Press "Enter" to skip to content

கனடாவில் தமிழர்களின் நிலை என்ன? சீக்கியர்களுக்கு நிகராக முக்கியத்துவம் தரப்படுகிறதா?

பட மூலாதாரம், Tamil heritage month movement

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் & ச. பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

சீக்கியர் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான பிரச்னையால், இந்தியா – கனடா இடையே பதற்றமான சூழ்நிலையும், மோதல் போக்கும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இரு நாடுகளும் வெளியுறவு கொள்கை தொடர்பாக சில முடிவுகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில், கனடாவில் சீக்கியர்களைப் போலவே கணிசமாக வாழும் இந்தியத் தமிழர்கள், மற்றும் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை முறையும், கனடா அரசியல், மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு உள்ள முக்கியத்துவத்தையும் பற்றி அறிந்துகொள்ள, பிபிசி தமிழ் கனடாவாழ் தமிழர்களிடம் பேசியது.

கனடா வாழ் தமிழர்கள்

பட மூலாதாரம், TWITTER

தமிழர்கள் கனடாவில் எப்போது குடியேறினர்?

இந்தியா மற்றும் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட தமிழர்கள், கனடாவில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர்.

கனடாவின் ஒன்டாரியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களிலேயே அதிகளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏனைய மாகாணங்களிலும் குறிப்பிடத்தக்களவு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

1970-ஆம் ஆண்டு தொடங்கி 1980-ஆம் ஆண்டுக்குப் இடைப்பட்ட காலத்திலேயே கனடாவில் தமிழர்கள் குடியேற ஆரம்பித்துள்ளனர். ஈழத் தமிழர்களே கனடாவில் முதல் முதலில் குடியேற ஆரம்பித்ததாக மூத்த ஊடகவியலாளர் ரமணன் சந்திரசேகரமூர்த்தி தெரிவிக்கின்றார்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர், கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை நோக்கி பெருமளவான இலங்கைத் தமிழர்கள் செல்வதற்கு காரணமாக அமைந்திருந்தது.

கனடா வாழ் தமிழர்கள்

பட மூலாதாரம், TWITTER

கனடாவில் தமிழர்களின் அரசியல் முக்கியத்துவம்

அரசியல் ரீதியில் பார்த்தால் கடந்த சில ஆண்டுகளில், கனடாவில் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக தமிழர்கள் மாறிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். டொரோன்டோ, ஆன்டோரியோ, ஆல்பெர்டா போன்ற பல மாகாணங்களில் தமிழர்கள் கூட்டாக ஒரே பகுதியில் வசித்து வருவதுடன், அந்தப்பகுதிகளில் அரசியல் மட்டுமின்றி, அரசு இயந்திரத்திலும் தமிழர்கள் கோலோச்சி வருகின்றனர்.

கனடா மத்திய அரசாங்கத்தில் இரண்டு தமிழர்கள், முக்கிய இரண்டு அமைச்சு பதவிகளை வகித்து வருகின்றமையானது, கனடாவில் தமிழர்களின் ஆதிக்கத்திற்கு சிறந்த உதாரணமாக இருக்கும்.

இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த் மற்றும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட கெரி ஆனந்தசங்கரி ஆகியோரே இவ்வாறு கனடா மத்திய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்து வருகின்றனர். இவர்களுக்கு எல்லாம் முன்பு கனடாவின் முதல் மக்களவை உறுப்பினராக, ராதிகா சிட்சபைசன் தேர்வாகினார்.

அதேபோன்று, மாகாண மற்றும் நகர அரசியலிலும் இலங்கை மற்றும் இந்திய நாடுகளை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள், தமது பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர்.

அத்துடன், “கனடாவில் வாழும் தமிழர்கள், அனைத்து துறைகளிலும் தமது பங்களிப்புக்களை வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது,” என மூத்த ஊடகவியலாளர் ரமணன் சந்திரசேகரமூர்த்தி தெரிவிக்கின்றார்.

கனடாவில் தமிழர்களின் எந்தெந்த துறைகளில் சாதித்திருக்கின்றனர்?

குறிப்பாக அரசியல், சுய தொழில், வர்த்தக நடவடிக்கைகள், மருத்துவத் துறை, பொறியியலாளர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமது ஆதிக்கத்தை தமிழர்கள் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக பாரிய இரும்பு உற்பத்தி தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழில் வல்லுநர்களாகவும் தமிழர்கள் கனடாவில் திகழ்வதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

கனடாவில் வாழும் ஏனைய சமூகங்களுக்கு நிகராக, இந்திய மற்றும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர்களும் வாழ்ந்து வருவதாக சந்திரசேகரமூர்த்தி கூறுகின்றார்.

கனடா வாழ் தமிழர்கள்

பட மூலாதாரம், Getty Images

தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கனடா அரசு

கனடாவின் வளர்ச்சியில் தவிர்க்க முடியாத சக்திகளாக உள்ள தமிழர்களுக்கு, கனடா அரசு அதீத முன்னுரிமை கொடுப்பதாகவும், தமிழரின் கலாசாரத்தை மேம்படுத்த கனடா அரசு பலவற்றை செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் ஊடகவியலாளர் ரமணன் சந்திசேகர மூர்த்தி. இதற்காக கனடா அரசின் மூன்று முக்கிய அறிவிப்புகளை சான்றாக முன்வைக்கிறார் அவர்.

இது குறித்து மேலும் விளக்கிய ரமணன் சந்திசேகர மூர்த்தி, ‘‘இலங்கையில் நடந்த தமிழர் இனப்படுகொலையை கனடாவிலுள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்வதற்காக, உலகின் முதல் நாடாக கனடாவின் ஆன்டேரியோ மாகாணம், மே 11 – 18ம் தேதி வரையில் இலங்கை தமிழர் இனப்படுகொலை வாரமாக கடைபிடிக்க மசோதா நிறைவேற்றி உத்தரவிட்டுள்ளது. இலங்கை அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், கனடா அரசு தமிழர்களுக்காக இதைச் செய்துள்ளது. இது தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

மேலும், தமிழர்களின் பாரம்பரியம், பண்பாட்டை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள ஜனவரி மாதத்தை, தமிழ் மரபுரிமை மாதம் – Tamil Heritage Month என, கனடா அரசு அறிவித்து பள்ளி, கல்லூரிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் கொண்டாட்டங்களையும் நடத்துகிறது. இதில், தமிழர்கள் பொங்கல் வைத்து கொண்டாடுவதுடன், தமிழரின் அனைத்து பாரம்பரிய மற்றும் கலாச்சாரமும் நினைவுகூறப்படுகிறது’’ என்றார்.

இந்தாண்டு நடந்த இந்த நிகழ்ச்சியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் பங்கேற்று தமிழரின் பாரம்பரியத்தை கொண்டாடியுள்ளார். இதிலிருந்தே கனடா அரசுக்கும் தமிழர்களுக்கு உள்ள பிணைப்பை தெரிந்து கொள்ள முடியும் என்று அவர் கூறுகிறார்.

தமிழ் மரபுரிமை மாதம்

மேலும், ‘‘ தமிழர் கலாச்சார மையம் அமைக்க, கனடா அரசு 20 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளதுடன், தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரு, வன்னி தெரு என, தெருக்களுக்கு தமிழ் பெயர்கள் வைத்துள்ளது கனடா அரசு. இது மட்டுமின்றி தமிழர்கள் வாழும் பல பகுதிகளில், அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் தமிழில் பதாகைகளும் வைத்துள்ளது. இவற்றில் இருந்தே கனடாவில் தமிழர்களின் முக்கியத்துவம் என்னவென்று அனைவரும் புரிந்து கொள்ள முடியும். எளிதாக சொல்ல வேண்டுமென்றால், கனடா அரசை பொறுத்தவரையில், தமிழர்கள் இங்கு இன்றியமையாத சொத்துகளாக உருவெடுத்துள்ளனர்,’’ என்கிறார், ரமணன் சந்திசேகர மூர்த்தி.

கனடா வாழ் தமிழர்கள்

பட மூலாதாரம், GETTY IMAGES

‘தமிழர்கள் எந்த துறையில் தான் இல்லை?’

கனடாவில் தமிழர்கள் எத்தகைய வாழ்வை வாழ்கின்றனர், கனடாவில் தமிழர்கள் என்னென்ன துறைகளில் உள்ளார்கள் என, பிபிசி தமிழிடம் விளக்கியுள்ளார், கனடாவின் ஆண்டாரியோ நகரில் வசித்து வரும் வழக்கறிஞரும் CANext Immigration நிறுவன தலைமை செயல் அலுவலருமான நடராஜ் ஸ்ரீராம்.

‘‘கனடாவை பொறுத்தவரையில், 1970க்குப்பின் இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போருக்குப்பின் தான், அதிகப்படியான இலங்கைத்தமிழர்கள் கனடாவுக்குள் குடியேறியுள்ளனர். அதன்பின், வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக, இந்திய தமிழர்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் உள்ள தமிழர்கள் இங்கு குடியேறியுள்ளனர்.

கனடாவை பொறுத்தவரையில், எந்த துறையில் தமிழர்கள் ஆளுமை பெறாமல் உள்ளார்கள் என்று தான் பார்க்க வேண்டும். ஏனெனில், தொழில், வணிகம், அரசியல், கலைத்துறை என அனைத்து துறைகளிலும், கனடாவில் தமிழர்கள் தடம் பதித்து வருகின்றனர். இங்கு தமிழ் மக்களுக்காக மட்டுமே, பிரபலமான ஐந்து முழுநேர சேனல்கள், 3 ரேடியோக்கள் உள்ளன.

தமிழர்கள் வாழும் பல பகுதிகளில், தமிழர்கள் தோசைக்கடை வைத்து கூட தொழில் செய்து வருகின்றனர்; தென்னிந்திய உணவகங்களும் நடத்துகின்றனர். சில இடங்களில் ஒட்டுமொத்த Super Mallல் அனைத்து கடைகளையும் தமிழர்கள் நடத்துவதுடன், தமிழில் பெயர் பலகைகளையும் வைத்துள்ளனர். அரசு இயந்திரத்தில் முடிவுகள் எடுக்கக் கூடிய முக்கிய பொறுப்புகளிலும், அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிலைகளிலும், தொழில் அதிபர்களாகவும், தொழில் முனைவோராகவும், அரசியல்வாதிகளாகவும், பலதுறை வல்லுனர்களாகவும் இங்கு வலம் வருகின்றனர்,’’ என்கிறார் நடராஜ் ஸ்ரீராம்.

கனடா வாழ் தமிழர்கள்

பட மூலாதாரம், Tamil heritage month movement

தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள்?

மேலும், தொடர்ந்த அவர், ‘‘கனடாவை பொறுத்தவரையில் இங்கு அரசு சார்பில், 1 – 12ம் வகுப்பு வரையில் கல்வி இலவசம், மருத்துவமும் இலவசம். இங்கு தனியார் பள்ளி, மருத்துவமனைகளை விரல் விட்டே எண்ணி விடலாம். ஒருவர் கனடா வந்தால், அவர் தனது மனைவி, குழந்தை மட்டுமின்றி, அப்பா, அம்மா, தாத்தா பாட்டி என, பின்னால் மற்றும் முன்னாள் இருக்கும் இரு தலைமுறையினரை கூட்டி வரலாம். இங்கு கல்வி, மருத்துவம் இலவசம் என்பதால், தமிழர்கள் பலரும் இங்கு வந்து குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு வந்த பின், தமிழர்களுடன் ஒன்றாக இணைந்து பல சங்கங்களை உருவாக்கி தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியத்தை காத்து வருகின்றனர். மேலும், மற்ற சமூக மக்களுடன் இணைந்து சுமூகமான, அன்பான, ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழ்கின்றனர். கனடா வாழ் தமிழர்கள் சங்கம், தமிழர் மருத்துவர்கள் சங்கம், இலக்கிய வட்டம் என, பலவற்றை உருவாக்கி தமிழர்களின் நலன் காத்து வருகின்றனர். ஐ.டி, நிர்வாகம் சார்ந்த பணி, Outsourcing பணி, விளையாட்டு, கலைத்துறை, ஊடகம் என எந்தத்துறை எடுத்தாலும், அவற்றில் தமிழர்கள் தடம் பதித்துள்ளனர். கனடாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு மிக முக்கியம் என்பதால் கனடாவில் வாழும் சீக்கியர் உள்ளிட்ட இதர மக்களைப் போல, தமிழர்களுக்கும் கனடா முக்கியத்துவம் கொடுக்கிறது,’’ என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »