Press "Enter" to skip to content

மு.க. ஸ்டாலின் உரை: “2024இல் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்”

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்து பா.ஜ.கவை எதிர்க்க வேண்டும் என்றும் காங்கிரஸ் இல்லாத கூட்டணி என்பதை நிராகரிக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பிஹாரின் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு தேஜஸ்வி யாதவ் சற்றுத் தாமதமாக வந்து சேர்ந்தார். பிஹாரில் ஆளுநரின் உரை இருந்ததால் தாமதமாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் ஏற்புரை வழங்கிய மு.க. ஸ்டாலின், பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். 2024ஆம் ஆண்டு தேர்தலை எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ள வேண்டிய முறை குறித்து விரிவாகப் பேசினார்.

“கொள்கையைப் பரப்ப கட்சி. கொள்கையை நிறைவேற்ற ஆட்சி. இதைத்தான் இந்த இரண்டாண்டு காலத்தில் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். மீதமுள்ளவை இன்னும் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைவிட யார் ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதற்கான தேர்தல் அது. ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தும் பா.ஜ.கவை அரசியல் ரீதியாக வீழ்த்தியாக வேண்டும். பா.ஜ.கவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரள வேண்டும். அந்த ஒற்றுமை உணர்வு வந்துவிட்டாலே பா.ஜ.கவை வீழ்த்தியதாக சொல்லிவிடலாம்.

மாநிலங்களுக்கு இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து தேசிய அரசியலைத் தீர்மானித்தால் இழப்பு நமக்குத்தான் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளுக்கும் சேர்த்தே சொல்கிறேன். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு ஒற்றுமைதான் காரணம்.

தமிழ்நாட்டைப் போல ஒற்றுமையான கூட்டணியை அகில இந்திய அளவில் அமையுங்கள் என்று 2021ல் ராகுல்காந்தியை வைத்துக்கொண்டே சொன்னேன்.

அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து, பா.ஜ.கவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். அதே நேரம், காங்கிரஸ் அல்லாத கூட்டணி என சிலரால் சொல்லப்படும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். அது கரைசேராது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக்கொள்கிறோம் என்பதும் நடைமுறைக்கு ஒத்துவராது.

ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்துவிட்டு, நான்காண்டுகளுக்கு முன்னால் அடிக்கல் நாட்டிவிட்டு, இன்றுவரை ஒரு செங்கலுக்கு மேல் வைக்காமல் தமிழ்நாட்டைக் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.

மொத்தமே 12 கோடி ரூபாய் மட்டும்தான் மதுரை எய்ம்ஸுக்கு ஒதுக்கியுள்ளார்கள். இது எட்டு கோடி தமிழக மக்களை ஏமாற்றும் காரியமல்லவா? எட்டு கோடி மக்களின் பிரதிநிதிகளால் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு நாட்களைக் கடத்த முடியுமானால், தனிப்பட்ட ஸ்டாலினை அவமானப்படுத்தவதாக நினைத்து, தமிழக மக்களை அவமானப்படுத்துகிறார்கள்.

சமஸ்கிருதத்திற்கு கோடி ,கோடியாக பணத்தை ஒதுக்குவாய், சங்கத் தமிழுக்கு வெறுங்கையை நீட்டுவாய் என்றால் அதனால் அவமானப்படுத்தப்படுவது திருவள்ளுவரும் இளங்கோவடிகளும்தான் என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஸ்டாலின்

கணினிமய ரம்மியை தடை செய்ய சட்டம் நிறைவேற்றி அனுப்பினோம். அதற்குக்கூட இங்கே ஆளுநராக இருப்பவர் ஒப்புதல் அளிக்கவில்லை. மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்று தடை செய்ய மறுக்கிறார்களா?

பா.ஜ.க. அல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. ஜிஎஸ்டிக்குப் பிறகு நிதி உரிமை மாநிலங்களுக்கு இல்லை. முறையாக இழப்பீடுகளை உரிய காலத்தில் வழங்குவதில்லை. மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு எந்தப் பெரிய திட்டங்களும் கிடையாது.

இப்படி எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களோடு நிர்வாக யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. இவர்களின் நீண்டகாலத் திட்டங்களை புரிந்துகொண்டு, கொள்கை யுத்தம் புரிந்து கொண்டிருக்கிறோம். அதில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புதான் நாடாளுமன்ற தேர்தல் களம். அந்தக் களத்தை நோக்கிய பயணத்திற்கு, பாசறைக் கூட்டத்திற்கு எனது பிறந்த நாள் கூட்டம் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வந்துள்ள தலைவர்கள் இந்தியா முழுமைக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள்.

அடுத்த ஆண்டு மார்ச் என்பது அறுவடைக்காலமாக அமையட்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தொண்டர்களுக்கு ஒரு வரலாற்றுக் கடமை இருக்கிறது. 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கூட்டணி முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும். அதற்காக தொண்டர்கள் உழைத்திட வேண்டும். அதுதான் நீங்கள் எனக்குத் தரக்கூடிய பிறந்த நாள் பரிசாக இருக்கும்” என மு.க. ஸ்டாலின் பேசினார்.

தேசிய அரசியலுக்கு வர அழைப்பு

ஜம்மு காஷ்மீர்

இந்தக் கூட்டத்தில் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, தமிழ்நாட்டைக் கட்டமைத்ததைப் போல இந்தியாவைக் கட்டமைக்க மு.க. ஸ்டாலின் முன்வர வேண்டுமென பேசினார்.

“தமிழ்நாட்டில் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனது தந்தையைப் போலவே முதல்வர் மு.க. ஸ்டாலின் எல்லாத் தளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இங்கிருந்து கொண்டே இந்தியா குறித்து சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அனைத்து மக்களும் மரியாதையுடனும் அமைதியுடன் வாழும் நாட்டை கட்டமைக்க நாம் ஒன்றாக இணைய வேண்டும். தமிழ்நாட்டை கட்டமைத்தது போல இந்தியாவையும் கட்டமைக்க ஸ்டாலின் முன்வரவேண்டும்” என்றார் ஃபரூக் அப்துல்லா.

இந்தக் கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், மு.க. ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து புகழ்ந்து பேசினார். “அனைத்து தலைவர்களுடனும் இணைந்து மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட சமூக நீதி கூட்டமைப்புக்கான முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது. பல்வேறு தலைவர்களுடன் இணைந்து அடுத்த தலைமுறையினருக்கும் சமூக நீதியைக் கொண்டு சேர்க்கும் முயற்சி அது” என்றார் அவர். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அவரது பேச்சில் ஏதும் இடம்பெறவில்லை.

இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, “வரவிருக்கும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைமை என்பது பொருட்டல்ல. நாம் அனைவரும் இணைந்து பா.ஜ.கவை எதிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »