Press "Enter" to skip to content

ரஷ்ய அதிபர் புதினின் 2 மணி நேர உரை: இதில் உண்மை, பொய் எவ்வளவு?

பட மூலாதாரம், Getty Images

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தமது நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். இது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது.

அந்த உரையில், அவர் யுக்ரேனில் நடந்த போர் குறித்து தொடர்ச்சியாக சில கருத்துக்களை வெளியிட்டார். அத்துடன் மேற்கு நாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.

புதினின் அந்த சில கருத்துக்கள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பது தொடர்பாக பிபிசி ஆராய்ந்தது.

“2014 க்குப் பிறகு யுக்ரேனில் நிறுவப்பட்ட நியோ-நாஜி ஆட்சி”

யுக்ரேனில் ரஷ்யாவின் படையெடுப்பை நியாயப்படுத்தும் வகையில், புதின் பலமுறை ஆதாரமற்ற கூற்றுக்களை வெளியிடும்போது “நவீன -நாஜி ஆட்சி” பற்றி பேசுகிறார்.

2019இல் யுக்ரேனின் கடைசி நாடாளுமன்ற தேர்தலில், தீவிர வலதுசாரி வேட்பாளர்களுக்கான ஆதரவு 2% ஆக இருந்தது, இது பல ஐரோப்பிய நாடுகளை விட மிகக் குறைவு.

அதிபர் வொலோடிமீர் ஸெலென்ஸ்கி ஒரு யூதர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் ஹோலோகாஸ்டில் இறந்தவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் யுக்ரேனில் தீவிர வலதுசாரி குழுக்கள் உள்ளன – அதில் மிக உயர்வானது அசோவ் படைப்பிரிவு – அது நவீன நாஜி சித்தாந்தத்திற்கு சாதகமான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

2014இல் கிழக்கு யுக்ரேனின் பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளை எதிர்ப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. பின்னர் யுக்ரேனிய ராணுவத்திற்குள் ஒரு பிரிவாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

“யுக்ரேனிய ஆயுத படைகளின் படைப்பிரிவுகளில் ஒன்று… ஹிட்லர் பிரிவைப் போலவே எடெல்வீஸ் என்ற பெயரைப் பெற்றது”

புதின் ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

இங்கே, புதின் ஒரு யுக்ரேனிய ராணுவ பிரிவையும் நாஜிக்களின் முதலாவது மலை வீரர்கள் பிரிவையும் ஒப்பிட்டுப் பேசுகிறார் – நாஜி வீரர்கள் எடெல்வீஸ் மலரை தங்களின் படைப்பிரிவின் அடையாளமாக கொண்டிருந்தனர். இரண்டாம் உலகப் போரிலும் அவர்களே அதிக போர்க்குற்றங்களைச் செய்தனர்.

பிப்ரவரி 14ஆம் தேதி அதிபர் ஸெலென்ஸ்கி தமது ராணுவத்தின் 10வது மலைத் தாக்குதல் படைப்பிரிவுக்கு கெளரவ பட்டத்தை வழங்கினார். அப்போது அதற்கு அவர் சூட்டிய பெயர் எடெல்வீஸ்.

அடுத்த நாள், ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஒரு ட்வீட்டில் யுக்ரேனில் நாஜிக்கள் இருப்பதற்கான “ஆதாரம்” வெளிப்பட்டுள்ளதாக கூறியது.

ஆனால் அல்பைன் பகுதிகளில் வளரும் எடெல்வீஸ் மலர் – குரோஷிய மலை மீட்பு சேவை, சுவிஸ் ராணுவ ஜெனரல்கள் மற்றும் போலந்தின் 21வது ரைபிள்ஸ் படைப்பிரிவு உள்ளிட்ட பிற ஐரோப்பிய ராணுவ மலைப் பிரிவுகளால் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது.

ரஷ்யாவில் கூட எடெல்வீஸ் என்ற சிறப்புப் பிரிவு இருந்தது. ரோஸ்க்வார்டியாவின் 17வது சிறப்புப் பிரிவிற்கு 2011இல் இந்த தலைப்பு வழங்கப்பட்டது. 2016இல் அந்த பெயர் அவாங்வார்ட் என மாற்றப்பட்டது.

“யுக்ரேன் அணு ஆயுதங்களைப் பெறும் முயற்சிகளை நாங்கள் நினைவில் கொள்கிறோம். ஏனென்றால் அவர்கள் அதைப் பற்றி பகிரங்கமாகப் பேசுகிறார்கள்.”

புதின் ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் அணு ஆயுதங்களைப் பெற முயற்சித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதற்கு முன்னர் இந்தக் கூற்றை முன்வைத்த புதின் – அதற்கு ஆதாரமாக எதையும் வழங்கவில்லை.

முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்தபோது, அணு ஆயுதங்கள் யுக்ரேனில் இருந்தன, ஆனால் 1994இல் யுக்ரேன் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதைத்தொடர்ந்து பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஈடாக அவற்றைக் கைவிட்டது.

2021ஆம் ஆண்டில், ஜெர்மனிக்கான யுக்ரேனிய தூதர் ஆண்ட்ரி மெல்னிக், யுக்ரேன் நேட்டோவில் சேர முடியாவிட்டால், அணுசக்தி இல்லாத நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

2022ஆம் ஆண்டில் அதிபர் ஸெலென்ஸ்கி, யுக்ரேன் தனது அணுசக்தி திறன்களை “கைவிட்டிருந்தாலும்” அதற்கு “பாதுகாப்பு இல்லை” என்று கூறினார்.

ஆனால் யுக்ரேனிய அரசாங்கம் அணு ஆயுதங்களைப் பெறுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை. 2021இல் வெளியிட்ட ராணுவ மூலோபாய ஆவணத்தில் அவ்வாறு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA), யுக்ரேனில் “அமைதி நடவடிக்கைகளுக்காக, அணுசக்தி பொருட்கள் பயன்படுத்தப்படுவதற்கான எந்த அறிகுறிகளையும் தாம் காணவில்லை என்று கூறியது.

“2022இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.1% மட்டுமே குறைந்துள்ளது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் ரஷ்ய பொருளாதாரம் சரிவைக் காணும் என அவர்கள் கணித்ததை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்”

ரஷ்யா புதின் உரை

பட மூலாதாரம், Getty Images

ரஷ்ய பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே சுருங்கிவிட்டது என்று புதின் சொல்வது சரிதான்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சமீபத்திய அறிக்கையில் 2.2% மதிப்பீட்டிற்கு வெகு அருகே ரஷ்ய மொத்த உள்நாட்டு உற்பத்தியால் அளவிடப்படும் பொருளாதாரம் 2.1% என்ற அளவுக்கு சுருங்கியதாக ரஷ்யாவின் புள்ளியியல் நிறுவனம் கூறுகிறது.

அந்த நிலைமையே ரஷ்யாவை இன்னும் ஐஎம்எஃப் பட்டியலில் மிக மோசமாகச் செயல்படும் நாடாக ஆக்குகிறது. ஆனால் எதிர்பார்த்ததை விட அந்த சதவீதம் குறைவாகி வருவதை அந்த அமைப்பு உறுதிப்படுத்துகிறது.

ரஷ்ய வர்த்தகம் அதற்கு எதிராக பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்தாத நாடுகளுக்கு திருப்பி விடப்படுவதாக ஐஎம்எஃப் மேலும் கூறியது.

உதாரணமாக, மேற்கத்திய நாடுகள் கொள்முதலைக் கட்டுப்படுத்தி பொருளாதாரத் தடைகளை விதித்ததால், இந்தியாவும் சீனாவும் ரஷ்ய எண்ணெய்யை அதிகம் வாங்கும் நாடுகளாக மாறிவிட்டன.

ஜூலை 2022 இல், ஐஎம்எஃப் அந்த ஆண்டிற்கான ரஷ்ய மொத்த உள்நாட்டு உற்பத்தி 6% சுருங்கும் என்று கணித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »