பட மூலாதாரம், sansad tv
சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்த கூட்டம் 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம், புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, பழைய நாடாளுமன்ற வளாகத்திலேயே அலுவல்கள் நடைபெற்றன.
நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோதி, “நாளை விநாயகர் சதுர்த்தி அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு செல்லவுள்ளோம்,” எனத் தெரிவித்தார்.
மக்களவைத் தலைவர் என்ன பேசினார்?

பட மூலாதாரம், sansad tv
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாளில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவையில் உரையாற்றினார்.
அவரின் உரையின் போது, நாளை முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் எனக் கூறினார்.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறும்போது, “ஜி20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது, உலக அரங்கில் இந்தியாவின் தலைமைப்பண்பு பல நன்மைகளை எதிர்காலத்தில் பெற்றுத்தரும். இதற்கு முக்கிய காரணமாக விளங்கிய பிரதமர் மோதியை பாராட்டுகிறேன்,” என்று மக்களவைத் தலைவர் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இதுவரை இந்த அவை 15 பிரதமர்களின் தலைமையை பார்த்துள்ளது. அவர்கள் அனைவரும் இந்தியாவில் இன்றைய நிலையை தீர்மானிக்க முக்கிய பங்கு ஆற்றியுள்ளனர். இந்த அவையில் பல உரையாடல்கள் நடந்துள்ளன. அனையனைத்தும் கடந்த 75 ஆண்டுகளில், நாட்டின் நலனுக்காக நடந்தவை.”
பிரதமர் மோதி உரை

பட மூலாதாரம், sansad tv
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று அவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இதுவரை இந்த நாடாளுமன்றத்தில் நடந்தவை அனைத்தும் நமது பாரம்பரியம் என்று கூறினார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு செல்வது குறித்து அவர் கூறுகையில், “இந்த அவையில் இருந்து விடைபெறுவது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இந்த அவைக்குள் நுழைந்த போது தலைவணங்கி இந்த அவைக்குள் நுழைந்தேன். ஜனநாயகத்தின் கோவிலான இதை நான் வணங்குகிறேன்,” என்றார்.
“இந்த அவையை விட்டு புதிய நாடாளுமன்றத்திற்கு சென்றாலும், பழைய அவையின் நினைவுகள் என் மனதில் நிரம்பியிருக்கும். இங்கு பல இனிமையான, சில கசப்பான அனுபவங்கள் உள்ளன. சில நேரங்கள் மோதலும் நடந்துள்ளது. போராட்டம், கொண்டாட்டம், உற்சாகம் என பலதரப்பட்ட சூழல்கள் இந்த அவையில் அரங்கேறியுள்ளது.”
நேருவை குறிப்பிட்ட மோதி

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோதி, இந்த 75 ஆண்டுகளில் நமது நாடாளுமன்றம் பொதுமக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் அவையாக இருந்துள்ளது என்றார்.
ராஜேந்திர பிரசாத் முதல் அப்துல் கலாம் வரை, ராம்நாத் கோவிந்த் மற்றும் திரௌபதி முர்மு ஆகியோர் இந்த அவையில் தங்களின் உரையை நிகழ்த்தி இருக்கின்றனர்.
மேலும் நாடாளுமன்ற வரலாற்றில் முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரை பலரின் பங்களிப்பை குறிப்பிட்டார்.
“மதிப்பிற்குரிய சபாநாயகர், பண்டிட் ஜவஹர்லால் நேரு, அடல் பிஹாரி வாஜ்பேய், மன்மோகன் சிங் என பலரும் இந்த அவையை வழிநடத்தி இருக்கிறார்கள். நான் அவர்களின் வழிகாட்டுதலைப் பெற்றேன்.”
“இந்த அவையை வழிநடத்தி, அதன் மூலம் நாட்டிற்கு வழிகாட்டியவர்கள் இவர்கள். நாட்டை புதிய வடிவில் வடிவமைக்க இவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் போற்றுவதற்கான வாய்ப்பும் இன்று கிடைத்துள்ளது,” என்று மோதி தனது உரையின் போது தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேறிய முக்கிய மசோதா
தனது உரையின் ஒரு பகுதியாக பழைய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களை பிரதமர் நரேந்திர மோதி நினைவு கூர்ந்தார்.
“பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்த பல பிரச்னைகளுக்கு இந்த அவை நிரந்தர தீர்வை கண்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு பல ஆண்டுகளாக விவாதத்திற்கு உள்ளாகி வந்தது. அதை சரி செய்தது இந்த அவையில் தான்,” என அவர் பேசினார்.
ஒரே நாடு, ஒரே வரிக்கான ஜி.எஸ்.டி. மசோதா, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு என பல முக்கிய மசோதாக்கள் இந்த அவையில் நிறைவேற்றப்பட்டன.
தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான நாடாளுமன்றம்

பட மூலாதாரம், Getty Images
2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்தும் பிரதமர் மோதி நினைவு கூர்ந்தார்.
“அப்போது இந்த கட்டிடத்தின் மீது தீவிரவாத தாக்குதல் ஒன்று நடந்தது. அது வெறும் கட்டிடத்தின் மீதான தாக்குதல் அன்று. அது ஜனநாயகத்தின் தாய் மீதான தாக்குதல். அதை இந்த நாடு என்றும் மறக்காது. நாடாளுமன்றத்தையும், அதன் உறுப்பினர்களையும் பாதுகாக்க தங்கள் நெஞ்சில் குண்டுகளை வாங்கி உயிர் நீத்த வீரர்களை இந்த தருணத்தில் தலைவணங்குகிறேன்,” என்று மோதி குறிப்பிட்டார்.
கோவிட் தொற்றிலும் நடந்த அவை
உலகையே உலுக்கிய கோவிட் 19 பெருந்தொற்று காலத்திலும் பல நாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமையை செய்யத் தவறவில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கோவிட் தொற்றின் போது நடந்தது. பல உறுப்பினர்கள் அதில் கலந்து கொண்டு, கோவிட் பெருந்தொற்றில் இருந்து இந்தியா மீண்டு வர தங்கள் ஜனநாயக கடமைகளை ஆற்றினர்.
சந்திரயான் 3 வெற்றி

பட மூலாதாரம், Getty Images
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள லேண்டரை அனுப்பிய இந்தியாவின் சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி குறித்தும் மோதி பேசினார்.
“சந்திரயான் 3 வெற்றியின் மூலம் இந்தியா மட்டுமின்றி, உலகமே பெருமிதம் அடைந்துள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப வல்லமை கொண்டு 140 கோடி இந்தியர்கள் எப்படி பயனடைய முடியும் என்பதற்கு இந்த வெற்றி எடுத்துக்காட்டாக உள்ளது. சந்திரயான் 3 திட்டத்தை வெற்றி பெறச் செய்த விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுக்கள்,” என்றார் அவர்.
ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றி

பட மூலாதாரம், Getty Images
டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு குறித்தும், இது ஆப்பிரிக்க யூனியனை புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டது குறித்து பிரதமர் மோதி தனது உரையில் குறிப்பிட்டார்.
“ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை பொறுப்பு ஏற்ற போது, ஆப்பிரிக்க யூனியனுக்கு உறுப்பினர் அந்தஸ்து கிடைத்தது பெருமையாக உள்ளது. அந்த அறிவிப்பை வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான தருணத்தை என்னால் மறக்க முடியாது.”
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com