Press "Enter" to skip to content

அதிமுக – பா.ஜ.க. கூட்டணி முறிந்ததா? ஜெயக்குமார் பேச்சுக்கு பா.ஜ.க. பதிலடி எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

அதிமுக – பா.ஜ.க. கூட்டணி இடையே கடந்த 2 ஆண்டுகளாகவே நீடித்து வந்த உரசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிமுக சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பா.ஜ.க.வுடன் இப்போதைக்கு கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். அத்துடன், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்தும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இதனால், அதிமுக – பா.ஜ.க. கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதா அல்லது இது ஒரு தற்காலிக முடிவு மட்டும்தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜெயக்குமாரின் பேச்சுக்கு பா.ஜ.க. சார்பில் இன்னும் பதிலேதும் வரவில்லை. அதிமுகவுக்கு பா.ஜ.க. எந்த வகையில் பதிலடி கொடுக்கும் என்று தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்ப்படுகிறது.

அண்ணாமலை தலைவரானது முதலே உரசல்

கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க. மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதலே அதிமுகவுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லை. பா.ஜ.க.வை தமிழ்நாட்டில் வளர்த்தெடுக்கப் போவதாகக் கூறி அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் கூட்டணியில் மட்டுமின்றி, சொந்தக் கட்சியிலே கூட சலசலப்புகளை கிளப்பியது. தமிழ்நாடு பா.ஜ.க.வே இரு அணிகளாக பிரிந்து செயல்படுவதாகவும், அண்ணாமலைக்கு எதிராக ஒரு பிரிவினர் மும்முரமாக செயல்படுவதாகவும் செய்திகள் வெளியாயின. அக்கட்சியில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம், நிர்மல் குமார் ஆகிய நிர்வாகிகள் அண்ணாமலை மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் அதனை உறுதிப்படுத்தின.

ஒரு கட்டத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் பதவியில் இருந்தே அண்ணாமலை நீக்கப்படலாம் என்று கூட செய்திகள் வந்தன. ஆனால், இரு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்ணாமலையை வெகுவாக பாராட்டியதன் மூலம் அவரது செயல்பாடுகளை கட்சி மேலிடம் அங்கீகரிப்பதை உறுதிப்படுத்திவிட்டார். அதன் பின்னர் அண்ணாமலையின் செயல்பாடுகள் இன்னும் தீவிரமாயின. அவரது பேச்சுகள் பலவும் மாநிலத்தில் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள அதிமுகவை சீண்டும் வகையில் இருந்தன.

கடந்த ஜூன் மாதம் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மறைமுகமாக சீண்டும் வகையில் கருத்துகளை முன்வைத்திருந்தார். இதற்கு அதிமுக கடுமையாக எதிர்வினையாற்றியது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சியை அடிக்கடி சீண்டுவது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் திமுக – பா.ஜ.க. இடையே தான் அரசியல் நடக்கிறது என்பதாக அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் பேசி வந்தது அதிமுகவை அதிருப்திக்குள்ளாக்கியது. இதனால், அண்ணாமலைக்கு எதிராக அவ்வப்போது அதிமுக மூத்த தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர். ‘அரசியல் முதிர்ச்சியற்றவர், தலைமைப் பொறுப்புக்கு தகுதி இல்லாதவர்’ என்பன போன்ற பல்வேறு விமர்சனங்களை அவர்கள் முன்வைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் அரசியல் ஆசானான அண்ணா மீதே பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தது அதிமுக – பா.ஜ.க. கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

அதிமுக vs பா.ஜ.க.

அண்ணா பற்றி அண்ணாமலை பேசியது என்ன?

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றுப் பேசியபோது, முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது அவர், “1956-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் ஆலய வளாகத்தில் 10 நாட்கள் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாட்டின் 4-ம் நாளன்று, மணிமேகலை என்ற குழந்தை தமிழ் சங்க இலக்கிய பாடல் ஒன்றை பாடியது. உடனே மைக்கை எடுத்துப் பேசிய அண்ணாதுரை, “ஓ, பாடல் நன்றாக இருந்தது. இதுவே முந்தைய காலத்தில் நடந்திருந்தால், உமையவளின் பாலை குடித்துத்தான் இந்த குழந்தை பாடியதாக கதை கட்டியிருப்பார்கள். இப்போதோ பகுத்தறிவு வந்துவிட்டது. யாரும் அதனை நம்ப மாட்டார்கள்” என்று கூறினார்.

ஆறாவது நாள் பேச வேண்டிய முத்துராமலிங்க தேவர் ஐந்தாவது நாள், அதாவது மறுநாளே மேடையேறினார். அப்போது பேசிய அவர், ‘சிவபுராணம் இயற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு வந்து உமயவளை தப்பாக பேசியது யார் என கேள்வி எழுப்பினார். எல்லோரும் நெளிகிறார்கள். அண்ணாதுரையை மதுரையில் ஒளித்துவைத்திருக்கிறார்கள். அவரால் வெளியே செல்ல முடியவில்லை. முத்துராமலிங்கத் தேவர் உக்கிரமாகப் பேசினார். கடவுளை நம்ப மறுப்பவர்கள், நம்புபவர்களைப் பற்றிப் பேசக்கூடாது. மதுரை மீனாட்சி அம்மனுக்கு இதுவரை பாலில்தான் அபிஷேகம் நடந்திருக்கிறது. மீண்டும் ஒருமுறை அவ்வாறு பேசினால், அம்மனுக்கு ரத்தத்தில் அபிஷேகம் நடக்கும் எனக் குறிப்பிட்டார். இதையடுத்து, முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அண்ணாதுரை, பி.டி.ராஜன் ஆகியோர் வந்தனர்” என்று அண்ணாமலை பேசியிருந்தார்.

அதிமுக vs பா.ஜ.க.

பட மூலாதாரம், FACEBOOK/ANNAMALAI

அண்ணாமலை பேச்சுக்கு அதிமுக கடும் எதிர்வினை

அதிமுக – பா.ஜ.க. உறவு ஏற்கனவே விரிசல் கண்டிருந்த நிலையில், அண்ணா பற்றிய அண்ணாமலையின் பேச்சால் கோபமடைந்த அதிமுக மூத்த தலைவர்கள் கடுமையாக எதிர்வினையாற்றினர். அண்ணாமலை பற்றி கொந்தளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “இறந்த தலைவர் பற்றி கேலி, கிண்டல் பேசும் யாரும் தமிழ்நாட்டைப் பொருத்தவரை இழிபிறவிதான். அதனை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கலைஞர் உயிரோடு இருந்த வரை அவரை கடுமையாக விமர்சித்து வந்திருந்தாலும் கூட, அவர் மறைந்த பிறகு மருத்துவர் கலைஞர் என்றே குறிப்பிடுகிறோம். மதிக்கத் தெரியாதவர்களை தமிழ்ச் சமுதாயம் கீழே வீழ்த்திவிடும்.” என்றார்.

மற்றொரு அதிமுக மூத்த தலைவர் சி.வி.சண்முகமோ, “அண்ணாமலை திட்டமிட்டு பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தியிருக்கிறார். அவருக்கு அண்ணாவைப் பற்றி என்ன தெரியும்? அரசியல் பற்றி என்ன தெரியும்? அவரது எண்ணம், செயலை வைத்துப் பார்க்கும் போது கூட்டணியில் இருந்து கொண்டே எங்களை விமர்சிப்பது எங்களது தலைவர்களை விமர்சிப்பதை பார்த்தால் அவருக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது.” என்று குற்றம்சாட்டினார். ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவின் பிற தலைவர்களும் அண்ணாமலையை கண்டித்ததுடன், அண்ணா பற்றிய பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதிமுக vs பா.ஜ.க.

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை – ஜெயக்குமார் அறிவிப்பு

அதிமுக – பா.ஜ.க. முரண் முற்றிக் கொண்டிருந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார். அவர் பேசுகையில், “தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் குறித்து பாஜக மேலிடத்தில் புகாரளித்துள்ளோம். பல முறை எச்சரித்தும் அண்ணாமலை அலட்சியப்படுத்துகிறார். பாஜகவுடன் தற்போது அதிமுக கூட்டணியில் இல்லை. இது தான் அதிமுக கட்சி நிலைப்பாடு. கூட்டணி முறிவால் அதிமுகவுக்கு இழப்பு எதுவும் இல்லை. தனித்து நின்றால் நோட்டாவை கூட தாண்ட முடியாதவர் அண்ணாமலை. அதிமுகவுக்குள் ஒரு குழப்பமும் இல்லை. தேர்தல் வரும் போது தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், “இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்களை பற்றி விமர்சனம் செய்தால் கடுமையான அளவுக்கு விமர்சனங்களை சந்திக்க நேரிடும். அண்ணாமலை கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பாஜக உடனான கூட்டணி குறித்து தேர்தலின் போது முடிவு செய்வோம். அண்ணாமலையை தேசிய தலைமை தான் இயக்குகிறது. எங்களை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். அண்ணாமலை தனித்துப்போட்டியில் நோட்டாவுக்கு கீழ் தான் வாங்குவார்” என்று கூறினார்.

அதிமுக vs பா.ஜ.க.

அதிமுகவுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுக்குமா?

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் அறிவித்திருந்தாலும் கூட, அக்கட்சியுடன் கூட்டணி சேர்வது குறித்து நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் முடிவு செய்வோம் என்றும் கூறியிருக்கிறார். இதன் மூலம் பா.ஜ.க.விடம் இருந்து முழுமையாக விலகிவிடவில்லை என்பதையே அவரது பேச்சு உணர்த்துகிறது. அதிமுகவைப் பொருத்தவரை, பா.ஜ.க மேலிடத்துடன் நல்லுறவைப் பராமரித்தாலும் தமிழ்நாட்டில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடனான உறவுதான் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. அதேவேளையில், பா.ஜ.க. தரப்பில் இருந்தும் இன்னும் எந்தவொரு எதிர்வினையும் வரவில்லை.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ‘இந்தியா’ என்ற பெயரில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள் கூட்டணியை சமாளிக்க பா.ஜ.க.வும் தயாராகி வருகிறது. இந்த வேளையில், கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியான அதிமுகவை இழக்க அக்கட்சி விரும்பாது என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஆகவே, அதிமுகவுக்கு பா.ஜ.க.வின் பதிலடி எப்படி இருக்கும்? என்பதை இப்போதே அறுதியிட்டுக் கூற முடியாது என்பது அவர்களின் கூற்று-

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »