Press "Enter" to skip to content

இந்தியா – துருக்கி இடையே என்ன பிரச்னை? இருநாட்டு உறவில் காஷ்மீரின் பங்கு என்ன?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சுபோஜ்யோதி கோஷ்
  • பதவி, பிபிசி நியூஸ் பங்ளா

கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலகின் பல பெரிய நாடுகளின் தலைவர்களில் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்துவானும் ஒருவராக இருந்தார்.

ஜி20 மாநாட்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோதியுடனான தனது அதிகாரப்பூர்வமான சந்திப்பில், இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் அவர் வலியுறுத்தினார்.

தெற்காசியாவில் துருக்கியின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா இருப்பதாக அப்போது எர்துவான் கூறியிருந்தார்.

பிரதமர் மோடி மற்றும் எர்துவான் சந்திப்புக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (ஐஎம்இசி) என்ற புதிய திட்டத்தை இந்தியா அறிவித்தது.

இந்த அறிவிப்பின் போது, ​​அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.

இத்திட்டத்தின்படி, இந்தியாவின் மேற்குக் கடற்கரை ஐக்கிய அரபு அமீரகத்தின் கடல் மார்க்கமாக இணைக்கப்பட்டு, அங்கிருந்து சௌதி அரேபியா மற்றும் ஜோர்டானுக்கு தொடர் வண்டிமார்க்கமாக வழித்தடம் ஏற்படுத்தப்படும் என்றும், அதன் பிறகு, இஸ்ரேலில் இருந்து கடல் வழியாக ஐரோப்பாவுடன் இணைக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்தியா - துருக்கி உறவு

பட மூலாதாரம், Getty Images

இந்த புதிய வழித்தடத் திட்டம் குறித்த அறிவிப்பால் மிகவும் அதிருப்தி அடைந்த நாடுகளில் ஒன்றாக துருக்கி இருக்கிறது. இந்தியா – ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டத்தை துருக்கி எதிர்க்கிறது. அதிபர் எர்துவானுடன் வந்திருந்த ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது, ​​ “துருக்கியை விட்டுவிட்டு இதுபோன்ற ஒரு வழித்தடத்தை அமைக்கும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அதே நாளில், கிழக்கு ஆசியாவிற்கும் மேற்கு ஐரோப்பாவிற்கும் இடையில் ஏதேனும் புதிய ‘போக்குவரத்து’ முறை உருவாக்கப்பட்டால், அது துருக்கியைக் கடந்துதான் செல்ல வேண்டும் என்ற நிலைமையை அதிபர் எர்துவான் தெளிவுபடுத்தினார்.

இந்த ஜி20 மாநாட்டிற்குப் பின் சில நாட்கள் கழித்து, துருக்கி அதிபர் எர்துவான் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றார். அங்கு உரையாற்றிய போது, கடந்த சில வருடங்களைப் போலவே, எர்துவான் மீண்டும் காஷ்மீர் பிரச்னை குறித்துக் கருத்து தெரிவித்து இந்தியாவைத் தாக்கிப் பேசினார்.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலையைத் தான் அவர் மீண்டும் வலியுறுத்துவதாகவும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்றும் அறிவித்து அவரது அறிக்கையை இந்தியா வழக்கம் போல் நிராகரித்தது. இந்தியா – துருக்கி உறவில் காஷ்மீர் எப்போதுமே முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது.

இதற்கிடையில், துருக்கி அதிபர் எர்துவான் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்திருந்த போது, புகழ்பெற்ற ஜாமா மஸ்ஜித் செல்ல விரும்பியதாகவும், அங்கு ஷாஹி இமாமைச் சந்திக்க விரும்பியதாகவும், ஆனால், அதற்கு இந்தியா அனுமதி அளிக்கவில்லை என்றும் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இந்தியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையே உறவுகள் மேம்பட்டு வருவதாக கருதப்பட்டு வந்த நிலையில், இதன் பின்பு அந்த உறவு மோசமடைந்துவருகிறது.

உண்மையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன என்பதில் சந்தேகமில்லை.

துருக்கியின் அண்டை நாடுகளான இஸ்ரேல், கிரீஸ், சைப்ரஸ் மற்றும் ஆர்மீனியாவுடன் அந்நாட்டு உறவுகள் மோசமாக இருக்கும் நிலையில், அதே நாடுகளுடன் இந்தியா காட்டி வரும் நெருக்கமும் இந்தியா – துருக்கி நாடுகளின் உறவுகள் பின்னடைவைச் சந்திப்பதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியா - துருக்கி உறவு

பட மூலாதாரம், Getty Images

இந்தியா மற்றும் துருக்கி இடையே உறவுகள் மேம்படுவதற்கு காஷ்மீர் பிரச்னை தான் பெரிய இடையூறாக இருக்கிறது என டெல்லியில் உள்ள பல அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

உண்மையில், இஸ்லாமிய உலகில் துருக்கியின் செல்வாக்கையும் மதிப்பையும் அதிகரிக்க எர்துவான் அண்மைக் காலமாக காஷ்மீர் பிரச்சினையில் பெரும் கவனம் செலுத்திவருகிறார். பிற அனைவரையும் விட இந்தப் பிரச்னை பற்றி அவர் அதிகமாகப் பேசிவருகிறார்.

கடந்த ஏழு-எட்டு ஆண்டுகளாக ஐ.நா. பொதுச் சபையில், காஷ்மீரில் இந்தியா நடத்தியதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அவர் தொடர்ந்து பிரச்னை எழுப்பி வருகிறார். அவரது அரசு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்த பிரச்சினையை பலமுறை எழுப்பியுள்ளது.

அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் மேற்கு ஆசிய நிபுணர் கபீர் தனேஜா இது குறித்துப் பேசுகையில், “காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்ட போது, ​​அதைக் கண்டித்து பாகிஸ்தானுடன் சேர்ந்து துருக்கியும் ஒரு முஸ்லீம் நாடாக தன்னை முன்னிறுத்திக் கொண்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், எழுபது ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் ‘காஷ்மீர் மோதலை’ உலக நாடுகள் மறந்துவிட்டன என குற்றம்சாட்டி, காஷ்மீர் பிரச்னையில் பொறுப்புடன் செயல்பட அனைத்து நாடுகளையும் எர்துவான் வலியுறுத்தினார்.

கபீர் தனேஜா மேலும் குறிப்பிடுகையில், “காஷ்மீர் பிரச்னையை புறக்கணித்ததற்காக இஸ்லாமியக் கூட்டமைப்பு மற்றும் சௌதி அரேபியாவையும் விமர்சிக்க எர்துவான் தயங்கவில்லை.

அதே நேரத்தில், பாகிஸ்தானுடனான துருக்கியின் ‘நட்பு’ உறவும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவே இருந்துவருகிறது.

உண்மையில், பாகிஸ்தானில் நான்கு முறை நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ஒரே உலகத் தலைவர் எர்துவான் மட்டுமே. இதில், இரண்டு முறை துருக்கி பிரதமராகவும், இரண்டு முறை துருக்கி அதிபராகவும் பங்கேற்றுள்ளார்.

ஒட்டோமான் ஆட்சியை எர்துவான் தொடர்ந்து பெருமைப்படுத்தி வருவதாகவும், துருக்கியின் இந்த பாரம்பரியத்தை உலக அரங்கில் நிலைநிறுத்த விரும்புவதாகவும், அவரது முயற்சிகளில் பாகிஸ்தான் முக்கிய பங்காளியாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

காஷ்மீர் பிரச்னையில், எர்துவான் ஏன் பாகிஸ்தானின் கருத்தை மீண்டும் கூறுகிறார் என்று யூகிப்பது அவ்வளவு ஒன்றும் கடினமானது அல்ல.

அதே நேரம், நரேந்திர மோதி தலைமையிலான ஒரு இந்துத்துவா அரசியல் சக்தி கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் ஆட்சியில் உள்ளது என்பதுடன், சர்வதேச அரங்கில் ‘புதிய இந்தியா’ எழுச்சியை ஏற்படுத்த மோதி முயன்று வருகிறார்.

இந்த ‘புதிய இந்தியா’விற்கு சர்வதேச உலகம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதுமட்டுமின்றி, ‘காஷ்மீரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடிந்ததே’ அந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்று புதிய இந்தியாவின் தலைமை எப்போதும் கூறி வருகிறது.

அதாவது, இந்தியாவும், துருக்கியும் ஒரே காஷ்மீரை உலக அரங்கில் முற்றிலும் முரண்பட்ட இரண்டு காரணங்களுக்காகப் பயன்படுத்த விரும்புகின்றன. இதுவும் இரு நாடுகளுக்கு இடையேயான கசப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்தியா - துருக்கி உறவு

பட மூலாதாரம், Getty Images

துருக்கியுடன் மோசமான உறவை வைத்துள்ள அண்டை நாடுகளுடனான தனது உறவை வலுப்படுத்த இந்தியா அண்மைக்காலமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவற்றில், இஸ்ரேலுடனான இந்தியாவின் நெருங்கிய உறவுகள் நீண்ட தொலைவுக்குச் செல்கின்றன, ஆனால் இந்தியா அண்மையில் கிரீஸ், சைப்ரஸ் மற்றும் ஆர்மீனியாவுடன் உறவுகளை வளர்க்க பல முயற்சிகளை எடுத்துள்ளது.

கடந்த மாதம், தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றபின் நாடு திரும்பிய நரேந்திர மோதி, அரசு முறை பயணமாக கிரீஸ் சென்றிருந்தார்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

அந்தப் பயணத்தின் சில நாட்களுக்குப் பிறகு, இந்தியா – மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடம் (IMEC) எனப்படக்கூடிய போக்குவரத்துத் திட்டம் டெல்லியில் அறிவிக்கப்பட்டது. இந்த போக்குவரத்துத் திட்டத்தில் ஐரோப்பாவின் கிரீஸ் நாடு ஒரு முக்கியப் புள்ளியாக இணைக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் பரம எதிரியான கிரீஸ் நாடு இந்த வழித்தடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது என்று எர்துவான் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.

மறுபுறம், காஷ்மீர் விவகாரத்தில் கிரீஸ் இந்தியாவை ஆதரிப்பதைப் போல, சைப்ரஸ் விவகாரத்தில் இந்தியாவும் கிரீஸை ஆதரிக்கிறது.

இந்தியா - துருக்கி உறவு

பட மூலாதாரம், Getty Images

ஆர்மீனியாவுக்கு ஜி-டு-ஜி எனப்படும் அரசுகளுக்கு இடையேயான உடன்படிக்கைகளின் கீழ் ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளது. 1915 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலைக்குப் பிறகு துருக்கியுடன் ஆர்மீனியா உறவை முறித்துக்கொண்டது.

இஸ்தான்புல்லைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் பெகிர் சிட்கி சிரின், இந்தியாவின் இந்த புதிய ‘இராஜ தந்திர முயற்சிகளை’ துருக்கி இந்த எல்லா கண்ணோட்டங்களுடன் பார்க்கவில்லை என்று கூறுகிறார்.

அவர் பிபிசி பங்களாவிடம் பேசுகையில், “துருக்கியின் இருப்பிடப் பகுதியில் இந்தியா தனது செல்வாக்கை அதிகரிப்பதன் மூலம், தனக்கு ஏதாவது ஒரு இடையூறை அளிக்க இந்தியா விரும்புவதாக துருக்கி சந்தேகிக்கின்றது” என்று கூறினார்.

துருக்கியைப் போலவே டெல்லியிலும் கிட்டத்தட்ட அதே உணர்வு இருக்கிறது என்கிறார் கபீர் தனேஜா.

காஷ்மீர் பிரச்னையில் நீங்கள் அத்தகைய மோசமான முறையில் செயல்பட்டால், நாங்கள் உங்கள் பகுதிக்கே வந்து அதற்கான இழப்பீட்டை அங்கேயே கொடுப்போம் என்று துருக்கிக்கு செய்தி அனுப்ப இந்தியா மேற்கொண்ட முயற்சியாக இது இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவுடன் கிரீஸ்-இஸ்ரேல்-சைப்ரஸ் ஆகிய நாடுகளின் ‘த்ரீ பிளஸ் ஒன்’ குழுவின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது துருக்கி வழக்கம் போல் மகிழ்ச்சியாக இல்லை என்பதைக் காட்டும் நடவடிக்கையாகும்.

இந்தியா-துருக்கி உறவு

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சிக் காலத்தில், இருதரப்பு பயணமாக ஒருமுறை கூட அவர் துருக்கி நாட்டுக்குச் சென்றதில்லை.

இந்தியாவின் பிரதமராக, அவர் 2015 இல் ஒருமுறை துருக்கிக்கு பலதரப்பு மாநாடான ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றார்.

அதே நேரம், எர்துவான் இருதரப்பு பயணமாக ஒருமுறை மட்டுமே இந்தியா வந்துள்ளார்.

ஆனால் 2017 இல், அந்த பயணத்திற்கு சற்று முன்பு அவர் அளித்த பேட்டியில், காஷ்மீர் பிரச்னையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அவரது அந்த முயற்சி ஒரு வழியில் தோல்வியடைந்தது.

காஷ்மீர் பிரச்னையில் 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தின்படி இந்தியா -பாகிஸ்தான் இடையே இருதரப்பு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இதில் எந்த ஒரு மூன்றாம் தரப்பினரும் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை.

இந்த பயணத்திற்கு முன், எர்துவான் காஷ்மீர் பிரச்னையில் சமரசம் பேச முன்வந்ததன் மூலம் இந்தியாவை அவர் கோபத்துக்கு உள்ளாக்கினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இன்றுவரை சீராகவில்லை. ஆனால் இரு தரப்பிலும் கசப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், துருக்கிய பத்திரிகையாளர் பெகிர் சிட்கி சிரின் கூறுகையில், காஷ்மீர் போன்ற ஒரு முக்கியமான பிரச்சினையில் கூட, சார்பற்ற மத்தியஸ்த நிலையைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என எர்துவான் இன்னும் நம்புகிறார் என்றார்.

“இந்தியாவும் பாகிஸ்தானும் சொல்வதைத் தாண்டி காஷ்மீர் விவகாரத்தில் நடுத்தர தீர்வு சாத்தியம் என்று துருக்கி நினைக்கிறது,” என்கிறார் சிரின்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியர், பாகிஸ்தானியர் அல்லது காஷ்மீரிகள் யாரும் ‘பாதிக்கப்பட மாட்டார்கள்’ என்ற அளவில் ஒரு முடிவை எட்டமுடியும் என்று எர்துவான் நம்புகிறார்,” என்றார்.

இந்த யோசனையை ஏற்பதில் இந்தியாவை அவர் சமாதானப்படுத்தினால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படும் என்பது உறுதி என்றும் அவர் நம்புகிறார்.

இருப்பினும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை மென்மையாக்கும் என்பதற்கான எந்த அறிகுறியையும் தெரிவிக்கவில்லை.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்தது. அதன்பிறகு அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மேலும் வலுவான ஒடுக்குமுறையைக் கையாண்டதாக கூறப்படுகிறது.

எர்துவான் போன்ற பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வமான நண்பர் ‘மத்தியஸ்தராக’ இருக்க இந்தியா எப்போதும் விரும்பாது என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில், துருக்கிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் எதிர்வரும் காலங்களில் ஓரளவு சீராகும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »