Press "Enter" to skip to content

ஆளுநர் ரவி Vs முதல்வர் ஸ்டாலின்: மீண்டும் முற்றும் மோதல் – முன்னாள் கர்னல், ஆளுநரின் சர்ச்சை பேச்சு – பொங்கிய திமுக அமைச்சர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் தி.மு.க. நிர்வாகி உள்ளிட்டவர்களால் தாக்கிக் கொல்லப்பட்டது குறித்த கண்டனக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் மீது தாக்குதல் நடத்த வைத்துவிடாதீர்கள் என ராணுவத்தின் முன்னாள் கர்னல் ஒருவர் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ வீரர் பிரபுவின் படுகொலையை கண்டித்தும் பா.ஜ.கவின் பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமியின் வீடு தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நேற்று (பிப்ரவரி 21) உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

அதில் கலந்து கொண்ட பா.ஜ.கவின் தேசியக் குழு உறுப்பினரும் முன்னாள் ராணுவ வீரருமான கர்னல் பாண்டியன் என்பவர் பேசிய பேச்சுகள்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

“இந்திய ராணுவ வீரர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள். அவர்களைச் சீண்டுவது சரியல்ல. ராணுவத்தில் பணிபுரிந்த பிரபு அவர்களை தி.மு.க-வைச் சேர்ந்த கவுன்சிலர் படுகொலை செய்திருக்கிறார்.

தி.மு.க தைரியத்தால்தான் ராணுவ வீரரைக் கொலை செய்திருக்கிறார்கள். இது போன்று இனி நடக்கக் கூடாது. இங்கே அமர்ந்திருக்கும் அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களும் குண்டு வைப்பதிலே கெட்டிக்காரர்கள், சுடுவதிலே கெட்டிக்காரர்கள், சண்டையிடுவதிலே கெட்டிக்காரர்கள், இந்த வேலைகள் எல்லாம் எங்களுக்கு நன்றாகவே தெரியும். இதையெல்லாம் நாங்கள் செய்வதாக இல்லை.

எங்களைச் செய்ய வைத்துவிடாதீர்கள் என்றுதான் தமிழக அரசை எச்சரிக்க விரும்புகிறேன்” என்று பேசியதோடு மேலும் சில கருத்துகளையும் தெரிவித்தார்.

இது அந்தத் தருணத்திலேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்குப் பிறகு, செய்தியாளர்கள் அவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, மீண்டும் அதே கருத்தைத் தெரிவித்து செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பாண்டியன்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதுபோன்ற பேச்சுக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென காங்கிரசின் சட்டமன்ற கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவடைந்த பிறகு பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து இது தொடர்பாக மனு ஒன்றையும் அளித்தார்.

இதையடுத்து ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு வெளியிடப்பட்டது.

அந்தப் பதிவில், “ஆளுநரை முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சந்தித்து, திமுக கவுன்சிலர் தலைமையிலான ஆயுத கும்பலால் ராணுவ வீரர் எம். பிரபு கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும், மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்தும் கூட்டு வேதனையை பகிர்ந்து கொண்டனர். உண்மையில், இது மிகவும் கவலைக்குரிய விஷயம்” என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பாண்டியனின் பேச்சின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், இரு பிரிவினருக்கு இடையில் மோதலைத் தூண்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

முன்னாள் வீரர்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளதா?

ஆளுநர் ரவி

முன்னாள் ராணுவத்தினர் பொதுவாக இம்மாதிரி நிகழ்வுகளில், இதுபோன்ற தொனியில் பேசுவதில்லை. ஆகவேதான் பாண்டியனின் பேச்சு பலத்த எதிர்வினைகளை ஏற்படுத்தியிருந்தது. உண்மையில் முன்னாள் ராணுவத்தினருக்கென கட்டுப்பாடுகள் ஏதும் இருக்கிறதா?

“அப்படி கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. ஓய்வுபெற்றுவிட்டால் அவர்கள் சாதாரண பொதுமக்களைப் போலத்தான். ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு போதுமான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் அவர் அவ்வாறு பேசிவிட்டார். முதல்வர் அந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை கொடுக்கவில்லை என்பதால் அப்படிப் பேசிவிட்டார். அவருடைய ஆதங்கத்தை அரசுக்கு எதிரானதாக எடுத்துக்கொள்ளக்கூடாது” என பிபிசியிடம் தெரிவித்தார் தேசிய முன்னாள் ராணுவத்தினர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஜி. சங்கரன்.

இது குறித்து பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளரான மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, “ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் செய்ய மாட்டோம். ஆனால், செய்யத் தூண்டிவிடாதீர்கள் என்று சொன்னதற்கே ஊடகங்கள் பதைபதைத்துப் போகின்றன. எங்கள் மாநிலத் தலைவர் கையை வெட்டுவோம் என்று சொன்ன கலைராஜன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? திருவாரூரிலிருந்து திரும்பிப் போக மாட்டாய் என்று சொன்னவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க. தீவிரவாதிகளை அனுப்பி ஆளுநரை கொலை செய்வோம் என்ற சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைதுசெய்தார்களா? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அருகதையில்லாத தி.மு.க. இவர் மீது மட்டும் ஏன் வழக்கு பதிவுசெய்ய வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் ரவி

மேலும், தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பிரியாணிக் கடையில் நடந்த தாக்குதலை நேரில் சென்று விசாரித்தார். இப்போது ராணுவ வீரரின் வீட்டிற்கு சென்று விசாரித்திருக்கலாமே என்றும் கூறினார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை கருத்துத் தெரிவித்திருப்பதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி விடுத்துள்ள அறிக்கையில், ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

“ஒரு கட்சியின் சார்பில் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் அளித்த கோரிக்கையை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடும் ராஜ் பவன், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சூதாட்டத் தடை மசோதாவின் நிலை என்ன என்பதை எப்போது வெளியிடப்போகிறது?

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் குடிதண்ணீர் பிடிக்கும் இடத்தில் குடும்பத்தினரிடையே நடந்த வாய்த்தகராறு முற்றியதில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் ராணுவ வீரர் பிரபு என்பவர் தாக்கப்பட்டு மரணமடைந்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டிருப்பவர் ஆளும் கட்சி கவுன்சிலராக இருக்கிறார் என்பதைத் தவிர குடும்ப ரீதியான இந்தத் தகராறில் அரசியல் சார்ந்த பிரச்னைகள் துளியும் கிடையாது.

இதன் பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வலிந்து கொண்டுவரப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைக்கும் சூழ்நிலை வரும். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைமையை உருவாக்குவோம் என பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசவைக்கப்பட்டுள்ளார்.

சட்டரீதியான நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுவரும் நிலையில், ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அரசியல்பார்வையுடன் பதிவுகளை இடுவது என்பது உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான செயலே அன்றி வேறில்லை எனக் கருத வேண்டியுள்ளது.

ஆளுநருக்குரிய வேலை என்னவோ அதில் கவனம் செலுத்துவதே மக்களின் வரிப்பணத்தில் அவர் பெறும் ஊதியத்திற்கு உண்மையானதாக இருக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.

ஆளுநருடனான மோதல் போக்கை சில வாரங்களாக தவிர்த்து வந்த ஆளும் அரசு தரப்பு, தற்போது பொன்முடி அறிக்கை மூலம் மீண்டும் ஆளுநரை விமர்சித்து கருத்துக்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. இதனால் மீண்டும் ஆளுநர் – முதல்வர் இடையிலான இணக்கமற்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியிருப்பதாக கருதப்படுகிறது.

கிருஷ்ணகிரியில் நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரும் இவரது தம்பி பிரபுவும் இந்திய ராணுவத்தில் பணியாற்றிவருகின்றனர். நாகராசம்பட்டி பேரூராட்சியின் ஒன்றாவது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சின்னச்சாமியும் இதே கிராமத்தில் வசித்துவருகிறார். இவருக்கு மூன்று மகன்கள். அதில் ஒருவர் சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பிரபாகரன் அந்தக் கிராமத்திற்குப் பொதுவாக உள்ள குடிநீர் தொட்டி அருகே துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அந்தப் பக்கமாக வந்த சின்னசாமி இதற்கு ஆட்சேபம் தெரிவித்தபோது, அங்கு வந்த பிரபாகரனின் தாயாருக்கும் சின்னசாமிக்கும் இடையில் வாய்ச் சண்டை ஏற்பட்டது. பிறகு அன்று மாலையில் சின்னசாமி, அவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டியன், மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் சேர்ந்து சென்று பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் இரு தரப்பினரிடையேயான கைகலப்பாக மாறியது. இதில் பிரபாகரன், அவரது தம்பி பிரபு, மாதையன் ஆகிய மூவரும் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டனர். மூன்று பேரும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பிரபாகரன் அளித்த புகாரில் சின்னச்சாமி உட்பட 9 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இவர்களில் ஆறு பேர் பிப்ரவரி 9ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர். சின்னசாமி காயம் அடைந்திருந்ததால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார்.

அவரும் காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் பிரபாகரன், பிரபு உள்ளிட்ட ஐந்து பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவுசெய்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிரபு உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பிப்ரவரி 15ஆம் தேதி சின்னச்சாமியும் தலைமறைவாக இருந்த மற்றொருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர் பிரபுவுக்கு புனிதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »