பட மூலாதாரம், Getty Images
கணினிமய சூதாட்ட ஆப்களையும், வரைமுறையின்றி லோன் வழங்கும் ஆப்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிப்பதால் எங்களை போன்ற எத்தனையோ குடும்பங்கள் அனாதை ஆகின்றன. இந்த சமூகத்தில் கொரோனாவை போல கணினிமய சூதாட்டமும் ஒரு தொற்று நோயாக பரவி வருவது யார் கண்ணுக்கும் தெரியவில்லையா? என்று கேட்கிறார் கணினிமய சூதாட்டத்தால் தனது கணவரை இழந்த லதா.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கணினிமய ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளாகும் நபர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றிய கணினிமய சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி. கணினிமய சூதாட்டத்திற்கு அரசு தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுபெற்றும் வரும் சூழலில், ஆளுனரின் இந்த செயல்பாடு அரசியல் தளத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
சட்டங்களை அமல்படுத்துவது தாமதமடைந்து வரும் சூழலில், இங்கே தற்கொலைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது, மக்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. கணினிமய சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் அதற்கு அடிமையாவது எப்படி? கணினிமய சூதாட்டங்களால் உறவுகளை இழந்து வரும் குடும்பங்களின் நிலை என்னவாக இருக்கிறது?
அதிகரிக்கும் தற்கொலைகள் :

பட மூலாதாரம், Getty Images
கடந்த மார்ச் 5 ஆம் தேதி மெரினா கடற்கரையில் 40வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அவர் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சுரேஷ் என்றும், கணினிமய ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
காவல்துறை விசாரணையில், கணினிமய ரம்மி விளையாட்டில் 17 லட்சம் ரூபாய் வரை அவருக்கு கடன் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்கொலைக்கு முன்பாக கணினிமய ரம்மியை தடை செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி வைத்திருக்கிறார் சுரேஷ். அந்த கடிதத்தில், ”முதலமைச்சர் ஸ்டாலின் ஐயாவுக்கு, தயவு செய்து கணினிமய ரம்மியை தடை செய்யுங்கள். தங்கள் காலில் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன். என்னைப்போல் பலரும் தங்களது குடும்பத்தை அனாதையாக விட்டுவிட்டு செல்லக் கூடாது. இத்தகைய நிலை யாருக்கும் வரக்கூடாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணினிமய சூதாட்டங்களால் நிகழும் மரணங்கள், பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவையாக இருக்கின்றன என மனநல மருத்துவர் அசோகன் குறிப்பிடுகிறார். ஏனெனில் பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருக்கும் நபர்கள் ஒருவேளை தங்களது பணத்தை சூதாட்டங்களில் இழந்தால் கூட அவர்களது வாழ்வில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்கிறார் அவர்.
அதன் அடிப்படையில் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் கணினிமய சூதாட்டத்தால் நிகழ்ந்திருக்கும் தற்கொலைகள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கம் அல்லது அதற்கு கீழான பொருளாதார நிலையில் இருக்கும் குடும்பங்களிலேயே அரங்கேறியிருப்பது தெரிய வருகிறது.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த வினோத் குமார் என்பவரும், லோன் ஆப்களில் கடன் வாங்கி, கணினிமய சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். மெடிக்கல் பிரதிநிதியாக பணியாற்றி வந்த இவர், கணினிமய சூதாட்டத்தில் 20 லட்சம் ரூபாய் வரை இழந்து கடனாளியாக மாறியிருக்கிறார். கடனை திரும்ப செலுத்துமாறு லோன் ஆப்கள் கொடுத்த நெருக்கடிகளாலும், குடும்பத்தினரிடம் இதை சொல்வதற்கு பயந்தும், வினோத் குமார் கடந்த மார்ச் 4ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் வேலை ஏதும் இல்லாத நிலையில், கணினிமய சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாத போது பிரபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில் பிரபுவுக்கு கணினிமய சூதாட்டத்தால் 35லட்சம் ரூபாய் வரை கடன் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. வேலை ஏதும் இல்லாத நிலையிலும், கடன் கார்ட் மூலம் கடன் பெற்று பிரபு சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
அதேபோல் சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநர் கணினிமய சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். கைகளில் இருந்த பணம் கரைந்த பிறகும், நண்பர்களிடம் கடன் வாங்கி சூதாட்டத்தை தொடர்ந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமாக வாங்கிய கடனால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த அவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குணசீலன் என்னும் பி.காம் பட்டதாரி, மதுரையில் தங்கி அங்கு ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். அப்போது கணினிமய சூதாட்டத்திற்கு அடிமையான அவர், வாங்கும் சம்பளம் முழுவதையும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தி வந்திருக்கிறார். அதுதவிர ஐம்பதாயிரம் ரூபாய் வரை கடன் பெற்று விளையாடி, அதையும் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். இதை வீட்டில் சொல்வதற்கு பயந்து கடந்த பிப்ரவரி மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதவிர ஒரிசாவிலிருந்து, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திற்கு கூலி வேலைக்காக வந்த ஸ்ரீதனா மாஞ்சி என்னும் பெண் ஒருவரும் கணினிமய சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார். தென்காசியில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் தனது கணவர் அஜய்குமாருடன் வேலை செய்து வந்த அவர், ஓய்வு நேரங்களில் கணினிமய சூதாட்டத்தை விளையாட ஆரம்பித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையான அவர், வேலைக்கு செல்வதையே விடுத்து இணையத்தில் தொடர்ந்து விளையாடி வந்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட கடனால், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில் 70,000ரூபாய் வரை அவர் சூதாட்டத்தில் இழந்திருப்பது தெரிய வந்தது.
குடும்பங்களை சிதைக்கும் சூதாட்டம் :

பட மூலாதாரம், Getty Images
”எனது கணவர் இப்படியொரு விளையாட்டை விளையாடி வந்திருக்கிறார் என்பதே அவர் இறப்புக்கு பிறகுதான் எங்களுக்கு தெரிய வந்தது. குடும்பங்களை நேசிக்கும் ஒரு பொறுப்பான குடும்ப தலைவராக அவர் இருந்தார். இந்த சூதாட்டம் இப்போது எங்கள் குடும்பத்தையே சிதைத்துவிட்டது” என்று கலங்குகிறார் கணினிமய ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட வினோத் குமாரின் மனைவி லதா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இந்த விளையாட்டை விளையாடி வருபவர்கள் படிக்காதவர்களோ அல்லது ஒன்றும் தெரியாத முட்டாள்களோ அல்ல. அனைவரும் தெரிந்தேதான் இதற்குள் செல்கிறார்கள். ஆனால் விளையாட்டு, விளையாட்டாக மட்டுமல்லாமல், எப்படி இவர்களை கடனாளியாக ஆக்குகிறது? இன்று இணையத்தில் கொட்டி கிடக்கும் லோன் வழங்கும் ஆப்கள்தான் இவர்களின் மரணத்திற்கு காரணம். ஒரே ஒரு ஆதார் அட்டை எண் இருந்தால் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் இந்த ஆப்களில் கடன் பெற்று கொள்ளலாம். எனது கணவரும் இப்படியான ஒரு மோசடியில் சிக்கிதான் இன்று தன் உயிரை விட்டிருக்கிறார்” என்று ஆதங்கத்துடன் கூறுகிறார் லதா.
”நாங்கள் வசிப்பது வாடகை வீட்டில்தான். எங்களுக்கென எந்தவொரு சொத்தோ, பின்புலமோ கிடையாது. எனது கணவர் மெடிக்கல் பிரதிநிதியாக இருந்தார். நானும் ஒரு மருந்தகத்தில் பணியாற்றி வருகிறேன். எங்களை போன்ற குடும்பங்களில் இருப்பவர்களுக்கு இந்த கணினிமய லோன் ஆப்கள் எப்படி இவ்வளவு கடனளிக்கிறது என்பதை என்னால் கொஞ்சம் கூட புரிந்துகொள்ள முடியவில்லை” என்று இணையத்தில் நடக்கும் மோசடிகளை சுட்டிகாட்டுகிறார் அவர்.
தான் இணையத்தில் சூதாட்டம் விளையாடியது குறித்தும், அதனால் ஏற்பட்ட இருபது லட்சம் ரூபாய் கடன் குறித்தும் ஆறு மாதத்திற்கு முன் தனது மனைவி லதாவிடம் முதன்முதலாக தெரிவித்திருக்கிறார் வினோத் குமார் . அப்போது லதா அவருக்கு கொடுத்த அறிவுரையின் பேரில், சூதாட்ட ஆப்களை கைபேசியில் இருந்து நீக்கம் செய்திருக்கிறார்.
அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் கணினிமய சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு செப்டம்பர் 26ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அக்டோபர் 1ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். இதனை தொடர்ந்து இடைப்பட்ட சிறுதுகாலம் இந்த விளையாட்டுகள் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த அவசர சட்டம் கடந்த நவம்பர் 27ஆம் தேதி காலாவதியானது. இதனை தொடர்ந்து கணினிமய சூதாட்ட ஆப்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தன.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு பின்னர்தான் வினோத் குமார் மீண்டும் சூதாட்டத்தில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.
”தடைக்கு பின் மீண்டும் அமலுக்கு வந்த கணினிமய சூதாட்ட ஆப்கள், மிக அதிகளவில் Upgrade ஆகியிருந்தன” என்கிறார் லதா.
இதுகுறித்து அவர் பேசுகையில் “சூதாட்ட ஆப்களை தடை செய்திருந்த காலத்தில் எனது கணவர் மிகவும் இயல்பாகத்தான் இருந்தார். எங்கள் வாழ்க்கை மிகவும் நிம்மதியாக சென்றுக் கொண்டிருந்தது. ஆனால் தடை நீங்கி மீண்டும் அந்த ஆப்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு , எனது கணவர் மறுபடியும் விளையாடத் துவங்கினார் என்பது எனக்கு தெரியாது.
நாங்கள் இல்லாத நேரங்களிலும், அலுவலக வேலைகளின்போதும் அவர் இந்த விளையாட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறார். முன்பு இருபது லட்சமாக இருந்த கடன், தற்போது எண்ணிலடங்கா லட்சங்களில் இருக்கிறது. அவரது கைபேசியில் எண்ணற்ற லோன் வழங்கும் ஆப்கள் இருந்தன. இது அனைத்துமே அவர் இறந்த பிறகு அவர் எங்களுக்காக எழுதி வைத்திருந்த கடிதங்கள் மூலமாகவும், அவரது மொபைலை ஆய்வு செய்ததன் மூலமாகவும்தான் தெரிய வந்தது” என்று தெரிவிக்கிறார்.
“இப்போது எனது குடும்பம் நிர்கதியாக நிற்கிறது. முழு ஆண்டு தேர்வு எழுதவிருந்த எனது இரண்டு குழந்தைகள், அதனை எழுத முடியவில்லை. இறப்பதற்கு முன்பு எனது கணவர் எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தார் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இப்படியான ஆப்களை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிப்பதால் எங்களை போன்ற எத்தனையோ குடும்பங்களை அனாதை ஆகின்றன. இந்த சமூகத்தில் கொரோனா போல சூதாட்டமும் ஒரு தொற்று நோயாக பரவி வருவது யார் கண்ணுக்கும் தெரியவில்லையா?” என்று கேள்வியெழுப்புகிறார் லதா.
கணினிமய சூதாட்டம் ஒரு மீள முடியா போதை
”மது, சிகரெட் போன்ற விஷயங்களுக்கு மக்கள் எப்படி அடிமையாகிறார்களோ, அதேபோன்றுதான் இது போன்ற விளையாட்டுகளுக்கும் அவர்கள் அடிமையாகிறார்கள். இப்படி குறிப்பிட்ட விஷயங்களுக்கு அடிமையாகிறவர்களின் மூளை, சாதரணமாக இருப்பவர்களின் மூளையை விட சற்று வேறுபட்டிருக்கும். அவர்களின் மூளையில் `டோப்பமைன் (dopamine)` என்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ரசாயனம் அதிகளவில் சுரக்கும்.
சூதாட்டத்தில் 500 ரூபாய் இழக்கிறார்கள், நூறு ரூபாய் பெறுகிறார்கள் என்றால், அவர்களது கண்ணுக்கு அந்த நூறு ரூபாய் மட்டும் தெரியுமே தவிர இழந்த 500ரூபாய் தெரியாது. தவறு செய்கிறோம், அதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை உணரவோ, சிந்திக்கவோ விடாமல், இத்தகைய நிலை அவர்களை தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களில் ஈடுபட செய்யும்” என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி.

நூறு பேரில் பத்து பேருக்கு இது போன்ற அடிமைப்படும் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சில மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது என குறிப்பிடுகிறார் மருத்துவர் குறிஞ்சி.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், “ இதுபோன்ற கணினிமய விளையாட்டுகளுக்கு அடிமையானவர்கள், தங்களது மனைவியோ, குழந்தைகளோ, பெற்றோர்களோ இதுகுறித்து கண்டிக்கிறார்கள் என்றால், அவர்களிடமிருந்து எப்படி இதனை மறைப்பது என்ற சிந்தனைகளுக்குள் மூழ்குவார்கள். அல்லது தங்களது தவறுகளை மறைக்க எதிர்த்து சண்டையிடுவார்கள். அவர்களாகவே தங்களது அடிமை நிலையிலிருந்து வெளிவர நினைப்பது என்பது அரிதான விஷயம். எனவே அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள்தான் இந்த விஷயத்தை கவனமாக கையாள வேண்டும்” என்கிறார்.
”இவர்களை போன்றவர்களுக்கு `Cognitive Behavioral Therapy’ என்னும் கவுன்சிலிங் முறை உதவி புரியும். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னையை முதலில் அவர்களுக்கு புரிய வைத்து, அவர்களது தவறுகளை சுட்டிகாட்டி, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது பழக்கங்களை மாற்றுவதுதான் இந்த சிகிச்சையின் அடிப்படை. மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்களை மீடபதற்கு சில மருந்துகளும் இருக்கின்றன.ஆனால் சிகிச்சைகளை எடுத்துகொள்வதற்கு பாதிக்கப்பட்டவர்களின் ஒத்துழைப்பு முதலில் அவசியம்” எனவும் குறிப்பிடுகிறார் மருத்துவர் குறிஞ்சி.
”உடற் பயிற்சிகள் மேற்கொள்வது, சீரான தூக்க முறைகளை கடைபிடிப்பது, அதிக நேரம் தனிமையில் இருப்பதை தவிர்ப்பது போன்ற விஷயங்களை பின்பற்றுவதன் மூலம், இது போன்ற அடிமை நிலை ஏற்படுவதிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள முடியும்” எனவும் அவர் சுட்டிகாட்டுகிறார்.
கணினியுடன் விளையாடி மனிதனால் ஜெயிக்க முடியாது

”இன்றைய கணினிமய சூதாட்டம் மட்டுமல்ல, இதற்கு முன்னதாக இதேபோல சர்ச்சையை ஏற்படுத்திய பப்ஜி போன்ற எத்தனையோ கணினிமய விளையாட்டுகள், மனிதனை தோற்கடிக்கும் வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன” என்று குறிப்பிடுகிறார் மனநல மருத்துவர் அசோகன்.
பிபிசி தமிழிடம் இதுகுறித்து பேசிய அவர், ”ஆரம்ப கட்டத்தில் இதுபோன்ற விளையாட்டுகளில் வெற்றி பெறுவது போல தோன்றினாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அந்த விளையாட்டுகளில் மனிதனால் வெற்றி பெற இயலாது. இன்றைக்கு புழக்கத்தில் இருக்கும் மெய்நிகர் செயலிகள், கணினி மயமான விளையாட்டுகள் போன்ற அனைத்துமே அவ்வாறுதான் வடிவமைக்கப்படுகின்றன. எனவே இதுபோன்ற செயலிகள் புழக்கத்திற்கு வருவதை தடை செய்ய வேண்டும்” என்று கூறுகிறார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், ”கணினிமய சூதாட்ட செயலிகள் எளிதாக கிடைப்பதால்தான் மனிதன் அதனை முயற்சி செய்கிறான். அதில் சிலர் அடிமையாகிறார்கள். இதனை ‘Behavioral Addiction’ என்று கூறுவோம். ஒருவர் இப்படி விளையாட்டிற்கு அடிமையாகும்பட்சத்தில் அவர்களை மீட்டு கொண்டு வருவதற்கு மருத்துவத்தில் சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில், இத்தகைய சூதாட்டங்களால் அவர்களுக்கு ஏற்படும் லட்சக்கணக்கான ரூபாய் கடன்களை அடைப்பது நடைமுறையில் எப்படி சாத்தியமாகும்? எனவே இதுபோன்ற விளையாட்டுகளை முழுமையாக தடை செய்வதுதான் சிறந்த தீர்வாக இருக்கும்” என்று தெரிவிக்கிறார் மருத்துவர் அசோகன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com