பட மூலாதாரம், Getty Images
நீலகிரி மாவட்டத்தில் அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்ட மாணவிகளில், ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு , மேற் சிகிச்சைக்கு சென்னை செல்லும் வழியில் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு மாணவி கவலைக்கிடமாக உள்ளார்.
நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உதகை நகராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு 249 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
தமிழக அரசு சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் போலிக் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படும்.
ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளியில் உள்ள ஆசிரியர் மூலம் இது வழங்கப்படுவது வழக்கம்.
ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை வீதம் 50 நாளைக்கு 50 மாத்திரைகள் கடந்த 6ஆம் தேதி வழங்கப்பட்டது.
அதிக மாத்திரையை யார் சாப்பிடுவது என போட்டி
சத்து மாத்திரைகளை வாங்கிய 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதுள்ள 4 மாணவிகள் இடையே, யார் அதிக ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்வது என வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவியும் என்னால்தான் முடியும் என்று மாறி மாறி பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரால் முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிவிடலாம் என்று கூறி மாத்திரைகளை சாக்லேட் சாப்பிடுவது போல் தொடர்ந்து சாப்பிட்டுள்ளனர்.
மாணவிகள் சாப்பிட்ட மாத்திரைகள் செயல்படத் தொடங்கியதால், அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் வகுப்பறையில் மயங்கி விழுந்ததால், அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், ஆசிரியர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து உடனடியாக மாணவிகள் மீட்கப்பட்டு உதகை அரசு மருததுவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவிகளின் பெற்றோர் கூறுகையில் 4 மாணவிகளும் மாத்திரையை இடைவெளி விடாமல் வேகமாகச் சாப்பிட்டுள்ளனர். அவர்கள் 30க்கும் மேற்பட்ட மாத்திரைகளைச் சாப்பிட்டதால் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்தனர்.
உதகை அரசு மருத்துமனை டீன் மனோகரி கூறுகையில், “தற்போது மாணவிகளின் நிலை நன்றாக உள்ளது. மாத்திரை சாப்பிட்டு 12 முதல் 14 மணி நேரத்திற்குப் பின்னர் தான் அதன் வீரியம் தெரிய வரும் என்பதால் மாணவிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்,” என்று தெரிவித்தார்.
“குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாத்திரை வாரம் ஒரு முறை மதியம் சாப்பிட்ட பின் அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வளவு மாத்திரைகளை, மொத்தமாக மாணவிகளுக்கு ஏன் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவகிறது,” என்று சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி தெரிவித்தார்.
அதிக மாத்திரைகளை உட்கொண்ட 4 மாணவிகள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டனர்.
ஊட்டி அரசு மருத்துவமனையில் ஆஷிக் மற்றும் அமீன் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
கல்லீரல் செயலிழப்பு
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நான்கு மாணவிகளுக்கும் கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நால்வரின் உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், ஒரு மாணவியின் உடல்நிலை சிகிச்சை பலனளிக்காமல் மோசமடைந்தது.
அந்த மாணவிக்கு கல்லீரலில் செயலிழந்து உள்ளதால் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேற்று மதியம் மாற்றப்படுவதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்தார். மேலும் மீதமுள்ள மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் நேற்று மதியம் 3.30 மணியளவில் 13 வயது மாணவியை 108 உதவூர்தி மூலம் சென்னைக்குக் கொண்டு செல்லும்போது, சேலம் அருகே சிறுமிக்கு மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் அதிகமாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து 108 உதவூர்தி ஊழியர்கள் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு 4.30 மணிக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். மாணவி உயிரிழந்ததை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் உறுதிசெய்தார்.
மாணவி உயிரிழந்ததை அடுத்து பள்ளி தலைமையாசிரியர் முகமது அமீன், நோடல் அதிகாரியும் ஆசிரியருமான கலைவாணி ஆகிய இரண்டு பேரை பணியிடை நீக்கம் செய்து தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஜெயக்குமார் உத்திரவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com