Press "Enter" to skip to content

உத்தரப்பிரதேசத்தில் நமாஸ் படித்ததற்காக வீட்டைப் பூட்டிய காவல் துறை – கள நிலவரம்

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள லஜ்பத் நகரில் நமாஸ் படிப்பது தொடர்பாக மார்ச் 25- ஆம் தேதி சனிக்கிழமையன்று தகராறு ஏற்பட்ட வீட்டில் இப்போது பூட்டு தொங்குகிறது.

வீட்டின் வெளியே இரும்பு கேட்டில் இரண்டு அடையாளங்கள் காணப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு வரை அங்கு விளம்பர ஒட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த சுவரொட்டிகளில் “ரம்ஜான் முபாரக் – தராவீஹ், இங்கு மூன்று வசனங்கள் ஓதப்படும். இஷா தொழுகை 8.15 மணிக்கு நடக்கும். இன்ஷா அல்லாஹ்” என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த வீடு அருகில் வசிக்கும் ஜாகீர் உசேன் என்பவருக்கு சொந்தமானது. அவர் இதை சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார்.

இந்த வீட்டை சேமிப்புகிடங்காக ஜாகீர் உசேன் பயன்படுத்துகிறார். ஜாகீர் அருகில் பெரிய இரும்பு கடை வைத்துள்ளார்.

வீட்டின் இருபுறமும் இந்துக் குடும்பங்கள் உள்ளன, உள்ளூரிலும் கணிசமான எண்ணிக்கையில் இந்துக்கள் உள்ளனர்.

உள்ளூர் இந்து அமைப்பான ராஷ்டிரிய பஜ்ரங் தளத்துடன் தொடர்புடையவர்கள், இந்த சுவரொட்டிகள் மற்றும் தாராவீஹ் தொழுகை தொடர்பாக சனிக்கிழமையன்று சலசலப்பை உருவாக்கினர்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பஜ்ரங் தள் அமைப்பிலிருந்து ராஷ்ட்ரிய பஜ்ரங் தள் அமைப்பு வேறுபட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இந்த வீட்டில் ஒன்பது நாட்களுக்கு தராவீஹ் தொழுகை நடத்தப்பட இருந்தது. ஆனால் இது தொடர்பாக ஏற்பட்ட சலசலப்புக்குப் பிறகு மூன்றாவது நாளிலேயே அது நிறுத்தப்பட்டது.

நமாஸ் தொடர்பான விளம்பர ஒட்டி

நமாஸ் மட்டுமின்றி, அப்பகுதியில் அமைதியை சீர்குலைத்தால், தலா ஐந்து லட்சம் அபராதம் விதிக்கப்படும் என முஸ்லிம் தரப்பில் 10 பேருக்கு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நமாஸ் தொடர்பான தகராறில் பஜ்ரங் தள் அமைப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது அமைதியை சீர்குலைக்க முயற்சித்தால் அபராதமாக பத்திரத்தில் எழுதிய பணத்தை அவர்கள் செலுத்த வேண்டும்.

உ.பி. நமாஸ்

தராவீஹ் தொழுகை தொடர்பாக ஏன் வாக்குவாதம் ஏற்பட்டது?

மொராதாபாத்தின் லாஜ்பத் நகரில் தாராவீஹ் நமாஸ் பற்றிய சர்ச்சையைப் புரிந்து கொள்ள, இந்த நமாஸ் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்து சமுதாயத்தில் எப்படி ராமாயணம் படிக்கப்படுகிறதோ, அதே போன்று முஸ்லிம் சமுதாயத்தில் ரமலான் மாதத்தில் தாராவீஹ் நமாஸ் படிக்கப்படும்.

“புனித நூலான குர்ஆன் ஷரீஃப் இருபது ரக்அத் தராபிகளுக்குள் படிக்கப்படுகிறது. அதில் முப்பது பாராக்கள் உள்ளன. நீங்கள் விரும்பினால், அதை 30 நாட்களுக்குள் அல்லது மூன்று மூன்று பத்திகளாக 10 நாட்களுக்குள் படிக்கலாம்,” என்று மொராதாபாத்தின் நைப் நகர்ப்புற இமாம் முஃப்தி சையத் ஃபஹத் அலி கூறினார்.

தராவீஹ் நேரத்தில் வீட்டில் அல்லது பள்ளிவாசலில் அமர்ந்து குர்ஆன் ஓதுவார்கள் என்று சொல்கிறார்கள். இதில் ஹபீஸ் என்று அழைக்கப்படும் விஷயம் தெரிந்தவர் குரான் ஓதுகிறார்.

இதில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

ஜாகீர் உசேன் தனது இடத்தில் தராவீஹ் தொழுகையை ஏற்பாடு செய்தார். அதில் ஏராளமானோர் பங்கேற்க வந்தனர்.

“தராவீஹ் ஒன்பது நாட்கள் நடத்தப்பட வேண்டும், அது மார்ச் 31 அன்று நிறைவடைய இருந்தது. ஆனால் மூன்றாவது நாளான மார்ச் 25 அன்று அதை நிறுத்த வேண்டியதாயிற்று. பஜ்ரங்தள் பிரிவினர் ஏற்படுத்திய பிரச்சனை காரணமாக. அதை முடிக்க முடியவில்லை.”என்று ஜாகீர் குறிப்பிட்டார்.

“இஸ்லாம், மதமாக மாறிய காலத்திலிருந்தே தராவீஹ் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் தராவீஹ் ஓதுகிறார்கள். அதில் குர்ஆன் வாசிக்கப்படுகிறது,” என்றார் அவர்.

உ.பி. நமாஸ்

முழு விவரம் என்ன?

மார்ச் 23 முதல் தனது வீட்டில் (அவர் அதை சேமிப்பு கிடங்காகப் பயன்படுத்துகிறார்) தாராவீஹ் தொழுகைக்கு ஏற்பாடு செய்தாக ஜாகீர் உசேன் தெரிவித்தார்.

மார்ச் 25 அன்று, அதாவது மூன்றாம் நாள், இரவு சுமார் 8 மணிக்குப் பிறகு, குடும்பத்தினர் மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த 30-40 பேர் தராவீஹ் தொழுகைக்காக வீட்டின் உள்ளே கூடியிருந்தனர்.

ஒரு நாளில் மூன்று பத்திகள் தொழுகையை முடிக்க சுமார் இரண்டு மணி நேரம் ஆகும்.

இரவு 10 மணியளவில் 60-70 பேர் வீட்டிற்கு வெளியே கூடி அதை எதிர்க்கத் தொடங்கும் போது நமாஸ் இன்னும் நடந்து கொண்டிருந்தது.

இவர்களில் பெரும்பாலோர் ராஷ்ட்ரிய பஜ்ரங் தள் என்ற இந்து அமைப்போடு தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை

சலசலப்புக்கு மத்தியில் பிரார்த்தனையை முடிக்க இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று காவல் துறை நிர்வாகத்திடம் கூறியதாகவும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் காவல் துறையினர் முதலில் தொழுகையை முடிக்க அனுமதித்தனர் என்றும் ஜாகீர் உசேன் தெரிவித்தார்.

சூழ்நிலை மிகவும் பரபரப்பாக இருந்தது. அத்தகைய சூழ்நிலையில் மிகவும் சிரமத்துடன் மக்களை சமாதானப்படுத்தியதாக காவல்துறை கூறியது.

இனி இந்த வீட்டில் தராவீஹ் தொழுகையைத் தொடர மாட்டோம் என்று ஜாகீர் உசேன் காவல்துறையிடம் உறுதியளித்தார். பிறகு விஷயம் அமைதியானது.

அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் நிர்வாகம் இரு தரப்பினருக்கும் எதிராக மார்ச் 26 அன்று நடவடிக்கை எடுத்தது. இரு தரப்பினரும் ஆறு மாதங்களுக்கு பிணை ஒப்பந்தத்தின் கீழ் வைக்கப்பட்டனர்.

அமைதியை நிலைநாட்ட தடுப்பு நடவடிக்கையின் கீழ் இது செய்யப்பட்தாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில், அந்த இடத்தில் இருந்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு எதிராக நிர்வாகம் CrPC 107/116 (அமைதியை மீறுவதைத் தடுக்கும் தடுப்பு நடவடிக்கை)இன் கீழ் அறிவிப்பு அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசில், ‘அமைதியை சீர்குலைத்ததற்காக ‘தலா ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் ஏன் விதிக்கப்படக்கூடாது என முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

தனது வீட்டில் தாராவீஹ் தொழுகை நடத்திய ஜாகீர் உசேனுக்கும் இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

பிபிசியிடம் பேசிய லஜ்பத்நகரின் கட்கர் காவல் நிலையத்தின் சர்க்கிள் அதிகாரி (CO) ஷைலஜா மிஷ்ரா, “இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் பிணைப்பத்திர அறிவிப்பு பெற்றுள்ளனர். மற்ற தரப்பினருக்கும் அதை அனுப்பும் செயல்முறை நடந்து வருகிறது” என்றார்.

உ.பி. நமாஸ் இரும்பு வியாபாரி ஜாகீர் உசேன்

தராவீஹ் தொழுகையை ராஷ்டிரிய பஜ்ரங் தளம் ஏன் எதிர்க்கிறது?

மொராதாபாத்தின் லாஜ்பத்நகரில் தராவீஹ் தொழுகை தொடர்பாக ராஷ்ட்ரிய பஜ்ரங் தளத்தின் ஆட்சேபம் என்ன, இந்த அமைப்பின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை என்ன?

இது குறித்து தேசிய பஜ்ரங் தள் கட்சியின் பிரதேசத் தலைவர் ரோஹன் சக்சேனா சனிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசினார். “ஜாகீர் உசேன், முஸ்லிம் சமுதாய மக்களை அழைத்து, புதிய பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தி இங்கு தொழுகை நடத்துகிறார். இது பற்றி உள்ளூர் மக்களிடமிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் புகைப்படங்களை கிளிக் செய்து அனுப்பியுள்ளனர். நமாஸின் புகைப்படங்கள் கூட உள்ளன.”என்று அவர் தெரிவித்தார்.

”புதிய பாரம்பரியத்தை தொடங்க அனுமதிக்க மாட்டோம். இந்த ஊருக்குள் அமைதியை குலைக்க முயல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் ராஷ்டிரிய பஜ்ரங் தளம் போராட்டம் நடத்தும்,” என்றார்.

‘புதிய பாரம்பரியம்’ பற்றிப்பேசிய உள்ளூர் மக்கள், ”இந்த வீட்டில் இதுவரை தராவீஹ் தொழுகை நடத்தப்பட்டதில்லை. இங்கு இப்படி நடப்பது இதுவே முதல் முறை” என்று கூறுகிறார்கள்.

பிபிசியிடம் பேசிய ரோஹன் சக்சேனா, “சனிக்கிழமை நாங்கள் முன்வைத்த கோரிக்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

தராவீஹ் தொழுகையில் அமைதியின்மை என்ற பேச்சு எங்கிருந்து வந்தது? வீட்டிற்குள் நமாஸ் செய்யும் பாரம்பரியம் புதியதாக இருந்தாலும் சரி அல்லது பழையதாக இருந்தாலும் சரி, இதில் ராஷ்டிரிய பஜ்ரங் தளத்திற்கு என்ன எதிர்ப்பு?

இந்தக் கேள்விகள் குறித்துப் பேச ரோஹன் சக்சேனா மறுத்துவிட்டார்.

உ.பி. நமாஸ்

அதிகாரிகளிடம் புகார்

“இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஊடகங்களிடமிருந்து அழைப்புகள் வருகின்றன. ஆனால் நான் யாருடனும் பேச விரும்பவில்லை. நிர்வாகத்திடம் என் கருத்தை தெரிவித்துவிட்டேன்,” என்று தாராவீஹ் தொழுகை தொடர்பான சர்ச்சை குறித்து ஜாகிர் உசேன் கூறினார்.

ஆனால் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுபவர்களால் தாராவீஹ் தொழுகையை நிறுத்த நேரிட்டது குறித்து ஜாகிர் உசேனின் மனைவியின் சகோதரர் முகமது சைஃபி, மிகவும் கோபமாக இருக்கிறார்.

“நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் எங்கள் வீடுகளிலும் மசூதிகளிலும் தராவீஹ் தொழுகை நடத்துகிறோம். இப்போது அது முழுமையடையாமல் உள்ளது. நிர்வாகம் அதை முடிக்க அனுமதித்திருக்க வேண்டும்.”என்று முகமது சைஃபி குறிப்பிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய மொரதாபாத் எஸ்எஸ்பி ஹேம்ராஜ் மீனா, “ஒருவர் தனது வீட்டிற்குள் பூஜை செய்தாலும், நமாஸ் அல்லது தாராவீஹ் செய்தாலும், வேறு எந்த தரப்பினரும் ஆட்சேபம் தெரிவிக்கக்கூடாது. அப்படிச்செய்தால் அந்த தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் அவரவர் மதம் மற்றும் நம்பிக்கை தொடர்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்ற சுதந்திரம் அளிக்கிறது.

தராவீஹ் தொழுகையை வீட்டில் நடத்த எந்தத் தடையுமில்லை என்றும் காவல்துறை கூறுகிறது. இருந்த போதிலும், அமைதியை சீர்குலைத்த குற்றச்சாட்டின்பேரில் முஸ்லிம் தரப்பு மீதும் காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன் அடிப்படையில் முஸ்லிம் தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீது தலா ஐந்து லட்சம் ரூபாய் பிணைப்பத்திர ஒப்பந்தம் விதிக்கப்பட்டது.

நமாஸ் தொடர்பாக எந்த சர்ச்சையும் இல்லை என்று மொராதாபாத்தின் எஸ்எஸ்பி ஹேம்ராஜ் மீனா பிபிசியிடம் கூறினார்.

”இரு தரப்பினர் மீதும் தடை நடவடிக்கை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு வீடு தொடர்பான தகராறு இருந்தது,” என்றார்.

தராவீஹ் தொழுகையை வீட்டில் செய்ய முடியாதா?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த எஸ்.எஸ்.பி., “அது மசூதி அல்ல. அது ஒரு வீடு. வீட்டில் அப்பகுதி மக்கள் அனைவரையும் கூட்டி நமாஸ் செய்வீர்களா என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

ஒரு இந்து குடும்பம் வீட்டில் இது போன்ற ஜக்ராத்தா (இரவு முழுவதும் நடக்கும் பூஜை) நடத்தினால், அங்கேயும் இதுபோன்ற நடவடிக்கை எடுப்பீர்களா?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த எஸ்.எஸ்.பி மீனா, ”ஜக்ராத்தா வேறு, வழிபடுவது வேறு. இந்து-முஸ்லிம் பாரம்பரியத்தை ஒன்றாக்குவீர்களா? என்றார்.

உ.பி. நமாஸ்

இப்போது நிலைமை எப்படி இருக்கிறது?

தராவீஹ் தொழுகை தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், மொராதாபாத் லஜ்பத் நகரில் தற்போது அமைதி நிலவுகிறது.

மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள லஜ்பத் நகரின் மக்கள் தொகை சுமார் 25 ஆயிரம். இங்கு 70 சதவிகிதம் பேர் இந்துக்கள், 30 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள்.

தராவீஹ் தொழுகை தொடர்பான சர்ச்சைக்கு முன், வீடுகளை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பாக இந்து-முஸ்லிம் சமூகத்தினரிடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் அப்பகுதியில் அமைதி காக்கப்பட வேண்டும் என்பதற்காக, சமீபத்திய பிரச்சனையை பெரிதாக்க பலரும் விரும்பவில்லை.

யாருடைய வீட்டில் தவாரீஹ் தொழுகை நிறுத்தப்பட்டதோ அவரும் இந்த பிரச்சனையில் அமைதியாக இருக்க விரும்புகிறார்.

“நிர்வாகம் சொன்னதை நான் ஏற்றுக்கொண்டேன். யாருடனும் சண்டை போடவும் இல்லை, யாரிடமும் பேசவும் விரும்பவில்லை” என்கிறார் ஜாகீர் உசேன்.

உ.பி. நமாஸ்

“நான் ஒரு இந்து. ஆனாலும் வெளியிலிருந்து ஆட்கள் இங்கு வந்து தொழுகை நடத்தக்கூடாது என்று சொன்னது தவறு. வீட்டில் இருந்தபடி தெய்வத்தை வணங்குவது எப்படி தவறாகும்? இப்படி தடை செய்யக்கூடாது” என்று தராவீஹ் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டின் முன்னால் கடை நடத்தி வருபவர் தெரிவித்தார்.

“யாராவது நம்மை வழிபட விடாமல் தடுத்தால் நாம் எப்படி உணருவோம்” என்றார் அவர்.

அருகில் இருந்த பான் கடைக்கு வந்த ஒரு முஸ்லிம் வாடிக்கையாளர், “ரமலான் மற்றும் நவராத்திரி நடக்கிறது. சிலர் தேவையில்லாமல் சூழலை சீர்குலைக்க விரும்புகிறார்கள். இங்கு ரகளையை உருவாக்க வந்தவர்கள் இந்தப்பகுதியை சேர்ந்தவர்கள்கூட அல்ல” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »