பட மூலாதாரம், ARUN KARTHICK
இரண்டே நாட்களில், பாரதிய ஜனதா கட்சி கர்நாடகாவில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது, தமிழ்நாட்டில் ஒரு கூட்டணிக் கட்சியை இழந்துள்ளது.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை (ஜேடிஎஸ்) தனது கூட்டணிக் கட்சியாக அறிவித்துள்ளது.
அதேசமயம், தமிழகத்தில் அ.தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துள்ளது. இது உண்மையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தக் கேள்விக்குக் காரணம், 2019-ல் கூட்டணி அமைவதற்கு முன்பே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், குறிப்பாக மாநிலங்களவையில் சமீப காலம் வரை பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இருக்கவில்லை. அதனால் அதற்கு அ.தி.மு.க தேவைப்பட்டது. முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க.வுக்கு இந்த ஆதரவு தேவைப்பட்டது.
பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி பிரிந்ததற்கான விதையை பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை விதைத்தார். அவர் கூட்டணிக் கட்சித் தலைமையை மட்டும் விமர்சிக்காமல், திராவிடக் கட்சிகளின் தந்தையாகக் கருதப்படும் சி.என்.அண்ணாதுரை, மற்றும் மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலலாளருமான ஜெயலலிதா போன்றவர்களையும் தாக்கிப் பேசினார்.
ஒரு கட்சியின் மாநிலத் தலைவருக்கு, அதிகாரம் மிக்க மத்தியத் தலைமையின் அனுமதியின்றி கூட்டணிக் கட்சியின் தலைவர்களை தாக்கிப் பேசும் அளவுக்கு துணிச்சல் இருக்குமா என்பது இப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அ.தி.மு.க.வின் தலைவர்கள், பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்த பின் தான் கூட்டணி முறிவைக் குறித்து அறிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இது நகர்வு பா.ஜ.க.வின் அரசியல் வியூகமா?
இது பற்றுப் பேசிய மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ஏ.எஸ். பன்னீர்செல்வன், இது கூட்டணி பிளவு அல்ல, ஒரு அரசியல் வியூகம், என்றார்.
“இது அசாதுதீன் ஓவைசி (ஏ.ஐ.எம்.ஐ.எம்) உத்தரப்பிரதேசத்திற்குச் சென்று முஸ்லிம் வாக்குகளை பிரிப்பதற்கு ஒப்பானது. இது உத்தவ் தாக்கரே விலகிச் செல்வது போல் இல்லை. நட்டாவைச் சந்திக்க அ.தி.மு.க தலைவர்கள் டெல்லி வரை செல்ல வேண்டியிருந்தது. பா.ஜ.க.வின் உத்தி தெளிவாக உள்ளது, அதற்கு அண்ணாமலை வெறும் சாக்கு மட்டும்தான்,’’ என்று கூறுகிறார் அவர்.
ஆனால் கர்நாடகாவில், பா.ஜ.க, 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளின் வியூகத்திற்குத் திரும்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவே கவுடா மற்றும் அவரது மகனும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி தலைமையிலான ஜே.டி.எஸ் உடன் கூட்டணி அமைத்திருக்கிறது.
25 ஆண்டுகளுக்கு முன்பு, ராமகிருஷ்ண ஹெக்டேவின் லோக் சக்தி கட்சியுடன் கூட்டணி அமைத்து, பா.ஜ.க மக்களவையில் சுலபமாக நுழைந்தது.
இந்த இரண்டு தேர்தல்களும் கர்நாடகாவின் தேர்தல் வரலாற்றின் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். இது ஒரு பிராந்தியக் கட்சியின் வெகுஜன மக்கள் தலைவரிடமிருந்து ஒரு தேசிய கட்சிக்கு வாக்குகளை மாற்றுவதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. ஹெக்டே முதலில் லோக் சக்தி கட்சியின் தலைவராகவும், பின்னர் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராகவும் செயல்பட்டு, அந்த இரண்டு தேர்தல்களிலும் தனது லிங்காயத் வாக்குகளை பா.ஜ.க.வுக்கு மாற்றினார்.
இப்போது, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைப்பதன் மூலம், கர்நாடகாவின் தென் மாவட்டங்களான கோலார், துமகுரு, சிக்கபள்ளாப்பூர், மாண்டியா, பெங்களூரு (ரூரல்), சாமராஜநகர் மற்றும் ஹசன் ஆகிய மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் சமூகமான வொக்கலிகாக்களின் வாக்குகளைப் பெற்று, தனது பழைய வெற்றியை மீண்டும் பெற முயற்சிக்கிறது.
அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் சந்தீப் சாஸ்திரி, “இந்த முறை பா.ஜ.க 24 இடங்களில் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளது. அதாவது 2019-ல் வெற்றி பெற்ற தொகுதிகளை விட ஒரு தொகுதி குறைவு. 2023-இன் நிலைமை 2019-ல் இருந்து வெகுவாக வேறுபட்டது என்பதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது,” என்கிறார் அவர்.

அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உடைந்ததால் தமிழகத்தில் யாருக்கு லாபம்?
பா.ஜ.க.வின் தமிழக மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கும், அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையேயான மோதலின் முக்கியக் காரணம், இருவருமே மேற்கு தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் என்பதும், அங்கிருக்கும் ஆதிக்கச் சமூகமான கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தான் என, தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
“ஆனால், அண்ணாமலை தமிழகத்தில் பா.ஜ.க.வின் மீதான பார்வையை விழச்செய்திருக்கிறார். அதனால் கட்சியின் மத்தியத் தலைமை அவரை ஆதரிக்கிறது,” என்று அரசியல் ஆய்வாளர் டி சுரேஷ் குமார் பிபிசியிடம் கூறினார்.
மேலும் பேசிய அவர், பா.ஜ.க மறும் அ.தி.மு.க தங்களுக்குள் வாக்குகளைப் பிரித்துக் கொண்டால், லாபம் தி.மு.க.வுக்குத்தான் என்கிறார். “அதாவது மோசமான ஆட்சி, அல்லது மிகப்பெரும் ஊழலால் ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக மிகப்பெரிய அலை வீசாத பட்சத்தில் தி.மு.க.தான் இந்தச் சூழ்நிலையில் லாபமடையும்,” என்கிறார் அவர்.
ஆனால், இப்போதைய நிலைமையில் அப்படி நடப்பதுபோல் தெரியவில்லை என்கிறார் அவர். “பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, அது தனது வாக்குச் சதவீதத்தை மேம்படுத்தினால், அது போதுமானதாக இருக்கும். ஆனால், அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வேண்டும். இல்லையெனில், அவரது தலைமைக்கு அது சவாலாக இருக்கும்,” என்கிறார் சுரேஷ் குமார்.
தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை ஆதரிக்கக்கூடும் என்ற கருத்தில் பன்னீர்செல்வனும் சுரேஷ் குமாரும் உடன்படுகின்றனர்.
“ஆனால், எடப்பாடி, ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டியைப் போன்றவரல்லர். வித்தியாசமானவர். ரெட்டி ஆந்திராவில் முதன்மை அரசியல்வாதி. தமிழகத்தில் எடப்பாடி அப்படி இல்லை. அ.தி.மு.க.வின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கக் கூட்டணி தேவை,” என்கிறார் அவர்.
2021-ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழிநடத்தினார், என்கிறார் அவர். கூட்டணி பெற்ற 75 இடங்களில் அதிமுக 66 இடங்களைப் பெற்றது.
“2019-இல் மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட இழப்பை அவர் ஈடுகட்டினார். அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க 38 இடங்களை வென்ற தேர்தல். அதன்பிறகு, கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டு வெளியேறவில்லை. உண்மையில், கூட்டணி உடைந்தது என்று அறிவிக்கப்பட்டபோது, அ.தி,மு.க தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் பாஜகவை ஒரு சுமையாகப் பார்க்கிறார்கள். அ.தி.மு.க.வின் வைத்து அண்ணாமலை வளர்ச்சியடைவார் என்று தொண்டர்கள் நம்புகிறார்கள்,” என்று சுரேஷ் குமார் கூறுகிறார்.

பட மூலாதாரம், H.D.Kumaraswamy
கர்நாடகாவில் மாநில தலைமையை நம்பாத பாஜக
ஆனால், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடனான கூட்டணியை அறிவித்ததில், பா.ஜ.க தனது கர்நாடகா மாநிலத் தலைமைக்கு வேறு வகையான செய்தியைச் சொல்லியிருக்கிறது.
பேராசிரியர் சாஸ்திரி கூறுகையில், இந்தக் கூட்டணி, கர்நாடகா மாநிலத் தலைமையின் ஈடுபாடில்லாமல், தேசிய அளவில் பேசி முடிவு செய்யப்பட்டது, தேசியத் தலைமைக்கு மாநிலத் தலைமையின் மீது நம்பிக்கை இல்லாததைக் காட்டுகிறது, என்கிறார் அவர்.
“இது, கர்நாடகாவில், கட்சியின் பாதையை தேசியத் தலைமை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்று கூறுகிறது,” என்கிறார் அவர்.
1998 மற்றும் 1999 ஆண்டுகள் பொல, மாநிலக் கட்சிகளின் வாக்கு பா.ஜ.க.வுக்குச் செல்லுமா?
“1999-ல் 50% வாக்குகள் பா.ஜ.க.வுக்குப் போனதும், மீதமுள்ள வாக்குகள் ஐக்கிய ஜனதா தளத்திடம் இருந்து காங்கிரஸுக்குப் போனதும் நடந்தது. இந்த முறை என்ன சதவீத வாக்குகள் கிடைக்கும் என்பதை பார்க்க வேண்டும். இரண்டாவதாக, பா.ஜ.க.வில் வாக்குகள், அதன் கூட்டணிக் கட்சிகளுக்குச் செல்லாத வகையில் இந்தச் சமன்பாடு உள்ளது என்பதும் அனுபவம் நமக்குக் காட்டுகிறது,” என்கிறார் அவர்.
மைசூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் அரசியல் துறைப் பேராசிரியர் முசாபர் அசாதி, பிபிசியிடம் பேசுகையில், பா.ஜ.க கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சேர்ந்ததற்குக் காரணம், INDIA கூட்டணியால் அக்கட்சி புறக்கணிக்கப்பட்டதுதான், என்கிறார்.
“அவர்கள் முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியால் புறக்கணிக்கப்பட்டனர். தாங்கள் ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்தனர். அவர்களின் அடித்தளமும் வேகமாக பலவீனமடைந்தது. மதச்சார்பற்ற ஜனதா தளம், தான் பா.ஜ.க.வுடன் செல்வதறகான காரணமாக முஸ்லிம்கள் தங்களை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இது ஒரு மிகைப்படுத்தல். மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மீது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை குறைவு என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்கிறார் அவர்.
2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 55% முதல் 70% முஸ்லிம் வாக்குகளைப் பெற்றது. பா.ஜ.க 10% பெற்றது. ஆனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் 20% முஸ்லிம் வாக்குகளைப் பெற்றது, என்கிறார்.
பேராசிரியர் அசாதி மேலும் கூறுகையில், “இதுவரை கர்நாடகாவில் இரண்டரை கட்சி அமைப்பு இருந்தது. இனி அது இரு கட்சி அமைப்பாக குறைக்கப்படலாம்,” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com