இலங்கை இந்திய மீனவர்களிடையேயான பேச்சு வார்த்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இருநாட்டு மீனவர்கள் இடையே ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.
மீனவர் பேச்சுவார்த்தை உடனடியாக நடத்தி, இரு நாட்டு மீனவர்களும் நடுக்கடலில் சுமூகமான முறையில் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு நாட்டு மீனவர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், விரைவில் மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைவதால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆவதுடன், மீனவர்கள் இடம்பெயர்ந்து மாற்று தொழில் தேடி செல்வதால் அடுத்த தலைமுறைக்கு மீன் தொழில் தெரியாமல் அழிந்து விடும் சூழ்நிலை இருப்பதாகவும் இலங்கை மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இரு நாட்டு மீனவர்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட இந்திய இலங்கை மீனவர்களிடம்., இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் கலந்து கொண்ட மீனவர்கள் தங்களது கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
அடுத்த தலைமுறைக்கு மீன் பிடி தொழில் தெரியாமல் போய்விடும்
இலங்கை நெடுந்தீவு மீனவ சங்க தலைவர் குரூஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில், ”இந்திய மீனவர்கள் அத்துமீறல் காரணமாக இலங்கை நெடுந்தீவு பகுதியில் மீன் பிடி தொழில் அழிந்து வருகிறது. இதனால் மக்கள் இடம்பெயர்ந்து வேறு தொழில் தேடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் கடல் வளம் அழித்த இந்திய மீனவர்களால் வரும் தலைமுறைக்கு மீன்பிடி தொழில் கற்றுத் தர முடியாத அளவிற்கு, மீன் பிடி தொழில் அழியும் சூழ்நிலைக்கு சென்றுவிடும். இலங்கை இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை என்பது உரிய மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டு நடத்தப்பட வேண்டும், இந்திய மீனவர்கள் ஒருபோதும் தாங்கள் செய்வதை நியாயப்படுத்தக் கூடாது”என்று தெரிவித்தார்.
கிடப்பில் போடப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு இந்திய மீனவர்களின் அத்துமீறல்தான் முக்கிய காரணம் எனவும் அவர் கூறுகிறார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், “இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளை பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து கடல் வளத்தை அழிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும், அதிக குதிரை திறன் கொண்ட எஞ்சின்களை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது என பல முறை இலங்கை மீனவர்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை இந்திய மீனவர்கள் ஏற்காமல் தொடர்ந்து கடல் வளத்தை அழித்து வருகின்றனர்.
இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறையை முற்றிலும் நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை வந்தால் மட்டுமே இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெறும். அதுவரை இரு நாட்டு பிரதமர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் சுமூகமான தீர்வு ஏற்படாது”என்கிறார் நெடுந்தீவு மீனவ சங்க தலைவர் குரூஸ்
தொப்புள் கொடி உறவுகள் விட்டு கொடுக்க வேண்டும்:

இது குறித்து தமிழக மீனவர்கள் சார்பில் பிபிசி தமிழிடம் பேசிய மீனவர் எமரால்டு, “கச்சத்தீவில் இரு நாட்டு மீனவர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒரு சம்பிரதாயமானது. இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இந்த சந்திப்பில் இரு நாட்டு மீனவர் பிரச்சனை தீர்க்கப்படாது.
மீனவர் பிரச்சினை பொறுத்தளவில் இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் நடந்தால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். எனவே அதற்கான ஏற்பாடுகளை இரு நாட்டு அரசும் உடனடியாக செய்ய வேண்டும்” என்று கூறுகிறார்.
மேலும், “இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் ஒருநாளும் அனுமதிக்க மாட்டோம் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆண்டாண்டு காலமாக இலங்கை கடற்பரப்பில்; மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்.
இல்லையெனில் தமிழக கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மீனவர்கள் மீன் பிடி தொழிலை விட்டு விட்டு மாற்று தொழில் தேடி செல்லும் நிலை ஏற்படும். சமீப காலமாக இலங்கை கடற்படை பிரச்சனை காரணமாக பாரம்பரிய மீனவர்கள் பலர் மீன் பிடி தொழிலை விட்டு வெளியேறி விட்டனர். எனவே தொப்புள் கொடி உறவுகளான இலங்கை மீனவ மக்கள் இலங்கை கடலை தமிழக மீனவர்கள் பயன்படுத்த அனுமதி அளித்து தமிழக மீனவர்களை காக்க வேண்டும்” எனவும் எமரால் கேட்டு கொண்டார்.
இரு நாட்டு பிரதமர் முன்னிலையில் பேச்சுவார்த்தை:

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய இலங்கை மீன்கள் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “இரு நாட்டு மீனவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வு காண நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய மீனவர்கள் அத்துமீறல் காரணமாக இலங்கை கடல் வளம் அழிவதால் ஒருபோதும் இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்களை அனுமதிக்கும் நோக்கம் இல்லை” என்றார்.
மேலும், “ இரு நாட்டு மீனவர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை சமூகமாக பேசி தீர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது அதே போல் இலங்கையில் தமிழர்களின் உரிமையை பெற்றுத் தருவதற்கு அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிமைகளை பெற நினைத்த நிலையில் பிரபாகரன் போர் நடத்தப்பட்டு பல உயிர்களை இழந்தோம் எனவே மீனவர் பிரச்சனையில் நல்ல தீர்வு எட்டப்படும்.
விரைவில் இலங்கை இந்திய பிரதமர்கள் முன்னிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது” என்றார் இலங்கை மீன் வளத்தறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

மனிதாபிமான முறையில் மீனவ பிரச்சனை கையாள வேண்டும்
இந்நிலையில் மீனவர் பிரச்சினை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி ராகேஷ் நட்ராஜ், “மீனவர் பிரச்சினை பொறுத்தளவில் மனிதாபிமான அடிப்படையில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட இந்திய படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்ததற்கு சுமார் 1.50 லட்சம் பராமரிப்பு தொகை செலுத்தி படகை எடுத்து செல்ல வேண்டும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசிடம் கலந்தாலோசித்து பராமரிப்பு தொகையை இந்திய மீனவர்கள் செலுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com