Press "Enter" to skip to content

வட மாநில தொழிலாளர்கள் பிரச்னையின் பின்னணியில் நாடாளுமன்ற தேர்தலா? தலைவர்கள் சொல்வது என்ன?

  • சிவகுமார் ராஜகுலம்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டே, தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக திமுக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை பாரதிய ஜனதா கட்சி மறுத்துள்ளது.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் மேல் கால அவகாசம் இருந்த போதிலும் தேசிய அரசியலில் இப்போதே அதற்கான காய் நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன. ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு புறம் வலுவாக இருக்க, அதற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொது நோக்குடன் ஓரணியில் திரளுமா, இல்லையா என்பதே தேசிய அரசியலில் இப்போதுள்ள மிகப்பெரிய கேள்வி.

பாரதிய ஜனதாவைப் பொருத்தவரை, 2014-ம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலையுமே மிகத் தீவிரமாகவே அணுகி வருகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலோ அல்லது உள்ளாட்சித் தேர்தலோ எதுவாக இருந்தாலும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஒட்டுமொத்த ஆற்றலையும் அக்கட்சி பயன்படுத்தி வருகிறது என்பது கண்கூடு. தேர்தல் வெற்றியையும், அதன் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் இலக்காகக் கொண்டு பாரதிய ஜனதா முனைப்புடன் செயல்படத் தயங்கியதே இல்லை.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாரதிய ஜனதா ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஹாட்ரிக் வெற்றி என்ற முழக்கத்துடன் அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள் முதல் அடிமட்ட நிர்வாகிகள் வரை தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மோதி, அமித் ஷா உட்பட பல பெரிய பாஜக தலைவர்கள் இந்தியாவை ‘காங்கிரஸ் முக்த்'(காங்கிரஸ் இல்லாமல்) ஆக்குவதுதான் தங்கள் நோக்கம் என்று அழுத்தமாக சொல்லி வருகின்றனர்.

மறுபுறம் காங்கிரசோ, 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைமையில், அதாவது மல்லிகார்ஜூன கார்கேவை தலைவராகக் கொண்டு புதிய முயற்சிகளில் இறங்கியுள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மிர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, மத்திய அரசுக்கு எதிராக கூர்மையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

வேலைவாய்ப்பின்மை, வெறுப்பரசியல், சீன ஊடுருவல், அதானி சர்ச்சை என ஒவ்வொன்றிலும் பிரதமர் மோடிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும், தேர்தல் அரசியலில் வெற்றி பெற காங்கிரசுக்கு கூட்டணி அவசியம் என்பதை ராகுல்காந்தி உணராமல் இல்லை. இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் முடிவில் பேசிய அவரது உரையில் அது வெளிப்பட்டது.

எதிர்க்கட்சிகள் சரியான ஒருங்கிணைப்புடன், பா.ஜ.க.வுக்கு மாற்றான செயல் திட்டத்தை முன்வைத்தால் வெற்றி பெற முடியும் என்று குறிப்பிட்ட ராகுல்காந்தி, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதில் காங்கிரசுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாக ஒப்புக் கொண்டார். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மத சார்பற்ற எதிர்க்கட்சிகளின் அணி சிந்தாமல், சிதறாமல் அமைய வேண்டும் என்பதில் இடதுசாரிகளும் ஆர்வம் காட்டுகின்றனர். அண்மையில் நடந்து முடிந்த திரிபுரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரசுடன் இடதுசாரிகள் கைகோர்த்ததே அதற்கு சான்று.

வட மாநில தொழிலாளர்

அதேநேரத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரும் பிரதமர் மோடிக்கு எதிராக அரசியல் களத்தில் தீவிரமாக செயல்படுகிறார்கள். மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பல விஷயங்களில் அவர்கள் மாறுபட்டு நிற்கின்றனர்.

மம்தா, கெஜ்ரிவால், சந்திரசேகர ராவ் ஆகியோர் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்தாலும் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக இறங்கவில்லை. தங்களை முன்னிறுத்தி காங்கிரஸ் அல்லாத அணியை அமைக்க அவர்கள் விரும்புவதாகவும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆனால், தேர்தல் அரசியலில் அண்மைக்காலமாக காங்கிரஸின் செயல்பாடு எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதுதான் முக்கிய எதிர்க்கட்சி என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற பாரதிய ஜனதா முன்வைக்கும் முழக்கத்தின் உண்மையான அர்த்தம் ‘எதிர்க்கட்சி இல்லாத இந்தியா’ என்று அவர்கள் கருதுகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் பாரதிய ஜனதா, அதற்காக காங்கிரசை பலவீனப்படுத்துவதுடன் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரளாமல் பார்த்துக் கொள்வதிலும் கவனமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே, வட மாநில தொழிலாளர் பிரச்னையை திட்டமிட்டு பாரதிய ஜனதா உருவாக்கி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் மணி கூறுகிறார்.

வட மாநில தொழிலாளர்

பட மூலாதாரம், Getty Images

பிபிசி தமிழிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்தி பிகார் மாநில பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

‘எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறங்கியதால்தான் பா.ஜ.க. திட்டமிட்டு இந்த தேச விரோத செயலில் இறங்கியுள்ளது. வட மாநிலத்தவருக்கு எதிரானதாக திமுகவை சித்தரிப்பதன் மூலம் அந்த முயற்சியை சிதறடித்து, எதிர்க்கட்சிகள் நெருங்கி வருவதைத் தடுக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் திட்டம்’ என்று அவர் மேலும் கூறினார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘மார்ச் ஒன்றாம் தேதி மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா போன்ற வட இந்திய தலைவர்கள் பங்கேற்றனர். சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முனைப்பை தேஜஸ்வி யாதவ் வெகுவாக பாராட்டினார். பரூக் அப்துல்லாவோ, மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைத்தார்.

அகிலேஷ், தேஜஸ்வி போன்ற வட இந்திய தலைவர்கள் மு.க.ஸ்டாலினுடன் நட்பு பாராட்டியதை பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. வேண்டுமென்றே இந்த பிரச்னையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவுக்கும், பிகாரில் தேஜஸ்வி யாதவுக்கு நெருக்கடியை உருவாக்க முடியும் என்று பா.ஜ.க. நம்புகிறது. பிகார் சட்டமன்றத்திலேயே பா.ஜ.க. இந்த பிரச்னையை எழுப்பியது.’ என்றார்.

வட மாநில தொழிலாளர்

அவர் மேலும் கூறுகையில், ‘ஆனால், தமிழ்நாடு வந்த பிகார் குழு, இங்கு வட மாநில தொழிலாளர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வின் வெறுப்பரசியல் எடுபடாது. இந்த பிரச்னையில் பா.ஜ.க.வின் உண்மை முகத்தை வட மாநிலத்தவரும் புரிந்து கொண்டுள்ளனர். அடுத்து வரும் நாட்களில் தேசிய அரசியலில் மு.க.ஸ்டாலின் முக்கிய இடம் பெறுவார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைவதிலும் அவர் பெரும்பங்கு வகிப்பார்’ என்றார்.

திமுகவின் குற்றச்சாட்டு குறித்து பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வும், தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசனிடம் பிபிசி தமிழ் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ‘தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர் பிரச்னை உண்மையில் கடந்த ஜனவரி மாதமே தொடங்கிவிட்டது. ஆங்காங்கே சிறிய அளவில் புகைந்து கொண்டிருந்த அந்த பிரச்னை இன்று பெருநெருப்பாக உருவெடுத்துள்ளது.

வெறுப்புணர்வைத் தூண்டிய சிறுசிறு அமைப்புகளின் செயல்பாடுகளை திமுக அரசு கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டது. அத்துடன், திமுக தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் பொறுப்பற்ற பேச்சுகளும் பிரச்னையை பெரிதாக்கிவிட்டிருக்கின்றன. இந்த பிரச்னையில் பா.ஜ.க. மீது குற்றம்சாட்டுவது அபத்தமானது.’ என்றார்.

தேசிய அரசியலில் மு.க.ஸ்டாலின் என்ற திமுகவின் கூற்று குறித்துப் பேசிய வானதி சீனிவாசன், ‘தேசிய அரசியலுக்குள் நுழைபவர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆனால், மு.க.ஸ்டாலினால் சொந்த மாநிலத்திலேயே நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை எனும் போது தேசிய அரசியலில் என்ன செய்துவிட முடியும்?’ என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »