Press "Enter" to skip to content

எட்டு வயதில் மாதவிடாய் – ஏன் இப்படி நடக்கிறது? கைபேசிகள் காரணமா?

பட மூலாதாரம், Getty Images

அன்று அறுவை சிகிச்சை தியேட்டரை விட்டு வெளியே வந்து கைபேசியை எடுத்துப் பார்த்தபோது ஐந்து மிஸ்டு கால்கள். என் உறவினர் பெண் அழைத்து இருந்தார். உடனே அந்த எண்ணுக்கு போன் செய்தேன். எதிர்முனையில் ஒரு அழுகுரல் கேட்டது.

“சானுவுக்கு பீரியட்ஸ் ஆரம்பமாகிவிட்டது. அவளுக்கு எட்டு வயது தான் நடக்கிறது. எப்படி இது நடந்திருக்கும்? எனக்கு ஒன்றும் புரியவில்லை,” என்றார்.

அவரை அமைதிப்படுத்த முயற்சி செய்தேன். அதன் பிறகு சானுவை, மருத்துவமனைக்கு அழைத்து வரச் சொன்னேன்

இதுபோன்ற நேரங்களில், பெண்களின் மனதில் படபடப்பு அதிகமாக இருக்கும். சில நேரங்களில் சிறுநீர் நோய்த்தொற்று காரணமாக ரத்தம் வெளியேறும். யாராவது பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டு இருந்தாலும் ரத்தப்போக்கு இருக்கும்.

அதனால் சானுவை கவனமாக பரிசோதித்தேன். சோதனைக்கு பிறகு அவளுக்கு மாதவிடாய் தொடங்கிவிட்டதை அறிந்தேன்.

சிறு வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் ஏற்படும் நிகழ்வுகள் இன்று மிகவும் பொதுவாக நடக்கிறது. இதனால், பெற்றோர் மத்தியில் பதற்றமும், கவலையும் அதிகரித்து வருகிறது.

இளம் வயதில் மாதவிடாய் ஏற்படுவதால் இந்த குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்று கூட புரிவதில்லை. சானிட்டரி நாப்கின் எப்படி பயன்படுத்த வேண்டும்? மாதவிடாய் காலத்தின் போது என்ன செய்ய வேண்டும்? மாதவிடாயின் போது ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்று இந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உரிய விழிப்புணர்வை அவர்களின் அம்மாக்கள் தான் கொடுக்க வேண்டும்.

சிறு வயதிலேயே மாதவிடாய் – என்ன காரணம்?

மாதவிடாய்

பட மூலாதாரம், Getty Images

பெண்கள் பருவமடையும் வயது(மாதவிடாய் தொடங்குவது) குறைந்து வருவதற்கான காரணங்கள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல் பருமன், அதிக அசைவ உணவுகளின் பயன்பாடு, சில மரபணு காரணிகள், மன அழுத்தம், குடும்பத்தினருடன் ஏற்படும் சண்டை குறித்த கவலை போன்றவை இங்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

குழந்தைகள், சோயாபீன்களை அதிகம் உட்கொள்வதும் இதற்கு ஒரு காரணம். நமது உணவில் உள்ள ரசாயனம், பூச்சிக்கொல்லிகளும் இந்தப் பிரச்னைக்கு வழிவகுக்கிறது.

ஆனால் குறைந்த உடற்பயிற்சி மற்றும் உடல் பருமன் மட்டுமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

பெண் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிப்பது கவலைக்குரிய விஷயம். ஏனென்றால் அவர்களின் வளர்ச்சிக்கேற்ப உணவு முறையும் மாறுகிறது. உடல் வளர்ச்சிக்கேற்ப எடுத்துக் கொள்ளப்படும் அதிக உணவாலும், அதற்கேற்ற உடற்பயிற்சி இல்லாததாலும் பெண் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்கிறது.

மொபைல் பயன்பாடு காரணமா?

மாதவிடாய்

பட மூலாதாரம், Getty Images

மாதவிடாயை தூண்டுவதற்கு தேவையான ஹார்மோன்களை வெளியிட மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் சுரப்பிகளின் சமிக்ஞைகள் அவசியம். பெண் குழந்தைகள் வளரும் போது இந்த சுரப்பி மூலமாக ஹார்மோன் சுரக்கிறது. இதன் விளைவாக பெண் குழந்தைகளின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு, மாதவிடாய் ஏற்படுகிறது.

இருப்பினும், மாதவிடாய்க்கு தேவையான சிக்னல்களை அனுப்ப எந்த நேரத்தை மூளை தேர்வு செய்கிறது என்ற கேள்விக்கு நம்மிடம் உறுதியான பதில்கள் இல்லை. ஆயினும், சில ஆராய்ச்சிகள் மூலமாக கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் பெண் குழந்தைகளைச் சுற்றி நிலவும் சூழல் காரணமாக இந்த ஹார்மோன் தூண்டப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.

தொலைக்காட்சி, மடிக்கணினிகள், கைபேசிகளில் காணக் கிடைக்கும் உள்ளடக்கம், குழந்தைகளின் மூளையை தூண்டுகிறது. இன்று கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளிடமும் மடிக்கணினி, டேப்லெட்டுகள், கைபேசிகள் உள்ளன. அன்லிமிடெட் இன்டெர்நெட்டும் மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது.

இணையத்தின் வளர்ச்சி காரணமாக மொபைல் தொலைபேசியில் நம்மால் அனைத்து விதமான உள்ளடக்கத்தையும் பார்க்க முடிகிறது. இதை சிறியவர் முதல் பெரியவர் வரை எளிதாக பார்க்கும் வகையிலேயே இந்தியா போன்ற நாடுகளின் பாதுகாப்பு இருக்கிறது.

அதனால் வீட்டில் உள்ள சிறு குழந்தைகள் கைபேசி பயன்படுத்தும் போது, வயது வந்தோருக்கான அல்லது ஆபாச உள்ளடக்கத்தை பார்ப்பதால் அவர்களின் ஹார்மோன்களை தூண்டும் சிக்னலை மூளை அனுப்பக்கூடும். இதனால் இளம் வயதிலேயே பெண் குழந்தைகள் வயதுக்கு வந்து விடுகிறார்கள்.

ஆனால் கிராமப்புறங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் தாமதமாக தொடங்குவதை நாம் காண்கிறோம். அங்கு கைபேசி பயன்பாடு மற்றும் அதில் வரும் உள்ளடக்கங்கள் கிடைப்பதில் இருக்கும் வேறுபாடு காரணமாக இது தாமதமாகிறது.

இத்தகைய உள்ளடக்கம் ஆண், பெண் இருவரையும் பாதிக்கிறது. ஆனால், இங்கு பெண்களின் உடல் மிகவும் வித்தியாசமானது. கொஞ்சம் சிக்கலானதும் கூட. அதனால் முடிவுகள் சற்று வேகமாகத் தெரியும்.

ஆனால், எல்லாப் பெண்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. இதில் மற்ற காரணிகளும் பங்கு வகிக்கின்றன. அதனால்தான் கைபேசி பயன்பாடு குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

பெண் குழந்தைகளை நினைத்து கவலையா?

மாதவிடாய்

பட மூலாதாரம், Getty Images

மாதவிடாய் தொடங்கியவுடன், பெண் குழந்தைகளுக்கு சில பிரச்னைகள் ஏற்படுகின்றன.

சில குழந்தைகள் பருவமடைந்த பிறகு அவர்களின் உயரம் அதிகரிப்பது நின்றுவிடும். அதனால் சிறு வயதிலேயே மாதவிடாய் ஏற்படுவது என்பது கவலைப்பட வேண்டிய ஒன்றாக மாறிவிடுகிறது.

உதாரணமாக, பத்து வயதான மகளின் உயரம், தாயின் உயரத்தை விட மிகக்குறைவாக இருந்தால் உடனடியாக அந்த குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி மாதவிடாயை தாமதப்படும் மருந்துகளை தேவைகேற்ப எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் இவை அனைத்தும் உரிய மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகே முடிவு செய்யப்பட வேண்டும்.

பரிசோதனைகளுக்குப் பிறகு மருத்துவரின் மேற்பார்வையில் ஊசி போட்டால், மாதவிடாய் சிறிது தாமதமாகும் வாய்ப்பு உள்ளது. சில சந்தர்ப்பங்களில், இந்த காலகட்டத்தை இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். இந்த காலகட்டத்தில் பெண்ணின் உயரமும் மற்ற உடல் அமைப்பும் மேம்படும்.

அதனால், சிறு வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் மருத்துவர்களை அணுக வேண்டும். பெற்றோர்கள், சரியான நேரத்தில் மருத்துவர்களை சந்திப்பது பலனைத் தரும்.

மாதவிடாய் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு, இந்த சிகிச்சையின் செயல்திறன் குறைகிறது.

மாதவிடாய் முன்கூட்டியே தொடங்கினால், கொள்கைஸ்டிக் கருப்பை நோய் (PCOD) ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வலியின் காரணமாக, உடல் பருமன், நீரிழிவு போன்ற பிரச்சனைகளும் வரக்கூடும்.

எதிர்காலத்தில் மார்பக, சிறுநீர்க்குழாய் புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும்.

முதல்முறையாக மாதவிடாய் வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக மச்சம், அக்குள் முடி, மார்பக வளர்ச்சி போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த அறிகுறிகள் இளம் வயதிலேயே தோன்றினால், உடனடியாக ஒரு மகளிர் நல மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்.

இந்த முன்னெச்சரிக்கைகள் அவசியம்

மாதவிடாய்

பட மூலாதாரம், Getty Images

மாதவிடாய் விரைவாக தொடங்குவது பெண் குழந்தைகளின் தவறு அல்ல. அதனால் விரும்பியதை செய்யவும், வெளியே சென்று விளையாடவும் அந்த குழந்தைகளை அனுமதிக்க வேண்டும்.

அந்த குழந்தைகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வது தாயின் பொறுப்பு. சானிட்டரி நாப்கினை தனியாக எப்படி பயன்படுத்துவது என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது அவசியம்.

குழந்தைகளின் தன்னம்பிக்கை குறையாமல் இருக்க அவர்களை எல்லா செயல்களிலும் பங்கு கொள்ள பெற்றோர் உதவ வேண்டும்.

வயதுக்கு வந்த பிறகு பெண் குழந்தைகளை வெளியேச் சென்று விளையாட பெரும்பாலான பெற்றோர்கள் அனுமதிப்பில்லை. இது ஒரு தவறான அணுகுமுறை, சில நேரங்களில் பெற்றோர் மீது வெறுப்பை உருவாக்கும் அபாயமும் இதில் இருக்கிறது.

மாதவிடாய்

பட மூலாதாரம், Getty Images

பருவமடைந்த பிறகு முதல் வருடத்தில் மாதவிடாய் சற்று ஒழுங்கற்றதாக இருக்கும். 21 நாட்களுக்கும் குறைவான மாதவிடாய், ஏழு நாட்கள் வரை ரத்தப்போக்கு அல்லது அதிக ரத்தப்போக்கு ஆகியவற்றை நீங்கள் கண்டால், குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். பெண்களின் ஹீமோகுளோபின் அளவு குறித்து அடிக்கடி பரிசோதித்து பார்க்க வேண்டும். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சீராக வழங்குவதும் அவசியமானது.

அரிசி, உருளைக்கிழங்கு, சர்க்கரை, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை தினசரி எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இளம் பருவத்திலேயே வயதுக்கு வரும் பெண்களுக்கு, தனிமை, குறைந்த ஆளுமை, பாலியல் உறவில் எளிதில் ஈடுபடுவது போன்ற மாற்றங்கள் அதிகமாக நடக்கிறது. அதனால், இந்த குழந்தைகளை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயார் செய்ய பெற்றோர்கள் உறுதுணையாக செயல்பட வேண்டும்.

மாதவிடாய் ஒரு நோய் அல்ல, பெண்களின் வளர்ச்சியில் அது ஒரு கட்டம். இதைப் பெண்களிடம் அவர்களின் தாய் எடுத்துக்கூற வேண்டும். மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை மகள்களுக்கு ஏற்படுத்த ஒவ்வொரு கட்டத்திலும் தாய் உடனிருக்க வேண்டும்

(இந்த கட்டுரையை எழுதியவர் ஒரு மருத்துவர். இதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அவரின் சொந்த கருத்துகள், பிபிசியின் கருத்துகள் அல்ல)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »