Press "Enter" to skip to content

புதிய சீனப் பிரதமர்: அதிகாரத்தில் தனது பிடியை வலுவாக்கும் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

சீனாவில் இந்த வார இறுதியில் தொடங்கும் தேசிய மக்கள் மாநாடு, அந்நாட்டின் அதிகாரத்தில், அதிபர் ஷி ஜின்பிங்கின் பிடி இறுகுவதன் உச்சபட்சக் குறியீடாக இருக்கும்.

தன்னை மையமாக வைத்து சீன கம்யூனிஸ்ட் கட்சியை ஷி ஜின்பிங் மாற்றி அமைத்துள்ளார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவரை எதிர்ப்பதற்கு ஆளே இல்லை.

கிட்டத்தட்ட 3,000 பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ரப்பர் ஸ்டாம்ப் அமர்வான வருடாந்திர அரசியல் கூட்டத்தில், சீன பிரீமியர் (பிரதமர்) மாற்றம் செய்யப்படுவதில் இது வெளிப்படும்.

உலகின் 2வது பெரிய பொருளாதார நாட்டின் பிரீமியராக தேர்ந்தெடுக்கப்படுவர் பெயரளவில் அந்நாட்டை நிர்வகிப்பவராக இருப்பார். அதிகார அமைப்பில் ஷி ஜின்பிங்கிற்கு அடுத்த இடத்தில் அவர் இருப்பார்.

தேசிய மக்கள் காங்கிரஸின் முதல்நாள் அமர்வில் சீனாவின் தற்போதைய பிரீமியர் லீ காச்சியாங் நடுநாயகமாக இருப்பார். பின்னர், புதிய பிரீமியர் -அனேகமாக லி கியாங்- இந்த இடத்தை பெறுவார்.

ஷி ஜின்பிங் மீதான விசுவாசத்தை வைத்து பார்க்கும்போது லி காச்சியாங் , லி கியாங் இடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில், நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த குழுவான ஏழு பேர் கொண்ட பொலிட்பீரோ நிலைக்குழுவிற்கு புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் அனைவரும் ஷி ஜின்பிங்கிற்கு விசுவாசமானவர்கள்.

தற்போது நடைபெறவுள்ள தேசிய மக்கள் காங்கிரஸில் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் தலைமை பதவியும் மாற்றப்படவுள்ளன. ஷி ஜின்பிங்கிற்கு விசுவாசமானவர்களுக்கே இந்த பதவிகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் தகுதியற்றவர்கள் என்று அர்த்தமல்ல, ஆனால் ஷி ஜின்பிங்கிற்கு அவர்கள் அச்சமில்லாமல், வெளிப்படையான ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருப்பார்களா? என்ற கேள்வி எழுகிறது.

” இந்த மாற்றங்கள் மூலம் ஒருபுறம், ஷி தனது புதிய தலைமையை வைத்து தான் செய்ய விரும்புவதை செய்துகொள்ள முடியும், ஆனால், மறுபுறம், தன் கருத்துக்கு எதிர் கருத்தே இல்லாத சூழலில் அவர் சிக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளது” என்று வணிகப் பிரமுகர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

சீனாவிற்கு இந்த நியமனங்கள் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்?

லி கியாங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது அதிகாரம் மிக்க நபராக நியமிக்கப்பட்டபோது, பலரையும் இது ஆச்சரியப்படுத்தியது.

சீனாவின் நிதி தலைநகரான ஷாங்காயில் கடந்த ஆண்டில் 2 மாதங்களுக்கு அவரது மேற்பார்வையின் கீழ் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த பொதுமுடக்கம் மிக மோசமாக திட்டமிடப்பட்டிருந்தது. டெலிவரி பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவர்கள் வீடுகளிலேயே அடைத்து வைக்கப்பட்டதால், வெளியில் அனுமதிக்கப்படாத பல லட்சம் மக்களுக்கு உணவுவையும் மருந்துகளையும் திறமையாக கொண்டு செல்ல முடியாமல் போனது.

கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தங்கள் வாழ்க்கையை அழுகிய காய்கறிகளை வைத்து ஓட்ட வேண்டியுள்ளது என்று கூறி அது தொடர்பான புகைப்படங்களையும் ஷாங்காய் மக்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

இந்த பொதுமுடக்கம் மக்களுக்கு கடும் உளைச்சலை ஏற்படுத்தியது. தங்களை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட வேலிகளை அவர்கள் உதைத்து தள்ளினர். பூஜ்யம் கோவிட் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுடன் மக்கள் சண்டையிட்டனர்.

இத்தகைய மாபெரும் தோல்விக்கு பொறுப்பான நபருக்கு எப்படி முழு நாட்டையும் நிர்வகிக்கும் பணியை வழங்க முடியும் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

“அவர் புத்திசாலி, சிறந்த நிர்வாகி. ஆனால் நிச்சயமாக, ஷி ஜின்பிங் மீதான விசுவாசத்தின் காரணமாகவே அவருக்கு இந்த பணி கிடைத்தது. ஷி ஜின்பிங் குதிக்க சொன்னால், `எவ்வளவு உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும்` என்று லி கியாங் கேட்பார்” என்று கூறுகிறார் சீனாவில் உள்ள ஐரோப்பிய யூனியன் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவர் ஜோர்க் வுட்கே. அவர் 1990 களில் இருந்து சீனாவில் வணிகம் செய்து வருகிறார். பல ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடனும் தொடர்பில் உள்ளார்.

ஜீரோ கோவிட் கொள்கை ஏற்படுத்திய பாதகங்கள் தற்போதும் வணிக நிறுவனங்கள் மற்றும் சாதாரண நுகர்வோர்களால் உணரப்படுகின்றன என்றும் வுட்கே கூறுகிறார்.

ஜீரோ-கோவிட் கால அதிர்ச்சியின் காரணமாக செலவினங்களைப் பற்றிய எச்சரிக்கை நிலவுகிறது என்று கூறும் அவர், “சீனாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ரிஸ்க் எடுப்பதற்கு அவர்கள் அஞ்சுகின்றனர். முடிவுகள் எடுக்கும்போது அவர்கள் மிக கவனமாக இருக்கிறார்கள். இந்த அதிர்ச்சி குறிப்பாக ஷாங்காயில் அதிகமாக உள்ளது. வெளிநாட்டு முதலீட்டை பொறுத்தவரை ஷாங்காயின் கவர்ச்சி கணிசமாக குறைந்துள்ளது,” என்றார்.

எனினும் இந்த தவறுக்கு லி கியாங் மட்டுமே பொறுப்பல்ல என்று வுட்கே எண்ணுகிறார். பிற தொழிலதிபர்களின் கருத்தும் இதையே எதிரொலிக்கிறது .

சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

டெஸ்லாவை ஷாங்காய்க்கு அழைத்து வந்த பெருமை லி கியாங்கிற்கு உண்டு. இது அமெரிக்காவிற்கு வெளியே அந்நிறுவனத்தின் முதல் தொழிற்சாலையாகும். மற்ற வெளிநாட்டு தேர் நிறுவனங்கள் செய்ததைப் போலவே சீனப் பங்குதாரருடன் கூட்டு சேரும் தேவையின்றி அதன் சொந்த தொழிற்சாலையை டெஸ்ஸா ஷாங்காயில் அமைத்தது.

2019 ஆம் ஆண்டில் ஷாங்காயின் முதல் சுதந்திர வர்த்தக மண்டலத்தின் நற்பண்புகள் குறித்து அவர் பேசுகையில், சர்வதேச போட்டித்தன்மைக்கு உகந்த பகுதியாக ஷாங்காய் மாறும்; பொருளாதார உலகமயமாக்கலுடன் ஆழமாக ஒருங்கிணைக்க சீனாவிற்கு ஒரு முக்கிய ஆதரவாக செயல்படும்” என்று அவர் கூறினார்.

அவர் விதிகளை வளைக்கத் தயாராக இருக்கும் ஒரு தாராளவாத நபராக சில வட்டாரங்களில் பார்க்கப்படுகிறார்.

ஆயினும்கூட, அவர் தற்போது, விதியை வளைக்கும் அதிகாரம் படைத்தவராக இருப்பாரா, ஷி ஜின்பிங்கின் ஆதரவைக் கொண்டிருப்பதால் செய்ய வேண்டியதைச் செய்ய பயப்படாமல் இருப்பாரா அல்லது ஷி ஜின்பிங்கின் நிழலுக்குள்ளேயே இருப்பாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

2016 ஆம் ஆண்டில், அவர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெயர் பெற்ற வளம் நிறைந்த கிழக்கு மாகாணமான ஜியாங்சுவிற்கான கட்சியின் செயலாளராக ஆனார். அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜேக் மா மற்றும் பிற நிர்வாகிகளை சந்தித்து அங்குள்ள வணிகத்திற்கான சூழல் குறித்தும் அவர் ஆலோசனை பெற முயன்றார்.

ஆனால், தற்போதைய சூழல் வேறு விதமாக உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் சொந்த நலனுக்காக மிகவும் சக்திவாய்ந்தவையாக மாறிவிட்டன என்று நம்பி, அவற்றைக் கட்டுப்படுத்துமாறு அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். இந்த நிறுவனங்களின் தலைவர்கள் “காணாமல் போவது” வழக்கமாக இருந்து வருகிறது. இதில் சமீபத்தில் இணைந்தவர் பாவ் ஃபேன்.

கடந்த காலத்தில் லி கியாங் ஊக்குவித்த மாதிரியான விஷயமாக இது தெரியவில்லை, ஆனால் தற்போது அவரும் ஷி ஜின்பிங்கும் நீண்ட தொலைவிற்கு சென்றுவிட்டனர்.

லி ஜின்பின் ஜியாங்சுவில் இருப்பதற்கு முன்பு, ஷாங்காய்க்கு தெற்கே மற்றொரு வளம் நிறைந்த கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் இருந்தார். அந்த நேரத்தில் மாகாணக் கட்சித் தலைவராக ஜி ஜின்பிங் இருந்தார், லி அவரது தலைமை அதிகாரியான பிறகு, இருவரும் இரவு வரை வேலை செய்து, தங்களது மேல் அதிகாரிகளை கவர்ந்தனர்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், தற்போது பதவியில் உள்ள லி காச்சியாங் உடன் ஷி ஜின்பிங் இப்படிப்பட்ட பிணைப்பை கொண்டது இல்லை.

அவர்கள் மிகவும் கூட்டுத் தலைமையுடன் ஒரு காலகட்டத்தில் ஒன்றாக உயர்ந்தனர். லி காச்சியாங் ஒரு விதத்தில் அவருக்கு போட்டியாளராக இருந்தார். அதிபர் பதவிக்கான வேட்பாளராகவும் லி காச்சியாங் கருதப்பட்டார். ஷி ஜின்பிங்கிற்கு பதிலாக அவர் வெற்றி பெற்றிருந்தால் சீனா இப்போது எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

பீக்கிங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவரான லி காச்சியாங், கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பில் இருந்து படிப்படியாக கட்சியில் உயரிய பதவிகளை அடைந்தார்.

அதிபர் பதவி கிடைக்காத நிலையில், ஷி ஜின்பிங்கின் கீழ் பிரீமியராக அவர் கட்டுப்படுத்தப்பட்டார். சீனா முழுவதிலும் உள்ள நகரங்களில் தெருவோர வியாபாரிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிக்கவும், உற்சாகமான சூழ்நிலையை உருவாக்கவும் உதவும் என்று பிரீமியராக இருந்தபோது லி காச்சியாங் அறிவித்தார். எனினும் அவரது அழைப்பை ஏற்று மீண்டும் கடைகளை அமைக்க வந்தவர்களை காவல் துறையினர் வெளியேற்றினர்.

ஷி ஜின்பிங்கின் கீழ், தலைநகரை “பின்னோக்கி” அல்லது “பழைய பாணியாக” மாற்றுவது என்பது வெறுப்புக்குரியது. எனவே, பிரீமியரே கூறினாலும் அது முக்கியத்துவம் பெறாது.

கடந்த ஆண்டு கட்சி கூட்டத்தின்போது ஷி ஜின்பிங்கின் உத்தரவின் பேரில் மேடையில் இருந்து முன்னாள் தலைவர் ஹு ஜிண்டாவோ வெளியேற்றப்பட்டார். ஹு ஜிண்டாவோ அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​அவர் நட்பு ரீதியாக லி காச்சியாங் தோளில் தட்டினார். அவரும் திரும்பி தலை அசைத்தார். தற்போது, ஹு ஜிண்டாவோவுடன் லி காச்சியாங் இணைந்திருப்பதை பார்க்க முடிகிறது.

சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

வலுவான பொருளாதார சாதனைக்காக லி காச்சியாங் நினைவுகூரப்படுவார். ஆனால் அவரது பதவியின் இறுதிக் காலம் பூஜ்யம் கோவிட் நெருக்கடியில் சிக்கியது.

மிக மோசமான அந்த நேரத்தில், பொருளாதாரம் மிகப்பெரிய அழுத்தத்தில் இருப்பதாக கூறி, கட்டுப்பாடுகள் வளர்ச்சியை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகளிடம் லி காச்சியாங் கூறினார்.

ஆனால், பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அவரது உத்தரவை பின்பற்றுவதா அல்லது பூஜ்யம் கோவிட் உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்ற அதிபர் ஷி ஜின்பிங்கின் உத்தரவுகளை பின்பற்றுவதா என்பது தொடர்பாக அதிகாரிகள் முடிவு எடுக்கும் சூழல் வந்தபோது, லி காச்சியாங்கின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை.

தற்போது தான் விரும்பிய வரிசையில் கட்சியை ஷி ஜின்பிங் கட்டமைத்துள்ளார். அவர் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை என்னவென்றால், அவரது நற்பெயர் பொதுமக்களிடம் அடிபட்டுள்ளது.

பரவலான எதிர்ப்புகளையடுத்து பூஜ்யம் கோவிட் கொள்கை அவசரமாக கைவிடப்பட்டது, இளைஞர்கள் மத்தியில் நிலவும் அதிக வேலையின்மை சூழல், தொழில்நுட்ப பாதிப்பு, சேவை துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியவை அவருக்கு எதிராக உள்ளன.

மக்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற பொருளாதார நெருக்கடியான நேரத்தில் மாவோ இருந்தார். ஆனால், தற்போது நிலை அப்படி இல்லை. மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது. ஆனால், தங்கள் குழந்தைகள் தங்களைவிட சிறந்த வாழ்க்கையை வாழ மாட்டார்களோ என்று நடுத்தர வர்க்க பெற்றோர்கள் கவலைகொள்ள தொடங்கிவிட்டனர்.

இந்த ஆண்டு தேசிய மக்கள் காங்கிரஸ், அதில் பதவி பெறப் போகிறவர்கள் ஆகியோர் குறித்து தற்போதைய பொருளாதார அதிகார மையம் எங்கு செல்கிறது என்பதைப் பார்க்க விரும்புவோர் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.

நாடு எல்லாத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால், அப்போதுதான் கடினமான கேள்விகள் எழத் தொடங்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »