பிபிசி வழங்கும் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை 2022ஆம் ஆண்டுக்கான வெற்றியாளரின் பெயர் இன்று அறிவிக்கப்படவுள்ளது. நான்காவது ஆண்டாக இந்த விருது வழங்கும் விழாவை பிபிசி நடத்துகிறது.
சிறந்த நடுவர் குழு 5 வீராங்கனைகளின் பெயர்களை இந்த விருதுக்கான பட்டியலில் தேர்வு செய்தது. அவர்களின் பெயர் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகாட், பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பிப்ரவரி 6ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை மக்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீராங்கனைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதிக வாக்குகளைப் பெற்ற வீராங்கனை வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
கடந்த காலங்களில் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி ஆகியோர் பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றுள்ளனர்.
அனைத்து விளையாட்டுத் துறைகளிலும் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் உலகளாவிய சாதனைகளை வெளிப்படுத்துவதும், அவர்களுடைய பிரச்னைகளை, சவால்களை முன்னிலைப்படுத்துவதுமே இந்த நிகழ்வின் நோக்கம்.
பல்வேறு துறைகளில் உலகளாவிய வெற்றியைப் பெற்ற பெண்கள் மீது கவனம் செலுத்துவது பிபிசியின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.
விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த மற்றும் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய வீராங்கனைகளுக்கும் பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பிபிசி கௌரவப்படுத்தி வருகிறது. தடகள வீராங்கனைகள் பி.டி. உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகியோர் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளனர்.
பன்முகத்தன்மை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மைக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எனவே விருதுகளை மேலும் உள்ளடக்கியதாக மாற்ற, இந்தப் பதிப்பில் பிபிசி இந்தியன் பாரா-ஸ்போர்ட்ஸ்வுமன் ஆஃப் தி இயர் என்ற சிறந்த பாரா விளையாட்டு வீராங்கனைக்கான விருதையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
யாரெல்லாம் பரிந்துரை பட்டியலில் உள்ளனர்?

பட மூலாதாரம், Getty Images
மீராபாய் சானு
பளு தூக்குதல் சாம்பியனான சாய்கோம் மீராபாய் சானு 2021ஆம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் விளையாட்டு வரலாற்றில் தனது பெயரைப் பதிவு செய்தார்.
அதைத் தொடர்ந்து 2022இல் உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தையும் 2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
2016ஆம் ஆண்டு ரியோ விளையாட்டுப் போட்டிகளில் குறிப்பிட்ட எடையைத் தூக்கத் தவறியதில் இருந்து மீராபாயின் பயணம் நெடுந்தூரம் வந்துள்ளது. கிட்டத்தட்ட அவர் விளையாட்டில் இருந்து விடை பெற்றுவிட்டார். ஆனால், 2017 உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், அவர் தனது திறமையை நிரூபித்தார்.
இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், ஒரு தேநீர் கடை உரிமையாளரின் மகளாகப் பிறந்தவர் மீராபாய். அவர் தனது விளையாட்டு வாழ்க்கையின் ஆரம்பக் கட்டங்களில் அதிகமான நிதி நெருக்கடிகளைச் சந்தித்தார். ஆனால், அனைத்து சோதனைகளையும் சமாளித்த அவர், ஒலிம்பிக் பதக்கம் வென்றார். மீராபாய் சானு 2021ஆம் ஆண்டிற்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றுள்ளார்.
சாக்ஷி மாலிக்

பட மூலாதாரம், Getty Images
2016 ரியோ ஒலிம்பிக்கில் 58 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் அந்த ஒலிம்பிக் தொடரில் விருது வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற வரலாற்றைப் படைத்தார் சாக்ஷி. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நான்காவது இந்திய பெண் இவர்.
சாக்ஷி எப்போதும் விளையாட்டில் ஆர்வமாக இருந்தார். அவருடைய தாத்தாவும் ஒரு மல்யுத்த வீரர் என்பதை அறிந்ததும் உத்வேகம் கொண்டார். அவர் பதக்கம் வென்ற ரியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு, சாக்ஷியின் விளையாட்டு வாழ்க்கை பின்னடைவை சந்தித்தது.
ஆனால், அவர் 2022இல் பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று அசத்தலான மறுபிரவேசத்தை நிகழ்த்தினார். இதற்கு முன்பாக, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை சாக்ஷி மாலிக் வென்றிருந்தார்.
வினேஷ் போகாட்

பட மூலாதாரம், Getty Images
மல்யுத்தத்தில் இரண்டு உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை, வினேஷ் போகாட். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனையும் இவர்தான்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு எடைப்பிரிவுகளின் கீழ் தொடர்ச்சியாக மூன்று தங்கப் பதக்கங்களை அவர் பெற்றுள்ளார். 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 53 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது, அவரது சமீபத்திய வெற்றி.
அவரது உறவினர்களான கீதா, பபிதா போகாட் ஆகியோரும் மல்யுத்தத்தில் சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளனர். இதன்மூலம் பல சர்வதேச பதக்கங்களை வென்ற மல்யுத்த வீராங்கனைகளைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவராகத் திகழ்கிறார் வினேஷ் போகாட்.
பிவி சிந்து

பட மூலாதாரம், Getty Images
பேட்மின்டன் வீராங்கனை புசர்லா வேங்கட சிந்து (பி.வி.சிந்து), ஒலிம்பிக்கில் இரண்டு தனிநபர் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண். டோக்கியோவில் வெண்கலப் பதக்கம் வென்றது, அவருடைய இரண்டாவது ஒலிம்பிக் வெற்றி. அவர் 2016இல் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பி.வி.சிந்து 2022 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றார்.
முன்னதாக, அவர் 2021இல் உலக பேட்மின்டன் கூட்டமைப்பின் சர்வதேச சுற்றுப்பயணத்தின் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். 2019இல் சிந்து உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியராக வரலாறு படைத்தார்.
அவர் செப்டம்பர் 2012இல் தனது 17 வயதில் உலகத் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்தார். பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டில் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றார்.
நிகத் ஜரீன்

பட மூலாதாரம், Getty Images
2011இல் ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை வென்ற நிகத் ஜரீன், 2022இல் பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியனாக உயர்ந்தார். பர்மிங்ஹாம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஃப்ளைவெயிட் பிரிவில் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கத்தையும் நிகத் வென்றார்.
தனது ஆற்றல் மிக்க மகள், அவருடைய ஆற்றல் முழுவதையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மடைமாற்ற வேண்டும் என்பதற்காக, ஜரீனின் தந்தைதான் அவரை விளையாட்டில் அறிமுகப்படுத்தினார்.
12 வயதில் சண்டையின்போது கண்களில் கருவளையம் ஏற்பட்டது, திருமண வாய்ப்பு குறித்து உறவினர்கள் முன்வைத்த மோசமான கருத்துகள் ஆகியவற்றால் அவரது தாய் அடைந்த ஆரம்ப கால கவலைகளை ஒதுக்கிவிட்டு, அவருடைய கனவுகளைப் பின்பற்றுமாறு நிகத்தை ஊக்குவித்தார் அவரது தந்தை. அதன் பிறகு நிகத் தடைகளின்றி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறார்.
Source: BBC.com