Press "Enter" to skip to content

அம்ரித்பால் சிங்: பஞ்சாப் முழுவதும் அச்சத்தை விளைவித்த இந்த கனடா மத போதகர் யார்?

பட மூலாதாரம், Getty Images

தன்னை தானே மத போதகர் என அழைத்துக் கொள்ளும் அம்ரித்பால் சிங்கின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கடந்த வாரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்தை மிகவும் ஆக்ரோஷமாக முற்றுகையிட்டனர். அம்ரித்பால் சிங்கின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருந்தது.

திரண்டிருந்தவர்கள் அனைவரும் மிகவும் கோபமாக காணப்பட்டனர். அவர்களது கைகளில் துப்பாக்கிகளும் வாள்களும் இருந்தன. அம்ரித்பால் சிங்கின் கூட்டாளி விடுவிக்கப்படுவார் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்பே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முற்றுகையிட்ட அனைவரும் தங்களது கைகளில் சீக்கியர்களின் புனித நூலாக கருதப்படும் ’குரு கிரந்த் சாஹிப்’ நூலை வைத்திருந்த காரணத்தினால்தான், தங்களால் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என காவல் துறையினர் கூறியுள்ளனர்.

தங்களை காக்கும் பாதுகாப்பு அரணாக அவர்கள் குரு கிரந்த் சாஹிப்’ நூலை பயன்படுத்திக் கொண்டனர்.

30 வயதான அம்ரித்பால் சிங், காலிஸ்தான் இயக்கத்தின் ஆதரவாளர். சீக்கியர்களுக்கென தனி தேசம் உருவாக வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்.

பஞ்சாப், அமிரித்பால் சிங், சீக்கியர்கள்

பட மூலாதாரம், Getty Images

ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே என்னும் சீக்கிய போதகரை பார்த்து உத்வேகம் அடைந்தவர் அம்ரித்பால் சிங். சீக்கியர்களுக்கென தனி தேசம் வேண்டுமென கூறி வந்த ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே, 1980ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். பின் 1984ஆம் ஆண்டு ‘ப்ளூ விண்மீன்’ என்னும் இந்திய ராணுவத்தின் சர்ச்சைக்குரிய ஆப்ரேஷன் மூலம் அவர் கொல்லப்பட்டார்.

சீக்கியர்களுக்கு தனி தேசம் வேண்டுமென எழுந்த இந்த கிளர்ச்சி, பத்தாண்டுகள் வரை நீடித்து வந்தது. இந்த காலகட்டத்தில், பல முக்கிய தலைவர்களும், பொது மக்களும் பாதிக்கப்பட்டனர். பல இளம் சீக்கியர்கள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வன்முறையால் ஏற்பட்ட காயங்களின் சுவடுகளை பஞ்சாப் மாநிலம் இன்றும் சுமந்து கொண்டு இருக்கிறது.

”பஞ்சாப்பில் இன்று நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சிகள், தீவிரவாதத்தின் இருண்ட நிழல்களுக்கு நாங்கள் திரும்ப சென்றுக் கொண்டிருக்கிறோமா என்று உங்களை சிந்திக்க தூண்டலாம்” என்று கூறுகிறார் பஞ்சாப் காவல் துறை முன்னாள் இயக்குநர் சசி காந்த்.

அதேபோல் , “சீக்கியர்களுக்கென தனி தேசம் வேண்டும் என கூறப்படும் கோரிக்கை இன்னும் தொடர்ந்து வந்தாலும், 1990களில் அந்த கோரிக்கை அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. பஞ்சாபில் உள்ள அனைத்து மக்களும் அம்ரித்பால் சிங் போன்றோருக்கும், இது போன்ற வன்முறைக்கும் ஆதரவு அளிக்கவில்லை. இப்போது தனி தேசம் வேண்டுமென கூறுவோரின் எண்ணிக்கை மிகவும் சொற்ப அளவிலேயே இருக்கிறது” என்கிறார் குரு நானக் தேவ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கும் பர்மிந்தர் சிங்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இந்த பிரச்னை குறித்து கூறும்போது, “இங்கே மக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மக்களுக்குள் நிலவும் இந்த நல்லுறவை சிதைக்க சிலர் முயன்று வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

”இப்போது போராடி வரும் ஆயிரகணக்கான மக்கள் பஞ்சாப் மாநிலத்தின் பிரதிநிதிகள் அல்ல, அவர்கள் அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

யார் இந்த அம்ரித்பால் சிங்?

அமிர்த்பாலின் கடந்த கால வாழ்க்கை குறித்து இதுவரை பெரிதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இவர் பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ஜல்லுப்பூர் கேரா பகுதியைச் சேர்ந்தவர். போக்குவரத்து தொடர்பான தனது குடும்ப தொழிலை தொடர்வதற்காக 2012ஆம் ஆண்டு இவர் துபாய்க்கு சென்றார்.

அவருடைய லிங்க்டு இன் முகவரி ( LinkedIn profile) , அம்ரித்பால் சிங் ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் என்று கூறுகிறது. பஞ்சாப்பில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்கும் இவர், கார்கோ நிறுவனம்யில் ஆப்ரேஷனல் மேனேஜராக பணிபுரிந்து இருக்கிறார் என்றும் அதன் தகவல்கள் கூறுகிறது.

அவர் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பெரியளவில் பிரபலம் அடைந்திருக்கவில்லை.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துபாயிலிருந்து இந்தியா திரும்பிய அவர், மிகவும் வித்தியாசமாக காணப்பட்டார். அவரது பழைய தோற்றத்திலிருந்து தற்போதைய தோற்றம் பெரிதும் மாறுபட்டு இருந்தது.

இப்போது அவர் சீக்கிய மதத்தை பின்பற்றும் ஒரு போதகர் போன்ற தோற்றத்தை கொண்டுள்ளார். அவரது தலையில் நீல நிற தலைப்பாகை இருக்கிறது. அவரது கைகளில் தகர வளையலும், கிர்பானும் காணப்படுகிறது.

அவர் இந்தியா திரும்பிய அடுத்த ஒரு மாத காலத்தில், ”வாரிஸ் பஞ்சாப் டி” (பஞ்சாப்பின் வாரிசுகள்) என்ற அமைப்பிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார். நடிகரும், சமூக ஆர்வலருமான தீப் சித்து என்பவரால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. விவசாயிகளால் அப்போது நடத்தப்பட்டு வந்த போராட்டங்களில் நடைபெற்ற கலவரத்தில் இவருக்கும் பங்கு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இவர் கடந்தாண்டு நடைபெற்ற ஒரு தேர் விபத்தில் உயிரிழந்தார்.

பஞ்சாப், அமிரித்பால் சிங், சீக்கியர்கள்

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

திடீரென பிரபலம் அடைந்தது எப்படி?

அமிர்த்பால் சிங்கை அவரது ஆதரவாளர்கள் பிந்த்ரன்வாலேவுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் தண்ணீர் தட்டுபாடு, அதிகளவில் பயன்பாட்டில் இருக்கும் போதைப்பொருட்கள் போன்ற பிரச்சனைகளுக்கு, சீக்கியர்களுக்கென தனி தேசம் ஒதுக்கப்படுவதே தீர்வாக அமையும் என அம்ரித்பால் சிங் பேசி வருகிறார். இவை அனைத்தும் இதற்கு முன்னதாக பிந்த்ரன்வாலே கூறி வந்த கருத்துக்கள் ஆகும்.

”ஆனால் நான் ஒருபோதும் பிந்த்ரன்வாலேவுக்கு நிகராக ஆக முடியாது. என்றும் அவர் காட்டிய வழிகளில் மட்டுமே தான் பயணித்து வருகிறேன்” என்று கடந்தாண்டு தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்திருந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் அம்ரித்பால் சிங்.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆஷுடோஷ் இதுகுறித்து கூறும்போது, “அம்ரித்பால் சிங்கின் வயதிற்கு அவர் அடைந்திருக்கும் இந்த திடீர் பிரபலம் மர்மமாக இருக்கிறது” என்று குறிப்பிடுகிறார்.

”ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலர் இந்தியா ஒரு இந்து தேசமாக மாற வேண்டும் என கூறி வருவது சில சீக்கியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தங்களுக்காக குரல் கொடுக்க ஒரு சக்தி வாய்ந்த தலைவர் வேண்டுமென நினைக்கிறார்கள்” எனவும் அவர் கூறுகிறார்.

அம்ரித்பால் சிங்கின் இந்த திடீர் பிரபலத்திற்கு சமூக ஊடகங்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்கிறார் பஞ்சாப் பல்கலைகழகத்தின் மற்றொரு பேராசிரியர் காலித் மொஹம்மத்.

இந்தியாவின் “உணவு கூடையாக” திகழ்ந்து வரும் பஞ்சாப் மாநிலம், ஒப்பீட்டளவில் நல்ல மாநிலமாக விளங்கினாலும், அங்கே தற்போது வேலையின்மை பிரச்சனைகளும், விவசாய பிரச்னைகளும் அதன் சமூக மற்றும் பொருளாதார நிலையை சுருக்கி விட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்

பஞ்சாப், அமிரித்பால் சிங், சீக்கியர்கள்

பட மூலாதாரம், Getty Images

கடந்த நவம்பர் மாதம் அம்ரித்பால் சிங், ஒரு நீண்ட மத ஊர்வலத்தை மேற்கொண்டார். அதில் சீக்கியர்கள் பலரும் நியானஸ்தானம் அடைய வேண்டும் என வலியுறுத்தினார். பஞ்சாப் மாநிலத்தின் மிகப்பெரும் பிரச்னையான போதை பொருள் பயன்பாட்டை குறைப்பதற்கும், சாதி ரீதியாக நிலவி வரும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இந்த ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஊர்வலம் நடந்து ஒரு மாதத்திற்கு பின், குருத்வாராவில் இருந்த நாற்காலிகளை உடைத்து பிரச்சனைகள் செய்து, சிங்கின் ஆதரவாளர்கள் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றனர்.

அமிர்த் சிங்கின் இந்த புகழுக்கு, பஞ்சாபில் இளைஞர்களின் விரக்தியும் காரணமாக இருக்கலாம் என பேராசியர் பர்மிந்தர் சிங் கூறுகிறார்.

பஞ்சாபில் சரியான வேலை வாய்ப்பும், கல்வியும் இல்லாமல் இருக்கும் எத்தனையோ இளைஞர்கள் மத அடிப்படைவாதத்தை நோக்கி நகர்ந்து செல்கின்றனர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

1980களில் பணியில் சேர்ந்த பஞ்சாப்பின் முன்னாள் காவல் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், “காவல் நிலையத்தில் இதற்கு முன்னதாக எத்தனையோ கலவரங்கள் நடைபெற்றதை பஞ்சாப் பார்த்திருக்கிறது. ஆனால் வரலாற்றிலேயே எந்தவொரு செயலையும் மேற்கொள்ள முடியாது நிராயுதபாணியாக காவல் துறையினர் நின்றது இதுவே முதல்முறை” என்று கவலையுடன் தெரிவிக்கிறார்.

கடந்த சில மாதங்களாக அம்ரித் பால் சிங், தனது கைகளில் வாள்களுடனும், துப்பாக்கியுடனும் பயணிப்பதை காணமுடிகிறது. அதற்காக அவர் மேல் இதுவரை எந்தவொரு வழக்கும் போடப்படவில்லை என்று கூறுகிறார் பேராசியர் பர்மிந்தர் சிங்.

என்ன சொல்கிறார் அம்ரித்பால் சிங்?

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கலவரங்கள் மேற்கொண்ட பிறகு, அம்ரித்பால் சிங் பல தேசிய ஊடகங்களிடம் பேசி வருகிறார். அதில் அவர் “நான் ஒரு இந்தியன் இல்லை” என்று குறிப்பிட்டு வருகிறார்.

நியூஸ்18 பஞ்சாபிடம் பேசிய அவர், “நான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவன். சீக்கிய மதத்தை தழுவியவன். இதை தவிர எனக்கு வேறு எந்த அடையாளமும் தேவையில்லை. அதேபோல் என்னுடைய இந்திய பாஸ்போர்ட்டை கூட பயணம் மேற்கொள்வதற்கான ஆவணமாக மட்டுமே பார்க்கிறேன். அதனால் என்னை நான் இந்தியனாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. மகாத்மா காந்தி கூட பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருந்தார். அதற்காக அவரை பிரிட்டனை சேர்ந்தவர் என அழைக்க முடியுமா” என்று கூறியுள்ளர்.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சீக்கியர்களுக்கு தனி தேசம் வேண்டும் என்பது குறித்த தனது நிலைப்பாட்டை, நேரடியாக விவாதிக்க வருமாறு தேசிய ஊடகங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

ஏஎன்ஐ செய்தி முகமையுடன் பேசிய அவர், “சீக்கியர்களுக்கு தனி தேசம் வேண்டும் என தாங்கள் கேட்பதை ஒரு பாவமாகவோ, பேச கூடாத விஷயமாகவோ யாரும் பார்க்க கூடாது. அறிவுபூர்வமாக சிந்தித்து இதனால் ஏற்படும் புவிசார் அரசியல் பயன்கள் பற்றி நினைக்க வேண்டும். இது ஒரு கருத்தியல் சார்ந்த விஷயம். இந்த கருத்தியலுக்கு அழிவு கிடையாது. இதை டெல்லியில் இருப்பவர்களிடமிருந்து நாங்கள் கேட்கவில்லை” என்று கூறியுள்ளார்.

சீக்கியர்கள் முதலில் பிரிட்டிஷ் காரர்களுக்கு அடிமையாக இருந்தார்கள், இப்போது இந்துகளுக்கு அடிமையாக இருக்கிறார்கள் எனவும் அமிர்த்சிங் பால் குறிப்பிடுகிறார்.

பிபிசி பஞ்சாபி சேவையிடம் பேசிய அமிர்த்பால் சிங், “நான் இந்துகளுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ எதிரானவ்ன் அல்ல. ஆனால் அரசாங்கத்துடன் இணைந்து எங்களை அடிமைப்படுத்த நினைக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிரானவன்” என்று கூறினார்.

அதேபோல், “ஒரு இனப்படுகொலை செய்வதற்கு அவர்களது தேசத்தையோ, கிராமங்களையோ அழிக்க வேண்டும் என்று தேவையில்லை. அவர்களது கலாசார பாரம்பரியங்களிலிருந்து அந்த மக்களை பிரிப்பதும், பின்னர் அவர்களது மதங்களிலிருந்து பிரிப்பதும் இனப்படுகொலைதான்” என்கிறார் அம்ரித்பால் சிங்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »