Press "Enter" to skip to content

மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா? அதனை சட்டம் இயற்றி நீக்க முடியுமா?

பட மூலாதாரம், TNDIPR

மாநில அரசுகள் செயல்படுவதை அந்த மாநில ஆளுநரின் நடவடிக்கைகள் தடுக்குமானால், இந்தியாவில் ஜனநாயகத்தை முடக்குபவர்களாக ஆளுநர்கள் உருவெடுப்பார்கள் என இந்திய உச்சநீதிமன்றம் கடந்த வாரம் விமர்சித்திருக்கிறது. இது இந்தியாவில் ஆளுநர்கள் தேவையா அல்லது அவர்களது அதிகாரம் குறைக்கப்பட வேண்டுமா என்ற விவாதத்தை எழுப்பியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநில ஆளுநர் கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்ததை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதனால், அப்போதிருந்த அரசு கவிழ நேரிட்டதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

மகாராஷ்டிராவை ஆட்சி செய்துகொண்டிருந்த கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனையே மிகப் பெரிய கட்சியாக இருந்தது. அதிலிருந்த எதிர்ப்பாளர்கள் கட்சியை உடைத்து, மத்தியில் ஆளும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தனர். இதையடுத்து மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுத்தார். ஆனால், தனக்கு ஆதரவு குறைவாக இருப்பதை ஒப்புக்கொண்ட உத்தவ் தாக்கரே, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பாகவே ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இது தொடர்பான பல மனுக்களை கடந்த வாரம் விசாரித்த இந்தியாவின் தலைமை நீதிபதி தனஞ்சய் சந்திரசூட், நம்பிக்கை வாக்கெடுப்பு ஆளுநரால் தவறாகக் கோரப்பட்டதாக குறிப்பிட்டார். “தன்னுடைய நடவடிக்கை அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமென்றால், அந்தப் பகுதிக்குள் ஆளுநர் செல்லக்கூடாது. இது நம்முடைய ஜனநாயகத்திற்கு மிக மிக முக்கியமான அம்சம்” என்றார் சந்திரசூட்.

மகாராஷ்டிர மாநிலம் மட்டுமல்ல, இந்தியாவில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யாத மாநிலங்கள் அனைத்திலுமே ஆளுநர்களின் தலையீடு, நிர்வாகத்தையே முடங்கச் செய்யும் அளவுக்குச் சென்றிருக்கிறது.

2021ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் ஆட்சியமைத்த நிலையில், மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி அதே ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி பதவியேற்றார். அதற்குப் பிறகு, ஆளும் அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கையே மேற்கொண்டு வருகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி. இதுவரை, ஆளும் தி.மு.க. இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் அவரை நீக்க வேண்டுமெனக் கோரியிருக்கிறது. ஒரு முறை நாடாளுமன்றத்திலேயே இது தொடர்பாக கோரிக்கையை எழுப்பியது தி.மு.க. அடுத்த முறை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தது.

பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குவது, கணினிமய ரம்மியைத் தடைசெய்வது உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதலை அளிக்கவில்லை. இதுதவிர, பல்வேறு தருணங்களில் ஆர்.என். ரவி முன்வைக்கும் கருத்துகள் சர்ச்சைக்குரியவையாகவும் இருக்கின்றன.

குறிப்பாக, கோயம்புத்தூரில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தேர் வெடிப்பு சம்பவம் நடந்தபோது, அந்த விவகாரம் 26ஆம் தேதி தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் குறித்து பேசிய ஆளுநர், இந்த வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைப்பதில் மாநில அரசு தாமதம் காட்டியதாக குறைசொன்னார்.

இதையடுத்துத்தான், குடியரசுத் தலைவரிடம் மனு அளித்த தி.மு.க. நாடாளுமன்றக் குழு, ஆர்.என். ரவி மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறியது.

Tamilisai

பட மூலாதாரம், Facebook

அதேபோல, தமிழக ஆளுநர் பல்வேறு விவகாரங்களில் மாநில அரசுக்கு முரண்பாடான நிலைப்பாடுகளை வெளிப்படையாகவே எடுத்துவருகிறார். குறிப்பாக, புதிய கல்விக் கொள்கையை தற்போதைய தி.மு.க. அரசும், முந்தைய அ.தி.மு.க. அரசும் நிராகரித்துவிட்டன. ஆனால், பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கூட்டத்தைக் கூட்டிய ஆளுநர், புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும்படி அவர்களிடம் சொன்னார்.

இதன் உச்சகட்டமாக இந்த ஆண்டு சட்டமன்றக் கூட்டத் தொடர் துவங்கியபோது, ஆளுநர் உரையை வாசித்த ஆர்.என். ரவி, மாநில அரசு அளித்த ஆளுநர் உரையில் சில பகுதிகளை வாசிக்கவில்லை. இதையடுத்து, ஆளுநர் ஆர்.என். ரவி வாசித்த தீர்மானத்தை அவைக் குறிப்பில் ஏற்றாமல், அரசு அச்சடித்து வழங்கிய ஆளுநர் உரையையே அவைக் குறிப்பில் ஏற்ற வேண்டும் என தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

இதெல்லாம் போக பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ஆர்.என். ரவி, வரலாறு தொடர்பாக தன் பார்வையில் விஷயங்களை முன்வைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இதுமட்டுமல்ல, கேரள, தெலுங்கான அரசுகளும் தாங்கள் இயற்றிய மசோதாக்கள் சட்டமாக, ஆளுநர்கள் கையெழுத்திடவில்லை என குற்றம்சாட்டியுள்ளன. தெலுங்கானாவில் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அரசியல்சாஸனம் ஸ்தம்பிக்கும் நிலையை ஏற்படுத்தியிருப்பதாக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது.

ஆளுநர் பதவி தேவையா?

இந்தியாவில் மாநில ஆளுநர்கள் பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் அந்தந்த மாநிலங்களின் அரச தலைவர்களாக இருப்பார்கள். ஆளுநர் பதவி என்பது, கௌரவப் பதவிதான் என்றாலும் அவர்களுக்கு அரசியல்சாஸன ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் சில விரும்புரிமைகள் உள்ளன. மாநிலத்தில் அரசியல் சிக்கல் ஏற்படும்போது, குறிப்பாக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, முடிவுகள் தெளிவாக இல்லாமல்போனால், எந்தக் கட்சி ஆட்சி அமைக்கத் தகுதியானது என்பதை அவர்கள் முடிவுசெய்யலாம். மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைக்கலாம். கிரிக்கெட் விளையாட்டில் உள்ள சொற்களை வைத்து, இந்தப் பதவியை விவரித்தால், ஆளுநர் என்பவர் “ஜனநாயகத்தின் அம்பையர்”.

ஆனால், இந்தியாவில் ஆளுநர்கள் அரசியல் ரீதியாக பாரபட்சமுடன் செயல்படுவதாகவும் மத்தியில் உள்ள ஆளும் கட்சியின் விருப்பத்தின்படி செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கூறப்பட்டுவந்திருக்கின்றன. ஆளுநர்கள் நியமிக்கப்படும்விதமும் அவர்கள் எவ்வளவு நாளைக்கு ஆளுநர்களாக இருக்க முடியும் என்பதில் நீடிக்கும் நிச்சயமின்மையும் அவர்கள் “எந்த விருப்புவெறுப்புமில்லாத நடுவர்களாகச் செயல்படுவதற்குப் பதிலாக, தீவிரமான அரசியல் சூழல்களில் மத்திய அரசின் கைப்பாவையாக” மாற்றிவிடுவதாகக் குறிப்பிடுகிறார் வரலாற்றாசிரியரான முகுல் கேசவன்.

ஒரு கட்சி புதிதாக ஆட்சிக்கு வரும்போது முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை பதவிநீக்கம் செய்வது, அந்த பதவியை மேலும் அரசியல் சார்ந்த பதவியாக்குகிறது. 1950லிருந்து 2015வரை இந்தியாவில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் பதவிக்காலத்தை ஆராய்ந்து பார்த்தால், இவர்களில் 25 சதவீதம் பேரே தங்களது முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவுசெய்திருக்கிறார்கள். 37 சதவீத ஆளுநர்கள் ஒரு வருடத்திற்கும் குறைவாந காலத்திற்கே ஆளுநர்களாக இருந்திருக்கிறார்கள்.

மாநிலத்தில் உள்ள அரசை கலந்தாலோசிக்காமல்தான் ஆளுநர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார்கள். இதனால், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து மோசமடைகிறது.

இந்தியாவில் பல தசாப்தங்களாகவே, மத்திய அரசுக்கு எதிரான கட்சிகள் மாநிலங்களில் தேர்வுசெய்யப்பட்டால் அந்த அரசுகள் சுமுகமாகச் செயல்படுவதில் ஆளுநர்கள் குறுக்கிடுவதாக பார்க்கப்படுகிறது. பி.கே. நேரு 1980கள்வரை ஐந்துக்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களின் ஆளுநராக இருந்தவர். அவர் ஆளுநர் பதவியைப் பற்றிச் சொல்லும்போது, ‘பயன்படுத்தப்பட்டு, ஓய்வளிக்கப்பட்ட ஆளும்கட்சியின் மூத்த தலைவருக்கு, ஆளுநர் பதவி என்பது மிகவும் சொகுசான ஒரு ஓய்வு வாழ்க்கை’ என்றார்.

தங்கள் சேவைக்கான பரிசாக கட்சியின் விசுவாசிகள் அந்தப் பதவியை எதிர்நோக்குவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. 1950களில் இருந்து 2015வரை இந்தியாவின் ஆளுநர்களாக இருந்தவர்கள் குறித்து பேராசிரியர் அசோக் பங்கஜ் ஒரு ஆய்வை மேற்கொண்டார். ஆளுநர்களாக நியமிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள், அதாவது 52 சதவீதம் பேர் அரசியல்வாதிகள். 26 சதவீதம் பேர் ஓய்வுபெற்ற அதிகாரிகள். மீதமுள்ள இடங்களை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ராணுவ அதிகாரிகள், கல்வியாளர்கள் ஆகியோர் நிரப்புகிறார்கள். நியமிக்கப்படும் ஆளநர்களில் ஐந்தில் ஒரு பகுதியினனர் முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ, சட்டமன்ற உறுப்பினர்களாகவோ இருந்தவர்கள்.

அதனால்தான் ஆளுநர் என்ற பதவியை ஒழிப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக பலர் கருதுகிறார்கள். “இது ஒரு வெறுக்கத்தக்க பதவியாகிவிட்டது. ஒரு நாள் இதை நீக்கிவிட்டால் ஒன்றும் நடக்காது.” என்கிறார் தி பிரிண்ட் இதழின் ஆசிரியரான சேகர் குப்தா.

எளிதாக இதைச் சொல்லிவிட்டாலும், செய்வது கடினம். “ஆளுநர் பதவியை சட்டமியற்றி நீக்க முடியாது. ஆனால், அந்தப் பதவிக்கான அதிகாரத்தைச் சுருக்குவதுதான் இப்போதைக்குச் செய்யக்கூடியது” என்கிறார் முகுல் கேசவன். அந்தப் பதவியை நீக்குவதைவிட, அதனை சீர்திருத்தம் செய்வதே சிறந்தது என்கிறது இந்தியாவின் ஆளுநர்கள் குறித்து Heads Held High: Salvaging State Governors for 21st Century India என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் விரிவான ஆய்வறிக்கை ஒன்று. The Vidhi Centre for Legal Policy என்ற சிந்தனைக் குழுமம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆளுநர்களை நியமிப்பது நீக்குவதும் மத்தியில் ஆளும் அரசின் விருப்புரிமையாக இருக்கக்கூடாது என்கிறார்கள் இந்த ஆய்வறிக்கையை எழுதியவர்கள். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும் கூட்டுறவின் அடிப்படையிலும் இந்தப் பதவிக்கு ஆட்களை நியமிக்க வேண்டும் என்றும் ஆளுநர்கள் எடுக்கும் முடிவுகளுக்கான காரணங்கள் வெளிப்படையாக சொல்லப்பட வேண்டும் என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

மூத்த வழக்கறிஞரான கே.வி. விஸ்வநாதன், “பிரச்சனை ஆளுநர் பதவியில் இல்லை. மாறாக, அந்தப் பதவியை வகிப்பவர்களிடம் இருக்கிறது. அந்தப் பதவியையே நீக்கிவிடக்கூடாது. ஆளுநர்கள் தங்கள் செயல்களுக்கான காரணங்களைப் பதிவுசெய்ய வேண்டும். அவை பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். அவர்கள் நியமிக்கப்படுவதில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். அவர்கள் கைக்கூலியாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும்” என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »