Press "Enter" to skip to content

காலிஸ்தான் இயக்கத்தால் கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகளுடனான இந்திய உறவில் என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், Getty Images

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜுன் மாதம் கனடாவில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இந்திய ஏஜென்டுகளின் பங்கு இருப்பதற்கான “நம்பத் தகுந்த” ஆதாரங்கள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்த பின் இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே கசப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கியது.

இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டதுடன் ஒரு பதற்றமான நிலை காணப்படுகிறது. கனடாவைத் தவிர, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் சீக்கியர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இந்நாடுகளில் இந்திய தூதரகத்தின் முன்பாக சீக்கியர்கள் பங்கேற்ற போராட்டங்களும் அண்மைக் காலங்களில் நடந்துள்ளன. உண்மையில் இந்தப் போராட்டங்கள் எதைக் காட்ட விரும்புகின்றன என்றும், இந்தியாவுடனான இந்நாடுகளின் உறவை இப்போராட்டங்கள் எப்படி பாதிக்கப்போகின்றன என்றும் பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர்.

“காலிஸ்தான் பிரச்னை நீண்டகாலமாக மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் உறவில் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் 2020-21 விவசாயிகள் போராட்டங்கள் மற்றும் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்குப் பின்னர் இது மோசமடைந்துள்ளது. இந்தியா தனது இறையாண்மையை குறைத்து மதிப்பதாக குற்றம் சாட்டும் கனடாவின் போக்கு, இருதரப்பு உறவுகளை ஆழமான நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது,” என்கிறார் லண்டனில் உள்ள SOAS பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகளை கற்பிக்கும் அவினாஷ் பாலிவால்.

இந்தியாவிற்கு வெளியே அதிக சீக்கிய மக்கள் தொகை கொண்ட நாடு கனடா. அங்கு மொத்த சீக்கியர்களின் எண்ணிக்கை சுமார் 7.8 லட்சம். இது மொத்த மக்கள்தொகையில் 2% ஆகும்.

2022-23 ஆம் ஆண்டில் கனடாவுடனான வர்த்தகம் 4,109 மில்லியன் டாலர்களாக இருந்தது, இது முந்தைய நிதியாண்டை விட 9 சதவீதம் அதிகம் என்று இந்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

காலிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

கனடாவில் இந்திய புலம்பெயர்ந்தோர்

2018 முதல், கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான மிகப்பெரிய ஆதார நாடாக இந்தியா இருந்து வருகிறது. அங்கு இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2022 இல் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்து சுமார் 3,20,000 ஆக இருந்தது.

கடந்த 2021-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட கனடா நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 எம்.பி.க்கள் உள்ளனர். கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவராக ஜக்மீத் சிங் செயல்பட்டு வருகிறார்.

அனிதா ஆனந்த் மற்றும் மூன்று இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் முந்தைய அரசில் அமைச்சராக இருந்தனர். தற்போதைய அரசில் தேசிய பாதுகாப்பு அமைச்சராக சஜ்ஜன் மற்றும் கமல் கெரா ஆகிய இருவருடன் அவர் தொடர்ந்து அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.

“இந்தோ-கனடா சமூகம் இங்கு அரசியல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகிறது. எல்லா கட்சிகளும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. அவர்கள் மிகவும் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்களாகவும், அரசியல் ரீதியாக சுறுசுறுப்பாகவும் உள்ளனர்,” என்று கனடாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஷமீல் கூறினார்.

காலிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

காலிஸ்தான் தொடர்பான அரசியல் செயல்பாடுகள்

1980களில் இருந்து கனடாவில் காலிஸ்தானுக்கு ஆதரவாக அல்லது அது தொடர்பான பிரச்னைகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார். அவர் பிபிசியிடம் பேசிய போது, பஞ்சாப்பை தளமாகக் கொண்ட, சீக்கிய மதகுருவாக தன்னை அறிவித்துக்கொண்ட அம்ரித்பால் சிங்கை கைது செய்யக் கோரி மார்ச் மாதப் போராட்டத்திற்குப் பின், “பஞ்சாபில் ஏதாவது நடக்கும்போதெல்லாம் காலிஸ்தான் ஆதரவு பற்றிய கருத்துக்கள் வெளிப்படும் போது உற்சாகமடையும் ஒரு பிரிவினர் இச் சமூகத்தில் எப்போதும் இருந்திருக்கிறார்கள்,” என்றார்.

எனவே, ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணத்தைத் தொடர்ந்து பலர் வீதிகளில் இறங்கினர். ஜூலை 8 அன்று, நூற்றுக்கணக்கானோர் அவரது மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுமட்டுமின்றி அவர்களுக்கு எதிராகவும், இந்திய அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் சிறிய அளவில் போராட்டங்கள் நடந்தன.

இரு தரப்பினரும் பல மணி நேரம் தடுப்புகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்த போதும், ஒருவரையொருவர் எதிர்த்துக் கூச்சலிட்டனர். அப்போது தடுப்புக்களை உடைக்க முயன்ற ஒரு காலிஸ்தான் சார்பு ஆர்ப்பாட்டக்காரர் கைது செய்யப்பட்டார். வார இறுதிக்கு முன்பே, எதிர்ப்பு பற்றி கவலைகள் எழுப்பப்பட்டன.

டொரொன்டோவில் நடைபெற்ற சில போராட்டங்களின் போது காணப்பட்ட விளம்பர ஒட்டிகளில் “Kill India” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், இந்திய தூதரக அதிகாரிகள் கொலைகாரர்கள் என்றும் அவற்றில் கூறப்பட்டிருந்தன.

ஜி 20 சந்திப்பு நடைபெற்ற போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் சந்தித்துக்கொண்டனர். அப்போதே இந்த கசப்புணர்வு துளிர் விட்டதாகத் தெரியவருகிறது. அப்போது கனடா பிரதமரிடம் காலிஸ்தான் போராட்டம் பற்றிக் கேட்டபோது, கனடா எப்போதும் கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் எனத்தெரிவித்திருந்தார். மேலும், அமைதிவழிப் போராட்டங்களை கனடா ஒருபோதும் எதிர்க்காது என்றும் தெரிவித்திருந்தார்.

அதேநேரம், “பிரதமர் நரேந்திர மோதி கனடாவுக்கு எதிரான தனது ஆழ்ந்த கவலையை அப்போதே வெளிப்படுத்தியிருந்தார். மேலும், கனடாவில் காலிஸ்தான் ஆதரவு கருத்துக்கள் பரப்பப்படுவதால் இந்தியாவில் அரசுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கப்படுவது பற்றியும், தீவிரவாத குழுக்கள் புதிதாக உருவாவது பற்றியும் அப்போது அவர் பல்வேறு உண்மைகளை கனடாவுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.” என்று இந்தியாவும் கடுமையாக எதிர்வினையாற்றியது.

காலிஸ்தான்

பட மூலாதாரம், ANI

இருதரப்பு உறவுகள்

“இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்ந்து மோசமடைந்து வருவதாகத் தெரிகிறது” என்று டெல்லியை தளமாகக் கொண்ட இன்ஸ்டிடியூட் ஃபார் கான்ஃப்ளிக்ட் மேனேஜ்மென்ட்டின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் அஜய் சாஹ்னி கூறினார். ” காலிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் புலம்பெயர்ந்த சீக்கிய போராளிக் குழுக்களுக்கு அவர்களின் செயல்பாடுகளை கிட்டத்தட்ட ஊக்குவிப்பதன் மூலம் அதிக ஆதரவை கனடா அளித்து வருகிறது.

மேலும் ட்ரூடோ அரசாங்கம் ஒரு சிறுபான்மை அரசாங்கம் என்பதையும், ஜக்மீத் சிங் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சியால் ஆதரிக்கப்படுகிறது என்பதையும் ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில் புரிந்து கொள்ள முடியும். காலிஸ்தான் போராளிகளுக்கு ட்ரூடோவின் அரசு ஆதரவாக உள்ளது. எனவே, அவரது அன்றாட அரசியல் வாழ்வு காலிஸ்தான் ஆதரவுக்குழுக்களிடம் இருந்தே தொடங்குகிறது என்று நீங்கள் கூறலாம். காலிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், அவர்கள் யாருக்கும் வாக்களிப்பதற்கு முன் பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு மிதவாதிகளைப் போலல்லாமல் ஒரு தொகுதியாக வாக்களிக்க முடியும்” என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்திய அரசின் இயல்புதான் இப்போது பிரச்னையாக உள்ளது. மக்கள் இந்து தேசத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது, சீக்கியர்கள் காலிஸ்தான் ஆதரவு வாதத்தை முன்வைக்கின்றனர். மேலும், ‘நீங்கள் உங்கள் இந்து-ராஷ்டிராவை எடுத்துக்கொண்டு எங்கள் காலிஸ்தான் அல்லது மத அடிப்படையிலான நாட்டை எங்களுக்குத் தாருங்கள்’ என்று அவர்கள் கூறுகிறார்கள்.”

ஜஸ்டின் ட்ரூடோ தனது அணுகுமுறையை மாற்றும் வரை, எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இயல்பு நிலைக்கு வர வாய்ப்பில்லை என்று முன்னாள் தூதர் அனில் திரிகுனாயத் கூறினார்.

“40 ஆண்டுகளாக, காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கனடாவில் அரசியல் ரீதியாக ஆதரிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசாங்கம் போராளிகளின் பட்டியலை அவர்களிடம் சமர்ப்பித்து, அவர்களுக்கு ஆதாரங்களை வழங்கி வருகிறது. ஆனால் எதுவும் நடக்கவில்லை,” என்றார்.

கனடா இந்தியாவுடன் சுமூகமான உறவைப் பேண விரும்பினால், இந்த குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக வைத்ததுடன், தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்காது என்று அவர் கூறினார். இந்தியா வெளிப்படையான பதிலடி கொடுத்ததும், அதன் விளைவு இந்தியாவின் முன் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் கனடா இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது, எப்போதும்”கருத்து சுதந்திரத்தை” பாதுகாப்பதாகக் கூறி வருகிறது.

காலிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவில் இந்திய புலம்பெயர்ந்தோர்

2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் வசிக்கின்றனர் என்ற நிலையில், அதில் 2 லட்சத்து 39 ஆயிரம் பேர் சீக்கியர்களாக உள்ளனர்.

மேலும், 2016 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, வீட்டில் ஹிந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சத்து ஐம்பத்து ஒன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்து மூன்று பேராக இருந்தது.

மெல்போர்னைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ருச்சிகா தல்வார் கூறுகையில், “கடந்த பல தசாப்தங்களாக ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும் அதிகரித்து வருகின்றனர். அவர்கள் மற்ற துறைகளில் இருப்பதைப் போலவே அரசியலிலும் அதிகமாகக் காணப்படுகின்றனர். மருத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அவர்களின் நிபுணத்துவம் அனைத்து ஆஸ்திரேலியர்களிடையேயும் பொதுவான பேச்சாக உள்ளது. கூட்டாட்சி மற்றும் மாநில மற்றும் பிரதேச அளவில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியர்களாக உள்ளனர்,” என்றார்.

இருப்பினும், கனடா மற்றும் இங்கிலாந்துடன் ஒப்பிடுகையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் ஆஸ்திரேலிய அரசியலில் முக்கிய இடத்தைப் பெறவில்லை. லிசா சிங் டாஸ்மேனியாவின் செனட் உறுப்பினரானார். நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட டேனியல் முகே, சமீபத்தில் பொருளாளராகப் பதவி உயர்வு பெற்று, பகவத் கீதையின் மீது பதவி பிரமாணம் எடுத்த ஆஸ்திரேலியாவில் முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்திய அரசின் தரவுகளின் படி, 2022-23 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுடனான வர்த்தகம் 6,951 மில்லியன் டாலர்களாக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 16 சதவீதம் குறைவாக இருந்தது.

காலிஸ்தான்

பட மூலாதாரம், FB/VIRSA SINGH VALTOHA

காலிஸ்தான் தொடர்பான செயல்பாடுகள்

ருச்சிகா தல்வார் தொடர்ந்து கூறுகையில், “ஆஸ்திரேலியா-இந்தியா உறவுகள் காலிஸ்தான் குறித்த பேச்சுக்களால் பாதிக்கப்படவில்லை. காலிஸ்தானின் தேவையை உயர்த்தும் முன்னணி அமைப்பான SFJ, இந்த ஆண்டு மெல்போர்ன், சிட்னி மற்றும் பிரிஸ்பேன் ஆகிய இடங்களில் பொதுவாக்கெடுப்பு என அழைக்கப்படும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, மே மாதம் தனது ஆஸ்திரேலியா பயணத்தின் போது, ​​சீக்கிய பிரிவினைவாதிகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் உள்ளூர் இந்துக் கோயில்களை இழிவுபடுத்துவது குறித்து தனது அரசாங்கத்தின் கவலைகளைப் பகிர்ந்து கொண்டதாக சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிட்டார். இந்தியாவின் நலன்களுக்கு எதிரான இதுபோன்ற செயல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உறுதியளித்தார்,” என்றார்.

இந்தியா-கனடா இடையிலான மோதலை ஆஸ்திரேலியா தூரத்தில் இருந்து பார்த்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

“கனடாவின் குற்றச்சாட்டுகள் ஆழமானவை என்று ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்கின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. மேலும் அது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டதாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் வர்த்தகம், கல்வி, சுற்றுலா மற்றும் பாதுகாப்பு போன்ற பல முனைகளில் கூட்டாளிகளாக உள்ளன. மேலும், அவர்கள் குவாட் அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளனர்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தங்கள் பிடியை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நான்கு நாடுகளின் மூலோபாய கூட்டணியாக இந்நாடுகள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மற்றவர்களை விட அதிகமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,” என்றார்.

காலிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

காலிஸ்தான் தொடர்பான குறிப்பிடத்தக்க சம்பவங்களில் ஒன்று சமீபத்தில் ஜூலை மாதம் நடந்தது. பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை எதிர்த்ததற்காக ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் 23 வயது இந்திய மாணவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதாக ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.

சிட்னியின் மேற்கு புறநகர்ப் பகுதியான மெர்ரிலேண்ட்ஸில் அந்த மாணவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது “காலிஸ்தான் ஜிந்தாபாத்” என்று கோஷமிட்டபடி அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

“இன்று காலை 5.30 மணியளவில் நான் வேலைக்குச் செல்லும் போது, ​​4-5 காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்னைத் தாக்கினர்,” என்று பெயர் வெளியிட விரும்பாத மாணவர் ஒருவரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகின.

“நான் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவுடன், இந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கு வந்தனர். அவர்களில் ஒருவர் எனது வாகனத்தின் இடது பக்க கதவைத் திறந்து, என் இடது கண்ணின் கீழ் என் கன்னத்தில் இரும்புக் கம்பியால் தாக்கினார், ”என்று அவர் கூறியிருந்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள் மீது இந்தியாவுக்கு எதிரான சில தாக்குதல்கள் பதிவாகியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே பதற்றம் ஏற்பட்டது. காலிஸ்தான் ஆதரவு சக்திகளின் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்துமாறு ஆஸ்திரேலியாவை இந்தியா கேட்டுக் கொண்டது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில காவல்துறை, பிரிஸ்பேன் கோவிலின் வெளிப்புறச் சுவரைச் சிதைத்தது தொடர்பான விசாரணையின் ஆவணங்களை மார்ச் மாதம் வெளியிட்டது.

இருப்பினும், ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுயின் பொதுச் செயலாளர் குர்சரண் சிங் கிரேவால் ஒரு காணொளி அறிக்கையில், “பிரிஸ்பேனில் உள்ள ஒரு இந்து கோவிலின் சுவர்களில் காலிஸ்தான் வாசகங்களை எழுதிய சம்பவங்களில் கோயிலுடன் தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர் என்று ஆஸ்திரேலிய காவல் துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர். இதில் இந்துக்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற வார்த்தையை அவர்கள் (காவல்துறையினர்) பயன்படுத்தியுள்ளனர். இது கவலையளிக்கும் விதத்தில் உள்ளது. வாசகங்கள் எழுதப்படுவதற்கு சற்று முன்பு ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) அணைக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எனவே இது போன்ற சில சம்பவங்கள் இரு சமூகத்தினரிடையே பதற்றத்தை அதிகரித்தன.

காலிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

இருதரப்பு உறவுகள்

“இந்த வகையான விஷயங்கள் நாடுகளுக்கு இடையே விரும்பத்தகாத தன்மையை உருவாக்குகின்றன, ஆனால் இவை எதுவும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை பாதிக்கும் அளவில் இல்லை” என்று அஜய் சாஹ்னி கூறுகிறார்.

“காலிஸ்தான் சித்தாந்தத்தின் செல்வாக்கின் கீழ் அல்லது அரசால் திட்டமிடப்பட்ட இந்துத்துவா சித்தாந்தத்தின் செல்வாக்கின் கீழ் சிலரின் சிறு குற்றங்களாக மட்டுமே இவை பார்க்கப்படுகின்றன. காலிஸ்தான் ஆதரவு தொடர்பான பிரச்னை ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு அரசியல் பிரச்னையாக மாறவில்லை என்று நான் நினைக்கிறேன்.”

ஆஸ்திரேலியாவுடன் வர்த்தகம் மற்றும் பிற விஷயங்கள் வழக்கம் போல் தொடர்கின்றன என்று அனில் திரிகுனாயத் கூறுகிறார். “இந்த சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசாங்க உறவுகளைப் பாதித்ததாக நான் நினைக்கவில்லை. கடந்த 2008ம் ஆண்டு மோசமான நிலையில் கோவில்களில் சம்பவங்கள் நடந்துள்ளன. அப்போது, போதிய பாதுகாப்பு அம்சங்கள் கவனிக்கப்படும் என்று அவர்களின் அரசு இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளது.”

காலிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டனில் சீக்கியர்கள்

பிரிட்டனில் சுமார் 5.24 லட்சம் சீக்கியர்கள் வசிக்கின்றனர், இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

இந்தியா மற்றும் பிரிட்டனுக்கு இடையேயான வர்த்தகம் 2022-23ல் 11,406 மில்லியன் டாலர்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

2020 ஆம் ஆண்டின் இந்திய தூதரகத்தின் அறிக்கையின்படி, இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் இந்தியர்கள் வசிப்பதாகத் தெரியவந்துள்ளது. 65,000 க்கும் மேற்பட்ட இந்திய புலம்பெயர்ந்தோருக்கு சொந்தமான நிறுவனங்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. “இதில், நாங்கள் ஆய்வு செய்த 654 நிறுவனங்கள் £36.84 பில்லியனுக்கும் அதிகமான வருவாய் ஈட்டியுள்ளன. மேலும், £1 பில்லியனுக்கும் அதிகமான வரி செலுத்துகின்றன.”

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினரான தாதாபாய் நௌரோஜி, 1892-95 வரை லிபரல் டெமாக்ராட் உறுப்பினராக இருந்தார். இந்திய புலம்பெயர்ந்தோர் பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டில், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சபையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 உறுப்பினர்களும், ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் சபையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 சகாக்களும் இருந்தனர். தற்போதைய பிரதமர் ரிஷி சூனக் கூட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

காலிஸ்தான்

பட மூலாதாரம், STEFAN ROUSSEAU-WPA POOL/GETTY IMAGES

காலிஸ்தான் தொடர்பான செயல்பாடுகள்

கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மரணம் அடைந்தது போல், பிரிட்டனிலும் சமீபத்தில் காலிஸ்தான் சார்பு தலைவர் ஒருவர் இறந்தார். காலிஸ்தான் விடுதலைப் படையின் தலைவர் என்று கூறப்படும் அவதார் சிங் கந்தா, பர்மிங்காமில் இறந்தார். அவர் இறந்த சூழ்நிலை “மர்மமான சூழ்நிலைகள்” என்று வர்ணிக்கப்பட்டது, சிலர் விஷம் கொடுத்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகின்றனர்.

அண்மை மாதங்களில் லண்டன் பல போராட்டங்களைக் கண்டுள்ளது, இதில் மார்ச் 19 அன்று, காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித் பால் சிங்கைக் கைது செய்ய பஞ்சாப் காவல்துறை தேடுதலை தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே, அந்த கட்டிடத்தின் முதல் மாடி பால்கனியில் இருந்து இந்தியக் கொடியை ஒருவர் கீழே இழுக்க முற்பட்டது தொடர்பான காணொளிக்கள் வெளியாகின.

கனடாவின் சமீபத்திய குற்றச்சாட்டு குறித்து பிரிட்டன் பதிலளித்துள்ளது, அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “அனைத்து நாடுகளும் இறையாண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும். கனடா நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் கனடா அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். இதில் முக்கியமானது என்னவென்றால், கனடாவின் விசாரணை அதன் போக்கில் சென்றுகொண்டிருக்கிறது. குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்,” எனப் பதிவிட்டுள்ளார்.

காலிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா – பிரிட்டன் இருதரப்பு உறவு

ஆனால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சூனக் தலைமையில், பல நிபுணர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக நினைக்கவில்லை. “உண்மையில் ஜி20 மாநாட்டின் போது, ​​இந்தியாவுக்கு விரோதமாக எந்த சட்டவிரோத நடவடிக்கைகளும் பிரிட்டனில் நடக்க அனுமதிக்கப்படாது என்று உறுதியளித்தார்” என்று முன்னாள் தூதர் அனில் திரிகுனாயத் கூறினார்.

“இந்த உறவு மிகவும் நேர்மறையானது என்பதுடன் இந்தியா அவர்களிடம் அசாதாரண எதிர்பார்ப்புகளை கொண்டிருக்காத வரை இந்த உறவுகள் மேம்படுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை,” என்று அஜய் சாஹ்னி கூறினார். “இந்தியாவுக்கு எரிச்சலூட்டும் அனைவரையும் கைது செய்து தங்கள் நாட்டுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை இங்கிலாந்து மேற்கொள்ளும் என்று இந்தியா எதிர்பார்க்காததைப் போல, எந்த மேற்கத்திய நாடுகளிடமும் அசாதாரணமான அல்லது நடைமுறைச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை. உண்மையில் அவர்களிடமிருந்து இந்தியா எதை விரும்புகிறது என்றால், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பது மட்டுமே.

சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள் சில எதிர்மறை விஷயங்களை உள்ளடக்கியதைப் போல் தெரிவதாக சில நிபுணர்கள் கவலை தெரிவித்தனர். “இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே இந்த மோதல் இங்கிலாந்து மற்றும் மேற்கு நாடுகளுக்கு எவ்வளவு பெரிய பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும், ஆனால் கவலைக்குரியது சாதாரண குடிமக்கள் மீதான அதன் தாக்கம் தான். உதாரணமாக இங்கு கனடாவில், பலர் உண்மையில் இந்தியாவுக்கு பயணம் செய்யவேண்டுமா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். மேலும் பல இந்தியர்கள் கனடாவுக்குச் செல்வது குறித்தும் முடிவெடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இது நிச்சயமாக இந்த நாட்டு மக்களுக்கு நல்லதல்ல,” என்கிறார் ஷமீல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »