பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் வருமான வரித்துறை நடத்திய ஆய்வு நிறைவடைந்தது.
இதையடுத்து அத்துறையின் அதிகாரிகள் குழு பிபிசி அலுவலகங்களை விட்டு வெளியேறியது.
இதுதொடர்பாக பிபிசியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எமது அலுவலகங்களில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டுச் சென்று விட்டார்கள். அதிகாரிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த விவகாரம் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
“எங்களது ஊழியர்களுக்கு நாங்கள் ஆதரவளித்து வருகிறோம். அவர்களில் சிலர் நீண்ட நேரம் விசாரணைக்கு உட்பட்டுத்தப்பட்டார்கள் அல்லது இரவு முழுவதும் அலுவலகத்திலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களின் நலனுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். எங்களது செய்தி வழங்கும் பணி சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளது. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் உள்ள எங்களது நேயர்களுக்கு தொடர்ந்து செய்திகளை வழங்க கடமைப்பட்டிருக்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பிபிசி என்பது நம்பிக்கைக்குரிய, சுதந்திரமான ஊடக நிறுவனம். அச்சம் மற்றும் சார்புத்தன்மை இன்றி தொடர்ந்து பணியாற்றும் எங்களது ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்களுடன் என்றும் நாங்கள் துணை நிற்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்து பிரிட்டனில் பிபிசியின் ஆவணப்படம் ஒளிபரப்பான சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
முன்னதாக, பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வு நடவடிக்கைக்கு ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பல்வேறு பத்திரிகை சங்கங்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தன.
பிபிசி ஆவணப்படத்தில் என்ன இருந்தது?
2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்தின் போது மோதியின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பும், பிரிட்டன் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசி பெற்ற ‘வெளியிடப்படாத அறிக்கையை’ ஆவணப்படம் எடுத்துக்காட்டுகிறது.
இந்து யாத்ரீகர்கள் சென்ற ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட மறுநாள் கலவரம் தொடங்கியது. டஜன் கணக்கானோர் அதில் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் 1,000க்கும் மேற்பட்ட மக்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
அந்த வன்முறையில் “தண்டனை கிடைக்காத சூழலுக்கு” மோதியே “நேரடி பொறுப்பு” என்று வெளியுறவு அலுவலக அறிக்கை கூறுகிறது.
2005ஆம் ஆண்டில், “மத சுதந்திரத்தின் கடுமையான மீறல்களுக்கு” பொறுப்பாகக் கருதப்படும் வெளிநாட்டு அதிகாரிகளின் நுழைவைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் மோதிக்கு அமெரிக்கா விசா மறுத்தது.
இந்த விவகாரத்தில் நரேந்திர மோதி நீண்ட காலமாகவே தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்ததுடன் கலவரத்திற்கும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. 2013இல், உச்ச நீதிமன்ற குழுவும் அவர் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.
பிபிசி அழைப்பை நிராகரித்த அரசு
இந்த ஆவணப்படத்திற்கு பதிலளிக்க இந்திய அரசுக்கு உரிமை வழங்கப்பட்டதாகவும் ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் பிபிசி கடந்த மாதம் கூறியது.
“அந்த ஆவணப்படம் ‘கடுமையாக ஆராயப்பட்டது’ என்றும், ‘பரந்த அளவிலான கருத்துக்கள், சாட்சிகள்’ மற்றும் நிபுணர்கள் அதற்காக அணுகப்பட்டனர். பாஜகவில் உள்ளவர்களின் பதில்கள் உட்பட பல தரப்பினரின் கருத்துக்களை வழங்கியுள்ளோம்” என்றும் பிபிசி குறிப்பிட்டிருந்தது.
இந்தியாவில் இது புதியது அல்ல
அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைப்புகளை குறி வைப்பது இந்தியாவில் அசாதாரணமான விஷயம் அல்ல.
2020ஆம் ஆண்டில், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அதன் இந்திய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது, மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியது.
மற்ற உள்ளூர் அரசு சாரா அமைப்புகளுடன் சேர்ந்து குழந்தைகள் கல்வி, பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து வரும் ஆக்ஸ்பாம் அமைப்பின் அலுவலகத்திலும் கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்டது.
2021ஆம் ஆண்டில் அரசாங்கத்தைப் பற்றி எதிர்மறையான செய்திகளை வெளியிட்ட பின்னர், வருமான வருத்துறை அதிகாரிகள் நான்கு ஊடகங்களில் சோதனை நடத்தியதாக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
அறிக்கைடர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற லாப நோக்கமற்ற குழுவின் கூற்றுப்படி, நரேந்திர மோதி மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பத்திரிகை சுதந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
அந்த குழுவின் உலக பத்திரிகை சுதந்திர குறியீடு பட்டியலில் இடம்பிடித்துள்ள 180 நாடுகளில் இந்தியா 150வது இடத்தைப் பிடித்துள்ளது, இது 2014ஆம் ஆண்டில் இருந்து 10 இடங்கள் குறைந்த நிலையாகும்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com