பட மூலாதாரம், REUTERS/MIKE SEGAR
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே தூதாண்மை மட்டத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில், கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவுடன் இது தொடர்பாக ஏற்கெனவே சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ட்ரூடோ பகிரங்கமாக பேசுவது இது மூன்றாவது முறை. எனினும், கனடா இதுவரை தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதையும் முன்வைக்கவில்லை என்று இந்தியா கூறி வருகிறது.
காலிஸ்தானி ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியாவை குற்றம் சாட்டிய பின்னர், கனடா தலைநகர் ஒட்டாவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ட்ரூடோ, இதுகுறித்து பல வாரங்களுக்கு முன்பே இந்தியாவுக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறினார்.
“இந்தியாவை பற்றி நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், திங்களன்று நான் கூறியது தொடர்பான நம்பகமான காரணங்களை கனடா பல வாரங்களுக்கு முன்பே இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது,” என்றார் அவர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த இந்தியாவின் ஒத்துழைப்பை விரும்புவதாகவும் அவர் கூறினார்.
“நாங்கள் இந்தியாவுடன் நேர்மறையான முறையில் பணியாற்ற விரும்புகிறோம். மேலும் இந்த தீவிரமான பிரச்னையின் வேர் வரை செல்ல அவர்கள் எங்களுடன் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
ட்ரூடோ முதலில் சொன்னது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கனடா குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்திய ஏஜெண்டுகளின் பங்கு இருக்கக்கூடும் என்று ஜஸ்டின் ட்ரூடோ, இந்த வாரம் திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“கனடாவின் மண்ணில் கனடாவின் குடிமகனின் கொலைக்குப் பின்னால் இந்திய அரசு இருக்கலாம் என்று கனேடிய அமைப்புகள் கருதுகின்றன. நமது மண்ணில் நடந்த கொலைக்குப் பின்னால் வெளிநாட்டு அரசு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது இறையாண்மையின் மீறல்,” என்று அவர் கூறியிருந்தார்.
இந்த அறிக்கைக்குப் பிறகு, இந்தியாவின் உயர்மட்ட தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவின் உயர்மட்ட தூதரக அதிகாரியை ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இந்தியாவும் உத்தரவிட்டது.
இதுதவிர கனடாவில் உள்ள இந்திய தூதரகம் விசா சேவைகளை இடைநிறுத்தியது, “செயல்பாட்டு காரணங்களால் இந்த சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன,” என்று அது கூறியது.
எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக விசா சேவை நிறுத்தப்பட்டுள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பட மூலாதாரம், ANI
இதுவரை இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக கனடாவிடம் ஆதாரங்களைக் கேட்டதாகவும் ஆனால் இதுவரை எந்தத் தகவலும் தங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்றும் இந்தியா கூறி வருகிறது.
“நிஜ்ஜார் கொலை தொடர்பான எந்தத் தகவலும் கனடாவால் பகிரப்படவில்லை,” என்று வியாழனன்று, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார்.
வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக கனடா ஆதாரங்களை முன்வைத்தால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இந்தியா தயாராக உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ கனடாவினால் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் பகிரப்படவில்லை. நாங்கள் குறிப்பிட்ட தகவல்களை ஆராய விரும்புகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
சிலர் கனடாவின் மண்ணில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. நாங்கள் அந்தத் தகவலை அவர்களுடன் பகிர்ந்து கொண்டோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்றார் அவர்.
இந்தியாவில் தேடப்படும் நபர்களுக்கு கனடாவில் புகலிடம் வழங்கப்படுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அரிந்தம் பாக்சி, “அவர்களுக்கு கனடாவில் பாதுகாப்பான புகலிடம் அளிக்கப்படுகிறது. கனடா அரசு இதைச் செய்யக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் 20-25க்கும் மேற்பட்டவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு அல்லது நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை,” என்று கூறினார்.
இதற்கு முன் ட்ரூடோ என்ன சொன்னார்?

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக வியாழன்று ஐநா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ட்ரூடோ நியூயார்க் சென்றிருந்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியாவை இரண்டாவது முறையாக குற்றம் சாட்டினார். ஆனால் அப்போது அவர் தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாகக் கூறவில்லை.
“நான் திங்கட்கிழமை கூறியது போல் கனடாவின் மண்ணில் ஒரு குடிமகன் கொலை செய்யப்பட்டதற்குப் பின்னணியில் இந்திய அரசின் ஏஜெண்டுகள் இருக்கலாம் என்று நம்புவதற்குத் தேவையான காரணங்கள் உள்ளன. சட்டத்தை பின்பற்றும் மற்றும் சர்வதேச சட்டத்தை மதிக்கும் ஒரு நாட்டிற்கு இதுவொரு அடிப்படையான மற்றும் மிகவும் தீவிரமான பிரச்னை,” என்று ட்ரூடோ தெரிவித்தார்.
“எங்களிடம் ஒரு சுதந்திரமான நீதித்துறை அமைப்பு மற்றும் வலுவான செயல்முறை உள்ளது. உண்மையைக் கண்டறிவதற்கான முயற்சிகளில் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு நான் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இந்திய அரசைக் குற்றம்சாட்டும் முடிவு தனக்கு எளிதான முடிவாக இருக்கவில்லை என்று ட்ரூடோ குறிப்பிட்டார்.
“திங்கட்கிழமை காலை நாடாளுமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முடிவு இலகுவாக எடுக்கப்பட்டது அல்ல. மிகவும் தீவிரமாக சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். திங்களன்று நான் கூறியதை மீண்டும் ஒருமுறை சொல்ல விரும்புகிறேன். நம்பகமான ஆதாரங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்,” என்றார் அவர்.
இந்த சர்ச்சை தொடர்பாக அமெரிக்கா சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இந்த பதற்றத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை, அமெரிக்காவின் அணுகுமுறை தொடர்பாக வந்துள்ளது. ஏனெனில் அது கனடாவின் அண்டை நாடு மற்றும் முக்கிய நட்பு நாடு என்பதோடு மட்டுமல்லாமல் இந்தியாவுடனான அதன் உறவுகளும் வலுவடைந்து வருகின்றன.
திங்களன்று ஜஸ்டின் ட்ரூடோ இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, அமெரிக்கா இதுகுறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தின் வேர்வரை சென்று குற்றவாளிகளைத் தண்டிக்குமாறும் அது கூறியது.
”கனடாவின் பிரதமர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை அமெரிக்கா தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் கனடாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்,” என்று வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குறிப்பிட்டார்.
“கனடா இந்த விஷயத்தை தீவிரமாக விசாரிப்பதும், இதற்கு இந்தியா ஒத்துழைப்பதும் முக்கியம். இதற்கான பொறுப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் இந்திய அரசுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்,” என்றார் அவர்.
”எல்லை தாண்டிய அடக்குமுறை என்று கூறப்படும் எந்தவொரு சம்பவம் குறித்தும் நாங்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறோம். அமெரிக்கா அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது பற்றி சிந்திக்கும் எந்த ஒரு நாடும் இதைச் செய்யக்கூடாது என்பது சர்வதேச செயல்முறைக்கு அவசியம். இதன் மீது நாங்கள் தீவிர கவனம் செலுத்துகிறோம்,” என்று ஆண்டனி பிளிங்கன் குறிப்பிட்டார்.
முன்னதாக வியாழக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ”அமெரிக்கா, இந்தியா மற்றும் கனடாவுடன் தொடர்பில் இருப்பதாகவும், அமெரிக்கா இந்தியாவுக்கு ‘சிறப்பு சலுகை’ எதையும் வழங்காது என்றும் கூறினார்.
இந்த விவகாரத்தில் இரு நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
“இது நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் ஒரு விஷயம். இதுகுறித்து நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். இதுபோன்ற ஒரு செயலுக்கு எந்த சிறப்பு விலக்கும் கிடைக்காது. எந்த நாட்டையும் பொருட்படுத்தாமல் நமது அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்போம்.
கனடா போன்ற நட்பு நாடுகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுவோம். ஏனெனில் இந்த விவகாரத்தில் கனடா விசாரணை மற்றும் தூதாண்மை செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்கிறது,” என்றார் அவர்.
இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், SIKH PA
சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான தகவல்களை கனடா அரசு திரட்டியுள்ளதாக, ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட கனடாவின் சிபிசி நியூஸ் அறிக்கையை வியாழனன்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
கனடா அரசு இது தொடர்பாக உளவுத் தகவல்களை சேகரித்துள்ளது. இதில் கனடாவில் இருக்கும் இந்திய அதிகாரிகளின் தகவல் தொடர்புகள் மற்றும் ‘ஃபை ஐஸ்’ உடன் தொடர்புடைய கூட்டாளரிடமிருந்து பெறப்பட்ட சில தகவல்களும் அடங்கும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘ஃபை ஐஸ்’ என்பது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணியாகும். இதன் கீழ் உளவுத்துறை தகவல்கள் பகிரப்படுகின்றன.
இந்த கொலை தொடர்பாக கனேடிய புலனாய்வு அமைப்புகள் என்னென்ன தகவல்களை சேகரித்துள்ளன என்பதை ட்ரூடோ இதுவரை தெரிவிக்கவில்லை. சிபிசி ந்யூஸில் வெளியிடப்பட்ட செய்தியை கனடா அரசு இதுவரை மறுக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை என்று ராய்டர்ஸ் கூறுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com