Press "Enter" to skip to content

“எனது சுற்று முடிந்தது” – தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி?

பட மூலாதாரம், ALOK PUTUL/BBC

2017 டிசம்பரில் நடந்த விஷயம் இது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக முடிசூட்டப்பட இருந்தார்.

ராகுல் காந்தி கட்சியின் தலைவராக முடிசூட்டப்பட்டால் உங்கள் பங்கு என்னவாக இருக்கும் என்று ஒரு நாள் முன்னதாக நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்கள் சோனியா காந்தியிடம் கேட்டனர்.

நான் ஓய்வு பெறப்போகிறேன் என்று சோனியா பதில் அளித்தார்.

இப்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சோனியா காந்தியின் ‘ஓய்வு’ பற்றிய விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது.

ராய்பூரில் சனிக்கிழமை (பிப். 25) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 85-வது அமர்வில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, “1998-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக நான் பொறுப்பேற்றது எனக்கு பெருமிதம் அளிக்கும் விஷயம்” என்று கூறினார். 25 ஆண்டுகளில் கட்சி பல பெரிய சாதனைகளைப் படைத்தது, ஏமாற்றங்களும் இருந்தன என்றார் அவர்.

“2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் எங்களின் வெற்றியுடன் கூடவே மருத்துவர் மன்மோகன் சிங்கின் திறமையான தலைமை எனக்கு தனிப்பட்ட திருப்தியை அளித்தது. ஆனால், காங்கிரசுக்கு திருப்புமுனையாக அமைந்த ‘பாரத் ஜோடோ யாத்திரையுடன்’ எனது சுற்று முடிந்தது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று சோனியா காந்தி கூறினார்.

சோனியா காந்தியின் இந்த உரையைத் தவிர, மாநாட்டு அரங்கில் அவரது பதவிக்காலம் குறித்த படமும் திரையிடப்பட்டது.

சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது உண்மைதான். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் அறிக்கையை ‘பாரத் ஜோடோ யாத்திரை’யின் பின்னணியில் அவர் வெளியிட்டுள்ளார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் அவர் பேசியது ராய்ப்பூரில் இருந்து டெல்லி வரை விவாதத்தில் உள்ளது.

“காங்கிரஸ்காரர்கள் அதை ஏற்க மாட்டார்கள். ஆனால், கட்சியின் செயல் தலைவர் நாற்காலியில் இருந்து விலகி மல்லிகார்ஜுன கார்கேயை கட்சித் தலைவராக்கியதன் மூலம் சோனியா காந்தி தனது அரசியல் பந்துவீச்சு சுற்றுஸை முடித்துக்கொண்டு ஓய்வு பெற்றுள்ளார். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சிறந்த தலைவராக அவர் இருந்தார். கண்ணியமான முறையில் முடிவுகளை எடுத்தவர் அவர். தனது சுற்று முடிவதான இன்றைய அவருடைய உரை, ஒரு பொது அறிவிப்பு போன்றது,” என்று ராய்பூரின் மூத்த செய்தியாளர் சுனில் குமார் குறிப்பிட்டார்.

சோனியா காந்தி

பட மூலாதாரம், ALOK PUTUL/BBC

மிக நீண்ட பதவிக்காலம்

இந்த ஆண்டு ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்களும், அடுத்த ஆண்டு நாட்டில் மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் சோனியா காந்தியின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் நாட்களில் அவரின் பங்கு தொடர்பான இயல்பான விவாதம் ஆரம்பமாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலேயே மிக நீண்ட காலமாக 19 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த சோனியா காந்தி, 2004-ல் தனக்கு பதிலாக மன்மோகன் சிங்கை பிரதமராக்க முன்முயற்சி எடுத்தார். கட்சி அவரது முடிவுகளை அரசில் செயல்படுத்தியது. இன்றும் இந்த அரசு வரலாற்று ரீதியாக முக்கியமானதாக கருதப்படுகிறது.

அவர் தலைவராக இருந்தபோது, வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், உணவு உரிமை, கல்வி உரிமை, தகவல் அறியும் உரிமை போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்திய அரசியலுக்கு இவை ஒரு புதிய திசையை அளித்தன.

மேலும் அவர் தலைவராக இருந்தபோது, நாட்டில் முதல் முறையாக பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா தேவி பாட்டீலும், முதல் தலித் பெண் மக்களவை சபாநாயகராக மீரா குமாரும் பதவியில் அமர்த்தப்பட்டனர்.

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவும் இவரது பதவிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது.

சோனியா காந்தி

பட மூலாதாரம், ALOK PUTUL/BBC

76 வயதான சோனியா காந்தியின் செயல்பாடு, வயது மற்றும் உடல்நிலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக குறைந்துள்ளது. ஆனால், இன்றைய உரைக்குப்பிறகு, ஒருபுறம் காங்கிரஸ் கட்சியை தனது நிழலிலிருந்து விடுவிக்க சோனியா காந்தி விரும்புவதாகவும் மறுபுறம் வயதான காங்கிரஸ்காரர்களுக்கு சிக்னல் கொடுக்க விரும்புவதாகவும் அரசியல் வட்டாரத்தில் நம்பப்படுகிறது.

சத்தீஸ்கரில் நடந்து வரும் மாநாட்டில் காங்கிரஸ் கட்சி, தனது அரசியலமைப்பில் ஒரு பெரிய திருத்தத்தை சனிக்கிழமையன்று செய்துள்ளது. காங்கிரஸ் காரிய குழு உறுப்பினர்களில் 50 சதவிகித பதவிகள் இடஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும் என அக்கட்சி முடிவு செய்துள்ளது.

எஸ்சி-எஸ்டி, ஓபிசி, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. கட்சியில் 50 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என்றும் கட்சி கூறியது.

ராகுல் காந்தி அவ்வப்போது கூறி வரும் ‘இளைஞர் காங்கிரஸ்’ என்ற கோஷத்திற்கு சோனியா காந்தி, தனது பங்குபணியை முடித்துக்கொள்ளும் அறிகுறியை அளித்து ஊக்கம் அளித்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சோனியா காந்தியின் சமீபத்திய அறிக்கை அவர் தீவிர அரசியலில் இருந்து விலகுவதற்கான அறிகுறியாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்களும் கருதுகின்றனர்.

சோனியா காந்தி, ‘ தீவிர அரசியலில்’ இருந்து பிரிந்து செல்வதற்கான அறிகுறிகளை அளித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் கருதுகிறார்.

“அமைப்பு மற்றும் அன்றாட கட்சிப் பணிகளில் இருந்து விலகி இருப்பது பற்றி அவர் பேசியுள்ளார். ஆனால், அனுபவம் வாய்ந்த எந்த தலைவருக்கும் இருக்கும் மற்ற பணி, எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது மற்றும் கட்சிக்குள் உள்ள பிரச்னைகளை தீர்ப்பது. ஒருவேளை அவர் அந்த வேலையில் தீவிரமாக இருப்பார் என்பது காங்கிரஸ்காரர்களின் எதிர்பார்ப்பு,” என்று அவர் கூறினார்.

சோனியா காந்தி

பட மூலாதாரம், ALOK PUTUL/BBC

ஓய்வு பற்றிய மறுப்பு

மறுபுறம், சோனியா காந்தியின் வார்த்தைகளை ஓய்வுடன் இணைப்பது சரியல்ல என்று காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் நம்புகிறார்கள்.

தீவிர அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு பெறுவதை காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரதாப் சிங் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

“காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அல்லது முன்னாள் பிரதமர், செயற்குழுவில் இடம்பெறுவார்கள் என்று கட்சியின் அரசியல் சாசனத்தில் இன்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சோனியா தேசியத் தலைவராக இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பணிக்குழுவில் அவர் நீடிப்பார். இவ்வாறான சூழ்நிலையில் அவரது ஓய்வு பற்றிய பேச்சு மிகவும் விசித்திரமானது. தலைவர் பதவிக்காலம் முடிவடைந்தது குறித்து அவர் பேசியுள்ளார்,” என்று அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தலைவரும் சத்தீஸ்கரின் பொறுப்பாளருமான குமாரி ஷேல்ஜாவும் சோனியா காந்தியின் சமீபத்திய உரையை அவரது ஓய்வுடன் இணைப்பதில் ஆதரவாக இல்லை.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதை நீங்கள் சரியான சூழலில் பார்க்க வேண்டும். சோனியா எங்கள் தலைவராக இருந்தார். இன்று கட்சிக்கு புதிய தலைவர் உள்ளார். சோனியா அவர்கள் தனது பதவிக்காலம் பற்றி பேசினார். புதிய தலைவரும் வழிகாட்டுதலை கோரியுள்ளார். எனவே, இந்தப்பேச்சை திரித்துக்கூறுவது சரி என்று எனக்குத்தோன்றவில்லை,” என்றார்.

சோனியா காந்தி வெளியிட்ட அறிக்கையின் அரசியல் அர்த்தம் எதுவாக இருந்தாலும், சனிக்கிழமையின் உரைக்குப் பிறகு கட்சியில் அவரது பாத்திரம் இப்போது மாறப் போகிறது என்று ஊகிக்கப்படுகிறது.

இந்திய அரசியலில் ஓய்வு பெறும் மரபு இல்லை. இத்தகைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியிலும் இந்திய அரசியலிலும் சோனியா காந்தி எந்த மாதிரியான பங்கு வகிக்கப் போகிறார் என்பதைப்பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »