Press "Enter" to skip to content

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு: போராட்டத்தின் பின்னணி, பெரியாரின் பங்கு என்ன?

வைக்கம் போராட்ட துவக்கத்தின் நூற்றாண்டை தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களும் தற்போது இணைந்து கொண்டாடவிருக்கின்றன. காங்கிரஸ்காரராக பெரியார் பங்கேற்று நடத்திய இந்தப் போராட்டம், பெரியாரின் சமூக நீதிப் பார்வையை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தது. இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன?

கேரளாவின் சமூக நீதி வரலாற்றில் ஈழவர் சம உரிமை பெறும் முயற்சியிலும் காந்தியின் சத்தியாகிரக சோதனைக் களங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவதும் வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம்தான். வைக்கம் மற்றும் சேரன்மாதேவி குருகுலப் போராட்டங்களின் மூலமாகத்தான் பெரியார் சமூக சீர்திருத்த வீரர் என உணரப்பட்டு, வரலாற்றில் இடம்பெற்றார்.

இந்தப் போராட்டம் குறித்து மிக விரிவான ஒரு நூலை, “வைக்கம் போராட்டம்” என்ற பெயரில் பழ. அதியமான் எழுதியிருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள அந்தப் புத்தகத்திலிருந்து பின்வரும் தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

பிரச்னையின் பின்னணி

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற இடத்தின் மையமாக அமைந்திருந்தது மகாதேவர் ஆலயம். அந்தக் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோராகக் கருதப்பட்ட ஈழவர், புலையர் ஆகியோர் நடக்கவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தெருக்களில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், உயர்சாதி இந்துக்கள் செல்லலாம் என்றாலும்கூட ஈழவர், தீயர், புலையர் ஆகியோர் நடக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கேரள காங்கிரஸ் குழுயின் செயலாளர் கே.பி. கேசவ மேனன் 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, மார்ச் 30ஆம் தேதி கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் ஈழவரையும் புலையரையும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்போவதாக அறிவித்தார். மார்ச் 13ஆம் தேதி இதுபற்றி காந்திக்கு விரிவாக கடிதம் ஒன்றையும் எழுதினார் கேசவ மேனன்.

காந்தி

பட மூலாதாரம், Getty Images

இந்தக் கடிதத்திற்குப் பதிலளித்த காந்தி, கேரளாவில் தீண்டாமையோடு நெருங்காமையும் (சில ஜாதியினர் உயர் ஜாதியினரை நெருங்கத்தகாதாராக கருதப்பட்டனர். அவர்கள் நெருங்கினால் தீட்டு என்று கூறப்பட்டது.) இருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தார். மேலும் இந்தப் போராட்டத்தில் இயன்றவரை எதிரிகளைத் தம்பக்கம் சேர்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறினார்.

அதேபோல மார்ச் முப்பதாம் தேதி நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அந்த சாலைக்கு அருகில் திரண்டனர். காவல்துறை தடுப்புகளை ஏற்படுத்தி வைத்திருந்தது. குஞ்சப்பா, பாஹுலயன் ஆகிய இருவரும் தடையை மீறி அந்தத் தெருவுக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து காவல்துறை அவர்களைக் கைதுசெய்தது.

இந்தப் போராட்டம் துவங்கியதையடுத்து சிவராம ஐயர், வாஞ்சேசுவர ஐயர் ஆகிய இருவரும் காந்தியை சந்தித்து, அந்தச் சாலைகள் கோவிலுக்குச் சொந்தமானவை என்றும் அவை பிராமணர்கள் வசமிருப்பதால், யாரை அனுமதிப்பது என்ற உரிமை தங்களுக்குத்தான் இருக்கிறது எனக் கூறினார். பிராமணரல்லாதார் அந்தத் தெருக்களில் அனுமதிக்கப்படுகிறார்களா என்று காந்தி கேட்டார். ஆமாம் என்றார்கள் அவர்கள். அப்படியானால், தீண்டாத வகுப்பினருக்கும் அந்த உரிமையை அளிப்பதில் என்ன பிரச்சனை எனக் கேட்டார் காந்தி. தாங்கள் பிறருடன் கலந்துகொண்டு, அது பற்றித் தெரிவிப்பதாகக் கூறினார்கள். அதுவரை சத்தியாகிரகத்தை நிறுத்திவைக்கலாம் என்றார் காந்தி.

இந்தப் போராட்டத்தை டி.கே. மாதவன் துவங்கி நடத்த, கே.பி. கேசவமேனன் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். வைதீகர்கள் காந்தியிடம் முறையிட்டதால் சில நாட்கள் போராட்டம் நிறுத்திவைக்கப்பட்டு, பிறகு ஏப்ரல் 7 முதல் தொடர்ந்து நடத்தப்பட்டது. தடைசெய்யப்பட்ட இடத்திற்குச் சென்ற சத்திகிரகிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏப்ரல் 10 முதல் கைது நிறுத்தப்பட்டது. பின்னர் தலைவர்கள் கைதுசெய்யப்பட ஆரம்பித்தனர். 18 சத்தியாகிரகிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில்தான் பெரியார், வைக்கத்திற்கு வந்து போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென தந்திகள் அனுப்பப்பட்டன.

பெரியார்

பட மூலாதாரம், DHILEEPAN RAMAKRISHNAN

இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்க பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த பெரியார் ஏன் அழைக்கப்பட்டார் என்பது இதில் முக்கியமான கேள்வி. “பெரியார்தான், அப்போது இங்கே காங்கிரஸ் தலைவராக இருந்தார் என்பது ஒரு காரணம். இம்மாதிரியான போராட்டம் நடத்தவது, மக்களைத் திரட்டி, உறுதியாகப் போராடுவது ஆகியவற்றில் அந்த காலகட்டத்தில் இரண்டு தலைவர்கள் சிறப்பானவர்களாக இருந்தார்கள். ஒருவர் வரதராஜுலு நாயுடு. இன்னொருவர் பெரியார். அதில் பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமை விஷயத்தில் தீவிரமாக இருப்பார் என்பதால் பெரியாரை அழைத்தார்கள்” என்கிறார் வைக்கம் போராட்டம் புத்தகத்தின் ஆசிரியரான பழ. அதியமான்.

வரதராஜுலு நாயுடு, எஸ். ஸ்ரீநிவாஸ அய்யங்கார் போன்ற வேறு பல காங்கிரஸ் தலைவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வைக்கம் சென்றனர். ஆனால், வைக்கம் சத்தியாகிரகத்திற்கு வெளியிலிருந்து ஆட்கள் செல்வது தமிழக காங்கிரஸ் தலைவரான ராஜாஜிக்கு உடன்பாடானதாக இல்லை.

மே மாதத்திலும் போராட்டம் தொடர்ந்து நடந்துவந்தது. பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று கூட்டங்களில் பேசிவந்தனர். பல்வேறு இடங்களில் இருந்தும் போராட்டத்திற்கு ஆதரவு குவிந்து வந்தது.

இந்த நிலையில், பெரியாரின் உரைகளும் ஏனைய நடவடிக்கைகளும் வைக்கத்தில் அமைதியின்மைக்குக் காரணமாகக்கூடும் எனக் கருதுவதால், அவர் கோட்டயம் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவுக்கு மதிப்பளிக்க முடியாமைக்கு வருந்துவதாக பெரியார் பதிலளித்தார். மே மாதம் கைதுசெய்யப்பட்ட பெரியார், ஒரு மாதகால கடுங்காவல் சிறைக்குப் பிறகு ஜூன் மாதம் விடுவிக்கப்பட்டார்.

பெரியாரின் மனைவி நாகம்மையாரும் பல முறை சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கூட்டங்கள், போராட்டங்கள், சத்தியாகிரகம் ஆகியவை தொடர்ந்து நடைபெற்றன. ஜூன் மாதத்தில் ராஜாஜி வைக்கத்திற்கு வந்தார். பொருளுதவி கோரி வேண்டுகோளும் விடுத்தார். போராட்டம் துவங்கிய மூன்றாவது மாதத்தில், அது இன்னும் தீவிரமடையத் துவங்கியது. வைதீகர்கள் எதிர் போராட்டத்தை நடத்தத் துவங்கினார்கள். போராட்டக்காரர்களுக்காக உணவுசாலை நடத்திய அகாலிகள் பஞ்சாபிற்குத் திரும்பினார்கள்.

இந்த நிலையில், மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவை மீறி நடந்ததற்காக ஜூலை மாதம் 18ஆம் தேதி பெரியாருக்கு நான்கு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கொல்லம் மாவட்டத்தில் பேசுவதற்கும் பெரியாருக்கு தடை விதிக்கப்பட்டது. பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஆகஸ்ட் ஏழாம் தேதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ராஜா சர் ராமவர்மா காலமானார். திருவிதாங்கூர் பகுதியில் மழையும் கடுமையாகப் பெய்ய ஆரம்பித்தது. பெரியாரும் சிறையில் இருந்ததால் போராட்டம் சுணக்கமடைந்தது. சிறையில் பெரியார் கைவிலங்கிடப்பட்டு, மிக மோசமாக நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மாத இறுதியில் பெரியார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

செப்டம்பர் மாதத்தில், நெடுங்கனா, நாகர்கோவில் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்த பெரியார் ஈரோட்டிற்குச் சென்றபோது வேறு வழக்கில் கைதுசெய்யப்பட்டார். சத்யாகிரகிகள் காந்தியைச் சந்தித்து அவரது ஆலோசனையைக் கோரினர். அவசியம் ஏற்பட்டால் தானும் சத்யாகிரகத்தில் பங்கேற்பதாகத் தெரிவித்தார். நவம்பர் மாதத்தில் உயர்சாதியினர் தங்கள் தரப்பை வலியுறுத்தி மிகப் பெரிய பேரணியை நடத்தினர்.

பிப்ரவரியில் எல்லா பொதுச் சாலைகளிலும் எல்லோரையும் அனுமதிக்க வேண்டுமெனக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்தத் தீர்மானம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பழ. அதியமான்

போராட்டம் துவங்கி ஒரு ஆண்டு நெருங்கிய நிலையில் மார்ச் 9ஆம் தேதி மகாத்மா காந்தி வைக்கம் வந்தார். சத்தியாகிரகிகள், வைதீகர், மகாராணி, நாராயண குரு, தேவஸ்வம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சந்தித்துப் பேசினார். காவல்துறை ஆணையர் பிட்டையும் சந்தித்தார். இதையடுத்து சத்யாகிரகிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் பெரியாருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

ஜூன் மாதத்தில் இந்தப் போராட்டத்தில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டது. கோவிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில் மூன்றில் தீண்டாதார் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், சத்யாகிரகிகள் இதனை ஏற்கவில்லை. வைதீர்களும் ஏற்கவில்லை.

காந்தி மகாராணியைச் சந்தித்தபோதே இதுபற்றி முடிவெடுக்கப்பட்டது. ஆனால், சாலைகளைத் திறந்துவிட்ட பிறகு, கோவிலுக்குள் நுழைய வேண்டுமென பெரியார் கேட்டால் என்ன செய்வது என்று மகாராணி காந்தியிடம் கேட்டார். காந்தி பெரியாரிடம் பேசியபோது, கோவிலுக்குள் நுழைவதுதான் இறுதி லட்சியம்; ஆனால், மக்களிடமும் அதற்கான மனப்போக்கு வரும்வரை அதற்காக கிளர்ச்சி செய்ய மாட்டோம் என்றார். இதை காந்தி, மகாராணியிடம் கூறியவுடன், சாலைகளைத் திறக்க ராணி ஒப்புக்கொண்டார்.

தெருக்கள் திறந்துவிடப்படும் நாளில் போராட்டம் முடிவுக்குவரும் என அறிவிக்கப்பட்டது. கிழக்குத் தெருவைத் தவிர, பிற தெருக்கள் திறந்துவிடப்பட்ட நிலையில்,போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பெரியார் தலைமையில் நடந்த வெற்றிவிழாவில் கோவில் நுழைவையே இறுதி லட்சியமாக பெரியார் உள்ளிட்டோர் குறிப்பிட்டனர். இப்படியாக வைக்கம் போராட்டம் முடிவுக்கு வந்தது.

புத்தகம்

வைக்கத்தைத் தொடர்ந்து டி.கே. மாதவன் மற்ற இடங்களில் நீடிக்கும் தீண்டாமையை நீக்க முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்தப் போராட்டத்தில் பெரியார் இரு முறை சிறை சென்றார். வைக்கத்தில் இருந்த 141 நாட்களில் சிறையில் மட்டும் 74 நாட்களைக் கழித்தார்.

இந்தப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு மிக முக்கியமானது என்கிறார் பழ. அதியமான். “ஒரு போராட்டம் கலங்கிக்கொண்டிருந்தபோது, பெரியார் சென்று அந்தப் போராட்டத்தை நிமிர்த்தினார் என்று நான் நினைக்கிறேன். மக்கள் ஆதரவை அவர் திரட்டினார். அதில் அவருடைய பங்கு மிகச் சிறப்பானது. காந்தி சமாதானங்களைச் செய்தார். அதாவது மேல் மட்டத்தில் அவர் பல காரியங்களைச் செய்தார். பெரியார் கீழ்மட்ட நிலையில், போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதில் பெரும்பங்கு வகித்தார்” என்கிறார் அவர்.

பிற்காலத்தில், வைக்கம் போராட்ட காலத்தில் காந்தியும் ராஜாஜியும் நடந்துகொண்ட முறை குறித்து கடுமையான விமர்சனங்களை பெரியார் முன்வைத்தார். சத்யாகிரகத்தை பல்வேறு வகைகளில் காந்தி முடக்க முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

வைக்கம் போராட்டம் பிற்கால கோவில் நுழைவுப் போராட்டங்களில் பெரும் தாக்கம் செலுத்தியது. “தமிழ்நாட்டில் நடந்த கோவில் நுழைவுப் போராட்டங்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடந்த கோவில் நுழைவு, தெரு நுழைவு போராட்டங்களில் வைக்கம் மிகப் பெரிய பங்களிப்பை, உத்வேகத்தை அளித்தது. அம்பேத்கர் 1936வாக்கில் ஒரு போராட்டத்தைத் துவங்கியபோது, வைக்கம் போராட்டம்தான் தனக்கு ஒரு உணர்ச்சியைக் கொடுத்தாக குறிப்பிடுகிறார். கேரளாவிலும் 1936ல் கோவில் நுழைவு பிரகடனம் செய்யப்பட்டபோது, வைக்கம்தான் அதற்கு முக்கியக் காரணம் என எல்லோருமே சொல்லியிருக்கிறார்கள்” என்று குறிப்பிடுகிறார் அதியமான்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »