Press "Enter" to skip to content

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: இந்தியாவுக்கு எதிராக கனடாவுக்கு அமெரிக்கா மறைமுக ஆதரவா?

பட மூலாதாரம், REUTERS

கனடாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் கோஹன், கனடா செய்தி நிறுவனமான CTV-க்கு சனிக்கிழமை பேட்டி அளித்திருந்தார்.

அப்போது அவர், காலிஸ்தான் இயக்கத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக, ‘Five Eyes Intelligence Alliance’ அமைப்பிடமிருந்து பெறப்பட்ட உளவுத் தகவல்களின் அடிப்படையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட்டார்’ என்று கூறியிருந்தார்.

ஆனால், நிஜ்ஜார் கொலை தொடர்பான தமது குற்றச்சாட்டு குறித்த எந்த ஆதாரத்தையும் கனடா பகிர்ந்து கொள்ளவில்லை என்று இந்தியா கூறி வருகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கனடா எந்த விதமான உளவுத் துறை தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.

‘Five Eyes Intelligence Alliance’ என்ற உளவுக் கூட்டணியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன், கனடா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்த ஐந்து நாடுகளும் உளவுத் தகவல்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றன.

ஜி7 நாடுகள் கூட்டமைப்பில் கனடாவும் உறுப்பினராக உள்ளன. ஆனால் இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனை தவிர பிற நாடுகள் இந்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்க கருத்து எதுவும் கூறவில்லை.

கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தலைவரும், கனேடிய குடிமகனுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசாங்கத்தின் முகவர்களை சுட்டிக்காட்டி, ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சு, இந்தியா – கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியதுடன், கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதைக் கூட இந்தியா நிறுத்தி வைத்துள்ள அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.

உளவுத்துறை தகவலின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வி

நிஜ்ஜார் இந்தியா அமெரிக்கா கனடா உளவுத் துறை

பட மூலாதாரம், REUTERS

இந்த விவகாரம் தொடர்பாக, ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் அண்மையில் செய்தி வெளியாகி இருந்தது. அதன்படி, டெல்லியில் அண்மையில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது, நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான எந்த உளவுத் தகவலையும் கனடாவோ, அமெரிக்காவோ பகிர்ந்து கொள்ளவில்லை என்று பெயர் வெளியிட விரும்பாத, இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கனேடிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜூடி தாமஸ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலை சந்தித்தார். ஆனால் அப்போதும் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவதற்கான எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக கனடா மேற்கோள்காட்டி வரும் உளவுத் துறை தகவல்கள் அல்லது ஆதாரங்கள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், இந்தியாவுக்கு எதிராக கனடாவை அமெரிக்கா மறைமுகமாக ஆதரிக்கிறதா? உளவுத் தகவல் பரிமாற்றத்தின் பின்னணியில் நடப்பது என்ன? என்பன கேள்விகளும் எழுகின்றன.

கடந்த காலங்களில், மேற்கத்திய நாடுகள் வழங்கிய உளவுத்துறை தகவல்களின் நம்பகத்தன்மை குறித்தும் நிபுணர்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுதொடர்பாக, ‘தி எகனாமிஸ்ட்’ என்ற பிரிட்டிஷ் வார இதழின் பாதுகாப்பு செய்தி பிரிவு ஆசிரியர் ஷஷாங்க் ஜோஷி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஒரு மேற்கத்திய அரசாங்கம் சர்ச்சைக்குரிய உளவுத் துறை தகவலை பகிரங்கப்படுத்தும் போதெல்லாம் அது ‘’இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன” என்பதாக உள்ளது. இது எவ்வளவு அர்த்தமற்றது என்பதைப் பற்றி சிறிது நேரம் நாம் சிந்திக்க வேண்டும். அனைத்து உளவுத்துறை தகவல்களும் முழுமையானதல்ல” என்று அவர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “உளவுத்துறை தகவல்களில் நிச்சயமற்ற தன்மையைத் தவிர்ப்பது கடினம். அதனால்தான் இவற்றை மதிப்பீடு செய்ய நிகழ்தகவு முறை பயன்படுத்தப்படுகிறது. இங்கே கூற்றுகளில் தெரிவதை விட கண்ணுக்கு தெரியாதவை நம்பகமானவையாக இருக்கக்கூடும்.

இராக் தொடர்பான உளவுத்துறை தகவல்களில் இதுபோன்ற பல குறைபாடுகள் இருந்தன. இந்தக் குறைபாடுகள் பட்லரின் மதிப்பாய்விலும் காணப்பட்டன. இதைத் தொடர்ந்து, மதிப்பீட்டு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் தலைவர்கள் விரும்பினால், உளவுத்துறை தகவல்களை தவறாகக் குறிப்பிடலாம் என கூறப்பட்டது,” என்கிறார் ஜோஷி.

ஒரு முக்கியமான தகவல் ஏன், எப்படி தவறாக சித்தரிக்கப்படுகிறது என்பதுதான் கவனிக்கத்தக்கது என்று குறிப்பிடுகிறார் ஜோஷி.

உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் இராக் மீது தாக்குதல் நடத்தின. ஆனால் இந்த நாடுகள் ரஷ்யாவைப் பற்றி தற்போது எதுவும் கூறவில்லை. இராக்கிற்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை ரஷ்யாவுக்கு எதிராக மேற்கொள்வதை இந்த நாடுகள் தவிர்க்கின்றன என்று அவர் கூறுகிறார்.

“கனடா விஷயத்திலும் இப்படியே சொல்லலாம். சீக்கிய வாக்காளர்களை மனதில் வைத்து ட்ரூடோ இவ்வாறு கூறியிருக்கலாம். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ட்ரூடோ இதை நாடாளுமன்றத்தில் கூறினார் என்பதுதான்,” என்கிறார் ஜோஷி.

மேலும் அவர் கூறும்போது “உளவுத்துறை தகவல்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்காமல் இந்தியாவைப் பற்றி கனடா இத்தகைய கூற்றுகளை முன்வைத்துள்ளது. இந்த தகவல்கள் சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம்.

ஆனால் அவை தவறாக இருக்கும்பட்சத்தில், இராக் தொடர்பாக கூறப்பட்ட அதே கூற்றுகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல,” என்றும் ஷஷாங்க் ஜோஷி கூறுகிறார்.

அதாவது “இந்தியா -கனடா இடையேயான விவகாரம், இராக் தொடர்பான உளவுத் துறை தகவல்களின் தோல்வியுடன் தொடர்புடையவை அல்ல. உளவுத்துறை மற்றும் அதன் கொள்கைகளை தவறாக சித்தரிப்பது எவ்வளவு பெரிய தீங்கை விளைவிக்கும் என்பதை பற்றியது” என்றும் கூறியுள்ளார் ஜோஷி.

‘இந்தியாவுடன் பகிரப்பட்ட குற்றச்சாட்டுகள் – ஆனால் ஆதாரங்கள் இல்லை’

நிஜ்ஜார் இந்தியா அமெரிக்கா கனடா உளவுத் துறை

பட மூலாதாரம், GETTY IMAGES

இந்தியாவின் புகழ்பெற்ற மூலோபாய நிபுணரான பிரம்மா செல்லானி, மேற்குலகின் உளவுத் துறை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்தியா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக கனடாவும், அமெரிக்காவும் அந்நாட்டுடன் எந்த ஆதாரத்தையும் பகிரவில்லை. இருப்பினும் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்நாடுகள் இந்தியாவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ குற்றம்சாட்டி வருகின்றன. விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

நிஜ்ஜாரின் கொலை தொடர்பான குற்றச்சாட்டுகளை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டேன்; ஆனால் ஆதாரங்கள் இல்லை என்று தான் ட்ரூடோவும் கூறியுள்ளார்.

“கனடா உறுதியான குற்றச்சாட்டுகளை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது” என்று கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ட்ரூடோ கூறியிருந்தார்.

மேலும் இந்த விவகாரத்தில், ‘நம்பகமான குற்றச்சாட்டு’ என்ற வார்த்தையை ட்ரூடோ தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இது முரணாக உள்ளதாகவும் பிரம்மா குறிப்பிடுகிறார்.

“ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ இதுதொடர்பான எந்த ஆதாரத்தையும் கனடா பகிர்ந்து கொள்ளவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெளிவாகக் கூறியுள்ளது.

கனடாவிடம் ஆதாரம் இருந்தால் அதை பகிரங்கமாக வெளியிட வேண்டும். அதன் மூலம் ஊடகங்களில் புனையப்படும் கதைகளை ட்ரூடோ நிறுத்த வேண்டும்,” என்று பிரம்மா செல்லானி வலியுறுத்துகிறார்.

” நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் அமெரிக்க உளவுத்துறை ட்ரூடோவுக்கு தைரியத்தை வழங்கிய விதம், அமெரிக்கா – இந்தியா உறவையும் பாதிக்கலாம்.

ஏனெனில், இந்தியா தனது மூலோபாய சுயாட்சியை விட்டுக் கொடுக்காது. பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்துவது இப்போது கடினமாகிவிட்டது.” என்றும் பிரம்மா செல்லனி கூறுகிறார்.

“இந்தக் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கிறது என்பதை காட்ட அமெரிக்காவோ, கனடாவோ எந்த காணொளி, ஒலிநாடா, தடயவியல் ஆதாரங்களையும் வெளியிடவில்லை” என்கிறார் அவர்.

மோதி அரசு மீது எழும் விமர்சனம்

இதனிடையே, காலிஸ்தான் விவகாரத்தில் மோதி அரசு மீது பாதுகாப்பு நிபுணர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஹர்சரஞ்சித் சிங் பனாக், ‘இந்தியன் எக்ஸ்பிரஸில்’ தவ்லீன் சிங் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “காலிஸ்தான் விவகாரத்தை நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஏன் மீண்டும் கிளறுகிறது? பிரிவினைவாத இயக்கங்களை சேர்ந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிப்பதில் இந்த அரசாங்கம் ஏன் இவ்வளவு உறுதியாக உள்ளது? என்று தல்லீன் சிங் கேள்வி எழுப்பி இருந்தார்.

பனாக்கின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் கன்வால் சிபல், “மோதி அரசு அதை புதுப்பிக்கவில்லை. ஐஎஸ்ஐ ஆதரவுடன் காலிஸ்தான், பஞ்சாபிலிருந்து மேற்குப் பகுதிக்கு பரவி உள்ளது.

கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்கள் தாக்கப்பட்டு, தூதர்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. காலிஸ்தான் தொடர்பாக வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. வெளிநாட்டில் வாழும் காலிஸ்தானியர்கள் பஞ்சாபிலும் அந்த கூறுகளுடன் தொடர்பு வைத்துள்ளனர். அப்படிப்பட்டவர்கள் ஒரு சிலரே இருந்தாலும். அவர்களை கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியுமா?” என்று கன்வால் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் இரட்டை நிலைப்பாடு?

நிஜ்ஜார் இந்தியா அமெரிக்கா கனடா உளவுத் துறை

பட மூலாதாரம், EPA

இதனிடையே, இந்த உலகம் இன்னும் இரட்டை நிலைப்பாட்டுடன் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.

“செல்வாக்கு மிக்க நாடுகள், உலக அரசியல் சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும்போது அதை எதிர்க்கின்றன. வரலாற்று ரீதியாக சக்தி வாய்ந்த நாடுகள் இந்த திறன்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்றன,” என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

ஜெய்சங்கர் மேலும் கூறுகையில், “மாற்றத்திற்கான அரசியல் விருப்பத்தைவிட அரசியல் அழுத்தம் அதிகம் இருப்பதாக நினைக்கிறேன். இந்த மாற்ற உணர்வு உலகளாவிய தெற்கில் அதிகரித்து வருகிறது.

ஆனால் இதை அரசியல் ரீதியாக தடுக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நாங்கள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கிறோம். இருப்பினும் சக்தி வாய்ந்த நாடுகள் மாற்றத்தை எதிர்க்கின்றன,”. என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பகிரங்கமாக கூறியிருந்தார்.

“பொருளாதாரத்தில் இன்று ஆதிக்கம் செலுத்தும் நாடுகள், தங்கள் உற்பத்தி திறன்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதே நேரத்தில் வலுவான அமைப்புகளைக் கொண்ட அல்லது வரலாற்று ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் அந்த திறன்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்றன.” என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த கருத்துகள், கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் இணைத்து பார்க்கப்படுகிறது.

அமித் ஷா – முன்னாள் அமெரிக்க தூதர் சந்திப்பு

இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், அமித் ஷா பாஜக தலைவராக இருந்தபோது, இந்தியாவுக்கான ​​அப்போதைய அமெரிக்க தூதரை, டெல்லி அக்பர் சாலையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்ததாக ஷிஷிர் குப்தா எழுதியுள்ளார்.

ஷா தூதருடன் நன்றாக நடந்து கொண்டார். ஆனால் அவர் இந்தியாவில் மனித உரிமைகள் பிரச்சினையை எழுப்பியவுடன், மனித உரிமைகள் குறித்து இந்தியாவுக்கு அறிவுறுத்த அமெரிக்காவிற்கு உரிமை இல்லை என்று அமித் ஷா கூறினார். அவர் இவ்வாறு சொன்னவுடனே இருவரின் சந்திப்பும் முடிந்தது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிஜ்ஜார் கொலையின் பின்னணியில் இந்தியாவின் கைவரிசையை கனடாவும் அமெரிக்காவும் நிரூபிக்க முயலும்போது மேற்கத்திய நாடுகளின் இரட்டை நிலைப்பாடுகள் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அந்தக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.

“நிஜ்ஜாருக்கு எதிராக பதியப்பட்டுள்ள குறைந்தது 10 எஃப்ஐஆர்கள் பற்றிய தகவல்களை அமெரிக்கா மற்றும் கனடாவுடன் இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது.

இந்தியாவில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக இந்த எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நேரத்தில் கனடா மற்றும் அமெரிக்காவின் பிரச்சார ஊடகங்கள் நிஜ்ஜாரை காலிஸ்தானின் செய்தித் தொடர்பாளர் என்று அழைக்கின்றன,” என்று ஷிஷிர் குப்தா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“காலிஸ்தான் பயங்கரவாதிகளின் படங்களைக் காட்டிய நிஜ்ஜார் குருத்வாராவின் தலைவரானார். 2013-14ல் பாகிஸ்தானுக்கு சென்ற அவர், ஐஎஸ்ஐ அதிகாரிகளையும் சந்தித்தார்” எனவும் ஷிஷிர் குப்தா எழுதியுள்ளார்.

ஆதாரங்களுக்கு பதிலாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் கனடா

நிஜ்ஜார் இந்தியா அமெரிக்கா கனடா உளவுத் துறை

பட மூலாதாரம், PIB

தி ஹிந்துஸ்தான் டைம்ஸின் பகுப்பாய்வு கட்டுரையில், “ட்ரூடோவும் அவரது வெளியுறவு அமைச்சரும் இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை வழங்கவில்லை. மாறாக, மோதி தலைமையிலான அரசு செய்யாத குற்றத்துக்காக குற்றம்சாட்டுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டில் அமெரிக்கா கனடாவை ஆதரிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“கனடாவிலும் அமெரிக்காவிலும் பிரிவினைவாத இயக்கம், கருத்து சுதந்திரம் என்று வர்ணிக்கப்படுகிறது. காலிஸ்தானைக் கோருபவர்களின் புகலிடமாக மேற்கத்திய நாடுகள் நீண்ட காலமாக இருந்து வந்தன என்பதுதான் உண்மை,” என்றும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

“அமெரிக்காவில் இருந்து பெறப்பட்ட உளவுத்துறை மற்றும் பிரச்சார ஊடகங்களின் தகவல்களின்படி, காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா அவமானத்துக்கு ஆளாகி உள்ளது. இந்த காரணத்திற்காக, அமெரிக்காவிலும் கனடாவிலும் ஜி.எஸ்.பன்னு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏனெனில் அவர் சிஐஏ ஏஜெண்டாக இருக்கலாம் என்று இந்திய உளவுத் துறையின் தலைவர், சிஐஏ இயக்குனரிடம் கூறியிருந்தார்.

பன்னுவுக்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியுரிமை உள்ளது மற்றும் இந்தியாவை அவர் வெளிப்படையாக எதிர்த்து வருகிறார்,” என்றும் தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த தசாப்தத்தில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறித்து இந்தியா பல ஆவணங்களை அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் கொடுத்துள்ளது, ஆனால் அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்தப் பகுப்பாய்வு கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.

9/11 தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வரும் பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா கடும் நடவடிக்கைகளை எடுத்தது. அதேபோல காலிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்காக அமெரிக்கா காத்திருக்கிறது என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அமெரிக்கா எந்த அடிப்படையில் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் மற்றும் இரானின் ஜெனரல் காசிம் சுலேமானியை வெளிநாட்டு மண்ணில் கொன்றது? பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற பெயரில் அமெரிக்கா என்ன செய்து கொண்டிருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது எந்த நாடோ ஒருபோதும் கேள்வி எழுப்பியதில்லை” என்று தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளியாகி உள்ள பகுப்பாய்வு கட்டுரையில் காட்டமாக கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »