Press "Enter" to skip to content

டெல்லி ஜே.என்.யூ மோதலில் தமிழக மாணவர் மீது தாக்குதல் – என்ன நடந்தது?

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் காயமடைந்தார்.

100 மலர்கள் (100 Flowers) என்ற மாணவர் குழுவிற்கும், வலதுசாரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் சங்கமான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்திற்கும் (ஏ.பி.வி.பி) இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவர், சேதப்படுத்தப்பட்ட மாணவர் சங்க அலுவகலம், சுவற்றில் எழுதப்பட்ட வலதுசாரி அரசியல் வாசகங்கள் ஆகிய படங்களும் காணொளிப் பதிவுகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

என்ன நடந்தது?

100 மலர்கள் என்பது புத்தக விவாதங்கள், படங்களை திரையிடுவது போன்ற நிகழ்வுகளை நடத்தி வரும் ஒரு மாணவர் குழு. நேற்று மாலை 9 மணிக்கு 100 மலர்கள் குழுவினர் TEFLAS என்ற மாணவர் சங்கத்தின் அலுவலக அறையில் ‘ஜானே பி தோ யாரொ’ என்ற இந்தி திரைப்படத்தைத் திரையிட இருந்தனர்.

இதே சமயம், அங்கு ஏ.பி.வி.பி அமைப்பினர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடக் கூடியிருந்ததாக தெரியவருகிறது. அவர்கள் திரைப்பட நிகழ்விற்கு இடமளிக்காமல் பிரச்னை செய்ததாகவும் பெரியார் உள்ளிட்டத் தலைவர்களின் படங்களைச் சேதப்படுத்தியதாகவும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

ஏ.பி.வி.பி அமைப்பினர் TEFLAS அலுவலகத்தின் சுவற்றில் சத்ரபதி சிவாஜியின் உருவப்படத்தை மாட்டியிருந்தனர் என்றும், இடதுசாரி அமைப்பினைச் சேர்ந்த மாணவர்கள் இதனைச் சேதப்படுத்தியதாகவும் இதனையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள்.

‘பெரியார் படத்தை உடைத்தது யார்?’

இச்சம்பவம் குறித்து, காயமடைந்த தூத்துக்குடியைச் சேர்ந்த நாசர் முகமது மொய்தீன் என்ற மாணவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், ஏ.பி.வி.பி உறுப்பினர்கள் திரையிடலை நடக்க விடாமல் தடுத்ததாகவும், 100 மலர்கள் குழுவின் மாணவர்களைத் தாக்கியதாகவும் கூறினார். நாசர் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் மூலக்கூறு மருத்துவத்தைப் பற்றிய முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்.

“சம்பவத்தைக் கேள்விப்பட்டு நாங்கள் அங்கே சென்றபோது, பெரியார், மார்க்ஸ், லெனின் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. பெரியார் படத்தை யார் சேதப்படுத்தியது யார் என்று நான் கேட்டபோது, தாம்தான் அதைச் செய்ததாகக் கூறி ஏ.பி.வி.பி உறுப்பினர்கள் கனமான ஒரு பொருளைக்கொண்டு என்னையும் தாக்கினர்,” என்றார் நாசர். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

ஜே.என்.யூ மோதலில் தமிழக மாணவர் மீது தாக்குதல்

மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட ஆம்புலன்சில் இருந்தபோது அதனை மறித்து ஏ.பி.வி.பி அமைப்பினர் பிரச்சனை செய்ததாகவும் நாசர் கூறினார்.

‘ஆம்புலன்சில் இருந்தவர்களைத் தாக்கினர்’

100 மலர்கள் அமைப்பிற்கு ஆதரவாக எஸ்.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும் வந்ததாக பிபிசி தமிழிடம் கூறினார் அங்கிருந்த மற்றொரு மாணவரான இளையகுமார்.

“நாசரை பல்கலைகழக மருத்துவ மையத்திற்குக் கொண்டு செல்ல ஆம்புலன்சில் ஏற்றினோம். அவரோடு அவரது ரூம்மேட்டும் நானும் இருந்தோம். அப்போது ஏ.பி.வி.பி உறுப்பினர்கள் ஆம்புலன்சில் இருந்த எங்களைத் தாக்கினர். மேலும் மருத்துவ மையத்திற்கு வந்தும் எங்கள் மீது வசைபொழிந்தனர்,” என்றார் இளையகுமார்.

இதனையடுத்து மருத்துவ மையத்தில் இருந்த பணியாளர்கள் நாசரை தில்லியின் சஃதார்ஜங் மருத்துவமனைக்குச் செல்லும்படிப் பரிந்துரைக்கவே, அவர் அங்கு கொண்டுசென்றதாகவும், ஞாயிறு இரவு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், திங்கள் காலை விடுவிக்கப்பட்டதாகவும் இளையகுமார் தெரிவித்தார்.

ஜே.என்.யூ மோதலில் தமிழக மாணவர் மீது தாக்குதல்

“வேறெதையும்விட பெரியாரின் படம் அங்கிருந்ததுதான் அவர்களுக்குப் பெரிய பிரச்சனையாக இருந்தது,” என்கிறார் அவர்.

தாக்கப்பட்ட தமிழக மாணவர் நாசர் இச்சம்பவம் குறித்து துணைவேந்தரிடம் புகார் அளிக்கவிருப்பதாகக் கூறினார்.

ஏ.பி.வி.பி. தரப்பு கூறுவது என்ன?

இக்குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறது ஏ.பி.வி.பி.

பிபிசி தமிழிடம் பேசிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஏ.பி.வி.பி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆதர்ஷ் ஜா, “இது இடதுசாரி மாணவர் அமைப்புகளின் பொய்ப்பிரசாரம்” என்றார்.

“TEFLAS அலுவலகத்தில் மார்க்ஸ், லெனின், போன்ற இடதுசாரி தலைவர்களின் உருவப்படங்கள் உள்ளன. நேற்று நாங்கள் சத்ரபதி சிவாஜியின் உருவப்படத்தை அங்கு வைக்கச் சென்றபோது, இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதைத் தடுத்தனர். நாங்கள் அதையும் மீறி அதை வைத்தபோது, அப்படத்தை அவர்கள் சேதப்படுத்தி அகற்றினர். இதனை நாங்கள் தட்டிக்கேட்ட போது அவர்கள் எங்களைத் தாக்கினர்,” என்றார்.

சென்ற வருடம் மஹா ராணா பிரதாப்பின் உருவப்படத்தை அதே இடத்தில் வைக்கச் சென்றபோதும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறுகிறார். “சென்ற வருடம் அவர்கள் ஏ.பி.வி.பிக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார்கள். இவ்வருடம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்,” என்றார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »