Press "Enter" to skip to content

நேபாளத்தில் வேரூன்றும் இந்துத்துவா அரசியலால் இஸ்லாமியர்கள் இடையே பதற்றம்

பட மூலாதாரம், KIRANKARN

நேபாளத்தில் உள்ள ஜனக்பூர் ஜானகி கோவிலுக்குப் பின்னால் ஒரு மசூதி உள்ளது. ஜானகி கோயிலைக் கட்டிய கைவினைஞர்கள் இஸ்லாமியர்கள் என்றும் அவர்கள் வழிபாட்டிற்காக ஒரு மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த மசூதி இன்றும் உள்ளது. ஜனக்பூரில் மூன்று முதல் நான்கு சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்.

ஜனக்பூர் ஜானகி கோவில் வார்டு எண் 6-ல் உள்ளது. 1990களில், சயீத் மோமின் இந்த வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் முகமது இத்ரீஸ் இந்த வார்டின் தலைவரானார்.

இக்கோயிலில் சீதா-ராம கல்யாணமான, விவாஹ் பஞ்சமி உற்சவத்தின் போது, சயீத் மோமினும் பின்னர் முகமது இத்ரிஸும் ஜான்கி மந்திர் மற்றும் ராம் மந்திர் இடையே கல்யாண ஊர்வலத்தை முன் நின்று நடத்தினர் என்றும் தமது சிறு வயதில் தான இதை நேரில் கண்டுள்ளதாகவும் ஜனக்பூரின் மூத்த பத்திரிக்கையாளர் ரோஷன் ஜனக்புரி கூறுகிறார். ஜானகி கோவில் வளாகத்தில் முஹர்ரமும் அனுசரிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

ஜானகி கோவிலின் கதவு முஸ்லிம்களுக்கு ஒருபோதும் மூடப்படவில்லை, அது வேறு ஒரு மதக் கோவில் என்று முஸ்லிம்கள் உணர்ந்ததில்லை.

முஸ்லிம்கள் ஜானகி கோவிலின் அன்னதானத்தில் பணிபுரிவதுடன், அதற்காகக் காய்கறிகளையும் பயிரிடும் காலம் ஒன்று இருந்தது.

ஆனால் தற்போது ஜானகி கோவிலுக்கும் மசூதிக்கும் இடையே உள்ள தூரம் அதிகரித்துவிட்டது. கோவிலுக்கும் மசூதிக்கும் இடையே சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இப்போது சயீத் மோமின் மற்றும் முகமது இத்ரிஸின் தலைமுறை முடிந்துவிட்டது.

விவாஹ் பஞ்சமியில், இப்போது அயோத்தியில் இருந்தும் ஊர்வலங்கள் வரத் தொடங்கியுள்ளன. இந்த ஊர்வலம் இப்போது உள்ளூர் நிகழ்விலிருந்து சர்வதேச நிகழ்வாகவும் அரசியல் நிகழ்வாகவும் உருவெடுத்துள்ளது. 2018ஆம் ஆண்டு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஊர்வலத்துடன் ஜனக்பூர் சென்றார்.

இதுகுறித்து ரோஷன் ஜனக்புரி, “யோகியின் நுழைவுக்குப் பிறகு, சீதா கல்யாணத்தில் சயீத் மோமின் மற்றும் முகமது இத்ரிஸ் ஆகியோரின் பங்கு மிகவும் சுருங்கிவிட்டது. 2014ஆம் ஆண்டு நரேந்திர மோதி பிரதமராகப் பதவியேற்றதன் தாக்கம் நேபாளத்தில் பெருமளவு உணரப்பட்டது. ஜனக்பூரைப் பொருத்தவரை, 2018இல் மோதியின் ஜனக்பூர் வருகைக்குப் பின் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.” என்றார்.

 • நேபாளத்தின் இந்துக்கள் மக்கள் தொகை 80%
 • பௌத்தர்கள் தான் மிகவும் சிறுபான்மையாக உள்ளனர்
 • நேபாளத்தில் இஸ்லாமியர்கள் 5%
 • ஆர்எஸ்எஸ் இங்கு, ஹிந்து ஸ்வயம் சேவக் அதாவது எச்எஸ்எஸ் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது
 • விவாஹ் பஞ்சமி என்ற திருமண உற்சவத்திற்கு யோகி ஆதித்யநாத் அயோத்தியிலிருந்து மாப்பிள்ளை ஊர்வலத்தை நடத்திச் சென்றார்.
 • பிரதமர் மோதியை வரவேற்க, நகரின் சுவர்களுக்குக் காவி வர்ணம் பூசப்பட்டது.
 • எச்எஸ்எஸ்-ன் 12 அமைப்புகள் நேபாளத்தில் செயல்படுகின்றன.

நகரம் மற்றும் சிந்தனையில் மாற்றங்கள்

ஜனக்புரி மசூதி

பட மூலாதாரம், KIRANKARN

காலை பத்து மணி. ஜானகி கோயிலுக்குள் இருந்து ‘ஹரே ராம், சீதா ராம்’ என்ற இனிய இசை கேட்கிறது. கோவில் வளாகத்தில் அனுமன் வேடமணிந்த ஒருவர் சுற்றித் திரிகிறார். குழந்தைகள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள்.

எங்களுடைய ஒளிக்கருவி (கேமரா)வை பார்த்த 40 வயது நபர் ஒருவர், “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றார். “டெல்லியில் இருந்து” என்றேன். உடனே அவர், பிரதமர்கூட வந்திருந்தார் என்றார். நான் கேட்டேன், “யார் ப்ரச்சண்டா?” அவரது பதில் – “இல்ல தம்பி, மோடி ஜி.”

“உங்கள் பிரதமர் பிரச்சண்ட் தானே” என்றேன் நான். அந்த நபர் சொன்னார் – “ஆம், ஆனால் மோதி ஜியும் தான்”. என்னுடன் நேபாளத்தின் மலைப்பகுதியைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளரும் ஜனக்பூரிலிருந்து ஒரு முஸ்லிம் பத்திரிகையாளரும் வந்திருந்தார்கள். இருவரும் சிரிக்க ஆரம்பித்தனர். இந்த இருவரில் ஒருவர் சொன்னார் – “நேபாளத்திற்கு மோதி வந்த பிறகு, எப்படி, எவ்வளவு பெரிய தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள்.”

அந்த முஸ்லிம் பத்திரிகையாளரிடம் கோவிலின் மஹந்திடம் பேசுவீர்களா என்று கேட்டேன். அவர் சொன்னார் – “மஹந்த் ஜி இப்போதுதான் அயோத்திக்கு போயிருக்கிறார். தலைமைப் பூசாரியைச் சந்திக்க வேண்டுமானால் போகலாம். கோவிலுக்குப் போகலாமா?”

அவர் தனது காலணிகளை வாயிலுக்கு வெளியே அவிழ்த்துத் தலைமைப் பூசாரியிடம் அழைத்துச் சென்றார். ஜானகி கோவிலின் தலைமை அர்ச்சகர் மிகவும் அன்புடன் முஸ்லிம் பத்திரிகையாளரிடம் நலம் விசாரித்துவிட்டு என்னிடம் பேசினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2018இல் ஜனக்பூருக்கு வந்திருந்தார். அதற்குப் பின்னர் நகரில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

பிரதமர் மோதியை வரவேற்க, ஜனக்பூர் துணை நகரத்தின் அப்போதைய மேயர் லால்கிஷோர் சாஹ், நகரின் பல சுவர்களில் காவி நிறத்தில் வண்ணம் தீட்டச் செய்தார். ஜனக்பூர் துணை பெருநகரத்தின் பெயர் ஜனக்பூர் தாம் துணைப் பெரு நகரமாக மாற்றப்பட்டது.

நகராட்சி ஊழியர்களுக்கு காவி நிறத்தில் சீருடை நிர்ணயம் செய்யப்பட்டது. அனைத்து ஊழியர்களும் அலுவலகத்துக்கு வந்ததும், ‘ஜெய் ஜனக்பூர் தாம்’ என்ற பிரார்த்தனை பாடல் இசைக்கப்பட்டது. அப்போது நசீம் அக்தர் என்ற முஸ்லிம் ஊழியர் இந்த முடிவை ஏற்க மறுத்துவிட்டார்.

ஏன் இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்தீர்கள் என்று லால்கிஷோர் சாஹிடம் கேட்டார். அதற்கு சாஹ், “நாங்கள் ஜனக்பூரை காவி நகரமாக மாற்ற விரும்பினோம். அதனால்தான் அரசுப் பணத்தில் மக்களின் வீடுகளுக்குக் காவி வண்ணம் பூசினோம். சீதா மாதாவுக்கும் காவி நிறம் மிகவும் பிடிக்கும்,” என்றார்.

லால்கிஷோர் சாஹின் இந்த முடிவுகளால் பிரதமர் மோதி மகிழ்ச்சியடைந்தாரா?

சாஹ், “பிரதமர் மோதியை விமான நிலையத்தில் நானும் வரவேற்றேன். விமான நிலையத்தில் இருந்து மோதியை ஜானகி கோவிலுக்கு அழைத்து வந்தேன். இதைத் தொடர்ந்து, ரங்கபூமி மைதானத்தில் மோதிக்கு வரவேற்பு விழா நடத்தப்பட்டது.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

நேபாளத்தில் இந்துத்துவா அரசியலின் தாக்கம்

டென்மார்க்கிற்கான நேபாள தூதராக இருந்த விஜயகாந்த் கர்ணா, காத்மாண்டுவில் ‘சென்டர் ஃபார் சோஷியல் இன்க்லூஷன் அண்ட் ஃபெடரலிசம்’ (சிஇஐஎஸ்எஃப்) என்ற தலைப்பில் இயங்கி வந்தவர், ஜனக்பூரில் நரேந்திர மோதியை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் வந்ததாகக் கூறுகிறார்.

மோதியை பார்க்கவும் அவரது பேச்சைக் கேட்கவும் வெளிநாடுகளில் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் வந்ததில்லை. ஆம்ஃபி திரையரங்கம் முற்றிலும் நிரம்பியிருந்தது. அந்நிய மண்ணில் பேசுவதாகவே தெரியவில்லை.

விஜயகாந்த் கர்ணா மேலும் கூறுகையில், “நரேந்திர மோதி பிரதமரான பிறகு நேபாளத்தில் இந்துத்துவா அரசியல் வலுப்பெற்றுள்ளது. அரசியலில் மதம் புகுந்தால் நிலைமை மோசமாகிவிடும்,” என்றார்.

“18 லட்சம் முஸ்லிம்களில் 98 சதவீத முஸ்லிம்கள் மதேஸ் பகுதியில் உள்ளனர். இந்தப் பகுதி இந்தியாவுடனான எல்லைப் பகுதி. இதனால் நேபாளத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுவது மட்டுமின்றி, இந்தியாவின் பாதுகாப்பும் கடுமையாகப் பாதிக்கப்படும்,” என்கிறார் விஜயகாந்த் கர்ணா.

“நேபாள எல்லையை எல்ஓசி போலவும் வங்கதேசத்தின் எல்லை போலவும் மாற்றும் அளவுக்கு இந்தியா விவேகமற்றதாக இருக்காது. இந்த இரு எல்லைகளிலும் பாதுகாப்புக்காக இந்தியா பல பில்லியன் ரூபாய்களைச் செலவழிக்கிறது. ஆனால் நேபாள எல்லையில் இதுவரை அப்படி ஒரு நிலை இல்லை.”

நேபாளத்தில் ஆர்எஸ்எஸ்

லால் கிஷோர் சாஹ்

நேபாளத்தில் ஹிந்து ஸ்வயம் சேவக் சங்கம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. RSS நேபாளத்தில் HSS என்று அழைக்கப்படுகிறது. பீர்கஞ்சைச் சேர்ந்த ரஞ்சித் ஷா, ஜனக்பூர் பிரிவின் ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கத்தின் காரியகர்த்தா ஆவார்.

பீர்கஞ்ச் பீகாரில் ரக்சௌலுக்கு அருகில் உள்ளது. ரஞ்சித் ஷாவை பீர்கஞ்சில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்திக்கச் சென்றேன். அவர் அமர்ந்திருக்கும் அறையின் பின்புறச் சுவரில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது சர்சங்கசாலக் எம்எஸ் கோல்வால்கர் ஆகியோரின் படங்கள் உள்ளன.

“நீங்கள் ஹெட்கேவார் மற்றும் கோல்வால்கரிடமிருந்து உத்வேகம் பெறுகிறீர்களா?” என்று கேட்டேன். ரஞ்சித் சாஹ் சிரித்துக்கொண்டே, “நான் சங்கத்தின் தொண்டன், வேறு யாரிடமிருந்து உத்வேகம் பெறுவேன்?” என்றார்.

நேபாளத்தில் மாதேசிகள் மற்றும் பஹாரியாக்கள் சண்டை, இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் முஸ்லிம்களே பொறுப்பு என்று ரஞ்சித் சாஹ் கூறினார்.

“நேபாளத்தில் மாதேசிகள் இயக்கம் ஓர் இஸ்லாமிய சதி. பஹாரி மற்றும் மாதேசிகள் இடையே வேண்டுமென்றே மோதல் தூண்டப்பட்டது. அதை முஸ்லிம் சமூகம் பயன்படுத்திக் கொண்டது” என்று ரஞ்சித் சாஹ் கூறுகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் நேபாளத்தின் தராய் பகுதியில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 400% அதிகரித்துள்ளது என்று ரஞ்சித் சாஹ் எந்த அடிப்படையில் கூறுகிறார்?

அதற்கு, “சங்கம் ஓர் உள் ஆய்வு செய்தது,” என்று சாஹ் கூறுகிறார்.

நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக மாற்ற சங்கம் விரும்புகிறதா? இந்தக் கேள்விக்கு பதிலளித்த ரஞ்சித் சாஹ், “ஒவ்வொரு இந்துவும் விரும்புவது இதுதான். இந்த ஆசை ஒவ்வொரு இந்துவின் மனதிலும் புதைந்து கிடக்கிறது. இதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

முயற்சிகளின் பலனும் கிடைக்கத் தொடங்கிவிட்டன. எதிர்காலத்தில் இது நிச்சயம் நடக்கும். இந்தப் பாதையில் சில அரசியல் பிரமுகர்கள் தடையாக உள்ளனர். எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சிலரே தடையாக இருக்கிறார்கள்,” என்றார்.

நேபாளம் மீண்டும் இந்து நாடாக மாறுவதால் என்ன பயன்? இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக ரஞ்சித் சாஹ் கேட்கிறார் – “பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு, அதனால் என்ன சாதித்தது?”

அதற்கு நான், “முஸ்லிம் நாடாக மாறியதால் பாகிஸ்தான் மிகவும் முன்னேறியதாக நான் நினைக்கவில்லை, அங்குள்ள முஸ்லிம்களும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றவில்லை,” என்றேன்.

இந்தப் பதிலால் சங்கடத்துக்குள்ளான ரஞ்சித் சாஹ், “ஆஸ்திரேலியா ஒரு கிறிஸ்தவ நாடு, அதனால் என்ன சாதித்தது?” என்றார். உண்மை என்னவென்றால் ஆஸ்திரேலியா ஒரு மதச்சார்பற்ற நாடு.

நசிம் அக்த்

பட மூலாதாரம், Hadis khuddar

ரஞ்சித் சாஹால் எந்தவொரு சரியான உதாரணத்தையும் கொடுக்க முடியவில்லை. ஆனால் அவரது சிந்தனை சரியானது என்பதை நிரூபிக்க, அவர், “நேபாளம் ஓர் இந்து நாடாக இருந்த வரை, சமூக வேறுபாடுகள் இல்லை. சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக இருந்தனர். மதச்சார்பற்றதாக மாறியதில் இருந்து இங்கு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது,” என்றார்.

“எந்தப் பகுதியில் சிறுபான்மை சமூகம் பெரும்பான்மையானாலும், அது பூர்வீக மக்களுக்கு அழிவை ஏற்படுத்துகிறது. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர், ஆனால் ஒரே ஒரு சுடுகாடு மட்டுமே உள்ளது. இருப்பினும் ஒரு சில சிறுபான்மையினர் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் பத்து மயானங்களையும் இத்காக்களையும் கட்டியுள்ளனர்.

நகரத்தில் ஒரே ஒரு தகன மைதானம் மட்டுமே உள்ளது என்ற ரஞ்சித் சாஹின் கூற்றை பீர்கஞ்சில் உள்ள உள்ளூர் இந்துக்கள் நிராகரித்தனர். இதுபோன்ற பல இடங்களில் இந்துக்கள் இறந்த உடலை தகனம் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

“இந்தியாவில் ஆர்எஸ்எஸ் கட்சி பாஜக, நேபாளத்தில் அப்படி எந்தக் கட்சி உள்ளது?” இதற்குப் பதிலாக ரஞ்சித் சாஹ், “இங்கு அனைத்துக் கட்சிகளும் மக்களுடன் நல்லுறவைக் கொண்டுள்ளன. அயோத்தியில் ராமர் சிலை செய்ய, கண்டகி பகுதியில் உள்ள காளிகண்டகி நதியில் இருந்து கல் எடுக்கப்பட்டது. இந்தக் கல்லை எடுத்துக்கொண்டு ஒரு யாத்திரை நடந்தது. அதற்கான அனுமதியைக் கண்டகி பிரதேசத்தின் கம்யூனிஸ்ட் அரசுதான் வழங்கியது,” என்றார்.

ஆர்எஸ்எஸ் மாத இதழான பாஞ்சஜன்யா இந்தியாவில் வெளியாகிறது, நேபாளத்தில் இந்த இதழ் ஹிமால் த்ரிஷ்டி என்ற பெயரில் வெளியாகிறது.

இந்தியாவில் சரஸ்வதி சிஷு மந்திர் என்ற பள்ளியையும் நேபாளத்தில் பசுபதி ஷிக்ஷா மந்திர் என்ற பளியையும் ஆர்எஸ்எஸ் நடத்தி வருகிறது. இந்தியாவில் உள்ளது போலவே, நேபாளத்திலும் ஆர்எஸ்எஸ்-ன் பல கிளை அமைப்புகள் உள்ளன.

நேபாளத்தில் மொத்தம் 12 ஆர்எஸ்எஸ் அமைப்புகள் செயல்படுவதாக ரஞ்சித் சாஹ் பட்டியலிடுகிறார்.

 • மதத்திற்காக விஷ்வ ஹிந்து பரிஷத்
 • ஆதிவாசிகாள் நல மையம் என்ற சன்ஸ்கார் கேந்திரம்
 • பசுபதி ஷிக்ஷா மந்திர்
 • ப்ராஞ்னிக் வித்யார்த்தி மந்திர்
 • நீதி அனுசந்தான் ப்ரதிஷ்டான்
 • விஷ்வ சம்வாத் கேந்திரம்
 • ஹிமால் த்ருஷ்டி
 • ஏகல் வித்யாலய் அபியான்
 • ஹிந்து ஸ்வயம் சேவக் சங்கம் நேபாளம்
 • ராஷ்ட்ரிய ஷ்ரமிக் சங்கம்
 • ராஷ்ட்ர சேவிகா நேபாளம்
 • மத விழிப்புணர்வு மையம்(தாய் மதம் திரும்புவோருக்காக)

மீண்டும் இந்து நாடு

நேபாள இந்துத்துவா

செப்டம்பர் 2015இல், நேபாளத்தில் புதிய அரசமைப்பு அமல்படுத்தப்பட்டது. நேபாளம் இனி இந்து நாடாக இருக்காது என்று இந்த அரசியல் சட்டத்தில் அறிவிக்கப்பட்டது. நேபாளம், அரசமைப்பு ரீதியாக மதச்சார்பற்ற நாடாக மாறியது.

இந்தியாவில் இந்து தேசம் வேண்டும் என்று வாதிடும் பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோதி தலைமையிலான அரசு இருந்தபோது நேபாளத்தில் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2006இல் அப்போதைய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மாவோயிஸ்டுகளின் அழுத்தத்தால் நேபாளம் இந்து நாடு என்ற அடையாளத்தை இழக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

நேபாளம் மதச்சார்பற்ற நாடாக மாறிய பிறகு, அங்குள்ள முஸ்லிம்களின் வாழ்வில் ஏற்பட்ட தாக்கம் என்ன?

பீர்கஞ்சில் 35 வயதான பகிர்வு முகமது அன்சாரி கூறுகிறார், “உண்மையைச் சொல்வதானால், நாங்கள் ஓர் இந்து தேசத்தில் மிகவும் பாதுகாப்பாக இருந்தோம். அப்போது மதம் பற்றி யாரும் பேசவில்லை. இந்து நாடாக இருந்தும் யாரும் மதம் பற்றிப் பேசுவதில்லை. அப்போதும் எங்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை. இந்து ராஷ்டிரம் முடிவுக்கு வந்த பிறகு எங்களுக்கு சில உரிமைகள் கிடைத்துள்ளன. உதாரணமாக, இங்குள்ள முஸ்லிம்களுக்கு ஈத் மற்றும் பக்ரீத் காலங்களில் விடுமுறை கிடைக்கிறது. இது இந்து தேசமாக இருந்தபோது கிடைக்கவில்லை. “

பகிர்வு முகமது அன்சாரி மேலும் கூறுகிறார், “இந்தியாவில் உள்ள இந்துத்துவ அரசியல் நேபாள முஸ்லிம்கள் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது அரசியல் வடிவில் தெரியாமல் போகலாம், ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவைசி 2014க்கு முன்பு நேபாள முஸ்லிம்கள் மத்தியில் பிரபலமாக இல்லை. ஆனால் இப்போது இங்குள்ள இந்த இளம் முஸ்லிம்கள் அவரது பேச்சை மிகவும் கவனமாகக் கேட்கிறார்கள். ஜனநாயகம் வந்த பிறகு இங்குள்ள முஸ்லிம்களும் இதுபோன்ற பிரச்னைகளில் ஒன்றுபடுகிறார்கள்.”

பகிர்வு முகமது பீர்கஞ்ச் மசூதிக்கு அருகில் இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் நின்ற ஜெய்முனியுதீன் அன்சாரி, “எங்கள் முஸ்லிம் சகோதரர் தேவையில்லாமல் கொல்லப்பட்டால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்” என்றார். இது நம் நேபாளத்தில் நடக்காது. இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகமாகத் துன்புறுத்தப்படுகிறார்கள்,” என்றார்.

நேபாள இந்துத்துவா

பட மூலாதாரம், KIRANKARN

நேபாளம் இந்து நாடாக இருந்தபோது, முஸ்லிம்கள் உண்மையில் மிகவும் பாதுகாப்பாக இருந்தார்களா? நேபாளத்தின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான சி.கே.லால் பதிலளிக்கிறார்.

“முடியாட்சியில் அரசர், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிப்பதன் மூலம் தனது நியாயத்தன்மையை வெளிப்படுத்த விரும்புகிறார். ஆனால் ஜனநாயகத்தில் பெரும்பான்மைவாதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, பெரும்பான்மை பெற்றவர், அதிக முக்கியத்துவம் பெறத் தொடங்குகிறார். இந்தக் காரணத்திற்காக, சில நேபாள முஸ்லிம்கள் முடியாட்சி தங்களுக்குச் சிறந்தது எனக் கருதுகிறார்கள். இது சிறுபான்மையினரின் மனநிலை.”

2014க்குப் பிறகு மாதேசில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா அரசியல் வலுப்பெற்றுள்ளது என்கிறார் சி.கே.லால்.

அவர் கூறுகிறார், “பீர்கஞ்சில் பனியாக்களின் மக்கள் தொகை கணிசமானது. இந்துத்துவா அரசியலுடன் அவர்களின் தொடர்பு இந்தியாவைப் போன்றது. நேபாளத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா அரசியல் தொடர்ந்து வேகமெடுக்கும் பட்சத்தில், வரும் காலங்களில் மோதல்கள் அதிகரிக்கும் என நான் உணர்கிறேன். இதனால் நேபாளம் பாதிக்கப்படும் ஆனால் இந்தியாவிற்கும் இதனால் பாதிப்பு ஏற்படும்.

நேபாள அரசியல்வாதிகள் இந்த இந்துத்துவா அரசியலை தாங்களாகவே எதிர்த்துப் போராட மாட்டார்கள். ஆனால் சீனாவை முன்னோக்கி கொண்டு செல்வார்கள். தற்போது இந்தியாவில் இந்துத்துவ அரசியல் ஆட்சியில் உள்ளது. நேபாளத்தின் எந்தத் தலைவரும் இந்த அரசியலுடன் மோத விரும்பவில்லை. அத்தகைய சூழ்நிலையில், நேபாளத்தில் சீனாவின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும்.”

சந்திரகிஷோர் ஜா பீர்கஞ்சை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர். நரேந்திர மோதி பிரதமரான பிறகு, நேபாளத்தின் அரசியல் மற்றும் சமூகத்தின் தாக்கத்தை அவர் வெகுவாக உணர்கிறார்.

இந்த மாற்றங்களை அடிக்கோடிட்டுக் காட்டி, சந்திரகிஷோர் ஜா, “நேபாளத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவின் இலக்கணம் மாறி வருகிறது. மோதி பிரதமரான பிறகு இந்தியாவின் ஊடகங்களும் மாறிவிட்டன. இந்தியாவின் இந்தி செய்தி சேனல்கள் மட்டுமே நேபாளத்தில் காணப்படுகின்றன. இந்தச் செய்தி சேனல்களில் முஸ்லிம்கள் காட்டப்படும் விதத்திற்கு விளைவு ஏற்படத்தான் செய்கிறது,” என்கிறார்.

நேபாள இந்துத்துவா

சந்திரகிஷோர் ஜா மேலும் கூறுகிறார், “இந்துக்கள் மத்தியில் தீவிரவாதம் அதிகரித்து வருகிறது என்றால், நேபாள முஸ்லிம்களும் எதிர்வினையாகத் தங்களையும் தீவிரமாகவே காட்டி வருகிறார்கள்.

இந்தியாவில் இந்துத்துவாவுக்கு ஆதரவாகச் செயல்படும் பிரசார அமைப்புகளால் நேபாளமும் பாதிக்கப்படாமல் இல்லை. இளைய தலைமுறையினர் இந்த விஷயத்தில் சற்று ஆக்ரோஷமாகவே உள்ளனர். நேபாளத்தில் ஆர்எஸ்எஸ் நேபாளத்தின் நாடியின் படியே செயல்படுகிறது.

இந்திய அரசியலில் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதம் விளையாடுவது, இங்குள்ள முஸ்லிம்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பின்மை உணர்வு அவர்களுக்குள் அதிகரித்து, அவர்கள் தங்கள் அடையாளம் குறித்துத் தீவிரமாகவே இருக்கிறார்கள்.”

சந்திரகிஷோர் ஜா கூறும்போது, “மாதேஸ் பிரதேசத்தின் முதல்வராக லால் பாபு ராவத் இருந்தார். இவரது தந்தையின் பெயர் தஷ்ரத் ராவத். தாயார் பெயர் ராதா ராவத். பெயரைப் பார்க்கும்போது இது இந்துக் குடும்பம் என்று தெரிகிறது. ஆனால் லால்பாபுவின் குடும்பம் முஸ்லிம்கள். அவரது வீட்டிலும் சட் பூஜை நடத்தப்பட்டு தீபாவளி கொண்டாடப்பட்டது.

ஆனால், தனக்கு முஸ்லிம் அடையாளத்துடன் மாநிலத்தில் பிரதிநிதித்துவம் கிடைத்ததால், அதையே நாடினார். இங்குள்ள முஸ்லிம்கள் தங்களை மறுவரையறை செய்து கொள்கிறார்கள். முன்பெல்லாம் போஜ்புரி, ஹிந்தி, மைதிலி, நேபாளி போன்ற மொழிகளைப் பேச வேண்டும் என்று இங்குள்ள முஸ்லிம்கள் வற்புறுத்தினார்கள்.

ஆனால் இப்போது அவர்கள் தங்கள் மொழியை உருது என்று சொல்கிறார்கள். நேபாள முஸ்லிம்கள் தங்கள் பண்டிகைகளை பொதுவெளியில் கொண்டாடுகின்றனர். சமூக ஊடகங்களில் பார்த்தால் ஒவைசி, ஜாகிர் நாயக் போன்றவர்களுக்கு முஸ்லிம் இளைஞர்கள் பெரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள்,” என்றார்.

நேபாளத்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிரதீப் ஞவாலி, “நேபாளத்தில் முடியாட்சி மற்றும் இந்துத்துவ அரசியலை ஆதரிப்பவர்கள் இருவரும் ஒன்றுதான். நேபாள பாராளுமன்றத்தில் ராஷ்ட்ரிய பிரஜாதந்திர கட்சி உள்ளது, அது முடியாட்சியை ஆதரிக்கிறது மற்றும் அதை இந்துத்துவா அரசியலுக்கு நெருக்கமாக வைத்திருக்கிறது. நேபாளத்தில் இந்துத்துவா அரசியல் வலுப்பெற்றால் அது நேபாளத்தின் இறையாண்மைக்கு ஆபத்தாக அமையும் என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறுகிறார்.

நேபாள அரசவம்சத்துடன் ஆர்எஸ்எஸ்-ன் பண்டைய தொடர்பு

நேபாள இந்துத்துவா

பட மூலாதாரம், kirankarn

1964ல் நாக்பூரில் நடைபெற்ற மகர சங்கராந்தி பேரணியில் உரையாற்ற நேபாள மன்னர் மகேந்திரா, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தால் அழைக்கப்பட்டார். இந்த அழைப்பை மன்னர் மகேந்திரன் ஏற்றுக்கொண்டார். மன்னன் மகேந்திரனின் அணுகுமுறையால் அப்போதைய இந்திய காங்கிரஸ் அரசு மிகவும் சங்கடத்துக்குள்ளானது. அந்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் தலைமை கோல்வால்கரிடம் இருந்தது, அவர்தான் மன்னர் மகேந்திராவின் வருகையை அறிவித்தார். ஆர்எஸ்எஸ் அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு மன்னர் மகேந்திரா டெல்லி அரசிடம் ஆலோசனை கேட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

1960களில் நேபாளத்துக்கான இந்தியத் தூதராக இருந்த ஸ்ரீமன் நாராயண், ‘இண்டியா அண்ட் நேபால்: ஆன் எக்ஸர்சைஸ் இன் ஓப்பன் டெமாக்ரஸி” என்ற தனது புத்தகத்தில், “டெல்லியில் காங்கிரஸ் அரசாங்கத்துடன் நல்லுறவில் இல்லாத போது ஆர்எஸ்எஸ் அழைப்பை மன்னர் மகேந்திரா ஏற்றுக்கொண்டார். மறுபுறம், ஆர்எஸ்எஸ் நேபாளத்தையும் அதன் அரசரையும் இந்து ராஜ்ஜியமாகப் பார்க்கிறது. முஸ்லிம் ஆட்சியாளர்களின் தாக்குதலால் புனிதம் கெடாத ராமராஜ்ஜியத்திற்கு நேபாளத்தை உதாரணமாக ஆர்எஸ்எஸ் பார்த்தது. ஆர்எஸ்எஸ் கனவில் நேபாளம் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.” என்று குறிப்பிடுகிறார்.

பிரசாந்த் ஜா நேபாளத்தைச் சேர்ந்தவர், அவர் அமெரிக்காவில் ஹிந்துஸ்தான் டைம்ஸின் நிருபராக உள்ளார். பிரசாந்த் தனது ‘பேட்டல்ஸ் ஆஃப் த நியூ ரிபப்ளிக்’ புத்தகத்தில், “மன்னர் வீரேந்தரா, பஞ்சாயத்து முறைக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொண்டார். அதனால் தான் மன்னர் வீரேந்திராவுக்கு ஆதரவாக காட்மண்டுவில் விஸ்வ ஹிந்து பரிஷத் ஒன்று திரண்டு அவரை விஸ்வ இந்து சாம்ராட் என்று அறிவித்தது. அரச குடும்பப் படுகொலைக்குப் பிறகு ராஜா ஞானேந்திராவுக்கு விஎச்பியால் இதே பட்டம் வழங்கப்பட்டது.

கோரக்பூரில் உள்ள கோரக்நாத் மடத்துடன் நேபாளத்தின் ஷா வம்சத்துக்கு வரலாற்றுத் தொடர்பு உள்ளது. கோரக்நாத் கோயிலுக்கு நேபாளத்தில் பல சொத்துக்கள் உள்ளன. இவற்றில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளும் அடங்கும்.

நேபாளம் மதச்சார்பற்ற நாடாக மாறியதில் யோகி ஆதித்யநாத் அதிருப்தி அடைந்திருந்தார். 2006ல், பிரசாந்த் ஜா, யோகி ஆதித்யநாத்திடம் யூபிஏ அரசின் நேபாளக் கொள்கை குறித்துக் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளித்த யோகி, “நேரு மட்டுமே இந்தியாவைப் புரிந்து கொண்டவர். நேபாளத்தில் முடியாட்சி அவசியம் என்பதை நேரு அறிந்திருந்தார், அதனால்தான் ராணா வம்ச ஆட்சிக்குப் பின்னர் மீண்டும் மன்னர் ஆட்சியில் அமர வைக்கப்பட்டார். நேபாளத்தில் என்ன நடந்தாலும் அதன் தாக்கம் நமக்கும் உண்டு. நேபாளத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் முடியாட்சியின் மூலம் மட்டுமே நிலைநாட்டப்படும். நேபாளத்தில் உள்ள மாவோயிஸ்டுகளும், இந்தியாவின் நக்சலைட்டுகளும் இணைந்து செயல்படுகின்றனர். நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் கையில் அதிகாரம் வந்தால், இந்தியாவின் நக்சலைட்டுகளும் ஊக்குவிக்கப்படுவார்கள். பாஜக ஆட்சியில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது.” என்று கூறினார்.

நேபாள இந்துத்துவா

பட மூலாதாரம், Getty Images

நேபாளத்துக்கான இந்தியத் தூதர் ரஞ்சித் ராய் தனது ‘காத்மாண்டு டீலமா ரீசெட்டிங் இண்டியா-நேபால் டைஸ்’ என்ற புத்தகத்தில், “துளசி கிரி பஞ்சாயத்து அமைப்பில் நேபாளத்தின் முதல் பிரதமரானார். அவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும் இருந்தார். நேபாளத்தை இந்து நாடாக மாற்றும் எண்ணம் எனக்குண்டு என்று அவர் என்னிடம் கூறினார். துளசி கிரியின் காலத்தில், இந்தியாவின் இந்துத்துவ அமைப்புகளுக்கும் நேபாள அரண்மனைக்கும் இடையே ஆழமான உறவுகள் உருவாக்கப்பட்டன. நேபாளம் 1962 அரசியலமைப்பின் கீழ் இந்து நாடாக ஆக்கப்பட்டது, அதை உருவாக்கியவர் மன்னர் மகேந்திரா.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ஒவ்வொரு கட்சி மற்றும் சித்தாந்தத்தின் செல்வாக்கும் நேபாளத்திலும் இருந்ததாகவும், இந்துத்துவாவின் செல்வாக்கு அதிலிருந்து வேறுபட்டதல்ல என்றும் பிரசாந்த் ஜா நம்புகிறார். இந்தியாவின் இடதுசாரிகள் நேபாளத்தின் இடதுசாரிகள் மற்றும் மாவோயிஸ்டுகள், சோசலிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்தனர். இப்போது இந்தியாவில் இந்துத்துவா அரசியல் அதிகாரத்தில் உள்ளது, எனவே அவர்களின் செல்வாக்கு அங்கும் அதிகமாக உள்ளது என்பது பிரசாந்த் ஜாவின் கருத்து

பிப்ரவரி 2021 இல், அப்போதைய திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக நிகழ்ச்சியில் மேற்கோள் காட்டி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மட்டுமல்ல, நேபாளம் மற்றும் இலங்கையிலும் பாஜக ஆட்சி அமைக்க விரும்புகிறது என்று கூறியிருந்தார்.

அப்போது அவர், “அப்போது உள்துறை அமைச்சர் (அமித் ஷா) கட்சியின் தேசியத் தலைவராக இருந்தார். ஒரு சந்திப்பின் போது, தலைவர் அவர்களே, நமக்கு நிறைய மாநிலங்கள் கிடைத்துள்ளன நல்லது என்று கூறினேன். இது குறித்து தலைவர் கூறியதாவது – என்ன நல்லது? இன்னும் இலங்கை எஞ்சியுள்ளது. நேபாளம் எஞ்சியுள்ளது.

அதாவது, அங்கெல்லாமும் கட்சியைக் கொண்டு சென்று வெல்ல வேண்டும் என்பதே அதன் பொருள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »