Press "Enter" to skip to content

விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டுக்கு மு.க. ஸ்டாலின் அளித்த விளக்கம் என்ன?

விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் வழக்கில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியை பணியிடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கவன தீர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.

“அதிமுக பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் இளங்கோவன் நேற்று முன் தினம் ஐந்து பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், செம்பியம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், இளங்கோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் என்பவரை பொதுவெளியில் வைத்துத் தாக்கியதாகவும், அந்த முன் விரோதம் காரணமாகவும் இந்த கொலை திட்டத்தை சஞ்சய் தீட்டியுள்ளதும் தெரிய வந்தது.

காவல் துறையினர் இரவோடு இரவாக 2 மணி நேரத்தில் வழக்கில் தொடர்புடைய சஞ்சய், கணேசன், கவுதம், வெங்கடேசன், அருண்குமார் ஆகிய 5 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மேலும், இளங்கோ, போதைப் பொருட்களுக்கு எதிராக இருந்ததாகச் சொல்லப்படுவது குறித்து விசாரணையில் இதுவரையில் தெரியவில்லை ” என்று தெரிவித்தார்.

ஏஎஸ்பி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

தொடர்ந்து அம்பாசமுத்திரம் சம்பவம் குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், குற்றச் செயலில் ஈடுபட்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிலருடைய பற்களைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன் சேரன்மாதேவி சார் ஆட்சியர்/ உட் கோட்ட நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. ஏஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு உடனடியாக மாற்றப்பட்டார்.

விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளரைப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன். முழுமையான விசாரணை அறிக்கை வரப்பெற்றவுடன் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று குறிப்பிட்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின தனது பேச்சில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் ஜாதி மோதல்கள், ரௌடிகளால் நடத்தப்பட்ட கொலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன என்றும் 2019ல் அதிமுக ஆட்சியில் 1,670 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றன, திமுக ஆட்சியில் 2022ல் இது 1,596 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அம்பாசமுத்திரம் காவல்நிலைய மனித உரிமை மீறல்

பட மூலாதாரம், TNDIPR

ஏஎஸ்பி மீதான குற்றச்சாட்டு என்ன?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் சரக காவல் நிலையத்திற்கு வரும் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, அவர்களது பற்களைப் பிடுங்கியதாக விசாரணைக் கைதிகள் சிலர், காணொளி வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளனர்.

கணவன் மனைவி சண்டை, கண்காணிப்பு தொலைக்காட்சி ஒளிக்கருவி (கேமரா)வை உடைப்பது போன்ற சிறிய வழக்குகளுக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்குவதாக பாதிக்கப்பட்ட நபர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

வெங்கடேசன் என்பவரைக் கொலை செய்ய முயன்றதாக கடந்த மார்ச் 23ஆம் தேதி சிலர் கல்லிடைக்குறிச்சி காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கு வந்த மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீந்தர் சிங் அவர்களைக் கொடூரமாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. தாக்கப்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளியில், காவல் நிலையத்திற்கு இவர்கள் அழைத்து வரப்பட்டபோது காவல்துறையினருக்கான சீருடையில் இருந்த பல்வீந்தர் சிங், பிறகு சாதாரண உடைக்கு மாறிக்கொண்டு இவர்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளனர்.

அம்பாசமுத்திரம் காவல்நிலைய மனித உரிமை மீறல்

நெல்லை ஆட்சியருடன் விசாரணை அதிகாரி சந்திப்பு

ஏஎஸ்பி மீதான புகார் குறித்து விசாரிப்பதற்காக சேரன்மகாதேவி துணை ஆட்சியர் முகமது சபீர் ரை விசாரணை அதிகாரியாக நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திங்கட்கிழமை இது குறித்த விசாரணையை சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் தொடங்கினார். மேலும் குறிப்பிட்ட தேதியில் உள்ள கண்காணிப்பு தொலைக்காட்சி ஒளிக்கருவி (கேமரா) பதிவுகளை தரும்படி காவல்துறையிடம் சார் ஆட்சியர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து திங்கட்கிழமை மாலை பாதிக்கப்பட்ட லட்சுமி சங்கர் என்ற நபர் சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அதேசமயம் லட்சுமி சங்கரை டிஎஸ்பி பர்னாபாஸ் தலைமையில் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். இதனால் ஏஎஸ்பி பல்வீர்சிங்கை காப்பாற்றும் நோக்கோடு காவல்துறை அதிகாரிகள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடைபெறுமா என்று சந்தேகம் எழுவதாக பாதிக்கபட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மகாராஜா கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் விசாரணை அதிகாரி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் நேற்று மாலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் பங்கேற்றார்.

அதைத்தொடர்ந்து முகமது சபீர் ஆலம், நெல்லை எஸ் பி சரவணன் ஆகியோர் ஆட்சியர் கார்த்திகேயனை அவரது அறையில் சந்தித்து பேசினார். அப்போது ஏஎஸ்பி மீதான விசாரணையின் நிலை குறித்து ஆட்சியரிடம் சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விளக்கம் அளித்ததாக சொல்லப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »