பட மூலாதாரம், Getty Images
இந்தியாவை சீண்டி பார்த்து, பிரச்னைகள் ஏற்படுத்த வேண்டும் என்பது கனடாவின் நோக்கமல்ல என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் நிகழ்ந்த சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் மாதம் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கனடாவில் செய்தியாளார்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
“வளரும் முக்கியத்துவம் கொண்ட நாடு இந்தியா என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நாம் இந்த பிராந்தியத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே இந்தியாவுடன் தொடர்ந்து உறவாட வேண்டிய அவசியம் உள்ளது. இந்தியாவை சீண்டி பார்த்து பிரச்னைகள் ஏற்படுத்துவது கனடாவின் நோக்கமல்ல” என்று அவர் தெரிவித்தார்.
எனினும் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும் இந்திய அரசுக்கும் நம்பத்தக்க தொடர்பு உள்ளது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தொடர்ந்து கனடா நாட்டு பிரஜை என்று குறிப்பிட்டு பேசினார் ஜஸ்டின் ட்ரூடோ. “ஒரு கனடியர் கனடிய மண்ணில் கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு உள்ளது என நம்பகமான காரணங்கள் இருக்கின்றன. எனவே இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே இந்திய அரசு எங்களுடன் சேர்ந்து உண்மையை கண்டறிய உதவ வேண்டும் என கூறுகிறோம்” என அவர் தெரிவித்தார்.
என்ன நடந்தது?
இந்தியா -கனடா நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இருநாடுகளும் வெளியுறவு கொள்கை தொடர்பாக சில முடிவுகளை அறிவித்துள்ளன.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இம்மாதம் 19ஆம் தேதியன்று, கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் உரை நிகழ்த்தினார்.
இந்த உரையின் போது, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் ஜூன் மாதம் 18 தேதி குருத்வாராவுக்கு அருகே கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மரணத்தில், இந்திய அரசுக்கு ஒரு “நம்பகமான” தொடர்பு இருப்பதை கனடா உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது என்று ட்ரூடோ கூறினார்.
அதன் தொடர்ச்சியாக கனடாவில் பணியிலிருந்த இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராயை அந்நாட்டிலிருந்து வெளியேற்றியதாக கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கனடா மண்ணில் கனடிய குடிமகன் கொல்லப்பட்டதில் வெளிநாட்டு அரசின் பிரதிநிதிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு பிரச்னைக்குரியது மட்டுமல்ல, முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று அவர் கூறினார்.
“அந்த குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் அது நமது நாட்டின் இறையாண்மையை மீறியதாகும். அத்துடன், நாடுகள் ஒன்றுக்கொன்று நடந்து கொள்ள வேண்டிய முறையை மீறிய ஒன்றாகும். இது எங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து எந்த வித வெளிநாட்டு தலையீட்டையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம்,” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் எதிர்வினை
கனடா பிரதமரின் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத் துறை மறுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “கனடா நாடாளுமன்றத்தில் பிரதமர் கூறியதையும், அவர்களின் வெளியுறவுத்துறை அமைச்சரின் அறிக்கையையும் நாங்கள் நிராகரிக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“கனடாவில் கொலைகள், மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்கப்பட்டிருப்பது புதிதல்ல. இதுபோன்ற செயல்களுடன் இந்தியாவை தொடர்புபடுத்தும் எந்த முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம்.”
கனடா பிரதமரின் குற்றச்சாட்டை அடுத்து, கனடாவுக்கான இந்திய தூதரை அழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்தது இந்திய வெளியுறவு அமைச்சகம்.
கனடாவில் பணியிலிருந்த இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டதை போல, இந்தியாவிலுள்ள கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரியை இந்தியாவில் இருந்து வெளியேற இந்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்தியாவின் உள் விவகாரங்களில் தொடர்ந்து தலையிடும் கனடிய தூதரக நடவடிக்கைக்கு எதிர்வினையாகவும், இந்தியாவிற்கு எதிராக நடக்கும் நடவடிக்கைகளில், கனடா தூதரக அதிகாரிகளின் பங்களிப்பையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பட மூலாதாரம், FB/VIRSA SINGH VALTOHA
யார் இந்த நிஜ்ஜார்?
இந்தியா – கனடா ஆகிய இருநாடுகளுக்கும் இடையேயான வெளியுறவு தொடர்பு மோசமானது பின்னணியில் நிஜ்ஜார் கொலை வழக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
கனடாவின் வான்கூவர் நகருக்கு கிழக்கே 30 கி.மீ தொலைவில் உள்ள சர்ரே என்ற ஊரிலுள்ள குருநானக் சீக்கிய குருத்வாரா அருகே கடந்த ஜூன் 18ஆம் தேது தனது காரில் வைத்து ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முகமூடி அணிந்த இரண்டு பேர் துப்பாக்கிகளை கொண்டு சுட்டதில், காரிலிருந்த நிஜ்ஜார் இறந்தார்.
இந்த கொலை தொடர்பாக 3 மாதங்களுக்கு பிறகு கனடா பிரதமர் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பேசினார்.
முன்னதாக அவரின் கொலையில் இந்திய அரசுக்கு பங்கு இருப்பதாக வெளிநாடுகளில் வசிக்கும் சீக்கிய பிரிவினைவாதிகள் கூற்றுகளை முன்வைத்திருந்தனர்.
மேலும் டொராண்டோ, லண்டன், மெல்பேர்ன், சான் ஃபிரான்சிஸ்கோ உள்ளிட்ட பல நகரங்களில் நிஜ்ஜார் கொலை வழக்கில் நீதி கேட்டும், இந்திய அரசுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தினர்.
45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வசித்து வந்தார். தனி காலிஸ்தான் வேண்டும் என பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தவர்.

பட மூலாதாரம், BBC/PRADEEP SHARMA
நிஜ்ஜார் ஒரு பயங்கரவாதி என்றும், தீவிரவாத பிரிவினைவாதக் குழுவை வழிநடத்தினார் என்றும் இந்தியா கூறியது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் அந்தக் குற்றச்சாட்டுகளை “ஆதாரமற்றது” என்று கூறுகின்றனர்.
ஜலந்தரில் உள்ள பார் சிங் புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இந்திய அரசின் கூற்றுப்படி, நிஜ்ஜார் காலிஸ்தான் புலிப் படையின் தலைவராக இருந்தார் என்பதுடன் காலிஸ்தான் புலிப் படையின் தொகுதி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல், நெட்வொர்க்கிங் உள்ளிட்ட நடைமுறைகளுக்கான செலவினங்களை எதிர்கொள்ள நிதி உதவி வழங்குவது போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
பஞ்சாப் மாநில அரசின் கூற்றுப்படி, ஜலந்தரின் ஃபில்லூர் சப்-டிவிஷனில் உள்ள அவரது சொந்த கிராமமான பாரா சிங் புராவில் நிஜ்ஜாரின் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைப்பற்றியது.
நீதி கோரும் சீக்கியர்கள் என்ற பெயரில், இணையதளத்தில் நடத்தப்பட்ட சீக்கிய பொதுவாக்கெடுப்பு 2020க்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சொத்துகளை தேசிய புலனாய்வு அமைப்பு கைப்பற்றியது.
நிஜ்ஜார் 1997 இல் கனடா சென்றார். கோவிட்-19 லாக்டவுனுக்கு முன்பு அவரது பெற்றோர் சொந்த கிராமத்திற்கு வந்தனர். நிஜ்ஜாருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். நிஜ்ஜார் கனடாவிற்குச் சென்ற போது பிளம்பர் வேலை செய்து வந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையின் (NIA) கூற்றுப்படி, KTF (காலிஸ்தான் புலிப்படை) தலைவர் ஜக்தார் சிங் தாராவை சந்திப்பதற்காக நிஜ்ஜார் 2013-14 இல் பாகிஸ்தானுக்குச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
தாரா 2015ஆம் ஆண்டு தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார்.
தேசிய புலனாய்வு முகமையின் கூற்றுப்படி, நிஜ்ஜார் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பான ‘நீதி கோரும் சீக்கியர்கள்’ என்ற இயக்கத்துடன் தொடர்புடையவர் எனத்தெரியவந்துள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் தனிநாட்டுக்கான பொதுவாக்கெடுப்பின் போது நிஜ்ஜார் அதில் நேரடியாகப் பங்கேற்றார்.
பஞ்சாப் காவல்துறை வட்டாரங்களின்படி, 2018ல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்த போது, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், அவரிடம் ஒப்படைத்த தேடப்படுவோர் பட்டியலில் நிஜ்ஜாரின் பெயர் இடம்பெற்றிருந்தது.
2020 டிசம்பரில் பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் மூன்று விவசாயச் சட்டங்களை எதிர்த்துப் போராடியபோது, தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் நிஜ்ஜார் பெயரும் இருந்தது.
இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நிஜ்ஜாரின் தலைக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசாக அறிவித்தது.
எச்சரிக்கை விடுத்த கனடா அரசு

பட மூலாதாரம், Getty Images
கனடா அரசு, இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் கனடியர்களுக்கான பயண அறிவுரையை அவ்வப்போது வழங்கும்.
இந்தியாவில் நிலவும் சூழல்களை பொறுத்து தனது குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுகிறது.
அந்த வகையில் செப்டம்பர் 18ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்தியாவுக்கான பயண அறிவுறுத்தலில் காஷ்மிர் உள்ளிட்ட இந்தியாவின் சில பகுதிகளுக்கு கனடியர்கள் பயணிப்பதை தவிர்க்குமாறு அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
கனடா வழங்கிய பயண வழிகாட்டியில், அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டுமே இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு எதிராக கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
கனடாவின் “கடுமையான” குற்றச்சாட்டு குறித்து அந்த நாட்டுடன் தொடர்பில் இருப்பதாக பிரிட்டன் கூறியுள்ளது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பெரும் எண்ணிக்கையில் சீக்கியர்கள் வாழ்ந்துவரும் நிலையில், இந்த விவகாரம் அந்நாடுகளின் உள்ளூர் அரசியலில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிபிசி வெளிவிவகாரத்துறை செய்தியாளர் ஜேம்ஸ் லாண்டேல் எழுதியுள்ளார்.
பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி பேசியபோது, “கனடா எழுப்பும் தீவிரமான கவலைகளுக்கு பிரிட்டன் மிகவும் கவனமாக செவி சாய்க்கும். கனடாவின் கவலையை இங்கிலாந்து தீவிரமாக எடுத்துக்கொண்டது.” என்றார்.
ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், கனடாவின் குற்றச்சாட்டுகள் ஆஸ்திரேலியாவுக்கு “ஆழ்ந்த கவலையை” ஏற்படுத்தியிருப்பதாகவும், “இந்தியாவின் மூத்த அதிகார மட்டங்களில் ஆஸ்திரேலியாவின் கவலைகளை தெரிவித்ததாகவும்,” கூறினார்.
விசா சேவையை நிறுத்திய இந்தியா
கனடாவில் இருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கான விசா வழங்கும் சேவையை இந்தியா நிறுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக இந்திய விசா வழங்கும் சேவை மையம் வெளியிட்டிருக்கும் குறிப்பில், “செயல்பாட்டு காரணங்களுக்காக செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு செல்லும் விசா வழங்கும் சேவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் சிக்கலாகுமா?
கனடா – இந்திய உறவுகளில் முன்னெப்போதும் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் இது நீண்ட காலத் தாக்கங்களைக் கொண்டதாக இருக்கும் என்றும் கருதுகிறார் சென்னை லயோலா கல்லூரியின் பேராசிரியரான க்ளாட்ஸன் சேவியர்.
“இந்தியர்கள் கனடாவில் அதிக அளவில் வசிக்கிறார்கள். பாதுகாப்பான நாடுகள் என்று பட்டியலிட்டால், அதில் முதலிடத்தில் இருக்கக்கூடிய நாடு கனடா.
குடியேறிகளை வரவேற்று, அவர்களுக்கு வேலை வழங்கி, வாழ்வளிக்க கூடிய ஒரு நல்ல நாடு அது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் அங்கே வேலை செய்கிறார்கள்.
கனடா செல்வதற்கு இந்தியர்களுக்கு வழங்கப்படும் விசாக்களைப் பொறுத்தவரை இதுவரை தெளிவான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இந்தியர்களுக்கு விசா வழங்குவதை கனடா குறைத்தால் பெரும் பாதிப்புகள் இருக்கும்” என்கிறார் க்ளாட்சன் சேவியர்.
தமிழர்களுக்கு பாதிப்பு இருக்குமா?

பட மூலாதாரம், Getty Images
இந்தியா – கனடாவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால், குடியேற்றம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பாதிப்புகள் ஏற்படாது என பிபிசி தமிழிடம் விளக்கினார், கனடாவின் ஆண்டாரியோ நகரில் வசித்து வரும் வழக்கறிஞரும் CANext Immigration நிறுவன தலைமை செயல் அலுவலருமான நடராஜ் ஸ்ரீராம்.
“மற்ற நாடுகளில் குடியுரிமை வழங்க, அங்கு தங்கியிருக்கும் ஒவ்வொரு நாட்டினரையும் ஒவ்வொரு வகையாகப் பிரித்துப் பார்த்து, ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒவ்வொரு வகையான கட்டுப்பாடுகளை விதித்துதான் குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், கனடாவில் எந்த நாட்டினராக இருந்தாலும், குடியுரிமை சட்டத்தின்கீழ் அனைவருக்கும் சமமாக குடியுரிமை வழங்கப்படுகிறது,” என்கிறார் ஸ்ரீராம்.
மேலும், “கனடாவில் குடியுரிமை வழங்குவதற்கான ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இது அரசியல் ரீதியாகச் செயல்படுவது இல்லை என்பதால், தற்போது இந்தியா – கனடாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை எந்த வகையிலும், தமிழர்கள், இந்தியர்கள் கனடாவுக்கு கல்வி, வேலைவாய்ப்புக்காக வருவதிலும், குடியுரிமை பெறுவதிலும், விசா வாங்குவதிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார் ஸ்ரீராம்.
இந்தியா – கனடா பிரச்னையால், புதிதாக கனடா செல்லும் மாணவர்கள், பணிக்காக செல்வோருக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்கிறார் வெளிநாட்டுக் கல்விக்கு பயிற்சியளிக்கும் பயிற்சி மையத்தின் தலைவர் சுரேஷ்குமார்.
“இந்தியா – கனடா பிரச்னை தீவிரமடைந்து அந்த நாடு இதைப் பெரிதுபடுத்தினால், இந்தியாவில் உள்ளோருக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை அங்கு இந்தியர்களுக்கு விசா தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் பாதிப்புகள் ஏற்படும்.” என்கிறார் அவர்.
இந்தியா – கனடா பிரச்னையால் தமிழகத்துக்குப் பொருளாதார ரீதியில் பாதிப்புகள் குறைவாகத்தான் இருக்கும் என்கிறார் பொருளாதார வல்லுநரான வெங்கடேஷ் ஆத்ரேயா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com