மனைவிக்குத் தெரியாமல் தன்னிடமிருந்த தனது நிறுவன பங்குகளை தனது உறவினர்களுக்கு விற்றுவிட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து, ஸோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு விளக்கமளித்துள்ளார்.
தன்னுடைய மனைவிக்குத் தெரியாமல் தன்னிடமிருந்த ஸோஹோ நிறுவனப் பங்குகளை தனது உறவினர்களுக்கு அந்த நிறுவனத்தின் நிறுவனரும் சிஇஓவுமான ஸ்ரீதர் வேம்பு விற்றுவிட்டதாக அவருடைய மனைவி பிரமிளா ஸ்ரீநிவாஸன் கூறியிருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் Forbes இதழில் வெளியான செய்திக் கட்டுரை சமூக வலைதளங்களில் பரவிவரும் நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் குறித்த ஸோஹோவின் நிறுவனரும் சிஇஓவுமான ஸ்ரீதர் வேம்பு விளக்கம் அளித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, “என் மீது தனிப்பட்ட முறையில் மிக மோசமான தாக்குதல் தொடுக்கப்பட்டுவரும் நிலையில், அது குறித்து விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது மிகவும் வலி மிகுந்த ட்விட்டர் பதிவுத் தொகுப்பு. என் தொழில் வாழ்க்கைக்கு முற்றிலும் முரண்பட்ட, துயர்மிகுந்ததுதான் என் தனிப்பட்ட வாழ்க்கை.
ஆட்டிசம் எங்கள் வாழ்வைச் சீரழித்துவிட்டது. தற்கொலை எண்ணம் ஏற்படுமளவுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நானும் எனது மனைவி பிரமிளாவும் ஆட்டிசத்திற்கு எதிராகப் போராடிவருகிறோம். அவர் மிகச் சிறந்த அன்னை. அவர் மிகுந்த அன்புடன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட எனது மகனை கவனித்துக்கொண்டிருக்கிறார். அவரோடு நானும் கடுமையாக இதில் ஈடுபட்டிருக்கிறேன்.
எனது மகனுக்கு அளிக்கப்பட்ட சில சிகிச்சைகளை நானும் எடுத்துக்கொண்டேன். அப்போதுதான் அந்த சிகிச்சைகள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதற்காக இதைச் செய்தேன்.
எங்கள் மகனுக்கு தற்போது 24 வயதாகும் நிலையில், அவருக்கு அளிக்கப்பட்டுவந்த முடிவில்லாத சிகிச்சைகள் பெரிய பலனளிக்கவில்லை. அவர் நேசிக்கக்கூடிய மக்களுக்கு நடுவில் கிராமப்புற இந்தியாவில் இருந்தால் நன்றாக இருக்கும் என நான் நினைத்தேன். ஆனால், நான் அவரைக் கைவிடுவதாக மனைவி கருதினார். அந்த அழுத்தத்தில்தான் எங்கள் திருமணம் உடைந்தது.
துரதிர்ஷ்டவசமாக எங்கள் திருமண முறிவு, புதிய மோதலை ஏற்படுத்தியது. ஸோஹோ கார்ப்பரேஷனில் எனது உரிமைகள் குறித்து நிறுவப்படாத குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் அவர் முன்வைத்தார். ஊடகங்களை நாடவும் அவர் முடிவெடுத்தார். இந்த விவகாரம் தற்போது அமெரிக்காவில் நீதிமன்றத்தில் இருக்கிறது. என்னுடைய வாதங்கள் பொதுவில் உள்ளன.
என்னிடமிருந்த பங்குகளை நான் யாருக்கும் மாற்றவில்லை. எங்கள் 27 வருட வரலாற்றில் 24 வருடங்கள் நான் அமெரிக்காவில்தான் இருந்தேன். அந்த காலகட்டத்தில்தான் இந்தியாவில் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

பிரமிளாவையும் எனது மகனையும் நிதி ரீதியாக கைவிட்டுவிட்டேன் என்று சொல்வது முழுமையான கட்டுக்கதை. நான் வாழும் வாழ்வைவிட வசதியான வாழ்வையே அவர்கள் வாழ்கிறார்கள். நான் அவர்களை முழுமையாக ஆதரித்துவந்துள்ளேன். கடந்த மூன்று ஆண்டுகளில் எனது அமெரிக்க சம்பளம் எனது மனைவி வசம்தான் உள்ளது. எங்கள் வீட்டையும் அவருக்கே கொடுத்து விட்டேன். அவருடைய ஃபவுண்டேஷனையும் ஸோஹோ ஆதரித்து வருகிறது.
சித்தப்பா மீது புகார்
இந்தக் குழப்பம் அனைத்திற்கும் காரணம், அமெரிக்காவில் வசிக்கும் எனது சித்தப்பா ராம்தான். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அடைக்கலம் கொடுத்தேன். அவருக்கும் எனது தந்தைக்கும் ஆகாது என்ற நிலையில், என்னைப் பற்றியும் எனது சகோதரர்களைப் பற்றியும் அவர் மோசமான வதந்திகளைப் பரப்பி வருகிறார்.
சில தசாப்தங்களாகவே எங்களோடும் எனது தந்தையோடும் எனது சித்தப்பா ராமிற்கு எந்தத் தொடர்பும் கிடையாது. அவர் அலாஸ்காவில் வசித்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக கலிபோர்னியாவுக்கு வந்து எங்களுடன் வசியுங்கள் என்று நான் சொல்வதற்கு முன்பாக, அவரோடு எங்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. அவருடைய புற்றுநோய் குணப்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், கருணை அடிப்படையில் இதை நான் செய்தேன்.
“பொய்களால் தொடரும் துயரம்”
எனது தந்தையைப் பற்றி மிக மோசமாகப் பேசி வந்தார் எனது சித்தப்பா. எனது தந்தை ஏழ்மையில் வாழ்ந்தவர் என்றாலும் அவர் பெருமிதம் மிகுந்தவர். யாரிடமும் கைநீட்டியவரில்லை. எங்கள் வாழ்க்கையோடு, என் சித்தப்பாவுக்கு பல தசாப்தங்களாக எந்தத் தொடர்பும் கிடையாது.
ஆட்டிசத்தோடு போராடுவதில் நான் அவரைக் கைவிட்டுவிட்டேன் என்ற விரக்தியால் பிரமிளா, எனது சித்தப்பாவை நம்ப ஆரம்பித்துவிட்டார். நான் இப்போது செய்துகொண்டிருக்கும் சேவையை செய்யாவிட்டால், வாழ்வதற்கான ஆசை எப்போதோ என்னை விட்டுப் போயிருக்கும் என்பதை மட்டும்தான் இப்போது சொல்ல முடியும்.
மிக துயர்மிகுந்த சொந்த வாழ்வை நாங்கள் வாழ்ந்திருக்கிறோம். இப்போது எனது சித்தப்பாவின் பொய்களால் இந்தத் துயரம் சிக்கலான சட்ட வடிவம் எடுத்திருக்கிறது. நான் எப்போதுமே பிரமிளாவையும் எனது மகனையும் ஆதரித்து வந்துள்ளேன். வாழும்வரை தொடர்ந்தும் ஆதரிப்பேன். உண்மையும் நீதியும் வெல்லும் என நம்புகிறேன்.

பட மூலாதாரம், Zoho Corporation
இதற்கு முன்பாகவும் மிக மோசமான தனிப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறேன். இதையும் எதிர்கொள்வேன். கிராமப்புற இந்தியாவில் தொடர்ந்து நான் நிறுவனங்களை உருவாக்குவேன். அதுதான் என் வாழ்வில் எஞ்சியிருக்கும் நோக்கம். ஒரு நாள் என் மகனும் இதில் இணைந்துகொள்வான் என பிரார்த்திக்கிறேன்” என்று விளக்கமளித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் படித்த ஸ்ரீதர் வேம்பு, ஆய்வுப் படிப்பிற்காக 1989ல் அமெரிக்கா சென்றார். அங்கு பிரமிளாவைச் சந்தித்தார். இருவரும் 1993ல் திருமணம் செய்துகொண்டனர். 2020ல் இந்தியா திரும்பிய ஸ்ரீதர் வேம்பு தென்காசி மாவட்டம் மத்தலாம்பாறை கிராமத்தில் தற்போது வசித்து வருகிறார்.
இந்த நிலையில், ஸ்ரீதர் வேம்புவும் பிரமிளாவும் கடந்த 2021ல் விவாகரத்துக் கோரி கலிபோர்னியா நீதிமன்றத்தை அணுகினர். தற்போது இந்த வழக்கு அங்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில்தான் தனக்கும் தன் மகனுக்கும் சேர வேண்டிய பங்குகளை தனது சகோதரியின் பெயருக்கு மாற்றிவிட்டதாக பிரமிளா தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வாதங்களை அடிப்படையாக வைத்து Forbes இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com