பட மூலாதாரம், C. SHUKKUR
இன்று உலகம் முழுவதும் பெண்கள் தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், ஓர் இஸ்லாமியர் தன்னுடைய 29 ஆண்டுகால மனைவியை மீண்டும் திருமணம் செய்ய இருக்கிறார். அப்போதுதான் இந்தியாவில் இருக்கும் தன்னுடைய மொத்த சொத்தும் அவரது மகள்களுக்கு கிடைக்கும்.
கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞரான ஷுக்கூர் மற்றும் மகாத்மா காந்தி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான அவரது மனைவி ஷீனா ஆகியோரின் இந்த முடிவு, சமத்துவமற்ற வாரிசுரிமைச் சட்டங்கள் குறித்து முஸ்லிம்களிடையே எழுந்துள்ள புதிய விவாதத்திற்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது.
“முகமதிய சட்டத்தின் கொள்கைகளில் பாலின அடிப்படையில் நிறைய பாகுபாடுகள் உள்ளன. இது ஆணாதிக்க மனநிலையுடன் எழுதப்பட்ட சட்டம். மேலும், குர்ஆன் மற்றும் சுன்னாவின் போதனைகளுக்கு எதிரானது” என பிபிசி இந்தி சேவையிடம் ஷுக்குர் கூறினார்.
“அல்லாவின் முன்பு அனைத்து ஆண்களும் பெண்களும் சமம். ஆனால் 1906ஆம் ஆண்டு எழுதப்பட்ட டி.எச்.முல்லாவின் `முகமதியச் சட்டத்தின் கோட்பாடுகள்’ என்ற புத்தகத்தில் பெண்களை விட ஆண்கள் வலிமையானவர்கள் என்றும், அவர்கள் ஆண்களால் கட்டுப்படுத்தப்படுவார்கள் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் அவர்கள் வாரிசுரிமை சட்டத்தை உருவாக்கியுள்ளனர்” என்றும் அவர் கூறினார்.
இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர், மகன் கிடையாது. தற்போதைய சட்டப்படி மூன்று மகள்களும் பெற்றோரின் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியைப் பெறுவர். எஞ்சிய ஒரு பகுதி ஷூக்கூரின் சகோதரருக்குச் செல்லும். அவருக்கு மகன்களும் மகள்களும் உள்ளனர். எனவே அவரது சொத்து அவரின் குழந்தைகளுக்கு முழுவதுமாகச் செல்லும்.
இந்த பாரபட்சத்திலிருந்து விடுபடவே சிறப்புத் திருமணச் சட்டப் பிரிவு 16-இன் கீழ் பதிவுத் திருமணம் செய்ய நாங்கள் முடிவு செய்தோம். ஷரியா திருமணச் சட்டப்படி 1994ஆம் ஆண்டே எங்களுக்கு திருமணம் நடந்துவிட்டது’’ என்றார் ஷுக்குர்.

பட மூலாதாரம், Getty Images
சிறப்புத் திருமணச் சட்டப்படி அவர்கள் திருமணம் பதிவு செய்யப்பட்டுவிட்டால் இந்திய வாரிசு சட்டம் அவர்களுக்குப் பொருந்தும்.
”ஷரியா சட்டம் மூலம் திருமணத்தை ரத்து செய்ய எந்தக் காரணமும் இல்லை. சிறப்பு திருமணச் சட்டப் பிரிவு 21 எங்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது” என்றும் ஷுக்குர் கூறினார்.
உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் காலீஸ்வரம் ராஜ் பிபிசி இந்தி சேவையிடம் பேசுகையில், ‘’புதிதாக ஒரு மதச்சார்பற்ற திருமணத்தை நாடும் இந்தத் தம்பதியின் முடிவு, ஷரியா சட்டம் ஏற்படுத்தும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியைக் காட்டுகிறது. எனினும், இது சட்டரீதியான சிக்கல்களை ஏற்படுத்தலாம். புதிய திருமணம் முந்தைய சட்டத்திலிருந்து அவர்களை விடுவிக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடுத்தால், நீதித்துறை மூலம் தீர்வு கிடைக்கலாம்’’ என்றார்.
உச்ச நீதிமன்றத்தில் இதே போன்ற வேறு ஒரு வழக்குக்காக ராஜ் வாதாடுகிறார்.
அந்த வழக்கின் மனுவில், “முஸ்லிம்களின் தற்போதுள்ள வாரிசுரிமை சட்டப்படி பெண் குழந்தைகள் மட்டுமே கொண்ட ஓர் ஆணோ, பெண்ணோ இறந்துவிட்டால் அவரது சொத்தின் ஒரு பகுதி அவரது சகோதரருக்குச் செல்லும். எத்தனை பங்கு செல்லும் என்பது இறந்தவருக்கு இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது. ஒரு மகள் மட்டுமே இருந்தால் அந்தப் பெண்ணிற்கு பாதி சொத்து கிடைக்கும். இரண்டு மகள்கள் இருந்தால் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே செல்லும். தற்போதுள்ள சட்டம் மகள்களின் உரிமையைப் நேரடியாகப் பறிக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னைகளைப் பரிசீலித்து தகுந்த சட்டத்தை சட்டமன்றத்தில் உருவாக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கின் ரிட் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது.
ஆனால், இந்த விவகாரம் தற்போது பொதுவெளியில் பேசப்படுகிறது. கடந்த வாரம் உள்ளார்ந்த இஸ்லாம் மற்றும் மனித நேய மையம் (CIIH) நடத்திய கூட்டத்தில் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

பட மூலாதாரம், C. SHUKKUR
“சிஐஐஎச் கூட்டம் மற்றும் முஸ்லிம் பெண்களின் பாலின நீதிக்காக உருவாக்கப்பட்ட புதிய மன்றத்தின் முதன்மை நோக்கம், இது மதத்திற்கு எதிரானது அல்ல என்பதை முஸ்லிம் சமூகத்திற்கு விளக்குவதுதான்’’ என்கிறார் முஸ்லிம் பெண்களின் பாலின நீதிக்கான மன்றத்தைச் சேர்ந்த கதீஜா மும்தாஜ்.
“1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சமூக-பொருளாதார சூழல் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டிருக்கும். தற்போது மனித உறவுகள் மாறிவிட்டன. அப்போது தந்தை இறந்துவிட்டால் மகள்களைப் பார்த்துக் கொள்ள அவரது சகோதரர் இருந்தார். ஆனால், தற்போதுள்ள உறவுகள் பெண்களிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கின்றனர். ஒரு முஸ்லிம், அநாதையின் பணத்தை எடுத்துக் கொள்வதை இஸ்லாம் தடைசெய்கிறது’’ என்கிறார் கதீஜா மும்தாஜ்.
சிஐஐஎச் தலைவர் சி.எச்.முஸ்தபா மௌலவி பிபிசி இந்தி சேவையிடம் கூறுகையில், “ஷரியத் வடிவில் நடைமுறைப்படுத்தப்படும் முகமதிய சட்டம் குரானில் கூறப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிரானது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையில் நீதியும் சமத்துவமும் இருக்க வேண்டும் என்று குரான் கூறுகிறது’’ என்றார்.
“பழைய சட்டங்களை விளக்கி சுமார் 1,000 புத்தகங்கள் ஆண்களால் எழுதப்பட்டுள்ளன. அதில் மதகுருமார்களின் தவறான விளக்கம் மற்றும் ஆணாதிக்க தன்மை உள்ளது. இன்று, முஸ்லிம்கள் சட்டத்தை பின்பற்ற விரும்புகிறார்கள், ஆனால், பழங்கால சட்டங்களை அல்ல” என்றும் முஸ்தபா மௌலவி கூறினார்.
எனினும், “இந்தியாவில் உள்ள சிறிய குடும்பங்களுக்கு ஏற்ப முகமதிய சட்டங்களை உருவாக்க முறையான முயற்சி இருந்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு உண்மையான தீர்வை எட்ட முடியும். மேலும், அந்தச் சட்டம் ஆண்-பெண் சமத்துவ அரசியலமைப்பு கோட்பாட்டு விதிமுறையின்படி, பாலின நடுநிலையாக இருக்க வேண்டும்’’ என்கிறார் மூத்த வழக்கறிஞர் காலீஸ்வரம் ராஜ் .
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com