Press "Enter" to skip to content

கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியதாக பரவும் தகவல்: அதிமுக ரியக்‌ஷன் என்ன?

பட மூலாதாரம், Twitter/K.Annamalai

பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாக பரவிவரும் தகவல் இரு கட்சிகளிடையே மீண்டும் வார்த்தை மோதலை உருவாக்கியுள்ளது.

பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், ` திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை; அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என்று பாஜக மேலிடம் முடிவெடுத்தால் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்’ என்று அண்ணாமலை பேசியதாக தகவல் பரவியது.

பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது, இதை தொடர்ந்து இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பேசிய பேச்சுகள் காரணமாக அதிமுக – பாஜக கூட்டணியில் குழப்பம் நிலவிவந்த நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியதாக பரவும் தகவல் தமிழ்நாடு அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை கூறியதாக பரவும் தகவலின் உண்மை தன்மையை அறிய பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது, ` “நடந்தது மாநில நிர்வாகிகள் கூட்டம். அதில், கட்சியின் முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தோம். அதில் பேசியதை எப்படி வெளியே கூற முடியும்? ஒரு பிரச்சனையை கிளப்ப வேண்டும் என்பதற்காக பரப்பப்பட்ட செய்தி இது. நிர்வாகிகள் மட்டத்தில் பேசப்பட்டதாக கூறப்படும் ஒரு தகவல் உண்மையா இல்லையா என்பதை ஏன் வெளியே சொல்ல வேண்டும்” என்று கேட்டார்.

அதிமுக- பாஜக கூட்டணி

பதவி விலகுவதாக அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என நெல்லையில் பாஜக சட்டமன்ற குழு தலைவரும் எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு எடுக்கும், அதுதான் எங்களது முடிவு. அண்ணாமலை தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து” என்று தெரிவித்தார்.

எதிர்வினையாற்றிய அதிமுக

அதிமுக தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று அண்ணாமலை பேசியதாக கூறப்படுவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஆதிராஜாராம், “ரொம்ம சந்தோஷம். யார் இருந்தால் என்ன, யார் இல்லையென்றால் என்ன. சமூகமாக, நல்லிணக்கமாக அரசியல் கட்சிகள் இருந்த நிலையை மாற்றி சொந்தக் கட்சிக்காரர்களையே கொச்சைப்படுத்திய நிலை பாஜகவில் இந்த காலத்தில்தான் உருவாகியது. ஆகவே, அவர் எடுக்கும் எந்த முடிவும் நல்ல முடிவுதான். நாங்கள் வரவேற்கிறோம், விடை கொடுக்கிறோம்” என்று கூறினார்.

இதேபோல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பொதுவெளியில் பேசும் கருத்து குறித்து பதில் சொல்லலாம். ஆனால், கட்சி நிர்வாகிகளிடம் பேசியது தொடர்பாக கருத்து கூறுவது உசிதமாக இருக்காது. கட்சியை வளர்ப்பதற்கு ஆயிரம் பேசலாம். அது குறித்து எதுவும் பேசுவது சரியாக இருக்காது. எதுவாக இருந்தாலும் சரி, கட்சிதான் முடிவு செய்யும். அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்டு வரும் கட்சியோடுதான் கூட்டணி. எங்களுக்கு என்று தனித்தன்மை உள்ளது. குட்டக் குட்ட குனியும் கட்சி அதிமுக அல்ல ” என்று கூறியிருந்தார்.

திசை திருப்பும் முயற்சி

இந்த விவகாரம் முழுக்க முழுக்க நாடகம் என்று கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ ஈரோடு கிழக்கு தேர்தலில் கிடைத்த தோல்வி என்பது அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சேர்ந்து கிடைத்த தோல்வி. அதை திசைத் திருப்ப இவ்வாறு நாடகமாடுகின்றனர். இதேபோல், அண்மையில் யூ டியூபர்கள் சிலர் தொடர்பாக வெளியான ஸ்டிங்க் ஆப்ரேஷன் காணொளிவிலும் அண்ணாமலை பெயர் அடிபடுகிறது. இதை திசைத் திருப்பவே புதிதாக இந்த விவகாரத்தை கிளப்பிவிட்டுள்ளனர். கூட்டணி குறித்து முடிவும் செய்யும் அதிகாரம் அண்ணாமலைக்கு கிடையாது. இது குறித்து அந்த கூட்டத்திலேயே வானதி சீனிவாசனும் பேசியுள்ளார் ” என்றார்.

“தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கிறாரோ இல்லையோ தன்னை வளர்த்துகொள்வதில் அண்ணாமலை கவனமாக இருக்கிறார்” என்று தெரிவித்த ப்ரியன், “எடப்பாடி பழனிசாமி என்றாவது மத்திய அரசுக்கு எதிராகப் பேசியுள்ளாரா? எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றனர். அதிமுக- பாஜக கூட்டணியை பிரிக்க முடியாது. இரு கட்சிகளுமே நகமும் சதையுமாக உள்ளன ” என்றும் குறிப்பிட்டார்.

அதிமுக- பாஜக கூட்டணி

பட மூலாதாரம், Priyan

அதிமுக பாஜக கருத்து மோதலின் பின்னணி என்ன?

பாஜக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த சிடிஆர் நிர்மல்குமார் சில வாரங்களுக்கு முன்பாக அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை மீதும் கடுமையான விமர்சனங்களை அவர் வைத்திருந்தார். அதை தொடர்ந்து பாஜக ஐ.டி. விங்கைச் சேர்ந்த பலரும் அதிமுகவில் இணைந்தனர். நிர்மல்குமாரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதற்காக சில இடங்களில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பதாகைகளை வைத்திருந்த பா.ஜ.கவினர், அவரது உருவப் படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமர்பிரசாத் ரெட்டி, கருப்பு முருகானந்தம் போன்ற பாஜக நிர்வாகிகள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை பகிர்ந்து கொண்டனர். அண்ணாமலையும் கூட அதிமுகவை விமர்சிக்க தயங்கவில்லை. “பாஜகவிலிருந்து ஆட்களை கூட்டிச் சென்றால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வளர்ச்சியைக் காட்டுகிறது” என்று குறிப்பிட்ட அவர், இந்த செயலுக்கு எதிர்வினை இருக்கும் என்று எச்சரித்தார்.

இதேபோல், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர். தமிழ்நாட்டில் பாஜகவை அண்ணாமலை காலி செய்து விடுவார் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்திருந்தார்.

இதேபோல் ஜெயலலிதாவோடு தன்னை ஒப்பிட்டு அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்திருந்த ஜெயக்குமார், செஞ்சிக்கோட்டையில் ஏறியவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மனும் கிடையாது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இதை புரிந்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.

இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த விவகாரத்தில் தீவிரமாக எதிர்வினையாற்றினர். இந்நிலையில், மார்ச் 9ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக ஐ.டி.விங்கை சேர்ந்த பக்குவப்படாத சிலர் ஒருசில கருத்துகளை தெரிவித்தனர். அதற்கு நாங்களும் பதில் அளித்துவிட்டோம். மற்றபடி கூட்டணி தொடர்கிறது. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியும், தமிழ்நாட்டை பொருத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணியும் தொடர்கிறது என்று கூறினார். இதையடுத்து இந்த விவகாரம் தணிந்த நிலையில், தற்போது மீண்டும் அரசியலில் சூட்டை கிளப்பியுள்ளது அண்ணாமலை பேசியதாக கூறப்படும் கருத்து.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »