Press "Enter" to skip to content

இந்தியா – கனடா பதற்றம்: இஸ்ரேல் போல ரா செயல்பட்டதா? – சர்வதேச ஊடகங்கள் எழுதியது என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியாவுக்கும் கனடாவிற்கும் இடையிலான பரஸ்பர கசப்பு இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது.

சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதலில் குற்றம் சாட்டினார். அதன் பின்னர் இரு நாடுகளும் ஒன்று மற்றதன் தூதரக அதிகாரிகளை நாட்டிலிருந்து வெளியேற்றின.

இந்தியா-கனடா உறவில் கசப்பு அதிகரித்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஜஸ்டின் ட்ரூடோ, “இந்திய அரசு இந்த விஷயத்தில் தீவிரம் காட்ட வேண்டும். நாங்கள் யாரையும் தூண்டிவிட விரும்பவில்லை,” என்றார்.

ஜஸ்டின் ட்ரூடோ விரும்புவது என்ன?

எந்தவொரு வளர்ந்த நாடும் அல்லது ஜி7 நாடுகளும் இதற்கு முன் இந்தியா மீது இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன்வைத்ததில்லை என்பதால் இந்தக் கேள்வி முக்கியமானதாகிறது.

கன்மேலாய்வுடிவ் கட்சித் தலைவர் பியர் பொலிவியேரும் இந்தக் குற்றச்சாட்டு குறித்து ட்ரூடோவிடம் கூடுதல் தகவல்களைக் கேட்டுள்ளார். பிரதமர் இதுவரை எந்த ஆதாரங்களையும் வழங்கவில்லை. மேலும் உண்மைகளை நாம் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

ட்ரூடோ இப்படி ஒரு நடவடிக்கை எடுத்ததன் அர்த்தம் என்ன என்பதை இப்போது நாம் புரிந்துகொள்ள முயல்வோம். இந்தியா-கனடா உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசலை இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் எவ்வாறு பார்க்கின்றன என்பதையும் அறிந்துகொள்வோம்.

ட்ரூடோவின் நோக்கம்

இந்தியா கனடா உறவில் விரிசல்

பட மூலாதாரம், Reuters

ட்ரூடோவின் கருத்துகள் இந்தியா-கனடா உறவை மோசமாக்கியுள்ளன என்று தலையங்கம் கூறுகிறது. கனடாவுடன் உளவுத்துறை பகிர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள ‘ஃபைவ் ஐஸ்’ குழுவின் உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளன.

இந்தியா குறித்த ட்ரூடோவின் கருத்துகளுக்கு கனடிய நாடாளுமன்றத்தில் அவரது அரசியல் எதிரிகளின் ஆதரவும் கிடைத்தது. 2025 தேர்தலில் இந்த அரசு ஆட்சியில் இருந்து வெளியேறினால், இந்த விவகாரம் கிடப்பில் போடப்படும் வாய்ப்பும் உள்ளது.

பாகிஸ்தானை பொருத்தமட்டில், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், பொதுவெளியில் நேருக்கு நேர் மோதுவதும் சகஜம். ஆனால் இங்கு நாம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் வசிக்கும், நேட்டோ உறுப்பு நாடான கனடாவை பற்றிப் பேசுகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தகராறு அதிகரித்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இப்படிப்பட்ட இக்கட்டான தருணத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை சிந்தித்து எடுக்க வேண்டும் என்று தி இந்துவின் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக நிரூபிப்பது அல்லது அதைச் செய்வதில் தோல்வி அடைந்ததாக ஏற்றுக்கொள்வதுதான் ட்ரூடோவின் முன்னுரிமையாக இருக்கும்.

இந்தியா கனடா உறவில் விரிசல்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத காலிஸ்தானி குழுக்களின் நடவடிக்கைகளுக்கு கனடாவின் நிலம் பயன்படுத்தப்படுவதாக இந்தியா கூறி வருகிறது. இது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இது 1980களில் தொடங்கி இந்திய தூதர்கள் மற்றும் இந்திய சமூக மையங்கள் மீதான தாக்குதல்களுடன் சமீப காலம் வரை தொடர்கிறது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் காலிஸ்தான் புலிப்படையின் தலைவராக இருந்தார். அவர் இந்தியாவில் தேடப்பட்டு வந்தார். 1990களில் பஞ்சாபில் நடந்த தீவிரவாத நடவடிக்கைகளின் பின்னணியில் நிஜ்ஜார் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. நிஜ்ஜோர் மீது இன்டர்போல், ரெட் கார்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவர் கனடாவின் குடியுரிமை பெற்றவர்.

கனடாவுடனான தனது உறவை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதை இப்போது இந்தியாதான் முடிவு செய்யவேண்டும்.1973ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக 2015ஆம் ஆண்டில்தான் இந்தியப் பிரதமர் இருதரப்புப் பயணமாக கனடா சென்றார். பிரதமர் மோதிக்கு முன்னதாக முன்னாள் பிரதமர் மருத்துவர் மன்மோகன் சிங்கும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள ஒருமுறை கனடா சென்றிருந்தார்.

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோதிக்கும், ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் இடையிலான சந்திப்பு சுமூகமாக இருக்கவில்லை. இதைத் தொடர்ந்து, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை கனடா உடனடியாக நிறுத்தியது.

இவ்வாறான நிலையில் ட்ரூடோவின் அறிக்கையால் இரு நாடுகளுக்கும் இடையிலான தூதாண்மை உறவுகள் ஸ்தம்பித்துள்ளன.

இந்தியா கனடா உறவில் விரிசல்

பட மூலாதாரம், FB/VIRSA SINGH VALTOHA

பிரிவினைவாதிகள் தொடர்பாக கனடாவின் அதிர்ச்சிகரமான கூற்று: தி நியூயார்க் டைம்ஸ்

இந்தியா-கனடா உறவு மோசமடைந்திருப்பது குறித்து நியூயார்க் டைம்ஸ் நீண்ட செய்தி வெளியிட்டுள்ளது.

கனடாவின் குற்றச்சாட்டுகள் பீரங்கி குண்டுகள் போன்றவை என இந்த அறிக்கையில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சவால் விடுக்க தன்னுடன் ஒன்றிணையுமாறு, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நட்பு நாடுகளை கனடா கேட்டுக்கொண்டுள்ளது. அதே நேரம் மேற்கத்திய நாடுகள் குறிப்பாக கனடா, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீக்கிய பிரிவினைவாத அமைப்புகளின் புகலிடமாக மாறியுள்ளது.

நிஜ்ஜார் கொலைக்குப் பின்னால் இந்தியாவின் கை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது இந்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கு தர்மசங்கடமான சூழ்நிலையாக இருக்கும் என்று நியூயார்க் டைம்ஸ் எழுதியுள்ளது. இந்தியாவின் புலனாய்வு அமைப்பான RAW மீது, மற்ற நாடுகளில் கொலைகளைச் செய்ய சதி செய்ததாகக் கடந்த காலங்களில் ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் வழக்கு, மேற்கத்திய நாடுகள் அறிந்துகொள்ளும் விதமாக வெளியான முதல் வழக்கு என்று முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

பஞ்சாபில் மட்டுமே காலிஸ்தான் இயக்கத்திற்கு சிறிதளவு ஆதரவு இருப்பதாக இந்திய அரசு நீண்ட நாட்களாகக் கூறி வருவதாக அந்த செய்தித்தாள் எழுதியுள்ளது. 2020-2021இல் சீக்கிய விவசாயிகள் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது, ஆளும் கட்சித் தலைவர்கள் விவசாயிகளை காலிஸ்தானிகள் என்று நிரூபிக்க முயன்றனர் என்பது வேறு விஷயம்.

பாதுகாப்பு குறித்த கேள்வி

இந்தியா கனடா உறவில் விரிசல்

பட மூலாதாரம், PIB

கனடாவின் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்று தி நியூயார்க் டைம்ஸிடம் பேசிய முன்னாள் இந்திய தூதர் கே.சி.சிங் குறிப்பிட்டார்.

“நிஜ்ஜார் கொலைக்குப் பிறகு இந்தப் பிரச்னை எழும் என்பது தெளிவாகத் தெரிந்தது” என்றார் அவர். இந்த விவகாரத்தில் சீக்கிய அமைப்புகள் இந்திய தூதரக அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி, கனடிய தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

“கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது இந்தியா தொடர்ந்து கோபமாக உள்ளது. அதேநேரம் தனது குடிமக்கள் மற்றும் இறையாண்மை மீது ஆபத்து சூழ்வதாக கனடா கூறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான தூரம் அதிகரித்துள்ளது,” என்று கே.சி.சிங் கூறினார்.

கடந்த 1980களில் காலிஸ்தான் இயக்கம் வன்முறையாக மாறியது, போராளிகளால் பொற்கோயில் கைப்பற்றப்பட்டது மற்றும் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள இந்திரா காந்தி எடுத்த முடிவு போன்றவற்றையும் நியூயார்க் டைம்ஸ் அறிக்கை குறிப்பிடுகிறது.

அதோடு, 1985ஆம் ஆண்டு டொராண்டோவில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைத்ததாக காலிஸ்தானி பிரிவினைவாதிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த விபத்தில் 300 பேர் உயிரிழந்தனர்.

உள்நாட்டு அரசியல் காரணமாக இதுபோன்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலும் சீக்கிய சமூகம் வலுப்பெற்று வருகிறது. நிஜ்ஜாரை நாடு திருப்பி அனுப்புமாறு இந்தியா 2018இல் கோரியிருந்தது.

”இந்தியா இப்போது முன்பு இருந்ததைப் போல் இல்லை. பிரதமர் மோதியின் தலைமையில் நாடு பலம் பெற்றுள்ளது என்பதை கனடிய தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று பஞ்சாப் பாஜக தலைவர் வினீத் ஜோஷி கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியாவின் பொறுப்பு

இந்த ஆய்வில் மிஹிர் ஷர்மா இவ்வாறு எழுதுகிறார்: “இந்தியா மீதான ட்ரூடோவின் குற்றச்சாட்டு பல காரணங்களுக்காக அதிர்ச்சியளிக்கிறது. ஒரு காரணம் என்னவென்றால், நாம் நல்லவர்கள், நமது அரசு இதுபோன்ற எதையும் செய்யாது என்று நம்மில் பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

இந்தியா உண்மையாகவே மேற்கத்திய மண்ணில் அப்படி ஒரு செயலைச் செய்திருந்தால் அது மோதலை மேலும் அதிகரிக்கும். அரசின் கடுமையான அணுகுமுறையை ஆதரிப்பவர்கள்கூட இதை மறுக்க மாட்டார்கள்.

சர்வதேச உறவுகள் விவகாரத்தில் இந்தியாவின் பாரம்பரிய அணுகுமுறையை மாற்ற பிரதமர் மோதி முயல்தாகத் தெரிகிறது. 2019இல் காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, ‘வீட்டில் புகுந்து அடிப்போம்’ என்பது போன்ற விஷயங்களும் பிரசாரம் செய்யப்பட்டன.

அண்டை நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் பயங்கரவாதிகளையே பிரதமர் மோதி குறிப்பிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது வான்வழித் தாக்குதலும் நடத்தப்பட்டது.

இந்த விஷயத்தில் இந்தியா இஸ்ரேலை போன்ற ஒரு நிலையில் இருக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். எல்லோரும் இந்திய புலனாய்வு அமைப்புகளை சந்தேகிப்பார்கள். ஆனால் அதை யாராலும் நிரூபிக்க முடியாது.

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், அது தூதாண்மை மற்றும் உளவுத்துறையின் தோல்வி என்பது தெளிவாகிறது,” என்று வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.

“இந்த விவகாரத்தில் பல விஷயங்கள் இன்னும் தெரியவில்லை. இதில் முக்கியமானது என்னவென்றால், கனடாவின் விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும். அதற்கு இந்திய அரசும் ஒத்துழைக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு பிரதமர் மோதி மீண்டும் தேர்தல் களத்தில் இறங்கும்போது அவரது ஆதரவாளர்கள், ’வலுவடைந்து வரும் இந்தியாவின் பிம்பத்தின் வடிவமாகவே’ இந்த விஷயத்தை கருதுவார்கள்.

வேறொரு நாட்டிற்குச் சென்று உங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களைக் கொல்லும் சக்தி இருப்பது ஒரு விஷயம். ஆனால் உங்கள் நண்பருக்கு அவமானம் ஏற்படாத வகையிலும், நீங்கள் பேசும் மதிப்புகளுக்கு உகந்த வகையிலும் அதைச் செய்வது மற்றொரு விஷயம்,” என்று வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா-கனடா உறவுகள்

இந்தியா கனடா உறவில் விரிசல்

பட மூலாதாரம், EPA

அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிக்கையான ’டைம்’, இந்தியா-கனடா உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகளைப் போல மோதிக்கும் ட்ரூடோவுக்கும் இடையே, முறையான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறாத நிலையில், ஜி-20 மாநாட்டின்போதே இந்தியா-கனடா உறவில் விரிசல் தொடங்கியது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இந்தச் சந்திப்பில் இரு தலைவர்களும் பரஸ்பரம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர்.

அதிக எண்ணிக்கையிலான இந்திய வம்சாவளியினர் வசிக்கும் கனடாவுடனான உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக பலவீனமடைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

“கனடாவில் சீக்கிய தீவிரவாதத்தின் எழுச்சி மற்றும் இந்தியாவின் கவலைகளை நிவர்த்தி செய்யும் முயற்சிகளில் கனடா ஆர்வம் காட்டாதது ஆகிய விஷயங்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை ஆழமான நெருக்கடியில் தள்ளியுள்ளது” என்று வில்சன் சென்டர் திங்க் டேங்கின் தெற்காசியா கழகத்தின் இயக்குனர் மைக்கேல் குகல்மேன் கூறினார்.

இந்தியா - கனடா பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

ட்ரூடோ ஆட்சிக்கு வந்தவுடன், 30 பேர் கொண்ட அமைச்சரவையில் நான்கு சீக்கியர்களை சேர்த்துக் கொண்டபோது, இரு நாடுகளுக்கும் இடையே முதலில் பதற்றம் அதிகரித்தது.

ட்ரூடோ பிரதமரான பிறகு பிரதமர் மோதி ஒருமுறைகூட கனடா செல்லவில்லை. கனடாவில் இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடக்கின்றன. ‘இந்தியாவின் இறப்பு’ மற்றும் ‘காலிஸ்தான்’ போன்ற விஷயங்கள் உருது மொழியில் அங்கு சுவர்களில் எழுதப்பட்டு வருகின்றன.

கடந்த 2018ஆம் ஆண்டு ட்ரூடோ இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அவருடன் ஜஸ்பால் அட்வாலும் இருந்ததாக டைம் அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.

பஞ்சாப் அமைச்சர் ஒருவரின் கொலை முயற்சி வழக்கில் அட்வால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர். ஆனால் சீனாவுக்கு சவால் விடுவதற்காக இரு நாடுகளும் ஒன்றிணைந்தபோது இந்த விஷயம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இந்த ஆண்டு மே மாதத்திற்குள் இரு நாடுகளும் ஆட்டோமொபைல், விவசாயம், தகவல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருந்தன. ஆனால் கடந்த வாரம் கனடா இதை நிராகரித்தது.

காலிஸ்தான் பிரச்னையைத் தீர்க்கும் விஷயத்தில் கனடா, வாக்கு வங்கி அரசியலால் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது என்று ஜூன் மாத தொடக்கத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக டைம் இதழின் அறிக்கை கூறுகிறது.

ஜெய்சங்கர் இதைச் சொன்ன 10 நாட்களுக்குப் பிறகு கனடாவில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சமீபத்திய விவகாரம் கனடாவின் உலகளாவிய நிலையின் மீது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

சீனாவுடனான கனடாவின் உறவு 2019இல் மோசமடைந்தது. 2018ஆம் ஆண்டில் செளதி அரேபியாவில் மனித உரிமை ஆர்வலர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டபோது கனடாவில் இருந்து வலுவான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ட்ரூடோ இந்த பிரச்னையை தனது நட்பு நாடுகளிடமும் எழுப்பினார். ஆனால் இந்த நாடுகள் கனடாவின் கவலைகளைப் புறக்கணித்தன.

ட்ரூடோவுக்கு என்ன வேண்டும்?

இந்தியா கனடா உறவில் விரிசல்

பட மூலாதாரம், PIB

ஜூன் 18ஆம் தேதி நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அதற்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு அதாவது செப்டம்பர் 18ஆம் தேதி, ஒரு ஜனநாயக நாட்டின் தலைவர் மற்றொரு ஜனநாயக நாட்டின் மீது இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைப்பது அசாதாரண சம்பவம் என்று எகனாமிஸ்ட் தனது செய்தியறிக்கையில் எழுதியுள்ளது.

இந்தியாவின் வலதுசாரி ஊடகங்களும், மோதியின் ஆதரவாளர்களும் அரசின் கருத்தை எதிரொலிப்பதாகவும், ட்ரூடோ பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம் சாட்டுவதாகவும் அதில் எழுதப்பட்டுள்ளது.

இது பிரதமர் மோதிக்கு சாதகமாக அமையும் என்றும் அரசு ஆதரவாளர்களால் கூறப்படுகிறது.

“இந்திய அரசு கனடாவில் பயங்கரவாதிகளைக் கொன்றதாகக் கூறி மோதியின் 2024 தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் ஜஸ்டின் ட்ரூடோ,” என்று வலதுசாரி இணையதள ஆசிரியரின் ட்வீட்டை மேற்கோள் காட்டி எகனாமிஸ்ட் எழுதியுள்ளது.

ஜி-20 உச்சி மாநாட்டின்போது மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுடன் மோதி நீண்டநேர சந்திப்புகளை நடந்தினார். ஆனால் ட்ரூடோவுடன் உச்சிமாநாட்டின்போது 10 நிமிட சந்திப்பு மட்டுமே நடத்தப்பட்டது.

சீக்கிய பிரிவினைவாதத்தால் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே நீண்ட காலமாக கசப்புணர்வு நிலவி வருகிறது. பிரிவினைவாதிகளிடம் கனடா மென்மையாக நடந்து கொள்கிறது என்று இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. கனடாவும் பிரிவினைவாத தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாகும். அந்த நாட்டில் நடந்த விமான குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

“கனடாவின் வரலாற்றில் இது மிகவும் ஆபத்தான பயங்கரவாத தாக்குதல்,” என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஆனால் இது சீக்கியர்களுக்கும் கனடாவின் பிற குடிமக்களுக்கும் இடையே இடைவெளியை உருவாக்கவில்லை. கனடாவில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளிலும் சீக்கியர்கள் உள்ளனர்.

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இருந்து லாபம் பெற விரும்புவதால் கனடாவின் முதலீட்டாளர்களுக்கு இந்தியா ஒரு முக்கியமான சந்தை என்று எகனாமிஸ்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் கனடாவை ஆதரிப்பது கடினமாக இருக்கும். இந்த இரு நாடுகளும் சீனாவின் செல்வாக்கை நிறுத்த இந்தியாவின் ஆதரவை விரும்புகின்றன.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இதுவரை இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் கருத்து தெரிவித்துள்ளன.

இஸ்ரேலை போல தோற்றமளிக்க இந்தியா நினைக்கலாம். ஆனால் உலகில் அது ரஷ்யாவை போல பார்க்கப்படாமல் இருக்கவேண்டும் என்று எகனாமிஸ்ட் எழுதியுள்ளது.

உறவுகள் மோசமடையும்

இந்தியா கனடா உறவில் விரிசல்

பட மூலாதாரம், Getty Images

சீக்கிய பிரிவினைவாதியின் கொலை விவகாரத்தில் ’அடி- பதிலடி’ காரணமாக நல்ல வணிக உறவுகள் தடம் புரளக்கூடும் என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நீண்ட காலத்திற்கு முன்பே இந்த இருதரப்பு உறவுகளில் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுவதாக அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.

“இந்த பிரச்னையை எழுப்புவதற்கு ட்ரூடோவுக்கு உள்நாட்டு காரணங்கள் உள்ளன. மேலும் நடப்பு காலிஸ்தான் பிரச்னை இந்தியாவிற்கும் முக்கியமானது,” என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் சர்வதேச உறவுகளின் பேராசிரியர் ஹர்ஷ் பந்த் குறிப்பிட்டதாக அந்தச் செய்தி கூறுகிறது.

“இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமான நிலையில் உள்ளன. இதைத் தவிர்த்திருக்கலாம்,” என்றார் சொசைட்டி ஆஃப் கொள்கை ஸ்டடீஸின் இயக்குனர் சி. உதய் பாஸ்கர்.

”ஜூன் மாதம் கனடாவில் இந்திரா காந்தியின் கொலையை சித்தரிக்கும் வாகன ஊர்தியின் ஊர்வலம் நடத்தப்பட்ட விதம் மற்றும் இந்தியாவின் தரப்பிலிருந்து வலுவான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது ஆகியவை ஒரு தெளிவான சமிக்ஞை,” என்றார் அவர்.

“இது தொடர்பாக கனடா வலுவான பதில் எதையும் தெரிவிக்கவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

“இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த ஒரே ஒரு வழி மட்டுமே இருந்திருக்க முடியும். அது சுதந்திர வர்த்தக ஒப்பந்தம். ஆனால் தற்போது இதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உறவுகளில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரக்கூடிய விஷயம் இனி எதுவும் இல்லை,” என்று பேராசிரியர் ஹர்ஷ் பந்த் தெரிவித்தார்.

இந்தியாவின் 10வது பெரிய வர்த்தக கூட்டாளியாக கனடா 2022இல் இருந்தது.

கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வலுவான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்தியாவிலிருந்து கனடாவிற்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வது அல்லது கனடாவில் இருந்து காகிதம் மற்றும் விவசாய பொருட்களை இறக்குமதி செய்வது போல அவை ஒன்றுக்கொன்று உதவவும் முடியும்,” என்று குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் அமைப்பின் நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பொருட்கள் தேவை என்று அவர் கூறியுள்ளார்.

சீக்கியர்கள் மற்றும் வர்த்தகம் தவிர கல்வியும் இந்தியாவை கனடாவுடன் இணைக்கிறது. கனடாவின் கல்வி நிறுவனங்களில் சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

”சிறிது காலத்திற்கு அல்லது நீண்ட காலத்திற்கு அரசியல் வெப்பநிலை உயர்ந்தாலும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது,” என்று அஜய் ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »