பட மூலாதாரம், VIDUTHALAI MOVIE
வெற்றிமாறன் இயக்கத்தில், கதாநாயகனாக நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் சூரியுடன் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இரண்டு பாகங்களாக உருவான இந்தப் படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
படத்தின் கதை
அருமபுரி என்ற மலைக்கிராமத்தில் சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது. ஆனால், அந்தச் சுரங்கத்தை எதிர்த்து பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதி தலைமையிலான மக்கள் படை என்ற அமைப்பு ஆயுதம் தாங்கிப் போராடுகிறது.
அந்த அமைப்பை வழிநடத்தும் விஜய் சேதுபதியைக் கைது செய்யச் செல்லும் காவல்துறை குழுவில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றுகிறார் குமரேசன் கதாப்பாத்திரத்தில் வரும் சூரி.
உயரதிகாரியின் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் சூரிக்கு, அவரது உயரதிகாரியால் மெமோ கொடுக்கப்படுகிறது. தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் பணியில் இருக்கப் போராடும் சூரிக்கு என்ன ஆனது? விஜய் சேதுபதி பிடிபட்டாரா? சூரிக்கும் விஜய் சேதுபதிக்கும் என்ன தொடர்பா? இதுதான் படத்தின் மீதிக் கதை.
சீட் நுனியில் உட்கார வைக்கும் காட்சிகள்
இந்தத் திரைப்படம் குறித்து ஊடகங்களில் கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.
அரசின் திட்டங்கள், இயற்கை வளப் பாதுகாப்பு, மக்கள் எதிர்ப்பு, சில குழுக்களின் வன்முறை, காவல்துறை அடக்குமுறை, கடமைக்காகத் தங்கள் இன்னுயிரைப் பலி கொடுக்கும் அப்பாவிக் காவலர்கள் என்று தமிழ் திரைப்படத்தில் பல கதைகள் இதற்கு முன்பும் வந்துள்ளன.
ஆனால், “அவற்றில் ஒரு விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்கள் மட்டுமே முதல் வரியில் குறிப்பிட்ட விஷயங்களை அவரவர் சார்ந்த நிலையில் ஒரு வாழ்வியலாகக் காட்டுகின்றன. அப்படியொரு படத்தை இயக்குநர் வெற்றிமாறன் கொடுத்துள்ளார்,” என்று தினமலர் நாளிதழ் விமர்சனம் வழங்கியுள்ளது.
“படத்தின் தொடக்கக் காட்சிகளில் இருந்தே பார்வையாளர்களை பதற்றத்தில் இருக்க வைத்து, தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெற்றிமாறன் இயக்கியுள்ளார்,” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் விமர்சனம் வழங்கியுள்ளது.
“கதையில் வரும் பிரச்னைகளுக்கு வித்திடும் காரணங்கள் சாதாரணமாகத் தெரிந்தாலும், அவற்றை வெற்றிமாறன் காட்சிப்படுத்தியுள்ள விதம், படம் பார்ப்பவர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார்,” என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பாராட்டியுள்ளது.

பட மூலாதாரம், VIDUTHALAI MOVIE
“18 பக்கங்களைக் கொண்ட ‘துணைவன்’ சிறுகதையில் கதையின் மையப்புள்ளியை மட்டும் எடுத்துக்கொண்டு, அதில் தனது கற்பனைகளையும் கலந்து வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
ஏற்கெனவே நாவல் ஒன்றை படமாக எடுத்து வெற்றி கண்டவர், இம்முறை இந்தச் சிறுகதையின் மூலம், உலகம் முழுவதும் மூன்றாம் தர நாடுகள், வளரும் நாடுகளில் நிகழும் கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் பெரும் கதையாடலை நடத்தியிருக்கிறார்,” என்று இந்து தமிழ் அதன் விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
கதாநாயகனாக சூரியின் நடிப்பு எப்படி?
“படத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள காட்டுப்பகுதி, காவல்துறை குழு இருக்கும் இடம், கதாபாத்திரங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர்கள் என ஒவ்வோர் அம்சமும் குறிப்பிடும்படி அதிக ஈடுபாட்டை படத்தில் காட்டியுள்ளன,” என்று தினமலர் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
“வெற்றிமாறன் படத்தில் சூரி கதாநாயகனா என்று யோசித்தவர்கள், படத்தைப் பார்த்த பிறகு குமரேசன் என்ற காவல் துறை டிரைவர் கதாபாத்திரத்தில் சூரி எந்த அளவுக்குப் பொருத்தமாக நடித்துள்ளார் என்பதை ஆச்சர்யத்துடன் பார்ப்பார்கள்.
ஓர் இடத்தில்கூட இதற்கு முந்தைய நகைச்சுவை நடிகர் சூரியை பார்க்கவே முடியாது,” என்று தினமலர் கதாநாயகனாக நடித்துள்ள சூரியை பாராட்டியுள்ளனர்.

பட மூலாதாரம், VIDUTHALAI MOVIE
“வாத்தியராக நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பு அபாரமானதாக இருந்தது” என்று பாராட்டியுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா, சில கொடூர சம்பவங்களை அவற்றின் எதார்த்ததோடு காட்சிப்படுத்தியிருப்பதால் காண்பதற்குக் கடினமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதோடு, “சில தொழில்நுட்பத் தவறுகள் இருந்தபோதிலும் கதையின் அளவு மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட விதத்தை அடிப்படையாக வைத்து அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடலாம்” என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா அதன் விமர்சனத்தில் கூறியுள்ளது.
தடைபடும் கதையோட்டம்
“பவானிஸ்ரீ மலைக்கிராமத்து பெண்ணாகச் சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறனின் பட நாயகிகளுக்கே உரிய வீரத்தைப் பிரதிபலிக்கும் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் பாசம், காதல், சோகம், துணிவை வெளிப்படுத்தும் காட்சிகளில் நன்றாகவே நடித்துள்ளார்,” என்று இந்து தமிழ் அவரது நடிப்பைப் பாராட்டியுள்ளது.

பட மூலாதாரம், VIDUTHALAI MOVIE
“சுற்றிலும் மலைகள், மரம், செடி, அரிக்கேன் விளக்குகள், காட்டாறு, பாறைகள், லுங்கியும் துண்டும் அணிந்த எதார்த்த மனிதர்கள், குறுகலான தெருக்கள், ஓட்டு வீடுகள், டீக்கடைகள், உருவங்களற்ற நம்பிக்கை அடிப்படையிலான தெய்வங்கள், காவல் துறை பட்டாலியன், செக்போஸ்ட், செய்தியாளர்கள், காவல் துறை ஜீப் என்று படம் முழுக்கவே கதைக்களத்தில் வேல்ராஜின் ஒளிப்பதிவு படம் பார்ப்பவர்கள் மனதில் கனத்த மௌனத்தைச் சுமக்கச் செய்துள்ளது,” என்றும் இந்து தமிழ் விமர்சனம் வழங்கியுள்ளது.
“காவல்துறையின் விசாரணைக் காட்சிகளை மிகவும் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார்கள். சென்சார் செய்யப்பட்டும் அந்தக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது ஆச்சர்யம்தான்” என்று குறிப்பிட்டுள்ள தினமலர், படத்தின் ஆரம்பத்தில் வரும் தொடர் வண்டிகுண்டுவெடிப்புக் காட்சி நீளமாகவும் இடைவேளைக்குப் பின் சிறிது நேரம் கதையோட்டம் கொஞ்சம் தடைபடுவதும் படத்தின் வேகத்தைக் குறைப்பதாக விமர்சித்துள்ளது.
“விடுதலை பாகம் 1’ திரைப்படம், பன்னாட்டு நிறுவனங்களின் பசிக்கும் தாகத்திற்கும் காவு கொடுக்கப்படும் பாமர மக்களின் சதைக்கும் ரத்தத்திற்கும் மருந்து தடவியிருக்கிறது,” என்றும் இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com