பட மூலாதாரம், Getty Images
டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவை மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறி அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திவந்தது.
மணீஷ் சிசோடியா மீதான ஊழல் வழக்கு விசாரணை பல மாதங்களாக நடந்துகொண்டிருந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை அவரை சிபிஐ விசாரணைக்காக அழைத்திருந்தது.
சிபிஐ அலுவலகத்துக்கு செல்வதற்கு முன்பாக, தாம் இன்று கைது செய்யப்படலாம் என்று மணீஷ் கூறியிருந்தார். இந்நிலையில் விசாரணைக்கு சென்ற மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார்.
மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இது பற்றி ட்வீட் செய்துள்ள பாஜக நிர்வாகி கபில் மிஸ்ரா, “கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்று ஆரம்பம் முதலே நான் கூறிவந்தேன். இப்போது சத்யேந்தர் ஜெயினும், மணீஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டுவிட்டனர். அடுத்தது கேஜ்ரிவால் கைது செய்யப்படுவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
என்ன நடந்தது?
2021-22ம் ஆண்டுக்காக டெல்லி மதுபானக் கொள்கையை வகுத்ததிலும், செயல்படுத்தியதிலும் ஊழல் நடந்ததாக கூறி இந்த வழக்கு தொடரப்பட்டது. இப்போது அந்த மதுபானக் கொள்கை கைவிடப்பட்டுவிட்டது.
சிபிஐ அலுவலகத்துக்கு காலை 11 மணிக்கு விசாரணையை எதிர்கொள்ள சென்றார் மணீஷ் சிசோடியா. டெல்லி கலால் கொள்கையின் பல அம்சங்கள் குறித்தும், முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தினேஷ் அரோராவுடன் அவருக்கு என்ன தொடர்பு என்பது குறித்தும், பல தொலைபேசி எண்களுடன் அவர் நடத்திய தகவல் பறிமாற்றங்கள் குறித்தும், சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கேள்வி கேட்டனர் என்று பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
மணீஷ் சிசோடியா அளித்த பதிலில் திருப்தி இல்லை என்றும், முக்கிய கேள்விகளுக்கு தெளிவான பதில் வழங்குவதை அவர் தவிர்த்ததாகவும் அதனால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com