பட மூலாதாரம், Getty Images
குழந்தைத் திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் இருந்தும், தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் இன்று தொடர்வதாக தரவுகள் கூறுகின்றன.
இதற்கான காரணங்கள் என்ன? இதனால் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? இதைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது?
‘எனக்கு 17 வயது, என் குழந்தைக்கு 2 வயது’
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
கடந்த 2020-ஆம் ஆண்டு 14 வயதான ரம்யா 8-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அப்போது கொரோனா பொது முடக்கம் நடந்துகொண்டிருந்ததால், ஆந்திர மாநிலம் வைரண்ட பள்ளி பகுதியில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்குச் சென்றார்.
அப்போது அதே பகுதியில் வசித்து வந்த 21 வயதான புருஷோத்தமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞருடன் ரம்யாவுக்கு காதல் ஏற்பட்டு, இருவரும் அருகில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். புருஷோத்தமன் டெய்லராக வேலை செய்து வந்தார்.
இருவர் வீட்டிலும் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் இவர்கள் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். ஒரு வருடத்தில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு புருஷோத்தமன் தினமும் குடி போதையில் ரம்யாவை அடித்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தத் துவங்கினார்.
இந்நிலையில் இரண்டாம் முறை கர்ப்பமான ரம்யாவுக்கு கருக்கலைப்பு மாத்திரை வாங்கிக் கொடுத்து கர்ப்பத்தை கலைத்தார் புருஷோத்தமன். அதன் பிறகு ரம்யா உடல் ரீதியாக பலவீனம் அடைந்து, பராமரிக்க யாரும் இன்றி இருந்த நிலையில், ஆந்திராவில் இருந்து வேலூரில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கே திரும்பினார்.

பட மூலாதாரம், Getty Images
இப்போது 17 வயதாகும் ரம்யா இரண்டு வயது பெண் குழந்தையுடன் தாய் வீட்டில் வசிக்கிறார். தனது குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய நிலையில், தன்னையும் தனது குழந்தையையும் காப்பாற்ற அருகிலுள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் கடந்த ஒரு வார காலமாக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து பத்தாம் வகுப்பு படிக்கும் ஆசையும் ரம்யாவுக்கு இருக்கிறது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ரம்யா, தனது குடும்ப வறுமையின் காரணமாக தனது தாயாருக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது என்றார்.
“என்னுடைய அம்மாவுக்கு இப்போது 32 வயது ஆகிறது. எனக்கு 17 வயது. என்னுடைய இரண்டு வயது மகளை வைத்துக் கொண்டு நான் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். என்னைப் போல் வேறு எந்த பெண்ணும் இவ்வாறு பாதிக்கப்படாமல் இருக்க என்னுடன் பள்ளியில் பயின்ற தோழிகள் பலருக்கும் இது பற்றித் தெரிவித்துப் புரிய வைத்து வருகிறேன்,” என்றார்.
குழந்தையையும் வைத்துக் கொண்டு ஒரு வார காலமாகத் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைக்கு சென்று வரும் ரம்யா, வருகின்ற ஜனவரி மாதம் 10ம் வகுப்பு தேர்வு எழுத படித்துக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.

பட மூலாதாரம், EYESWIDEOPEN
ஏழு வட மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்களின் நிலை
ரம்யாவைப் போல், தமிழகத்தின் ஏழு வட மாவட்டங்களில் பல பெண்கள் குழந்தைத் திருமணத்தால் பாத்க்கப்பட்டிருப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் நடைபெற்ற, அல்லது தடுக்கப்பட்டக் குழந்தை திருமணங்களின் தரவுகள் இவை:
- திருப்பத்தூர் மாவட்டம்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 40 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன. 5 திருமணத்தின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 12 குழந்தைத் திருமணங்களின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரி முதல் ஜூலை வரை 37 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் எட்டு குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
- தர்மபுரி மாவட்டம்: தர்மபுரி மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 84 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. 77 திருமணங்கள் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- வேலூர் மாவட்டம்: வேலூரில் ஆகஸ்ட் 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை 62 குழந்தைகள் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 62 திருமணங்களின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏழு குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
- ராணிப்பேட்டை மாவட்டம்: ஆகஸ்ட் 2022 முதல் 2023 ஆகஸ்ட் வரை 26 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று, இவற்றில் 11 திருமணங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
- திருவண்ணாமலை மாவட்டம்: ஜனவரி 2023 முதல் ஆகஸ்ட் 2023 வரை 127 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. 44 திருமணங்களின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 6 திருமணங்களின் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.
- கள்ளக்குறிச்சி மாவட்டம்: இவ்வருடம் ஜனவரி முதல் டிசம்பர் வரை 111 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 14 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன. 97 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 9 திருமணங்களின் மீது சி.எஸ்.ஆர் பதியப்பட்டுள்ளது. 10 எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
குழந்தை திருமணங்கள் நடக்க முக்கிய காரணங்கள் என்ன?
இதுபோல குழந்தை திருமணங்கள் ஏன் நடக்கின்றன என்பதற்கான காரணங்களை வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி வேதநாயகத்திடம் கேட்டோம்.
அவர் சொன்ன முக்கிய காரணங்கள்:
- பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பை படிக்க வைக்க விருப்பம் இல்லாமல் அல்லது பொருளாதார வசதி இல்லாமல் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர்.
- ஒரு பெண் குழந்தை காதல் வயப்பட்டால், அதைத் தடுக்க பெற்றோர்கள் அந்தப் பெண்ணிற்கு குழந்தை திருமணம் செய்து வைக்கின்றனர்.
- பெற்றோர்களில் எவரேனும் ஒருவர் உயிருடன் இல்லை எனினும் குழந்தை திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.
- இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்கள், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அப்பெண் குழந்தைகளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்கின்றனர்.
- பெற்றோர் வெளியூர் அல்லது வெளி மாநிலங்களில் வேலை பார்ப்பவர்களாக இருந்தால், தங்கள் பெண் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் திருமணம் செய்து வைக்கின்றனர்.
- குடும்பத்தில் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி உறவினர்கள் எவரேனும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவர்கள் இறப்பதற்கு முன் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பதற்காகவும் சில குழந்தைத் திருமணங்கள் செய்துவைக்கப்படுகிறது.
- சில சந்தர்ப்பங்களில் ஒரு பெண் குழந்தை ஒரு ஆணிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்டால், ‘வேறு வழி இல்லாமல்’ என்று கூறி அப்பெண் குழந்தைக்குப் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
- சில சந்தர்ப்பங்களில் பெண் குழந்தைகளுக்கு வசதியான இடத்தில் இருந்து வரன் கிடைத்தால் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுகின்றார்கள்.
- பெண் குழந்தைகளின் உறவினர்களுக்குள்ளே வயது வித்தியாசம் பார்க்காமல் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றார்கள்.
- பெண் குழந்தையின் அப்பா குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாலும் அப்பெண் குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டி திருமணம் செய்து வைக்கின்றனர்.
மேலும் பேசிய வேதநாயகம், குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது குறித்து தங்களுக்கு தொலைபேசி மூலமாக புகார்கள் வந்தால், காவல்துறை, வருவாய்த்துறை, சமூக நலப்பாதுகாப்புத் துறை அனைவரும் இணைந்து சம்பவ இடத்திற்குச் சென்று, விசாரணை நடத்தி நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரிவித்தார். “மேலும் இதுபோன்ற திருமணங்கள் நடக்காமல் இருக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகிறோம்,” என்றார்.

பட மூலாதாரம், GEETHA JEEVAN
தமிழ்நாடு அரசின் பதில் என்ன?
தமிழ்நாட்டின் தொடர்ந்து குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது குறித்து, பெண்கள் மற்றும் சமூகநலப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் பிபிசி பேசியது.
அவர் பதிலளிக்கையில், 17 வயதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் அதிக அளவில் தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும், கல்வித்துறை, சமூக நலப் பாதுகாப்புத் துறை, மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், இவ்விஷயத்தில் அரசாங்கத்திற்கு உள்ள பொறுப்பு பெற்றோர்களுக்கும் உள்ளதாகக் கூறினார். “பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசி அவர்கள் சிறுவயதில் காதல் வயப்படுவதையும், அவர்களின் கல்வி பாதியில் தடைபடுவதையும் தடுக்க வேண்டும்,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
சட்டம் என்ன சொல்கிறது?
குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 1929-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இயற்றப்பட்டச் சட்டமாகும். இருப்பினும் இந்திய கலாசாரம் மற்றும் பண்பாடுகளுக்கு எதிரான எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என அப்போதைய இங்கிலாந்து அரசு உத்தரவிட்டதன் காரணமாக அந்த சட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை.
அதன் பிறகு 1978ல் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி குழந்தைத் திருமணம் செய்து வைப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு வந்தது.
மீண்டும் 2006-இல் செய்யப்பட்ட ஒரு சட்டத் திருத்தத்தில் குற்றம் புரிபவர்களுக்கு தண்டனை கடுமையாக்கப்பட்டது.
அதன்படி, குழந்தைத் திருமண தடை சட்டத்தின் பிரிவுகள் 9, 10, 11 ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதில் திருமணம் நடத்தி வைப்பவர்கள் மட்டுமின்றி உறவினர்கள் திருமண நிகழ்ச்சியை பார்த்து தடுக்க முயற்சிக்காதவர்கள் என அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும் என்று மாற்றப்பட்டது.
குழந்தை திருமணம் நடைபெறுவதற்கான தகவல்கள் கிடைத்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கு குற்றவியல் நடுவர்கள் உத்தரவிடலாம்.
மேலும் குழந்தைத் திருமணம் குறித்து தகவலோ புகாரோ வழங்கப்பட்டால், காவல் நிலையத்தில் தாமதம் இன்றி வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதேபோல் ஆசிரியர், வட்டாட்சியர்களுக்கும் காவல் துறையினர் உதவியுடன் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த அதிகாரம் உள்ளது.
திருமணத்தைத் தடுத்து நிறுத்திய பின் அந்தப் பெண் குழந்தையை எங்கே தங்க வைத்து பராமரிப்பது என்பதை குற்றவியல் நடுவர் தான் முடிவு செய்ய வேண்டும். இந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி தான் தற்பொழுது வரை நடைபெற்று வரும் குழந்தை திருமணத்தை தடுத்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
என்ன தண்டனைகள் வழங்கப்படும்?
குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் 2006 இந்தியா முழுவதிலும் நடைபெறும் குழந்தை திருமணங்களுக்குப் பொருந்தும்.
இந்தச் சட்டத்தின்படி 21 வயது நிறைந்த ஆண் 18 வயதிற்கு குறைவான ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் சட்டப்படி அந்த ஆண் தண்டிக்கப்படுவார். அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ஒரு லட்சம் வரை அபராதம் வழங்கப்படுகிறது. மேலும் குழந்தை திருமணத்தை செய்து வைக்கும் நபர்களுக்கும் இந்த தண்டனை வழங்கப்படுகிறது.
ஒரு பெண்ணுக்கு குழந்தை திருமணம் நடக்கிறது என்றாலும் அல்லது குழந்தை திருமணம் நடந்திருக்க ஏதேனும் ஏற்பாடுகள் நடக்கிறது என்றாலும் உடனடியாக அதனை யார் வேண்டுமானாலும் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கலாம். ‘1098’ என்ற எண்ணைப் பயன்படுத்தி தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com