பிபிசி அச்சமோ தயவோயின்றி செய்தி வழங்குவதை தடுக்க முடியாது என்று அதன் தலைமை இயக்குநர் டிம் டேவி இந்தியாவில் உள்ள அதன் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வைத் தொடர்ந்து இந்த செய்தி வெளிவந்துள்ளது.
பிபிசி ஊழியர்களின் துணிச்சலுக்கு நன்றி தெரிவித்த டிம் டேவி, பாரபட்சமின்றி செய்தி வழங்குவதை விட முக்கியமானது எதுவுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் பிபிசி, சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சிக்கும் வகையிலான ஆவணப்படத்தை ஒளிபரப்பியது.
இந்திய அரசாங்கம் அதை “விரோதமான பிரசாரம்” என்று அழைத்தது. மேலும் உள்நாட்டில் அது ஒளிபரப்பப்படுவதையும் தடுக்க முயற்சித்தது.
இந்த நிலையில் ஊழியர்களுக்கு டிம் டேவி அனுப்பிய மின்னஞ்சலில், ஊழியர்கள் தங்கள் பணிகளை திறம்படவும் பாதுகாப்பாகவும் செய்ய பிபிசி உதவும் என்று கூறியுள்ளார்.
“அச்சமோ தயவோயின்றி செய்தி வழங்கும் நமது திறனை விட முக்கியமானது எதுவுமில்லை,” என்று அவர் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
“உலகெங்கிலும் உள்ள நமது பார்வையாளர்களுக்கான நமது கடமை, சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற இதழியல் மூலம் உண்மைகளை தெரிவிப்பதும், அதை மிகச் சிறந்த ஆக்கபூர்வ உள்ளடக்கத்துடன் தயாரித்து விநியோகிப்பதும் ஆகும். அந்தப் பணியிலிருந்து நாம் விலகிப் போக மாட்டோம்.”

பட மூலாதாரம், Getty Images
“நான் தெளிவாக இதை தெரிவிக்க விரும்புகிறேன்: பிபிசிக்கு எந்த திட்டமும் இல்லை – நாம் ஒரு நோக்கத்துடன் இயக்கப்படுகிறோம். அதில் முதலாவது பொது நோக்கம், பாரபட்சமற்ற செய்திகளையும் தகவலையும் மக்கள் புரிந்து கொள்வதற்கும் அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பில் இருக்கவும் உதவுவதாகும்,” என்று டிம் டேவி கூறியுள்ளார்.
வருமான வரித்துறை அதிகாரிகள் பிபிசி அலுவலகங்களில் “ஆய்வு” நடவடிக்கை மேற்கொள்ள மூன்று நாட்கள் செலவிட்டனர்.
அதன் பிறகு இந்தியாவின் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முரண்பாடுகள் மற்றும் பொருந்தாத” பரிவர்த்தனைகள் மற்றும் குழுவின் வெளிநாட்டு நிறுவனங்களால் இந்தியாவில் வருமானமாக வெளிப்படுத்தப்படாத சில பணப்பரிமாற்றங்களுக்கு வரி செலுத்தப்படவில்லை” என்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்த வார தொடக்கத்தில் பிரிட்டனில் உள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த ஆய்வு நடவடிக்கையை “மிரட்டல் போக்கு” என்றும் ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும் கூறினர்.
இந்தியாவின் வருமான வரித் துறையின் குற்றச்சாட்டுகள் குறித்து பிரிட்டன் வெளியுறவு அலுவலக அமைச்சர் கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் “நாங்கள் இந்த விஷயத்தை தொடர்ந்து கவனித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com