Press "Enter" to skip to content

“இரும்பு கம்பியால் ரத்தம் வரும் வரை அடித்தனர்” – சாதி மறுப்பு திருமணங்கள் தமிழ்நாட்டில் இன்றும் ஏற்க மறுக்கப்படுவது ஏன்?

“என் அம்மா என்னை கடுமையாக அடித்தார். என் காலில் சூடு வைத்தனர். எனது தந்தை அரிவாள்மனையைக் கொண்டு என்னை கொல்ல வந்தார்.”

கீர்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பட்டியலினத்தைச் சேர்ந்த செளந்தரை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்ய தான் விரும்புவதாக தனது பெற்றோரிடம் சொன்ன பிறகு அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை விவரித்தபோது அவரது குரல் தழுதழுத்தது.

கீர்த்தி வன்னியர் சாதியை சேர்ந்தவர். 2018ஆம் ஆண்டு கிட்டதட்ட ஆறு மாத காலம் அதீத துயரங்களை கீர்த்தி தாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தனது பெற்றோரால் இவ்வாறு நடத்தப்படுவோம் என கீர்த்தி கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.

கீர்த்தி மற்றும் செளந்தரின் காதலுக்கு சம்மதம் பெற செளந்தர் கீர்த்தியின் வீட்டிற்கு வந்த பிறகு நிலைமை மேலும் மோசமானது.

“நான் செய்தி சேனல்களை பார்ப்பேனா? என கீர்த்தியின் தந்தை என்னிடம் கேட்டார்” என்கிறார் செளந்தர்.

ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு சாலையில் ரத்த வெள்ளத்தில் அல்லது தொடர்வண்டித் துறை டிராக்கில் தானும் இறந்து கிடப்போமா என செளந்தர் எண்ணினார்.

கீர்த்தி மற்றும் செளந்தர்

கீர்த்தியின் வீட்டிலிருந்து அவர் சென்றபோது செளந்தர் மற்றும் அவரின் பெற்றோர் அமர்ந்திருந்த நாற்காலிகளை வெளியே வீசச் சொன்னார் கீர்த்தியின் தந்தை. அவர்கள் வாங்கி வந்த பழங்கள், இனிப்புகள், பூ என அனைத்தும் குப்பையில் வீசப்பட்டன.

அதற்கு பிறகு கீர்த்தியை தற்கொலை குறிப்பு எழுதச் சொல்லி வற்புறுத்தினர் கீர்ததியின் பெற்றோர்.

“பிரச்னை ஏதும் வந்தால் அந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என எனது பெற்றோர் நினைத்தனர்,” என்கிறார் கீர்த்தி.

“திருமணம் செய்து கொள்வது மட்டுமே எங்களின் உயிரைக் காப்பாற்றும் என கீர்த்தி நம்பினார்” என நினைவுகூர்கிறார் செளந்தர்.

அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்பது நிதர்சனத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

இந்தச் செய்தி தி நியூஸ்மினிட் செய்தி ஊடகத்துடன் இணைந்து மகளிரிடம் சிறந்த இதழியலை கொண்டு செல்ல BBCShe எடுத்த முன்னெடுப்பு.

கீர்த்தி மற்றும் செளந்தர்

கெளரவம் என்ற பெயரில் நடக்கும் ஆணவ கொலைகள்

2006ஆம் ஆண்டில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற லதா சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு கவனிக்கத்தக்க தீர்ப்பை வழங்கியது.

“ஆணவப் படுகொலைகளில் எந்த கெளரவமும் இல்லை. ஆணவப் படுகொலை என்பது கொடூரமான, ஆதிக்க மனப்பான்மை கொண்ட மனிதர்களால் செய்யப்படுவது. இதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.” என அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரை மிரட்டினாலோ அவர்களை துன்புறுத்தினாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

17 வருடங்களுக்கு பிறகும், சாதி மறுப்பு தம்பதியினரை நோக்கிய அச்சுறுத்தல்கள், கொடூரமான வன்முறைகள் நாடு முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

தங்களை காத்துக் கொள்ள கீர்த்தியும் செளந்தரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பின்பு எப்போதும் போல இருவரும் அவரவர் பணியை கவனிக்கத் தொடங்கினர்.

ஆனால் அவர்களின் பெற்றோருக்கு பதிவுத் திருமணம் குறித்து தெரியவந்தது. அதன்பிறகு துன்புறுத்தல் மேலும் அதிகரித்தது.

கீர்த்தி மற்றும் செளந்தர்

“எனது தந்தை என்னை இரும்புக் கம்பியால் தாக்கினார். தரை எங்கும் ரத்தம் சிந்தும் அளவுக்கு எனக்கு காயம் ஏற்பட்டது” என தனது வலியை நினைவு கூர்ந்தார் கீர்த்தி.

கீர்த்தியும் செளந்தரும் செய்து கொண்ட திருமணம் நிச்சயம் நிலைக்கப்போவதில்லை என கீர்த்தியின் பெற்றோர் உறுதியாக நம்பினர். அவ்வாறே நடக்க பல சாபங்களையும் வழங்கினர்.

தங்களின் சொத்துக்களுக்கு கீர்த்தி உரிமை கோரக் கூடாது என்றும் எழுதி வாங்கி கொண்டனர்.

இறுதியாக உடம்பில் காயங்களுடன், வாங்கிய அடிகளால் கிழிந்த ஆடையுடன் கையில் வெறும் 100 ரூபாயுடன் கீர்த்தி வீட்டை விட்டு வெளியே துரத்தப்பட்டார்.

ஆனால் கீர்த்தி மற்றும் செளந்தர் இருவரிடமும் அரசாங்க வேலை இருந்தது. எனவே அவர்களின் வாழ்வை தொடங்குவதற்கு அது பெரும் உறுதுணையாக இருந்தது. எப்படியோ இருவரும் உயிரோடு தப்பி விட்டனர்.

இதன் காரணமாக, கண்ணகி முருகேசன், விமலா தேவி, சங்கர், இளவரசன் என “சாதிய பெருமை” என்ற பெயரில் கொல்லப்பட்டோரின் நீண்ட பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம் பெறாமல் போயின.

பெரும்பாலும் சாதி மறுப்பு திருமணங்களில் ஒருவர் தலித் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தால் அங்கு அச்சுறுத்தல்களும் வன்முறைகளும் எழுகின்றன.

சுய மரியாதை இயக்கம் வேரூன்றிப் போன தமிழ்நாட்டில் சாதிய வன்முறைகள்

தமிழ்நாட்டை பொறுத்தவரை சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிக குறைவாக உள்ளது.

2015ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வில், தமிழ்நாட்டில் வெறும் 3 சதவீத அளவில் மட்டுமே மாற்று சாதி திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இது தேசிய அளவில் 10 சதவீதமாக உள்ளது.

தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சுய மரியாதை இயக்கத்தை முன்னெடுத்த பெரியாரின் முயற்சிகளுக்கு பிறகும் இந்த நிலையே தொடர்கிறது.

சுயமரியாதை இயக்கம், சாதியை ஒழிக்க சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டில் 1968ஆம் ஆண்டு அண்ணாவின் அரசாங்கத்தில் இந்து திருமண சட்டத்தின்படி சுயமரியாதை திருமணம் சட்டபூர்வமானது.

இன்றும் பிராமணர்களின் சடங்கு சம்பிரதாயங்களை விடுத்து பலர் சுய மரியாதை திருமணம் செய்து கொள்கின்றனர் ஆனால் இம்மாதிரியான முயற்சிகள் சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதற்கு போதுமானதாக இல்லை.

வழக்கறிஞரான ரமேஷ் சாதி மறுப்பு திருமணங்களை பதிவு செய்ய உதவி வருகிறார். பல நேரங்களில் மாற்று சாதியில் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்களின் திருமணத்தை சட்டபூர்வமாக பதிவு செய்ய தவறுவதால் அவர்கள் பிரிக்கப்படுகின்றனர்.

சாதி மறுப்பு திருமணங்களுக்கான திருமண பதிவு சேவை

ரமேஷ்

சாதி மறுப்பு திருமணங்களை பதிவு செய்வது அத்தனை எளிதாக இல்லை. பதிவு அலுவலகங்களில் திருமணம் செய்ய வருவோர் தங்களின் பெற்றோரின் சம்மதம் பெற்று வருகின்றனரா என கேட்கப்படுகிறது. ஆனால் எந்த திருமண சட்டத்தின்படியும் அது அவசியம் இல்லை என்கிறார் ரமேஷ்.

எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றோரின் சம்மதம் தேவையில்லை என்ற தகவலைப் பெற்று திருமணங்களை நடத்தி வருகிறார் ரமேஷ்.

ஆனால் சாதி மறுப்பு தம்பதிகளை பாதுகாப்பதற்கான ஒரு சிறிய நகர்வுதான் இது.

எனவே மாற்று சாதியில் திருமணம் செய்ய விரும்பும் நபர்களுக்கு ஒரு பாதுகாப்பான தளத்தை உருவாக்க விரும்பிய ரமேஷ் ‘மனிதம்’ என்ற திருமண பதிவு சேவையை இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கினார்.

இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இந்த தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

கீர்த்தி மற்றும் செளந்தர்

ஒரு பரந்த பிரச்னையை நோக்கிய சின்னஞ்சிறு முயற்சிதான் இது.

பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஜெயராணி, தங்களின் சாதிக்குள் திருமணம் செய்வதை உறுதியாக மக்கள் கடைப்பிடிக்கின்றனர் என்கிறார்.

“அதன் ஒரு பகுதியாகவும், பிற சாதிகளில் திருமணம் செய்து கொள்வதை தடுப்பதற்கும்தான் மாமன் முறையில் உள்ளவர்களை திருமணம் செய்யும் வழக்கம் இங்குண்டு,” என்கிறார் ஜெயராணி.

“சாதிய கட்டமைப்புக்குள்ளிருந்து வெளியே வர விரும்பாத சமூக பழக்கத்தால், குடும்பத்தின் கெளரவம் என்ற பெயரால் பல கொலைகள் நடக்கின்றன” என்கிறார் அவர்.

ஆனால் இந்த குற்றங்களுக்கு எதிராக மிக குறைவான வழக்குகளே பதியப்பட்டுள்ளன. மாநில குற்றவியல் ஆவணக் காப்பகம், 2013ஆம் ஆண்டிலிருந்து வெறும் இரண்டே ஆணவக் கொலைகள் நடந்ததாக கூறுகிறது. அந்த இரண்டும் 2017ஆம் ஆண்டில் நடைபெற்றவை.

ஆனால் தலித் உரிமைகள் மற்றும் ஆணவப் படுகொலைக்கு எதிராக பணியாற்றி வரும் எவிண்டன்ஸ் என்ற அமைப்பின் தகவல்படி 2020 – 2022 ஆண்டுகள் காலக்கட்டத்தில் மட்டும் 18 சம்பவங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிக்கான நெடும்பயணம்

பொதுவாக ஆணவப் படுகொலைகள் நடைபெற, தம்பதிகளுக்கு பாதுகாப்பான உறைவிடமும், அரசாங்க அதிகாரிகளிடமிருந்து போதுமான பாதுகாப்பு கிடைக்காததுமே காரணம் என்கிறார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலர் சாமுவேல் ராஜ்.

2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தலித் சமூகத்தை சேர்ந்த திலிப் குமாரை திருமணம் செய்து கொண்ட கள்ளர் சமூகத்தை சேர்ந்த விமலா தேவி உயிரிழந்த பிறகு, சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பிரிவுகள், 24 மணி நேர உதவி எண்கள், மொபைல் செயலிகள், கணினிமய புகார் வசதி ஆகியவற்றை நிறுவ வேண்டும் என உத்தரவிட்டது.

இதை பரிசோதிக்க நான்கு மாவட்டங்களில் உள்ள உதவி எண்களை நாம் தொடர்பு கொண்டோம் ஆனால் எந்த பதிலும் இல்லை.

மாற்று சாதியில் காதலிக்கும் தம்பதிகளை காவல்துறையினரும் சரியாக நடத்துவது இல்லை என செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“பெற்றோர் காவல்துறையினரை அணுகியபிறகு, கட்டப் பஞ்சாயத்து செய்து அவர்கள் தம்பதியை பிரித்து விடுகின்றனர். உயர் சாதியை சேர்ந்த பெண்கள் பொதுவாக வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஆனால் பெரும்பாலும் அவர்கள் உயிருடன் தப்பிப்பதில்லை” என்கிறார் சாமுவேல் ராஜ்.

2014ஆம் ஆண்டு விமலா தேவி உயிரிழந்தார். இந்த வழக்கு இன்றும் நடைபெற்று வருகிறது. இது குறித்து விமலா தேவியை திருமணம் செய்த திலிப் குமாரை அணுகியபோது உயிரிழந்த தனது மனைவியின் இறப்புக்கு நீதி கிடைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார். இம்மாதிரியான வழக்குகளில் குறைந்த அளவிலேயே குற்றங்கள் நிரூபிக்கப்படுகின்றன.

“பொதுவாக ஒரு கொலை நடந்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பம்தான் நியாயம் கேட்கும். ஆனால் சாதி ரீதியான கொலைகளை குடும்ப உறுப்பினர்களே நடத்துகின்றனர். எனவே இதில் தண்டனை கிடைப்பது இரண்டாம் பட்சம், முதலில் வழக்கு தொடர்வதற்கு யாரும் முன்வருவதில்லை” என்கிறார் சாமுவேல் ராஜ்.

கீர்த்தி மற்றும் செளந்தர்

2014ஆம் ஆண்டு விமலா தேவி உயிரிழந்தார். இந்த வழக்கு இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து திலிப் குமாரை அணுகியபோது உயிரிழந்த தனது மனைவியின் இறப்புக்கு நீதி கிடைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.

“பொதுவாக ஒரு கொலை நடந்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பம்தான் நியாயம் கேட்கும். ஆனால் சாதி ரீதியான கொலைகளை குடும்ப உறுப்பினர்களே நடத்துகின்றனர். எனவே இதில் தண்டனை கிடைப்பதை தாண்டியும் வழக்கு தொடர்வது என்பதை இயலாத ஒன்றாகத்தான் உள்ளது,” என்கிறார் சாமுவேல்.

கட்டுக்கதைகளும், நம்பிக்கையும்

கீர்த்தியும் செளந்தரும் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டபோது கீர்த்திக்கு 25 வயது. ஆனாலும் அவரின் பெற்றோர் திருமணம் குறித்து தங்களின் மகளால் முடிவெடுக்க இயலாது என்று நம்பினர்.

சாதி மீது அவர்களுக்கு இருந்த பற்றுதல், பல கட்டுக்கதைகளையும் தவறான தகவல்களையும் நம்புவதற்கும் வித்திட்டுள்ளது.

“என் திருமணத்திற்கு எதிராக முடிவெடுக்க, என் பெற்றோர் என்னை நச்சரித்து கொண்டிருந்த போது, தலித் இளைஞர்கள் சாதி இந்துக்களின் பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்து கொள்வதாக எனது அம்மா என்னிடம் தெரிவித்தார். நான் இதுவரை கேட்டதில் மிக மோசமான விஷயம் அது. அதுவும் படித்த ஒரு ஆசிரியர் எப்படி அவ்வாறு பேசுவார் என எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்கிறார் கீர்த்தி.

இது ஒரு நீண்ட, கடினமான போராட்டம்

2022 ஆம் ஆண்டு தலித் மனித உரிமைகள் பாதுகாப்பு வலையமைப்பு (சாதிக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்பு), குடும்ப கெளரவம் என்ற பெயரில் நடைபெறும் குற்றங்களை தடுக்க வரைவு ஒன்றை வடிவமைத்தது.

அதில் ஆணவப் படுகொலையில் ஈடுபடுவோருக்கான தண்டனை மற்றும் பாதிக்கப்படுவோருக்கான இழப்பீடு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீர்த்திக்கு தற்போது 2 வயது குழந்தை உள்ளது. கடந்த நான்கு வருடங்களில் அவரின் அம்மா கீர்த்தியிடம் இருமுறை மட்டுமே பேசியுள்ளார். அதிலும் அவரின் பேரக் குழந்தை பிறந்த பிறகுதான்.

ஆனால் அவரின் தந்தையின் கோபம் சற்றும் குறையவில்லை. திருமணத்திற்கு பிறகு கீர்த்தியுடனான உறவை முற்றிலும் துண்டித்து விட்டார் அவரின் தந்தை.

தனது பெற்றோர் தனக்கு செய்த கொடுமையால் அவர்கள் மீது அதீத கோபத்தில் இருந்த கீர்த்தி, ஒரு கட்டத்தில் அவர்கள் தம்மிடம் மீண்டும் பேசுவார்கள் என எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்.

“ஒருநாள் அவர் நிச்சயம் எங்களை புரிந்து கொள்வார்” என்கிறார் கீர்த்தி.

BBCShe தொடர் தயாரிப்பாளர் – திவ்யா ஆர்யா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »