Press "Enter" to skip to content

இம்ரான் கான் விவகாரம்: ஆபத்தான நிலையில் இருக்கிறதா பாகிஸ்தான்?

பட மூலாதாரம், RAHAT DAR/EPA-EFE/REX/SHUTTERSTOC

லாகூரில் இரண்டாவது நாளாக, இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் தொடர்ந்தது. ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுடன் இம்ரான் கானைக் கைது செய்ய மான் பார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு விரைந்தது காவல் துறை.

இம்ரான் கான் கைதாவதை தவிர்க்கிறார். இந்தக் கைது நடவடிக்கை, தன்னைக் கடத்தவோ கொல்லவோ செய்யப்படும் சதி என்று அவர் அச்சம் தெரிவிக்கிறார்.

மறுபுறம், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காவல்துறை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவே சென்றதாக பாகிஸ்தான் அரசு கூறுகிறது.

விசாரணைக்கு ஆஜராகுமாறு எச்சரித்தும் பலமுறை அலட்சியப்படுத்திய இம்ரான் கான் மீது பாகிஸ்தானில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி, லாகூர் உயர் நீதிமன்றத்தில், கைது நடவடிக்கையை நிறுத்தக் கோரி மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், இம்ரான் கானை வியாழக்கிழமை காலை 10 மணி வரை கைது செய்யக் கூடாது என்று கூறித் தடை விதித்துள்ளது.

பொதுச் சொத்துகளை சேதப்படுத்தும் நபர்களின் காணொளிக்களைச் சமர்ப்பிக்குமாறும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் துறையினரைத் தாக்கியவர்களின் காணொளி காட்சிகளையும் நீதிமன்றம் கோரியுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாகூர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இம்ரான் கான் கைது செய்யப்படுவதை தடுக்க, அவரது வீட்டிற்கு வெளியே திரண்டிருந்த ஆதரவாளர்களைக் கலைக்கக் காவல் துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசித் தடியடி நடத்தினர்.

இம்ரான் கானின் ஆதரவாளர்களும் காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அந்த கும்பல் தீயணைப்பு வாகனம், அங்கு செல்லும் வாகனங்களுக்கும் தீ வைத்தது. அந்த நேரத்தில், ஜமான் பூங்கா பகுதி, ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திலும் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டது.

ஜாமீனில் வரக்கூடிய வாரண்டுகளை ரத்து செய்ய பிடியாணை பிறப்பித்த அதே அமர்வு நீதிமன்றத்தைத் தான் அக்கட்சி அணுக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வுகளால் அந்நாட்டு அரசியலில் என்ன தாக்கம் இருக்கும்?

பாகிஸ்தான் அரசியல் - இம்ரான் கான்

பட மூலாதாரம், EPA

ஸ்திரத்தன்மை அற்ற அரசியல்

அரசியல் விமர்சகர் ஹசன் அஸ்காரி ரிஸ்வி, “சமீபத்திய முன்னேற்றங்கள் பாகிஸ்தானின் அரசியலை அடுத்த சில வாரங்களில் என்ன நடக்கும் என்று சொல்வது மிகவும் கடினம் என்ற இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரம் மோசமாக உள்ளது, பாகிஸ்தானின் அரசியலும் மோசமாக உள்ளது, பாகிஸ்தானில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது, இந்த நெருக்கடி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்பதை மட்டுமே இந்த நேரத்தில் கணிக்க முடியும். அது எவ்வளவு தீவிரமாக இருக்குமோ அந்த அளவுக்குக் குழப்பமும் அமைதியின்மையும் நிலவும்” என்கிறார்.

இந்த மோதல், சர்வதேச செலாவணி நிதியத்துடனான பேச்சுவார்த்தையைத் தடம் புரளச் செய்யலாம் என்று ஹசன் ரிஸ்வி கருதுகிறார்.

இப்போது அல்லது அடுத்த சில நாட்களில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டால், தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம். பாகிஸ்தானின் நிலை என்ன ஆகும் என்று யாராலும் கூற முடியாது என்று ஹசன் ரிஸ்வி கருதுகிறார்.

தார்மீக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பது ஹசன் ரிஸ்வியின் கருத்து. ஆனால் இந்த விஷயம் அவ்வளவு எளிதல்ல. தற்போதைய சூழ்நிலையில், இந்த அரசியல் சூடு அதிகரித்து வருவதைத் தனியாகப் பார்ப்பதும் சரியாக இருக்காது.

“காவல்துறை முற்றிலும் அரசியல் ரீதியாகச் செயல்படுகிறது. பாகிஸ்தானில் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யும் மரபு இல்லை, மார்ச் 18 அன்று நீதிமன்றத்தில் ஆஜராவதாக இம்ரான் கான் உறுதியளித்திருக்கும்போது, லாகூரில் இதுபோன்ற நாடகத்தை மேடையேற்ற வேண்டிய அவசியமில்லை. இது எல்லாமே அரசியல்தான். ஸ்திரத்தன்மையற்ற அரசியல்.” என்கிறார் அவர்.

பாகிஸ்தான் அரசியல் - இம்ரான் கான்

பட மூலாதாரம், REUTERS/MOHSIN RAZA

முக்கியமான தருணம்

இம்ரான் கான் பிபிசிக்கு அளித்த பேட்டியில், ஜமான் பூங்காவைப் போர்க்களமாக மாற்றியதன் பின்னணியில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பு (ராணுவம்) இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைப்பின் ஒத்துழைப்பு இல்லாமல் ஜமான் பூங்கா நடவடிக்கையைச் செயல்படுத்தியிருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

அரசியல் விமர்சகர் ரசூல் பக்ஷ் ரயீஸ், இம்ரான் கானை பாகிஸ்தானின் அரசியலில் இருந்து வெளியேற்றி, அவரது கட்சியை அழிக்க ராணுவமும் அதன் அரசியல் கூட்டாளிகளும் நடத்திய ஒரு ஆண்டு கால பிரச்சாரத்தின் உச்சக்கட்டம்தான் ஜமான் பார்க் மோதல் என்கிறார்.

“அவர்கள் இதை மறைமுகமாகச் செய்யவில்லை. ஆனால் முயற்சியில் வெற்றியும் பெற முடியவில்லை. தற்போது, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பு, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பக்கம் நிற்கின்றன, மற்றொரு பக்கத்தில் இம்ரான் கானும் நாட்டு மக்களும் நிற்கின்றனர். இந்த மோதலில் இறுதி வெற்றி இம்ரான் கானுக்கே கிடைக்கும். எதிர் தரப்பு தோல்வியடையும்”

ரசூல் பக்ஷ் ரயீஸ், மேலும், “வரலாறு திரும்புகிறது. 1970 களில் அனைத்து அரசியல் கட்சிகளும் ராணுவச் சட்ட நிர்வாகி ஜெனரல் ஜியா உல் ஹக்கின் பக்கம் நின்றபோதும், பிரதமர் ஜுல்பிகார் அலி புட்டோ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டபோதும் இதேதான் நடந்தது. ஜியா உல் சர்க்கரால் புட்டோ தூக்கிலிடப்பட்டார்.

பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம். இது நாட்டின் எதிர்கால அரசியலையும், அதில் ராணுவத்தின் பங்கையும் தீர்மானிக்கும்.

மருத்துவர் ஹசன் ரிஸ்வியும் இந்தக் கருத்தை ஆமோதிக்கிறார், இதற்கு உடன்படுகிறார். இந்த நிலையில் நிதானத்துடன் செயல்படுமாறு ராணுவம், அரசாங்கத்திடம் கோர முடியும் எனவும் ஆனால் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “பாகிஸ்தானின் தற்போதைய சூழலில், வெளிப்படையான இந்த பாரபட்சமற்ற அணுகுமுறை மட்டுமே அரசாங்கத்திற்கு வெளிப்படையான ஆதரவாக இருக்க முடியும்.”

காவல்துறையை நம்பாத இம்ரான் கானின் ஆதரவாளர்கள்

இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நிலைமை சீர்குலைந்துவிட்டதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், பாகிஸ்தானின் மூத்த செய்தி தொகுப்பாளர் ஹமித் மிர், இம்ரான் கானின் தீவிர ஆதரவாளர்களும், தெஹ்ரீக்-இ-இன்சாப் பாகிஸ்தான் தலைவர்களின் குழுவும் இம்ரானின் கைதுக்குத் தடைகளை உருவாக்குவதாகக் கூறுகிறார்.

சட்டத்தை மீறுவதாக அவப்பெயர் பெற்ற இஸ்லாமாபாத் காவல்துறையை அவர்கள் நம்பவில்லை. இம்ரான் கானின் சக ஊழியர் ஷாபாஸ் கில்லுக்கு நேர்ந்த நிலை என்ன? இஸ்லாமாபாத்தில் உள்ள இம்ரான் கானின் வீட்டில் நடைபெற்ற கலாட்டாவில் இருந்து அவர் கைது செய்யப்பட்டு பின்னர் வேறு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஹமீதின் குறிப்பு பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகளை நோக்கியதாகும். கட்சியின் பல தலைவர்கள் இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மதித்ததாகவும், ஆனால் இம்ரான் கானின் தீவிர ஆதரவாளர்களும், கட்சியின் தீவிர ஆதரவாளர்களும் அவரை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்றனர் என்று ஹமித் மீர் கூறுகிறார்.

முன்னாள் பிரதமருக்குப் பாடம் புகட்டுவேன் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா இம்ரான் கானுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து வருகிறார். இதுவும் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்குக் கிளர்ச்சியில் ஈடுபட ஒரு காரணத்தை அளித்துள்ளது என்று ஹமீத் மீர் கருதுகிறார்.

பாகிஸ்தான் அரசியல் - இம்ரான் கான்

பட மூலாதாரம், RAHAT DAR/EPA-EFE/REX/SHUTTERSTOCK

அபாயமான உதாரணம்

தோஷாகானா வழக்கில் இம்ரான் கானுக்கு ஏற்கனவே பலமுறை ஆஜராவதில் இருந்து நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளதாகவும் இப்போது இம்ரான் கான் விடுவிக்கப்பட்டால், அது எதிர்காலத்திற்கு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்றும் பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஆய்வாளர் பாரிஸ்டர் முனீப் ஃபாரூக், “ஒரு தலைவருக்கு மக்கள் ஆதரவு இருந்தால், நீதிமன்ற வாரண்ட்களை மீறி அவர் தனது ஆதரவாளர்களைத் தூண்டி விட்டுத் தப்ப இது ஒரு முன்னுதாரணமாக அமையும், மேலும் தலைவணங்கமாட்டேன் என்று கூறி நாட்டை அவமதித்ததாகவும் ஆகும்” என்கிறார்.

“இம்ரான் கானின் இந்த நிலைமை, நீதிமன்ற உத்தரவை மீறுவதால் தான். ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டின் கொள்கை தெளிவாக உள்ளது. நீதிபதி ஒரு குற்றவாளியை நீதிமன்றத்திற்கு முன் ஆஜராக வைக்க விரும்பினால், அவர் நேராகச் செல்வதில்லை. இதற்காக அவர் அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார். காவல் துறையினர் தங்களின் சட்டப்பூர்வக் கடமையை நிறைவேற்றச் சென்றும், அவர்களின் பணியைச் செய்யவிடாமல் தடுத்தால், அதற்குப் பின்னால் அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.” என்று கூறும் முனீப், பாகிஸ்தானுக்கு இது ஒரு முக்கியமான தருணம் என்றும் குறிப்பிடுகிறார்.

“இம்ரான் கான் தற்போது நாட்டின் மிகவும் பிரபலமான தலைவர் என்பது உண்மைதான், அவரது கட்சி மக்களுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது, ஆனால் இது அவரைச் சட்டத்திற்கு அப்பாற்பட்டதாக ஆக்கமுடியுமா? நாடு அவருக்கு முன்னால் குனிந்து, மண்டியிட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகலாமா வேண்டாமா என்பதை நீங்களே உங்கள் விருப்பத்தின்படி முடிவு செய்யுங்கள் என்று கூறமுடியுமா?

இம்ரான் கான் ஊடகம் ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) முன் காவல் துறை முன் ஆஜராகியிருந்தால், அவரது ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபட்ட அதே காவல் துறையினர்தான் அவரது பாதுகாப்பிற்கு பொறுப்பேற்றிருப்பார்கள்.” என்று விளக்குகிறார் அவர்.

அராஜகம் மற்றும் உள்நாட்டுப் போர்

காவல் துறை தனது ஆதரவாளர்களைத் தாக்கியதாக பிடிஐ கட்சி கூறுகிறது, ஆனால் பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் மரியம் ஔரங்கசீப் இம்ரான் கான் அராஜகத்தைப் பரப்பி நாட்டை உள்நாட்டுப் போரின் விளிம்பிற்குக் கொண்டு வந்ததாகக் குற்றம் சாட்டினார்.

இஸ்லாமாபாத்தில், தகவல் துறை அமைச்சர் மரியம் கூறுகையில், “போலீசாரிடம் துப்பாக்கிகள் இல்லை, இம்ரான் கானின் ஆதரவாளர்கள் குழுவால் அவர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் மனிதக் கேடயமாக பயன்படுத்துகின்றனர்,” என்றார்.

லாகூரில் உள்ள இம்ரான் கானின் வீட்டிற்கு வெளியே நடந்த மோதலில் 65 காவல் துறையினர் காயமடைந்ததாக அவர் கூறினார். இப்போது இது நீதித்துறையின் சோதனை என்றும் மரியம் அவுரங்கசீப் கூறினார்.

இம்ரான் கான் கைதுக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், பல்வேறு வழக்குகளில் அவருக்கு நீதிமன்றங்கள் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால், நீதிமன்ற உத்தரவை காவல் துறையினர் பின்பற்றி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

“கடந்த கால விதிமீறல்களுக்காக நீதிமன்றங்கள் அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்திருந்தால், இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது. இன்று நீதிமன்றங்கள் இம்ரான் கானின் வாரண்டுகளை ரத்து செய்தாலோ அல்லது தாமதப்படுத்தினாலோ, நீதிமன்றங்கள் ஒவ்வொரு பாகிஸ்தானியருக்கும் இதேபோன்ற தளர்வை வழங்க வேண்டும்.”

மறுபுறம், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப், “ஜமான் பூங்காவில் காவல் துறையினர் மிகவும் பொறுமையுடன் நிலைமையைக் கட்டுப்படுத்தி, உயிர்ச் சேதம் ஏற்படாது காத்தனர். இல்லையெனில் இம்ரான் கானை கைது செய்வது காவல்துறைக்கு மிகவும் கடினமாக இருந்திருக்காது. இம்ரான் கான் தனது அரசியல் லாபத்துக்காக உயிர்களைப் பறிக்கவும் தயாராகிவிட்டார்” என்று கூறினார்.

பாகிஸ்தான் அரசியல் - இம்ரான் கான்

பட மூலாதாரம், SHAHZAIB AKBER/EPA-EFE/REX/SHUTTERSTOCK

சமூக ஊடகங்களில் கருத்து வேறுபாடுகள்

ஜமான் பூங்கா தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்களில் மிகுதியாக பகிரப்பட்டுகில் இருந்தன. இம்ரான் கானின் ஆதரவாளர்கள் காவல்துறையின் நடவடிக்கையை விமர்சித்து காணொளிக்கள் மற்றும் படங்களைப் பகிர்ந்து வந்தனர்.

அதிபர் ஆரிஃப் அல்வி தனது ட்விட்டர் பதிவில், இந்தச் சூழலால் மிகுந்த வருத்தம் அடைவதாகத் தெரிவித்தார். அவர் லாகூரில் உள்ள நிலைமையை பழிவாங்கும் அரசியல் என்று குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் முன்னுரிமைகள் என்னவென்பதை இது காட்டுவதாகவும், இந்த நேரத்தில் மக்களுக்கு பொருளாதார நிவாரணங்களை வழங்க அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், இம்ரான் கானின் பாதுகாப்பு, கௌரவம் குறித்துக் கவலை தெரிவித்த அவர், இந்த சூழ்நிலையை நீதித்துறைக்குச் சவாலான நிலை என்று விவரித்தார்.

சில பிரபலங்களும் இம்ரான் கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகை அதிகா ஓதோ இன்ஸ்டாகிராமில் இம்ரான் கானின் நலனுக்காக பிரார்த்திப்பதாகப் பதிவிட்டுள்ளார்.

“இம்ரான் கான் நம் நாட்டின் அடிமை சங்கிலியை உடைக்க முயன்றதால் இப்படி நடத்தப்படுகிறார். யாரையும் இப்படி நடத்தக் கூடாது.”

பாகிஸ்தானில் அனைத்து தரப்பு மக்களும் இம்ரான் கானுக்கு ஆதரவாகக் களமிறங்குவதைப் பார்க்கும்போது நம்பமுடியவில்லை என்று அட்னான் சித்திக் ட்விட்டரில் எழுதியுள்ளார்.

இருப்பினும், பிடிஐயின் எதிர்க்கட்சிகள் பிடிஐ ஆதரவாளர்களை விமர்சித்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஷெரீப் சிறைக்கு அனுப்பப்பட்ட நேரத்தை அவர்களுக்கு நினைவூட்டுகின்றன. அப்போது இம்ரான் கான் அரசு நீதி கிடைத்து விட்டது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் காரணம்

இரண்டு வெவ்வேறு வழக்குகளில் இம்ரான் கானுக்கு எதிராக இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளன. நீதிமன்ற விசாரணையின் போது அவர் ஆஜராகாததால் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தோஷாகானா வழக்கில், பிப்ரவரி 28 ஆம் தேதி இம்ரான் கான் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவிருந்தன, ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கைதாவதை தவிர்த்து வருகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டப்படும் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியது கட்டாயமாகும்.

இரண்டாவது வழக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேரணியின் போது பெண் நீதிபதியை மிரட்டியது தொடர்பானது. எனினும், இந்த வழக்கில் அவரது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் மார்ச் 16ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தோஷாகானா வழக்கில், காவல் துறையினர் இம்ரான் கானைப் பலமுறை கைது செய்ய முயன்றனர், ஆனால் ஒவ்வொரு முறையும் இம்ரான் கான் வீட்டில் இல்லை என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.

இம்ரான் கான் நவம்பர் 2022 முதல் லாகூரில் வசித்து வருகிறார். அந்த நேரத்தில் அவர் வஜிராபாத்தில் நடந்த பேரணியில் தாக்கப்பட்டார். இம்ரான் கான் காயங்களில் இருந்து இன்னும் மீண்டு வருவதாகவும், காலில் பிளாஸ்டர் போடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இம்ரான் கான் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். அதன்பிறகு அவர் மீது 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது தரப்பு கூறுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »