பட மூலாதாரம், Getty Images
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அதிமுகவை தீர்மானகரமாக எடப்பாடி முகாமின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது என்பது பொதுவான பார்வையாக உள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி அணியால் நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்துக்குப் பிந்தைய அரசியல் நிகழ்வுகளில், முன்பே கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் ஆகியோர் முன்பு உள்ள அரசியல் வாய்ப்புகள் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்த மூவருமே தென் மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கை வலுவைப் பெற்றுள்ள முக்குலத்தோர் சாதித் தொகுப்பை சேர்ந்தவர்கள். ஜெயலலிதா தலைமையில் அதிமுக செயல்பட்ட காலத்தில் அதிமுகவுக்கு வலுவான பின்புலமாக விளங்கிய சாதி இது.
அதிமுக-வில் ஜெயலலிதாவுக்கு அருகே இருந்து முடிவுகளை எடுப்பதில் பெரும் செல்வாக்கு செலுத்திய சசிகலா தங்களது சாதியைச் சேர்ந்தவர் என்பதால், முக்குலத்தோர் சாதியினரில் கணிசமானோருக்கு அதிமுக தங்களுடைய கட்சி என்ற உணர்ச்சி இருந்தது என்பது பரவலான அரசியல் புரிதல்.
எனவே, முக்குலத்தோருக்கு அதிமுகவும், அதிமுக-வுக்கு முக்குலத்தோரும் முக்கியம் என்ற நிலை இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
1989 -91 ஆட்சிக் காலத்தில் திமுக அறிமுகம் செய்த மிகப்பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பயன்பெற்ற பெரிய சாதிகளில் முக்குலத்தோர் தொகுப்புக்குள் வரும் சீர்மரபினர் உண்டு என்றாலும், அதனால்கூட இந்த சாதியினர் மத்தியில் திமுக-வுக்கான ஆதரவை அதிகரிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அதிமுக – முக்குலத்தோர் உறவு வலுவாக இருந்தது.
ஆனால், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின் கடைசி நாள்களில் இந்த மிகப்பிற்படுத்தப்பட்டோர் தொகுப்புக்கான இட ஒதுக்கீட்டில் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்த வன்னியர்களுக்கான தனி உள் ஒதுக்கீடு, சீர் மரபினரை கடுமையாக கோபப்படுத்தியது. சசிகலா, தினகரன் வெளியேற்றம், ஆட்சியில் எடப்பாடி என்று நிலைமை மாறத் தொடங்கியதுமே தளரத் தொடங்கியிருந்த அதிமுக – முக்குலத்தோர் பந்தம், இந்த வன்னியர் உள் ஒதுக்கீட்டின் மூலம் முற்றிலும் சீர் குலைந்தது.
2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி செல்வாக்கு மிகுந்த மேற்கு தமிழ்நாட்டில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்கு ஓரளவு உதவிய இந்த உத்தி, ஓ.பன்னீர்செல்வத்துக்கான வாக்குத் தளமாக விளங்கியிருக்க வேண்டிய தென் மாவட்டங்களில் அதிமுகவின் நிலைமையை படு மோசமாக்கியது.
அதிமுக வேட்பாளர்கள் தேர்தல் களத்திலேயே கடும் சவால்களை எதிர்கொண்டனர். வன்னியர்கள் பெருமளவில் வாழும் வட மாவட்டங்களில் அதிமுக-வுக்கு பெரிய அளவில் பலனை பெற்றுக்கொடுக்காத இந்த கடைசி நேர உள் ஒதுக்கீட்டு நடவடிக்கை, அதிமுகவின் மரபான செல்வாக்குத் தளமான தென் மாவட்டங்களில் கட்சியின் வாய்ப்புகளை பறித்தது.

பட மூலாதாரம், TTV Dinakaran
எடப்பாடி மீண்டும் முதல்வராகும் வாய்ப்பைப் பறித்த பல்வேறு காரணிகளில் இதுவும் ஒரு முக்கியக் காரணியாகிவிட்டது. ஆனால், ஓ.பி.எஸ். வாக்குத்தளமான தென் மாவட்டத்தில் கட்சிக்கு பெரும் தோல்வியையும், எடப்பாடி வாக்குத் தளமான மேற்கு மாவட்டங்களில் கட்சிக்கு பெரும் ஆதரவையும் ஒரு சேர பெற்றுத் தந்ததன் மூலம் கட்சிக்குள் ஓபிஎஸ்சுக்கு பிடி ஏதும் இல்லாமல் செய்தது அந்த அளவில் எடப்பாடி செய்த மிக சாதுர்யமான நடவடிக்கை.
கட்சி ஓ.பி.எஸ். கையை விட்டுப் போவதற்கான முக்கியமான அடி அதுதான்.
இப்படி கட்சியைக் கைப்பற்றும் யுக்தியில் எடப்பாடி அப்போது தொடங்கிய பயணம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கிட்டத்தட்ட முழுமையை நோக்கி வந்திருக்கிறது.
ஆனால், வடமாவட்டங்களில் வழக்கமாகவே உறுதியான ஆதரவுத் தளத்தைக் கொண்டிராத அதிமுக, ஓ.பி.எஸ். சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியை விட்டு வெளியேற்றும் முயற்சியில் அவர்களோடு சேர்த்து மரபான அதிமுக ஆதரவுத் தளமான முக்குலத்தோர் ஆதரவையும் வெளியேற்றியிருக்கிறது.
அது மட்டுமல்ல, ஏற்கெனவே தமிழ்நாடு தழுவிய கட்சி என்ற பிம்பத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மேற்கு மாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு செலுத்தும் கட்சி என்ற ஆபத்தான பிம்பமும் அதிமுக மீது படியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தென் மாவட்டத்தில், குறிப்பாக, முக்குலத்தோர் மத்தியில் ஆதரவை மீட்டெடுப்பது அதிமுகவின் தேர்தல் வெற்றிக்கு இன்றியமையாதது.
உதயகுமார், செல்லூர் ராஜு போன்ற தலைவர்கள் மூலம் முக்குலத்தோர் பிரதிநிதித்துவத்தை ஈடு செய்ய அதிமுக முயன்றாலும், சசிகலா, தினகரன் இப்போது ஓபிஎஸ் என்று வலுவான முகங்களை வெளியேற்றிவிட்ட நிலையில், இது தங்களுக்கான கட்சி என்ற எண்ணத்தை முக்குலத்தோர் மத்தியில் ஏற்படுத்துவதில் எடப்பாடி பழனிசாமி எந்த அளவுக்கு வெற்றி பெறுவார் என்பதைப் பொறுத்தே எடப்பாடி அதிமுகவை அரசியல் ரீதியில் முழுமையாக வென்றுவிட்டாரா என்பது தெரியவரும் என்று தோன்றுகிறது. கட்சி அமைப்பைக் கைப்பற்றுவது வேறு, கட்சியின் ஆதரவுத் தளம் முழுவதையும் கைப்பற்றுவது வேறு அல்லவா.
இந்த இடைவெளியில்தான் ஓ.பி.எஸ்., சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கான அரசியல் ரீதியிலான வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு இவர்கள் மூவரும் ஒன்றிணைந்து செயல்பட முடியுமா என்பது ஒரு கேள்வியாக எழுந்து வரலாம்.

பட மூலாதாரம், T.Sigamani
ஆனால், பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணி, வேறு விதமான பார்வை ஒன்றை முன் வைக்கிறார். முக்குலத்தோர் வாக்குகளை இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஓ.பன்னீர்செல்வத்தை இவ்வளவு நாள் அனுசரித்து வந்த எடப்பாடி பழனிசாமி, அந்த சாதியினர் மத்தியிலேயே பன்னீர்செல்வத்துக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், செல்லூர் ராஜு, உதயகுமார் போன்றோர் மூலம் ஓபிஎஸ் வெளியேற்றத்தை ஈடு செய்துவிடலாம் முடிவுக்கு வந்திருப்பதாகவே தோன்றுகிறது என்கிறார்.
ஆனால், சிகாமணி முன்வைக்கும் முக்கியப் பார்வை இதுவல்ல. முதலில் அதிமுகவை பலவீனப்படுத்துவதன் மூலம் அந்த இடைவெளியைப் பிடித்துவிடலாம் என்பதே பாஜகவின் திட்டம் என்று ஒரு பார்வை இருந்தது.
ஆனால், வட இந்தியாவில் தனது செல்வாக்கு கேள்விக்குள்ளாகும் நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் கொஞ்சம் இடங்களைப் பிடித்தே தீர வேண்டும் என்பது பாஜகவுக்கு ஒரு நெருக்கடியாக மாறி உள்ளது.
எனவே, அதிமுகவை முற்றிலும் பலவீனப்படுத்தி, அதன் மூலம் ஏற்படும் இடைவெளியை (தமிழ்நாட்டில் நிலவும் பாஜக எதிர்ப்புணர்வு காரணமாக) தங்களாலும் தனியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை ஏற்படக்கூடாது என்று பாஜக கருதுகிவதாகத் தெரிகிறது. அதனால், அதிமுக மேலும் பலவீனமடைவதை இப்போதைக்கு பாஜக ஊக்குவிக்காது. இதன் காரணமாக, ஏதோ ஒரு வகையில், ஓ.பி.எஸ். சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவுடன் மீண்டும் இணைக்க பாஜக முயற்சி செய்யக்கூடும். அது இணைப்பாகவோ, கூட்டணியாகவோ இருக்கலாம் என்று நினைக்கிறார் சிகாமணி.
அதிமுக தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் கட்டுப்படுத்தும் பிடி பாஜகவின் வசம் இருப்பதால், அவர்களை மீறி ஓ.பி.எஸ். சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எந்த முடிவையும் எடுத்துவிடமாட்டார்கள் என்கிறார் அவர்.
“எதிர்காலம் ஏதுமில்லை”

பட மூலாதாரம், Elangovan Rajasekaran
ஆனால், தென் மாவட்டத்தில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவரான மற்றொரு மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகிய மூவருக்கும் இனி பெரிய வாய்ப்பு எதுவும் இல்லை என்கிறார். “ஓ.பி.எஸ். பாஜகவை முழுமையாக நம்பினார்.
தமக்கே உரிய முறையில் பாஜக அரசியல் கணக்கைப் போட்டது. 90 சதவீதம் அதிமுக ஆதரவு எடப்பாடி பக்கம் இருந்தது என்பதைக் கணக்கிட்டு ஓ.பன்னீர்செல்வத்தைக் கைவிட்டு, எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கத் தொடங்கிவிட்டது. எடப்பாடியும், நீண்ட திட்டமிடலோடு கட்சிக்குள் தனக்கான ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்திக்கொண்டு வந்தார். அதை செய்ய ஓ.பன்னீர்செல்வம் தவறிவிட்டார்” என்றார் இளங்கோவன்.
மீண்டும் அதிமுகவுக்குள் தங்களை இணைத்துக்கொள்ளும் அழுத்தத்தை இவர்கள் மூவரும் தரவேண்டும் எனில் இவர்கள் மூவரும் ஒன்றினைய வேண்டும். ஆனால், அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. தவிர, முக்குலத்தோர் மத்தியில் தங்கள் செல்வாக்கை மீட்டெடுப்பதற்காக இந்த மூவரை நாடவேண்டிய நிர்ப்பந்தம் எடப்பாடிக்கு ஏற்படும் வாய்ப்பும் குறைவு. ஏனென்றால், கருப்பசாமி பாண்டியன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் போன்றோர் அவருக்கு ஆதரவாக உள்ள நிலையில், கட்சிக்குள் முக்குலத்தோர் பிரதிநிதித்துவம் பெரிய சிக்கலாக மாறும் வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறார் இளங்கோவன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com