Press "Enter" to skip to content

பாம்பு ஒருவரை கடிக்கும் முன் எப்படி எச்சரிக்கும்? தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

செப்டம்பர் 7ஆம் தேதி, விபுலின் குடும்பத்தினருக்கு மறக்க முடியாத நாளாகத்தான் இருந்தது.

அன்றைய தினம் நள்ளிரவு, குஜராத்தின் சுரேந்திரநகர் பகுதிக்கு உட்பட்ட மஃப்திபாராவில் உள்ள தனது வீட்டில், 17 வயதான சிறுவன் விபுல் வழக்கம்போல் உறங்கிக் கொண்டிருந்தார்.

கோகுலாஷ்டமி கொண்டாட்ட களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கையை யாரோ திடீரென தீண்டுவது போல் உணர்ந்தார்.

ஆனால் விபுல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், அதுகுறித்து அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தூக்கத்தைத் தொடர்ந்தார்.

ஆனால், சில நிமிடங்களுக்குப் பிறகு, விபுலின் படுக்கையில் பாம்பு இருப்பதைக் கண்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்தார்.

உடனே அவர் கூச்சலிட அக்கம்பக்கத்தினர் விபுல் வீட்டில் திரண்டனர். ஆனால் பாம்புக் கடிக்கு ஆளான விபுலை மருத்துவமனையில் சேர்க்க 2:30 மணி முதல் 3 மணி நேரம் ஆனது. ஆகவே அவர் சிகிச்சைப் பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் மழைக்காலத்தில் பாம்புக் கடிக்கு ஆளாகும் சம்வபங்கள் அதிகம். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் பாம்புக் கடிக்கு ஆளாகும் நபர் இறக்கும் வாய்ப்பும் அதிகம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

விவசாயப் பணிகள் அதிகமாக நடைபெறும் மழைக்காலத்தில் தான், பாம்புகளும் அதிகமாக முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே இந்தக் காலத்தில் பாம்புக் கடிக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் நூற்றுக்கணக்கான பாம்பு வகைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் நான்கு மட்டுமே ஆட்களைக் கொல்லும் அளவுக்கு கொடிய நஞ்சு கொண்டவையாக உள்ளன.

பாம்புக் கடிக்கு ஆளாவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களின் உயிரைக் காப்பாற்றி விடலாம். அதேநேரம், மனிதர்கள் மற்றும் பாம்புகளின் நடவடிக்கைகள் குறித்து முறையாக அறிந்துகொள்வதன் மூலம் பாம்புக் கடிக்கு ஆளாவதில் இருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

பாம்புகள்

பட மூலாதாரம், Getty Images

நச்சுப் பாம்புகளை அடையாளம் காண்பது எப்படி?

நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகிய இந்த நான்கு வகை பாம்புகள்தான், இந்தியாவில் பாம்புக்கடியால் நிகழும் பெரும்பாலான மரணங்களுக்குக் காரணமாக உள்ளன.

கட்டுவிரியன்

இந்தியாவில் உள்ள கொடிய விஷமுள்ள நான்கு வகையான பாம்புகளில் கட்டுவிரியனும் ஒன்று. இந்த வகை பாம்புகளின் 10 மேற்பட்ட கிளை இனங்கள் தெற்காசிய நாடுகளில் உள்ளன. அவற்றில் மூன்று இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.

பொதுவாக காடு போன்ற அடந்த பகுதிகளில் காணப்படும் கட்டுவிரியன் பாம்பின் உடல் கருநீலத்தில் இருக்கும். அத்துடன் அதன் உடம்பில் வெள்ளை நிற கோடுகளும் காணப்படும். இந்த செதில்களின் அளவு வால் பகுதியில் இருந்து தலைப் பகுதிக்குச் செல்லச் செல்ல குறைந்து காணப்படும்.

பொதுவாக ஒன்று முதல் ஒன்றரை மீட்டர் நீளம் கொண்ட இவை, இரவாடிப் (இரவு நேரத்தில் உணவு தேடுபவை) பாம்பு என்று அழைக்கப்படுகிறது. இவை உணவு மற்றும் தங்குமிடம் தேடி மனிதர்களின் வசிப்பிடங்களுக்குள் நுழைவது அடிக்கடி நடக்கிறது.

கண்ணாடி விரியன்

பாம்புகள்

பட மூலாதாரம், Getty Images

பார்ப்பதற்கு மலைப்பாம்பு போல் இருப்பதால், கண்ணாடி விரியனை மக்கள் தவறாகப் புரிந்துகொள்கின்றனர்.

ஆனால், இந்த வகை பாம்பின் உடம்பில் சங்கிலி போன்று இருக்கும் கோடுகள், மலைப்பாம்புகளில் இருந்து இவற்றை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

பச்சை, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறங்களில் தோற்றமளிக்கும் இந்த வகை பாம்புகள், தவளையைப் போன்ற வாயைக் கொண்டவை மற்றும் கோழியைப் போல குரல் எழுப்பும் தன்மை கொண்டவை.

பெண் பாம்புகள் முட்டைகளைத் தனது வயிற்றுக்குள் அடைகாப்பதுடன், குஞ்சு பொரித்தவுடன் அவற்றை வெளியே எடுப்பது கண்ணாடி விரியன் வகை பாம்புகளின் மற்றொரு சிறப்பு இயல்பு.

சுருட்டை விரியன்

பாம்புகள்

பட மூலாதாரம், SUBAGUNAM KANNAN

இந்தியாவில் பரவலாக எல்லா இடங்களிலும் இந்த வகைப் பாம்புகள் காணப்படுகின்றன. வெளிர் மஞ்சள், பழுப்பு மற்றும் மணல் போன்ற நிறத்தில் காணப்படும் இந்தப் பாம்பின் முதுகில் வெண்மையான கோடுகள் உள்ளன.

அளவில் சிறியதாக காணப்பட்டாலும் இதன் விஷம் கொடியது.

இந்தியாவில் பாம்புக் கடியால் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை இந்த வகைப் பாம்புகளால் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

நாகப் பாம்பு

பாம்புகள்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் காணப்படும் நாகப் பாம்புகள் ஆசிய நாகம் என்று அழைக்கப்படுகின்றன.

அடர் பழுப்பு, கருப்பு அல்லது அடர் பச்சை நிறத்தில் இந்தப் பாம்புகள் காணப்படும். இந்தியாவில் உள்ள கொடிய நஞ்சு கொண்ட நான்கு வகை பாம்புகளில் நாகப்பாம்பும் ஒன்று. நாகப் பாம்பை வழிப்படும் வழக்கம் இந்து மதத்தில் உள்ளது.

பாம்பு எப்போது கடிக்கிறது?

காந்தி நகரைச் சேர்ந்த தர்மேந்திர திரிவேதி என்பவர் பாம்புகளை மீட்பதில் வல்லவர். குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் நுழைந்தால் அவற்றை மீட்டு பாதுகாப்பான இடங்களில் விடுவதில் கைத்தேர்ந்தவர். கடந்த 38 ஆண்டுகளாக பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

“பாம்புகளைப் பார்க்க நேர்ந்தால் உடனே நாம் பயப்படக்கூடாது. மாறாக அவற்றின் நடவடிக்கைகள் குறித்த கவனமும், விழிப்புணர்வும் நமக்கு இருந்தால் பாம்பு கடிக்கு ஆளாகும் அபாயமும் குறையும்,” என்கிறார் அவர்.

கொடிய விஷம் கொண்ட பாம்புகள் இந்தியா

பட மூலாதாரம், DHARMENDRA TRIVEDI

“உணவுக்காக வேட்டையாடும் ஆயுதமாக நஞ்சு இருப்பதால், பாம்புகள் அவற்றை மிகவும் கவனமாகத்தான் பயன்படுத்துகின்றன. தப்பிக்க வேறு வழியில்லாத நிலையில்தான் ஒரு பாம்பு மனிதனைக் கடிக்கிறது. எனவே பாம்பைக் கண்டால் பதற்றத்தில் அதை விரட்ட முயலக்கூடாது,” என்று அவர் கூறுகிறார்.

பாம்பைக் கண்டவுடன் அச்சத்தில் பதறிச் செயல்படுவதைத் தவிர்த்து, அதற்கு இடையூறு விளைவிக்காத வகையில் சில நேரத்திற்கு அமைதி காக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் ஆபத்துணர்வு ஏதுமின்றி அமைதியாக பாம்பு அங்கிருந்து விலகிச் சென்றுவிடக்கூடும் என்றும் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

பாம்புக்கடி சம்பவங்கள் கிராமங்களில் அதிகம் நிகழ்வது ஏன்?

பெரும்பாலான பாம்புக்கடி சம்பவங்கள் கிராமப்புறங்களில் நிகழ்வதாகக் கூறுகிறார் ஜெய்ப்பூரை சேர்ந்த பாம்பு மீட்பர் விவேக் சர்மா.

பாம்புகளின் நடவடிக்கை பற்றிப் பேசும்போது, “இது ஏன் என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பாம்புக்கடி நிகழ்வுகள் பொதுவாக வீட்டின் இருண்ட அறைகளில் அதாவது இருட்டாகவோ அல்லது வெளிச்சம் குறைவாகவோ இருக்கும் இடங்களில்தான் ஏற்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.

எடுத்துக்காட்டாக சமையலறை, படுக்கையறை, தானியங்கள் சேமிப்பு அறை போன்ற வெளிச்சம் குறைந்த இடங்களில் பாம்புகள் அதிகம் தென்படுகின்றன. இத்தகைய இடங்களில் எலிகள் போன்ற பாம்புகளுக்கு விருப்பமான இரை உயிரினங்கள் இருப்பதால் அவற்றைப் பிடிக்க அவை அங்கு வருகின்றன,” என்று விவேக் சர்மா கூறுகிறார்.

“பாம்புகளுக்கு ஒளிந்துகொள்ள இருள் சூழ்ந்த இடங்கள் தேவைப்படுகின்றன. அப்படி அவை ஒளிந்துகொள்வதால், வீட்டின் ஓர் அறையில் இருந்து மற்றோர் அறைக்கு இடம்பெயரும்போது பொதுவாக அவை நம் கண்களில் படுவதில்லை,” என்றும் விவேக் சர்மா கூறுகிறார்.

கடிக்கும் முன்பு எச்சரிக்கும் பாம்புகள்

பாம்புகள்

பட மூலாதாரம், Getty Images

சாதாரண வகை பாம்புகளைத் தவிர, நஞ்சுள்ள பாம்புகள் மனிதர்களைக் கடிப்பதற்கு முன் எச்சரிக்கை விடுக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“கட்டுவிரியன் பாம்பு ஒருவரை எப்போது கடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் நாகப்பாம்பு, சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் மூன்றும் கடிக்கும் முன் எச்சரிக்கின்றன.

தனது நாக்கை வெளியே நீட்டியப்படி சீறுவதும், உடம்பில் உள்ள செதில்களைத் தரையில் தேய்த்து ஒலி எழுப்புவதும் பாம்பு ஒருவரை கடிப்பதற்கு ஆயதமாகிவிட்டது என்பதற்கான எச்சரிக்கைகள்.

பாம்புகளின் இந்த எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்வதன் மூலம் ஒருவர் பாம்புக் கடியிலிருந்து தப்பித்து உயிரைக் காப்பாற்றி கொள்ளலாம்,” என்கிறார் தர்மேந்திர திரிவேதி.

மேலும், “கட்டுவிரியன் பொதுவாக இரவில் பயணப்படும் தன்மை கொண்டது. மாலைப் பொழுது முதல் விடியற்காலை வரை இவை சுற்றித் திரிவதால், இந்த வகை பாம்புகளால் நிகழும் பாம்புக்கடி சம்பவங்கள் இரவு நேரங்களில் நிகழ்கின்றன.

மற்ற பாம்புகள் பெரும்பாலும் வயல்வெளிகளிலும், கட்டுமான தளங்களிலும் தென்படுகின்றன. இவை சாம்பல், பழுப்பு நிறத்தில் இருப்பதால், இரைக்கு அவற்றின் இருப்பு தெரியாதபடி பாம்புகளால் இந்த இடங்களில் மறைந்திருக்க முடியும்,” என்கிறார் அவர்.

பாம்பு கடித்த பின் உடலில் என்ன நடக்கும்?

கொடிய விஷம் கொண்ட  பாம்புகள் இந்தியா

பட மூலாதாரம், HEMANG DOSHI

ஒருவரை பாம்பு கடித்த பின் அவரது உடலில் என்ன நடக்கும் என்பதை விளக்குகிறார் மருத்துவர் ஹேமங் தோஷி.

“கருநாகத்தின் நஞ்சு நரம்பியல் நஞ்சு வகையைச் சேர்ந்தது. ஆனால் கண்ணாடி விரியனின் நஞ்சு குருதிமண்டல நச்சு (haemotoxic) வகையைச் சேர்ந்தது.”

எனவே, “நரம்பியல் நஞ்சு வகை பாம்பு ஒருவரைக் கடித்தால், அதன் நச்சு அவரின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. மேலும் பக்கவாதம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

இதுவே குருதிமண்டல நச்சு ஒருவரின் ரத்தத்தில் கலந்து ரத்த நாளங்களை உடைத்து உள் ரத்தப்போக்கை ஏற்படுத்துகிறது,” என்கிறார் ஹேமங் தோஷி.

“பாம்பு கடித்த 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு நஞ்சின் விளைவுகள் உடலில் தெரியத் தொடங்கும். 30-45 நிமிடங்களுக்குள் நஞ்சின் தீவிரம் அதிகபட்ச நிலையை அடையும்.

ஆனால், பாம்பு கடித்தால் அதன் அறிகுறிகள் தோன்ற இரண்டு முதல் இரண்டரை மணிநேரம் ஆகும். மேலும் நான்கு முதல் ஆறு மணிநேரத்தில் நஞ்சின் தீவிரம் உச்சத்தை எட்டும். அறிகுறிகள் உடனடியாகத் தோன்றாவிட்டாலும், பாம்பு கடித்த இடத்தில் மட்டும் அதிக வலி இருக்கும்,” என்று விவரிக்கிறார் ஹேமங் தோஷி.

பாம்புகள்

பட மூலாதாரம், Getty Images

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

பாம்பு கடித்த இடத்தை சோப்பு நீரால் கழுவ வேண்டும்.

உடனடியாக எம்.டி. பட்டம் பெற்ற மருத்துவர் அல்லது அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

பாம்பு கடித்த நபரின் உடலை அசைக்க கூடாது. இதனால் நஞ்சு உடம்பில் வேகமாக பரவும்.

பாம்பு கடித்த பகுதியை துணியால் இறுக்கமாகக் கட்டக்கூடாது. இதன் விளைவாக ரத்த ஓட்டம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, அந்த பகுதியையோ, உறுப்பையோ துண்டிக்க வேண்டி வரலாம்.

பாம்பு கடித்த பகுதியைச் சுற்றி இருக்கும் ஆபரணங்களை உடனடியாக கழற்ற வேண்டும்.

பாம்புக் கடிக்கு ஆளாகும் நபரின் உயிரை காப்பாற்ற முடியுமா?

கொடிய விஷம் கொண்ட  பாம்புகள் இந்தியா

பட மூலாதாரம், GETTY IMAGES

பாம்புக் கடியால் உயிரிழந்த விபுலின் சகோதரர் சாகர் கோலி கூறும்போது, ​​“எனது சகோதரரை நள்ளிரவு 12 -12.30 மணியளவில் பாம்பு கடித்துவிட்டது. ஆனால் அவரை பாம்பு கடித்தது ஒரு மணிநேரத்துக்கு பிறகுதான் எங்களுக்குத் தெரிய வந்தது.

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. நாங்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல இரண்டரை முதல் மூன்று மணி நேரம் ஆனது. ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் அவரது உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்,” என்று கண்ணீர் மல்க கூறினார் சாகர் கோலி.

குஜராத்தில் உள்ள கைலாஸ்நகர் கிராமத்தைச் சேர்ந்த லாலாபாய் பாட்டியா தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.

“என் மருமகன் காஞ்சி பாட்டியாவுக்கு 20 வயது இருக்கும். அவரது தந்தையுடன் சேர்ந்து மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடைத் தளத்தில் மறைந்திருந்த பாம்பு அவரைக் கடித்தது.

தனக்கு பாம்பு கடித்ததை உடனடியாக உணர்ந்த அவரை, முடிந்தவரை விரைவாக மருத்துவமனையில் அனுமதித்தோம். மருத்துவமனையை அடைய 10 கி.மீ. தொலைவு இருந்தபோது அவர் சுயநினைவை இழந்தார். இருப்பினும் உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால், ஐந்து நாட்களிலேயே குணமடைந்தார்,” என்று கூறினார் லாலாபாய் பாட்டியா.

“இருப்பினும், மருத்துவமனைக்கு விரைந்து கொண்டிருந்தபோது அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தோம். அந்தத் தவறை நாங்கள் செய்திருக்கக்கூடாது. ஆனால் இப்போது அவர் நலமுடன் இருக்கிறார்,” என்று கண்ணீர் ததும்ப அவர் கூறினார்.

பாம்பு கடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பாம்புகள்

பட மூலாதாரம், Getty Images

“வீட்டின் வெளியில், முற்றத்தில் தூங்குபவர்கள் கொசுவலை கட்டிக்கொண்டு தூங்க வேண்டும். இது கொசுக்களிடம் இருந்து உங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உங்கள் படுக்கைக்குள் பாம்பு வராமல் காக்கவும் செய்யும்,” என்று அறிவுறுத்துகிறார் விவேக் சர்மா.

மேலும், “வீட்டின் இருட்டு அறைக்குள் செல்வதற்கு முன் ஒரு விளக்கை எடுத்து அதை ஒளிரவிட வேண்டும். முக்கியமாக அறையின் ஒரு மூலையை அடைவதற்கு முன் அந்த இடத்தை விளக்கைக் கொண்டு கவனமாகப் பார்க்க வேண்டும்.

அங்கு எதுவும் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பிறகு, முன்னெச்சரிக்கையாக கையில் துணியைத் கட்டிக் கொண்டு அந்த இடத்தில் இருந்து பொருட்களை எடுக்கவோ, பொருட்களை வைக்கவோ வேண்டும்,” எனவும் விவேக் சர்மா அறிவுறுத்துகிறார்.

இந்தியாவில் பாம்புக்கடியின் நிலை என்ன?

கொடிய விஷம் கொண்ட  பாம்புகள் இந்தியா

பட மூலாதாரம், GETTY IMAGES

மும்பையைச் சேர்ந்த பிரியங்கா கதம், உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பாம்புக்கடி தொடர்பான பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவர், SHE India எனப்படும் பாம்புக்கடி சிகிச்சை மற்றும் கல்வி இந்தியாவின் நிறுவன உறுப்பினராகப் பணியாற்றுகிறார்.

அவர் கூறும்போது, “ஒருவருக்கு பாம்பு கடித்தால் உடனே அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால் இங்கு துரதிஷ்டவசமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த சிகிச்சைக்குப் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள், பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் நஞ்சுமுறிவு மருந்துகள் இல்லாததால், பாம்புக்கடிக்கு ஆளாவோரை தொலைதூர மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

இந்தப் பயணத்தில் அவர்களின் மதிப்புமிக்க நேரம் செலவாகிவிடுவது, சமயத்தில் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக அமைந்து விடுகிறது,” என்று கூறுகிறார் பிரியங்கா கதம்.

அவர் மேலும் கூறும்போது, “தேசிய சுகாதார திட்டத்தில் பாம்புக் கடிக்கான சிகிச்சையைச் சேர்க்க வேண்டும். இதனால் சுகாதார மையங்களுக்கு கூடுதல் நிதி கிடைக்கும். பாம்புக் கடி சிகிச்சைக்கு சிறப்பு சிகிச்சையாளர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் அளிக்கலாம்.

பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் பாம்புக்கடி குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்,” என்கிறார் பிரியங்கா.

இதுபோன்ற நடவடிக்கைகள் பாம்புக்கடி பற்றிய மக்களின் மனப்பான்மையை மாற்றும். அத்துடன் இதுகுறித்த மூடநம்பிக்கைகளையும் குறைக்க உதவும். இதன் விளைவாக, பாம்பு கடித்தால் அதற்கான சிகிச்சைக்காக மக்கள் நவீன மருத்துவத்தை நாடுவார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »