பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஹோலி ஹோண்ரிச்
- பதவி, பிபிசி செய்தியாளர் வாஷிங்டனில் இருந்து
-
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரம் நியூயார்க்கில் செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொண்ட போது, அவரது வழக்கமான மற்றும் நம்பிக்கை மிகுந்த புன்னகை மங்கியிருந்தது.
செய்தியாளர் சந்திப்பில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் இந்தியா தொடர்பானவை. இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனென்றால் ஒரு வாரத்திற்கு முன்பு அவர் இந்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
“நமது மண்ணில் கனடா குடிமகன் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்திய அரசின் ஏஜெண்டுகள் இருக்கலாம் என்று நம் ஏஜென்சிகள் கண்டறிந்துள்ளன. இங்கு நடந்த கொலைக்குப் பின்னால் ஒரு வெளிநாட்டு அரசு இருக்கலாம் என்று நமது ஏஜென்சிகள் கூறுகின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் இது நமது இறையாண்மையை மீறும் செயலாகும்,” என்று திங்களன்று ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் கூறினார்,
ஆனால் கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா முழுமையாக நிராகரித்துள்ளதுடன் இந்த கொலைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் 18 அன்று, சீக்கிய தலைவரும் காலிஸ்தான் ஆதரவாளருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45 வயது) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு குருத்வாராவிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

பட மூலாதாரம், Reuters
ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேட்கப்பட்ட கேள்விகள்
நிதானமாகவும் அளவாகவும் பேசிய ட்ரூடோ, “நாங்கள் யாரையும் தூண்டிவிடவோ, பிரச்சனைகளை உருவாக்கவோ விரும்பவில்லை. விதிகளை அடிப்படையாகக் கொண்ட உலக முறைமைக்காக நாங்கள் குரல் எழுப்புகிறோம்” என்றார்.
இந்த நேரத்தில் சில செய்தியாளர்கள் ட்ரூடோவிடம் ’உங்களது இந்த முயற்சிகளில் கனடாவின் கூட்டாளிகள் எங்கே?’ என்று கேட்டனர். “இதுவரையில் நீங்கள் தனியாக இருப்பது போலவே தெரிகிறது” என்றார் ஒரு செய்தியாளர்.
இந்தியாவுடனான மோதலைப் பொருத்தவரை ஜஸ்டின் ட்ரூடோ, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் கனடாவை விட 35 மடங்கு பெரிய ஒரு நாட்டுடன் தனித்து நின்று போராடி வருவது போலத் தெரிகிறது.
ட்ரூடோ இந்தியா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததிலிருந்து, ‘ஃபைவ் ஐஸ்’ உளவுத்துறை கூட்டணியில் உள்ள அவரது கூட்டாளிகள் சிலர் மட்டுமே பகிரங்கமாக முன்னால் வந்து பேசியுள்ளனர்.
இந்த விஷயம் தீவிரமானது மற்றும் கவலையளிப்பது என்று அவர்கள் வர்ணித்துள்ள போதிலும் கனடாவுக்கு வெளிப்படையான ஆதரவை அவர்கள் அளிப்பதாகக் கூற முடியாது.

பட மூலாதாரம், Getty Images
’ஃபைவ் ஐஸ்’ உறுப்பினர்கள் என்ன சொன்னார்கள்?
‘ஃபைவ் ஐஸ்’ என்பது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணியாகும். இதன் கீழ் உளவுத்துறை தகவல்கள் பகிரப்படுகின்றன.
பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி, “கனடாவின் குற்றச்சாட்டுகளை எங்கள் அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. அரசின் விசாரணையை நாங்கள் ஆதரிக்கிறோம், உண்மை வெளிவர வேண்டும்” என்றார்.
ஆனால் தென்பகுதியில் உள்ள அண்டை நாடான அமெரிக்காவால் கனடா பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளது.
இந்த இரண்டு நாடுகளும் மிகவும் நல்ல நண்பர்கள். ஆனால் அமெரிக்கா இந்த பிரச்சனையில் எதிர்பார்த்த அளவிற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை.
இந்த விவகாரம் குறித்து நியூசிலாந்து இதுவரை எதுவும் கூறவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் முக்கியத்துவம் மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாடு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஐநா சபையில் உரையாற்றிய போது அவர் இந்தியாவை விமர்சிக்கவில்லை. மாறாக இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை சுட்டிக்காட்டி, ஒரு புதிய பொருளாதார பாதையை காட்டுவதில் இந்தியாவின் பங்கை பாராட்டினார்.
இந்த விஷயத்தில் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே எந்த ஒரு “பிளவும்” இல்லை என்று பின்னர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் கூறினார். கனடாவுடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா வெளியிட்ட பொது அறிக்கைகளில் அது “தீவிர கவலை” அளிக்கிறது என்று மட்டுமே பேசியுள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதையும் அமெரிக்கா ஒப்புக் கொண்டது.
தற்போது இந்தியாவின் வளர்ந்து வரும் செயல் உத்தி முக்கியத்துவம் காரணமாக கனடாவின் நலன்கள் பலவீனமாக இருப்பதாக நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். இதுதான் கனடாவின் இப்போதைய பிரச்சனை என்று அவர்கள் கூறினர்.
“அமெரிக்கா, பிரிட்டன், மேற்குலக நாடுகள் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள கூட்டாளிகளும், சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை முறியடிக்க வகுத்துள்ள உத்தியில், இந்தியாவின் இடம் முக்கியமானது. இது ஒரு முக்கியமான விஷயம். தனது ஒரு கூட்டாளிக்காக அதை அவர்களால் விட்டுக்கொடுக்க முடியாது,” என்று கனடா இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சியாளர் சேவியர் டெல்காடோ கூறுகிறார்.
ஃபைவ் ஐஸ் கூட்டாளிகளிடையே இந்த விவகாரம் தொடர்பான உளவுத்துறை தகவல்கள் பகிரப்பட்டதை, கனடா தொலைக்காட்சியான சிடிவி ந்யூஸுக்கு அளித்த பேட்டியில், கனடாவிற்கான அமெரிக்க தூதர் டேவிட் கோஹேன் உறுதிப்படுத்தினார்.
ஆனால் இந்தக் கூட்டணியின் அதே கூட்டாளிகள் தொடர்பான அறிக்கை குறித்துக் கேட்டபோது, ’தூதர்களின் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்று கூறி கேள்விக்கு பதிலளிப்பதை அவர் தவிர்த்தார்.
இந்த கொலையை பகிரங்கமாக கண்டிக்குமாறு கனடா எல்லா நட்பு நாடுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
தற்போதைய உலக சூழலில் கனடாவின் நிலை
ஆனால் இந்த விஷயம் தொடர்பாக உலகளவில் காணப்படுகின்ற மௌனம், உலக அரங்கில் கனடாவின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது போலத்தெரிகிறது. கனடா மேற்கத்திய நாடுகளின் நம்பகமான கூட்டாளி என்றாலும் கூட அது உலகில் ஒரு பெரிய சக்தி அல்ல.
“இது பலவீனத்தின் தருணம். நாம் பார்ப்பது ஒரு பவர் ப்ளே. கனடா அனைவரின் கண்மணியாக இருக்குமென்று சொல்லக்கூடிய நேரம் இதுவல்ல. இன்றைய காலகட்டத்தில், முடிவெடுப்பதற்குப் பின்னால் பலம், வலிமை மற்றும் பணம் உள்ளது, இவை கனடாவிடம் இல்லை,” என்று கனடா இன்ஸ்டிடியூட் இயக்குனர் கிறிஸ்டோஃபர் சாண்ட்ஸ் குறிப்பிட்டார்.
ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், கனடா மண்ணில் வேறொரு நாடு அரசியல் படுகொலை செய்த விவகாரமாக அது ஆகிவிடும் என்பதால், இந்தியாவை பகிரங்கமாக குற்றம் சாட்டும் ஜஸ்டின் ட்ரூடோவின் முடிவு நியாயமானது என்று இந்தியாவுக்கு வெளியே சிலர் கருதுகின்றனர்.
எனினும் கனடாவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பாதகமான நிலைமையை மாற்றுவதற்கு இந்த அறநெறி போதுமானதாக இருக்குமா என்று கூற முடியாது.
ட்ரூடோவைப் பொருத்தவரை இந்த புவிசார் அரசியல் யதார்த்தம் கண்முன்னே வந்தது. ஒருபுறம், குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு சில நாட்கள் அவர் தனித்து விடப்பட்டார். மறுபுறம், இந்தியாவுடனான கனடாவின் தூதாண்மை மோதல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இந்தியாவின் உயர்மட்ட தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கனடாவின் உயர்மட்ட அதிகாரி ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்தியாவும் உத்தரவிட்டது.
கனடாவில் வசிக்கும் தனது குடிமக்களுக்கு இந்தியா பயண ஆலோசனையை வழங்கியது. கனடாவில் உள்ள இந்திய தூதரகம் விசா சேவைகளை நிறுத்தியது. “செயல்பாட்டு காரணங்களால், சேவைகள் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளன” என்று அது கூறியது.

பட மூலாதாரம், Getty Images
ட்ரூடோவிற்கு உள்நாட்டில் அதிகரித்து வரும் சிரமங்கள்
கனடாவின் இந்த நீண்ட கோடை காலத்தில் இந்த வாரம் ட்ரூடோவுக்கு மிகவும் கொந்தளிப்பாக இருந்தது.
பண வீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் ஏற்கனவே கனடாவில் உள்ள மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இதற்கிடையில் கனடாவில் நடந்த தேர்தலில் சீனாவின் தலையீடு இருப்பதாக கூறப்படும் செய்தி வெளிவந்தது. இது பற்றி ட்ரூடோவும் அவரது அமைச்சரவை சகாக்களும் ஏற்கனவே அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இதற்கிடையில், கனடாவின் மிகவும் மோசமான தொடர் கொலைகாரன் பால் பெர்னார்டோ, ’நடுத்தர பாதுகாப்பு’ கொண்ட சிறைக்கு மாற்றப்பட்ட செய்தி வந்தது. இந்த விஷயத்தில் ட்ரூடோ மீண்டும் விமர்சகர்களின் தாக்குதலுக்கு உள்ளானார்.
செப்டம்பர் மாதத்திற்குள் ட்ரூடோவின் மதிப்பீடு மூன்று வருடங்களில் மிகக் குறைந்த அளவுக்கு சரிந்தது. 2015 தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான ட்ரூடோவை மீண்டும் பிரதமர் பதவியில் பார்க்க விரும்பவில்லை என்று ஆய்வில் கலந்துகொண்ட 63 சதவிகித கனடா குடிமக்கள் தெரிவித்தனர்.
“அவரது எட்டு ஆண்டு கால ஆட்சியில், அவர் இவ்வளவு கீழ் மட்டத்தில் இருந்ததில்லை. அவர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற முடியுமா, அவர் ராஜினாமா செய்ய வேண்டுமா என்று அவரிடம் நேரடியான கேள்விகள் கேட்கப்படுகின்றன,” என்று ஆங்கஸ் ரீட் இன்ஸ்டிடியூட் என்ற ஆய்வுக் குழுவின் தலைவர் சாச்சி கர்ல் கூறினார்.
முன்னாள் பிரதமரின் மகனான ஜஸ்டின் ட்ரூடோ, பிஎம்ஓ அலுவலகத்தை அடைய கீழ் மட்டத்திலிருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 2015ல் அபார பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.
”கனடாவின் அரசியலில் முன்பு யாருக்குமே இருந்திராத அளவிற்கு அவரது பிரபலம் மிக அதிகம். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரது புகழ் மேலும் அதிகரித்தது,” என்று குளோப் அண்ட் மெயில் செய்தித்தாளின் தலைமை அரசியல் நிருபர் கேம்ப்பெல் கிளார்க் கூறுகிறார்,
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் மனதில் போதும் என்ற உணர்வு வந்துவிட்டதாகத் தெரிகிறது. இப்போது ட்ரூடோவின் ’விண்மீன் பவர்’, குறைந்துவிட்டதாக குறிப்பாக சமீபத்திய மாதங்களில் அது மேலும் சரிந்துவிட்டதாக மக்கள் உணர்கிறார்கள்.
உலக அரங்கில் ஜஸ்டின் ட்ரூடோ தனிமைப்படுத்தப்பட்டதாகத் தோன்றினாலும், இந்தியா தொடர்பான இந்த சர்ச்சை உள்நாட்டில் அவருக்குப் பயனளிக்கும் என்று பலர் கருதுகின்றனர்.
“இந்த சர்ச்சையின் காரணமாக நாட்டிற்குள் எழுப்பப்படும் கேள்விகளிலிருந்து தப்பிப்பது அவருக்கு எளிதாக இருக்கும்.” என்று காம்ப்பெல் கிளார்க் கூறுகிறார்.
ஆனால் கடந்த வார இறுதி ட்ரூடோவுக்கு அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. வார இறுதியில் அவர் யுக்ரேன் அதிபர் விலோதிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். அவர் நடப்பு காலத்தின் மற்றொரு பெரிய பிரபலம்.
இருவரும் கனடா-யுக்ரேன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வாரத்தின் கடைசி நாளை ட்ரூடோ தனது ஒரு நல்ல கூட்டாளியுடன் செலவிட்டார் என்றே சொல்லலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com