பட மூலாதாரம், Getty Images
சீக்கிய தலைவர் கொலை தொடர்பான பிரச்சினையால், இந்தியா – கனடா இடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சீக்கிய அமைப்பு ஒன்று ‘கனடாவில் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த இந்துகளுக்கு கனடாவில் இடமில்லை, இங்கிருந்து வெளியேற வேண்டும்,’ எனக் கூறி வீடியோ வெளியிட்டிருந்தது.
கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்ததுடன், இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியது.
கனடாவின் குற்றச்சாட்டை மறுத்த இந்திய அரசு, கனடா தூதரகத்தின் அதிகாரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டதுடன், கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்தச்சம்பவங்களால் கனடா – இந்தியா உறவுக்கிடையில் விரிசல் ஏற்பட்டு, இருநாட்டு மக்களிடையே பதற்றம் நிலவுகிறது. கனடா அரசின் அதிகாரப்பூர்வ தகவலின் படி, 17 லட்சம் இந்தியர்கள் கனடாவில் வசித்து வருகின்றனர். இதில், 8 லட்சம் இந்துக்கள் உள்ளனர்.
காணொளி வெளியிட்ட காலிஸ்தான் அமைப்பு

பட மூலாதாரம், Getty Images
இப்படியான நிலையில், Sikhs for Justice (SFJ) என்ற காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த குர்பத்வந்த் சிங் பண்ணு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “கனடாவிலுள்ள இந்துகள் கனடாவுக்கு விசுவாசத்தை நிரூபிக்க வேண்டும் அல்லது இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல வேண்டும். காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் கனடாவுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், இங்குள்ள அரசியலமைப்புச் சட்டத்தை நம்புகிறார்கள். ஆனால், இந்திய கனேடிய இந்துகளே, நீங்கள் கனடாவிற்கும் கனடாவின் அரசியலமைப்பிற்கும் உங்கள் விசுவாசத்தை உறுதியளிக்க மறுத்துவிட்டீர்கள். இப்போது, உங்கள் இலக்கு இந்தியாதான், கனடாவை விட்டு வெளியேறி, இந்தியாவுக்குச் செல்லுங்கள்,” என, மிரட்டும் தொனியில் காணொளியை வெளியிட்டார்.
இந்த வீடியோ வேகமாக பரவி பதற்றச் சூழலை உருவாக்கிய நிலையில், இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய கனடா அரசின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகம், பதிவுகளை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது.
அவற்றில், “கனடாவில் உள்ள இந்துகளை வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இது மிகவும் புண்படுத்தும் மற்றும் வெறுப்பை உருவாக்கும் செயல். இது கனடியர்களுக்கும், நமது மதிப்புகளுக்கும் அவமானம். கனடாவில் வெறுப்பு பிரச்சாரம், பாகுபாடு தூண்டுதல், பயத்தை பரப்புதல் மற்றும் மிரட்டல்களுக்கு இடமில்லை. கனடாவில் மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மதித்து, சட்டத்தின் கீழ் வாழுங்கள். இங்கு பாதுகாப்பாக வாழ அனைத்து சமூகத்தினரும் தகுதியானவர்கள்,’’ என்று தெரிவித்திருந்தது.
பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம்

பட மூலாதாரம், Getty Images
காலிஸ்தான் வீடியோ வெளியான பின், ‘ஹிந்து ஃபோரம் கனடா’ என்ற அமைப்பு, கனடா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லெப்லாங்கிற்கு கடிதம் எழுதியது.
அதில், ‘‘காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் வழக்கறிஞர் குர்பத்வந்த் சிங் பன்னு, இந்திய – கனடியர்களை குறிப்பாக இந்துகளை குறி வைத்து கூறியதை, அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், அச்சுறுத்தல் செயலாக கருத வேண்டும்,’’ என்று தெரிவித்திருந்தனர்.
கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட எம்.பி சந்திரா ஆர்யா, ’‘கனடாவில் உள்ள இந்துகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காலிஸ்தான் ஆதரவு தலைவர்கள், கனடாவில் இந்துகளையும் சீக்கியர்களையும் பிரிக்கும் முயற்சியாகவே இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக நான் கருதுகிறேன்,’’ என்று கூறியிருந்தார்.
‘இந்துகள் பாதுகாப்பாக இருக்கின்றனர்’
இத்தகைய சூழல்களுக்கு மத்தியில், கனடாவில் தற்போது இந்துகள் பாதுகாப்பாக உள்ளார்களா? காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்துகளுக்கு பிரச்சினைகள் ஏதேனும் உள்ளதா? இந்துகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா? என, கனடா வாழ் இந்துகளிடம் பிபிசி தமிழ் விசாரித்தது.
டொரண்டோவில் ஐ.டி துறையில் மேலாளராக உள்ள அனுராதா சந்திரசேகர், கனடாவில் இந்து – சீக்கியர் எந்தவித கசப்புணர்வும் இல்லை மாறாக, இரு சமூகத்துக்குள்ளும் ஆழமான அன்பு தான் உள்ளது என்கிறார்.
இதை விளக்கிய அனுராதா சந்திரசேகர், ‘‘நான் பணிக்காக மட்டுமே தினமும், 50 கிலோ மீட்டர் தொடர் வண்டிமற்றும் பேருந்தில் பயணிக்கிறேன். மேலும், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது, வெளியில் செல்வது என பல இடங்களுக்கும் பயணிக்கிறேன். இந்தியா – கனடா பிரச்சினை எழுந்த பின்னும், இந்துகளுக்கு எதிரான வீடியோ வெளியான பின்பும் கூட, இங்கு சாதாரண சூழல் தான் நிலவுகிறது. இந்துகள் மீது எந்த சீக்கியர்களும் தாக்குதல் நடத்துவதோ, வெறுப்பு பேச்சு பேசுவதோ இல்லை. தற்போது, அனைத்து சமூகத்தினரும் மிகவும் சாதாரணமாக, அன்பாகத் தான் வாழ்ந்து வருகின்றனர்.
சீக்கியர்களுக்கு இங்கு இந்துகள் மீது வெறுப்பு இல்லை, மாறாக அதீத அன்பு தான் உள்ளது. 4 நாட்களுக்கு மேலாக டொரண்டோ சுற்றுப்பகுதியில், விநாயர் சதுர்த்தி விழாவை, இந்துகளும், சீக்கிய மக்களும் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்துகளுக்கு கனடாவில் பாதுகாப்பு இல்லை என்பதெல்லாம், என்னைப் பொருத்தவரையில் கட்டுக்கதை தான்,,’’ என்கிறார் அனுராதா சந்திரசேகர்.
விநாயகர் சதுர்த்தியில் சீக்கியர்கள்

பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழிடம் பேசிய கனடாவின் ஆண்டாரியோ நகரில் வசித்து வரும் நடராஜ் ஸ்ரீராம், ‘‘தமிழ்நாட்டில் ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மீது தாக்குதல் நடந்தால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் அந்த சமூக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று சொல்ல முடியாதல்லவா? அதுபோலத்தான், இங்கு காலிஸ்தான் ஆதரவாளர் சமூக வலைதளத்தில் இந்துகளுக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்ததற்காக, கனடாவில் ஒட்டுமொத்த இந்துகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது என்று கூற முடியாது. ஏனெனில் கனடாவில் இந்துகளும் சீக்கிய மக்களும் அன்பால் பிணைக்கப்பட்டு, நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்,’’ என்கிறார் அவர்.
இந்துகள் – சீக்கியர்கள் அன்பால் பிணைக்கப்பட்டு இருப்பதற்கு சான்றாக சில சம்பவங்களை முன்வைக்கிறார் அவர்.
‘‘நான் செப்டம்பர் 23ம் தேதி, டொரண்டோவில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றேன். ஆயிரக்கணக்கான இந்துகளும், சீக்கிய மக்களும் ஒன்றிணைந்து மூன்று நாள் தொடர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். இசை நிகழ்ச்சியில் நடனமாடியவர்களில் பெரும்பாலானோர் ‘தஸ்தர்’ எனப்படும் தலைப்பாகை அணிந்த சீக்கியர்களாக இருந்தனர். இதிலிருந்தே இந்துகள், சீக்கியர்களின் பிணைப்பு, வாழ்க்கை முறையையும், தற்போது இந்துகள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். நான் சீக்கிய மக்கள் இருக்கும் பகுதியில் தான் வசிக்கிறேன். இருநாடு பிரச்சினைக்கு முன்பும் சரி, தற்போதும் சரி இதுவரை அவர்கள் என்னை வேறு நபராக பார்த்தே இல்லை,’’ என்றார் நடராஜ் ஸ்ரீராம்.
‘பாகுபாடு கிடையாது’

பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழிடம் பேசிய கனடாவில் உள்ள மூத்த ஊடகவியலாளர் ரமணன் சந்திரசேகர மூர்த்தி, ‘‘காலிஸ்தான் அமைப்பு இந்துகளுக்கு எதிராக வீடியோ வெளியிட்டதும், கனடாவில் இந்துகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது போன்று இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கனடா எம்.பி சந்திரா ஆர்யா மற்றும் சிலர் பேசும் அளவுக்கு நிலை மோசமானதாக இல்லை.
இந்துகள், தமிழர்கள், இந்தியர்கள், சீக்கியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாகுபாடின்றி, அமைதியாகத்தான் உள்ளனர். கனடாவை பொறுத்தவரையில், நிற பாகுபாடு, இந்துகள் மற்றும் சீக்கியர்களுக்கு இடையே பாகுபாடு போன்ற சம்பவங்கள் எப்போதாவது அரிதாக நிகழ்பவை. அரிதாக நடக்கும் சம்பவங்களை முன்வைத்து பாதுகாப்பு இல்லை, அச்சமடைந்துள்ளனர் என்று பேசுவதெல்லாம் ஏற்க முடியாத ஒன்று. அப்படித்தான் காலிஸ்தான் வீடியோவையும் நான் கருதுகிறேன்,’’ என்றார்.
இந்துகள் – சீக்கியர்கள் பிரச்சினை, இந்துகளுக்கு பாதுகாப்பில்லை போன்ற பேச்சுக்களை ஊடகங்கள் கைவிட வேண்டுமெனவும் கோரிக்கையை முன்வைக்கிறார் ரமணன் சந்திரசேகர மூர்த்தி.
‘‘இருநாட்டு பிரச்சினைக்கு மத்தியிலும் அனைத்து தரப்பு மக்களும் மிகப் பாதுகாப்பாக, சாதாரணமாக வாழும் நிலையில், சில யூடியூப் வீடியோ பக்கங்கள், சமூக வலைதள பக்கங்கள் தான், இந்துகளுக்கு பாதுகாப்பில்லை, சீக்கியர்கள் இந்துகளுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர் என்பது போன்ற வெறுப்புப் பிரசாரத்தை மேற்கொண்டு, தாங்கள் பிரபலமாவதற்காக தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.
இருநாட்டு பிரச்சினையால் கனடாவில் இந்துகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற கோணத்தில் கனடாவில் இருக்கும் ஊடகங்கள் எழுதவில்லை. கனடா நாட்டிற்கு வெளியில் இருக்கும் ஊடகங்கள் தான் இவற்றை ஊதிப் பெரிதாக்கி இங்கு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. நான் பார்த்தவரையில் இங்கு இந்துகள் பாதுகாப்பாகத் தான் உள்ளனர். எப்போதும் கனடா அரசு பாகுபாடுகளுக்கு உடனடி முற்றுப்புள்ளி வைத்து அனைத்து தரப்பினரையும் பாதுகாத்து வருகிறது. எனவே தேவையற்ற பதற்றத்தை ஊடகங்கள் உருவாக்காமல் இருப்பது தான் ஆரோக்கியமானது,’’ என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com