக்களவையில் விவாதத்தின் போது மூத்த பத்திரிகையாளர் நீரஜா செளத்ரி மக்களவை செய்தியாளர் மாடத்தில் இருந்துள்ளார்.

“பிரதமர் இதைப் பற்றி ஏதாவது சொல்வார் என்று அனைவரும் காத்திருந்தனர். ஆனால் பாஜகவும் பிரதமரும் உத்தியின் ஒரு பகுதியாக அதானியிடம் இருந்து முற்றிலும் விலகிவிட்டதாகத் தெரிகிறது,” என்று பிபிசியின் நாள் முழுவதிலுமான போட்காஸ்ட் உரையாடலின் போது அவர் தெரிவித்தார்.

அதானி விவகாரத்தில் பாஜகவும், மோதி அரசும் எதுவும் பேசத்தயங்குவதாக, நீண்ட காலமாக பாஜக செயல்பாட்டை கவனித்து வரும் மூத்த செய்தியாளர் ராதிகா ராமசேஷன் கருதுகிறார்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், ANI

“செபி அல்லது மைய கட்டுப்பாட்டு வங்கி இந்த விஷயத்தில் என்ன செய்யவேண்டுமோ அதை செய்யும். ஆனால் கட்சிக்கோ அரசுக்கோ இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே கட்சியின் நிலைப்பாடு. மோதி தனது உரையில் அதானியை குறிப்பிடாததற்கு இதுவே காரணம்,” என்கிறார் அவர்.

அதானி

பட மூலாதாரம், Getty Images

மக்களவையில் மோதியின் தேர்தல் பேச்சு

விவசாயிகள், இலவச ரேஷன், உறுதியான வீடுகள், சமையல் எரிவாயு, தடுப்பூசி, விண்மீன்ட்அப்கள், நெடுஞ்சாலைகள், தொடர் வண்டிபாதைகள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியாவிற்கு விமான நிலையங்கள் என இரு அவைகளிலும் சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த தனது உரையில் மோதி குறிப்பிட்டார்.

இது தவிர எதிர்க்கட்சிகளை தாக்கிய அவர், ஊழல், பணவீக்கம், தீவிரவாத தாக்குதல் என அனைத்திற்கும் அக்கட்சிகளை பொறுப்பாக்கினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் சங்கை அவர் ஊதிவிட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் விஜய் திரிவேதி இந்தக்கூற்றுடன் உடன்படவில்லை.

மோதி பேசும் போதெல்லாம் அவரது பேச்சு தேர்தல் பேச்சு போலவே தெரிகிறது என்கிறார் அவர்.

மோதிக்கு முன்பு இருந்த பிரதமர் சபையில் பேசும் போதெல்லாம் மிகவும் அமைதியாகப் பேசுவார். ஆனால் மோதி முற்றிலும் மாறுபட்ட முறையில் பேசுகிறார் என்று அவர் குறிப்பிட்டார்.

மோதி பேச்சுத்திறனுடன் உரையாற்றுகிறார். இதுபோன்ற உரைகளை கேட்டு நமக்கு பழக்கமில்லை. இது வார்த்தைகள் அல்ல, மோதியின் பேச்சுத்திறமையின் ஆச்சரியம் என்று விஜய் திரிவேதி கூறுகிறார்.

இரண்டு நாட்களிலும் மோதி புதிதாக எதுவும் பேசவில்லை. புதிய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை, எனவே இதை தேர்தல் பேச்சு என்று சொல்வது முற்றிலும் தவறு என்று விஜய் திரிவேதி தெரிவித்தார்.

ஆனால் எந்தத் தலைவர் எது பற்றிப்பேசினாலும் , அவர் மனதில் எப்போதும் தேர்தல்தான் ஓடுகிறது என்பதும் உண்மை.

2024 தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று மோதியும், பாஜகவும் கருதுவதால், இப்போது 2047 பற்றி பேசுகிறார்கள் என்று விஜய் திரிவேதி கூறுகிறார். 2024 தேர்தலில் பாஜக வெற்றிபெறப் போகிறது என்பதற்கான சமிக்ஞைகளை மோதியும் பாஜகவும் தருவதாக நீரஜா செளத்ரியும் கருதுகிறார்.

ராகுல் vs மோதி இமேஜ் போர்

கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீநகர் வரை சுமார் 3500 கிலோமீட்டர் தூர ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை ராகுல் காந்தி சமீபத்தில் முடித்தார். அதன் பிறகு அவர் நாடாளுமன்றத்தில் பிரதமரை கடுமையாக தாக்கினார்.

இப்படிப்பட்ட நிலையில் ராகுல் காந்திக்கும், நரேந்திர மோதிக்கும் இடையே கருத்துப் போர் நடக்கிறதா, இதில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

‘பாரத் ஜோடோ யாத்திரை’ மற்றும் அவையில் வலுவான பேச்சுக்குப் பிறகு ராகுல் காந்தியின் மதிப்பீடு அவரது ஆதரவாளர்களிடையே நிச்சயமாக அதிகரித்துள்ளது. ஆனால் இது பாஜக மற்றும் குறிப்பாக நரேந்திர மோதியின் ஆதரவாளர்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை,” என்று விஜய் திரிவேதி கூறினார்.

“ரஃபால் ஒப்பந்தம், பெகாசஸ், இப்போது அதானி ஆகிய மூன்று விஷயங்களில்தான் எதிர்க்கட்சிகள் குறிப்பாக ராகுல் காந்தி மோதியை அதிகம் தாக்கினார். ஆனால் இவை மூன்றும் மோதியின் இமேஜை இதுவரை பாதிக்கவில்லை” என்கிறார் விஜய் திரிவேதி.

ராகுல் காந்தியும் எதிர்க்கட்சிகளும் இதை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே கொண்டுபோய் மக்கள் மத்தியில் வைத்து தொடர்ந்து போராடினால் ஏதாவது பலன் ஏற்படலாம் என்கிறார் அவர்.

‘சுற்றி வளைக்கப்பட்டுள்ள’ மோதி அரசு

ஆனால், இந்த விவகாரத்தில் அரசு சுற்றி வளைக்கப்பட்டதாக தெரிகிறது என்கிறார் நீரஜா செளத்ரி.

“அதானி விவகாரம், இந்த ஒன்பது ஆண்டுகளில் மோதிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால் என்று நான் நினைக்கிறேன். அவர் அதிலிருந்து விலகியிருந்து சேதத்தை கட்டுப்படுத்துவார்,” என்று அவர் கூறினார்.

ராகுல் காந்தியின் உரையின் சில பகுதிகளை நீக்க மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டாலும் பொதுமக்களுக்கு ஒரு செய்தி சென்றுள்ளது என்று ராதிகா ராமசேஷன் குறிப்பிட்டார்.

அதானி குறித்து சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மோதி அரசும், பாஜகவும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று அவர் கூறுகிறார்.

“சர்வதேச ஊடகங்கள் மட்டும் இதைப் பற்றி பேசவில்லை. அதானியுடன் வணிகம் வைத்திருக்கும் வெளிநாட்டு வங்கிகளும் தங்கள் ஒப்பந்தங்களை மாற்றுகின்றன அல்லது ரத்து செய்கின்றன. முதன்முறையாக இந்தியாவின் ஒரு ஊழலில் உலகளாவிய தாக்கத்தை பார்க்கமுடிகிறது,” என்று ராதிகா ராமசேஷன் குறிப்பிட்டார்.

நெருக்குதல் இருக்கும் காரணத்தால்தான் மோதி, தனது அரசின் செயல்பாடுகள் குறித்து சபையில் அதிகம் பேசியதாக அவர் கூறுகிறார். தன்னையும் தனது அரசையும் பாதுகாப்பதற்காகவே மோதி இவ்வளவு பேசினார் என்றார் அவர்.

“மோதி அரசு மக்களுக்காக எவ்வளவோ செய்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் அதன் மீது சேற்றை வாரி இறைக்கின்றன. இவ்வளவு பிரபலமான பிரதமரை மோசமாக சித்தரிக்க முயற்சி செய்கின்றன என்று வரும் நாட்களில் பாஜக பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும்,” என்று ராதிகா ராமசேஷன் சுட்டிக்காட்டினார்.

“ராகுல் காந்தி தனது கருத்தை வலுவாகக் கூறினார். மக்கள் அது பற்றி விவாதிக்கிறார்கள். ஆனால் பாஜகவின் எதிர் வியூகம் அவ்வளவு திறம்பட இருக்கவில்லை.”என்றார் அவர்.

ஆனால், “நீண்ட நாட்களுக்குப் பிறகு நாடாளுமன்றம் உயிர் பெற்றுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்” என்று நீரஜா சௌத்ரி குறிப்பிட்டார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »