Press "Enter" to skip to content

சீனாவின் பொருளாதார நெருக்கடியால் உலக நாடுகள் எதிர்கொள்ளப் போகும் ஆபத்து என்ன?

பட மூலாதாரம், GETTY IMAGES

அமெரிக்கா தும்மினால் மற்ற உலக நாடுகளுக்கு சளி பிடிக்கும் என்று அதன் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு வேடிக்கையாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் சீனாவின் பொருளாதாரம் சரியில்லாமல் இருக்கும்போது உலக அளவில் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகயை கொண்ட உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தி மிக்க நாடாக சீனா திகழ்கிறது.

ஆனால் மெதுவான வளர்ச்சி, அதிகரிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை, ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சி என்று பொருளாதாரரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளை சீனா தற்போது சந்தித்து வருகிறது.

மேலும் நாட்டின் பெரும் கடனாளியான எவர்கிராண்டே ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர், காவல் துறை கண்காணிப்பின் கீழ் உள்ளார். அத்துடன் பங்குச் சந்தையில் இருந்து இந்நிறுவனம் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியிலான இதுபோன்ற சிக்கல்கள் சீனாவுக்கு பெரும் தலைவலியாக இருக்கின்றன. இத்தகைய சூழலில், உலகின் பிற நாடுகள் சீனாவின் இந்தப் பாதிப்பு குறித்துக் கவலைப்பட வேண்டிய அவசியம் உள்ளதா?

சீனா சந்தித்து வரும் பாதிப்புகளால் பிற உலக நாடுகள் சந்திக்க உள்ள நெருக்கடிகள் பற்றிய கவலைகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள், அவற்றின் பணியாளர்கள் மற்றும் சீனாவுடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்கள்கூட அந்நாடு எதிர்கொண்டு வரும் பொருளாதார ரீதியான பாதிப்பின் எதிரொலியாக சில எதிர்மறை விளைவுகளைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

சீனா பொருளாதார நெருக்கடி

பட மூலாதாரம், GETTY IMAGES

பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பு

“உதாரணமாக, சீன மக்கள் மதிய உணவிற்கு வெளியே ஹோட்டல்களில் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்தால், அது உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்குமா?” என்று சிங்கப்பூரில் உள்ள ஆசிய வர்த்தக மையத்தின் நிர்வாக இயக்குநர் டெபோரா எல்ம்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு, “நீங்கள் கற்பனை செய்யும் அளவுக்கு இந்த பாதிப்பு இருக்காது என்பதே அவரின் பதிலாக உள்ளது. ஆனால் அதேநேரம், உள்நாட்டு சீன நுகர்வுகளை நேரடியாக நம்பியிருக்கும் நிறுவனங்களை இது நிச்சயம் பாதிக்கும்,” என்கிறார் அவர்.

ஆப்பிள், வோல்க்ஸ்வேகன், பர்பெர்ரி போன்ற நூற்றுக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவின் பரந்த நுகர்வோர் சந்தையில் இருந்து தங்கள் வருவாயைப் பெறுகின்றன.

இந்த நிலையில், சீன நுகர்வோர் இந்நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் அல்லது தயாரிப்புகளை வாங்குவதற்கான தங்களின் செலவினங்களைக் குறைத்துக் கொண்டுள்ளது இந்த நிறுவனங்களின் வருவாயில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதன் விளைவாக, உலகெங்கும் இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்களை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான முகவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதிக்கப்படக்கூடும்.

உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு

சீனா பொருளாதார நெருக்கடி

பட மூலாதாரம், GETTY IMAGES

உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலான வளர்ச்சிக்கு சீனாதான் காரணம். இதை நாம் கருத்தில் கொண்டால், சீனாவில் ஏற்படும் பொருளாதார மந்த நிலை, அதன் எல்லைகளுக்கு அப்பால் உணரப்படும்.

சீனாவின் பொருளாதார மந்தநிலை உலகளாவிய வளர்ச்சி வாய்ப்புகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2024இல் ஒட்டுமொத்த உலகத்திற்கான அதன் மதிப்பீட்டையும் குறைத்துள்ளது,” என்று அமெரிக்க கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தது.

இருப்பினும், சீனா உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்பன போன்ற கருத்துகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பது பொருளாதார நிபுணர்கள் சிலரின் கூற்றாக உள்ளது.

அதேநேரம், “புள்ளிவிவரங்களின்படி, உலகப் பொருளாதார வளர்ச்சியில் சுமார் 40 சதவீதம் சீனாவின் பங்காக உள்ளது,” என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக சீன மையத்தின் பொருளாதார நிபுணர் ஜார்ஜ் மேக்னஸ்.

ஆனால், “இந்த வளர்ச்சியால் யாருக்குப் பயன்? சீனாவின் இறக்குமதியைவிட ஏற்றுமதியின் அளவு அதிகமாக உள்ளது. இதனால் சீனா எவ்வளவு வளர்ச்சி பெறுகிறது அல்லது வளரவில்லை என்பது உலகின் மற்ற நாடுகளைவிட சீனாவுக்கு தான் முக்கியம்,” என்கிறார் அவர்.

இருந்தபோதிலும், கட்டுமான மூலப்பொருட்கள் மற்றும் பல்வேறு சேவைகளுக்கான தேவை சீனாவில் தற்போது குறைந்துள்ளது.

இறக்குமதியை குறைத்துள்ள சீனா

சீனா பொருளாதார நெருக்கடி

பட மூலாதாரம், GETTY IMAGES

கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவின் இறக்குமதி கிட்டத்தட்ட 9 சதவீதம் குறைந்துள்ளது.

இதன் விளைவாக, “ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஆப்பிரிக்காவின் பல நாடுகள் என சீனாவின் பெரிய ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்,” என்று சிட்னியில் உள்ள லோவி இன்ஸ்டிடியூட்டில் உள்ள இந்தோ-பசிபிக் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் ரோலண்ட் ராஜா கூறுகிறார்.

ஆனால், பல்வேறு உற்பத்திப் பொருட்களுக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி தேவையை சீனா குறைத்துள்ளது நுகர்வோருக்கு ஒருவிதத்தில் நற்செய்தி என்கின்றனர் நிபுணர்கள்.

இதனால், சீன தயாரிப்புகளுக்கான விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் என்பதால், மேற்கத்திய நுகர்வோருக்கு குறிப்பாக இது நல்ல செய்தி என்கின்றனர் அவர்கள்.

“அதிக பணவீக்கத்தைச் சமாளிக்கப் போராடும் மக்கள் மற்றும் வணிகர்களுக்கும் இது ஒரு நல்ல செய்தி,” என்று ராஜா கூறுகிறார்.

எனவே, சீனாவின் பொருளாதார மந்தநிலையால், குறுகிய காலத்துக்கு சாதாரண நுகர்வோர் பயனடையலாம். ஆனால், சீனாவின் இறக்குமதியைச் சார்ந்துள்ள வளரும் நாடுகளுக்கு நீண்ட கால அளவில் இது நல்ல விஷயமா என்ற கேள்வியும் எழுகிறது.

உள்கட்டமைப்பு திட்டங்களில் பாதிப்பு

கடந்த 10 ஆண்டுகளில், பெல்ட் அண்ட் ரோடு எனப்படும் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் சீனா ஒரு டிரில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் 150க்கும் மேற்பட்ட நாடுகள் சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாலங்கள் என உள்கட்டமைப்புகளைப் பெருக்கிக் கொள்ள சீனாவின் நிதியையும், தொழில்நுட்பத்தையும் பெற்று வருகின்றன.

ரோலண்ட் ராஜாவின் கூற்றுப்படி, சீனா சந்தித்து வரும் பொருளாதார சிக்கல்கள் நீடித்தால், இந்தத் திட்டங்களுக்கான அதன் பங்களிப்பு பாதிப்படையத் தொடங்கும்.

“சீன நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தற்போது வெளிநாடுகளில் தங்களது விஸ்தரிப்புக்கு ஒரே மாதிரியான நிதியைக் கொண்டிருக்காது,” என்றும் அவர் கூறுகிறார்.

அமெரிக்கா உடனான சீனாவின் உறவு

சீனா பொருளாதார நெருக்கடி

பட மூலாதாரம், GETTY IMAGES

ஆனால், தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள, அமெரிக்காவுடனான தமது உறவுகளைச் சரிசெய்ய சீனா முற்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் வர்த்தகக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் 25 சதவீதம் வீழ்ச்சியை சீனா சந்தித்துள்ளது.

அதேநேரம், சில அமெரிக்க நிறுவனங்களில் சீனா “முதலீடு செய்ய முடியாதது” என்று அந்நாட்டின் வர்த்தக துறை செயலாளர் ஜினா ரைமண்டோ சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு வர்த்தகரீதியாக அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், சீனாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.

மேற்கத்திய நாடுகளின் “பனிப்போர் மனநிலைக்கு” சீனா தொடர்ந்து தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

ரஷ்யாவின் விளாதிமிர் புதின் மற்றும் சிரியாவின் பஷர் அல்-அசாத் போன்ற தலைவர்களுடன் சீனா நல்லுறவைப் பேணி வருகிறது.

அதேநேரம், இருதரப்பு வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் சீனாவுக்குச் சென்று வருகின்றனர்.

சீனாவின் சொல்லாட்சிக்கும் அதன் கொள்கைக்கும் இடையே என்ன இருக்கிறது என்பது சிலருக்கு உண்மையில் தெரியும் என்பதால்தான் மேற்கத்திய நாடுகளின் சீனப் பயணங்கள் தொடர்கின்றன என்பது நிபுணர்களின் பார்வையாக உள்ளது.

இதனிடையே, சீனப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி, அந்நாடு தனது சொந்தப் பிரதேசமாக உரிமை கொண்டாடி வரும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தைவானை கையாள்வதில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இது, சீனாவின் பொருளாதார நிலையை உன்னிப்பாகக் கவனித்து வரும் அமெரிக்க நிபுணர்கள் சிலரின் கருத்தாக உள்ளது.

சீனாவில் நிலவி வரும் உள்நாட்டு பிரச்னைகள், அதன் அதிபரான ஷி ஜின்பிங்கை “தொலைநோக்குப் பார்வை இல்லாதவர்” என்பதைப் போல் காட்டுகிறது.

மேலும், சீனா தற்போது சந்தித்து வரும் பிரச்னைகள், தைவான் விஷயத்தில் “முட்டாள்தனமாகச் செயல்படும் நிலைக்கு அவரை இட்டு செல்லக்கூடும்” என்று அண்மையில் விமர்சித்திருந்தார் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் பிரதிநிதியான மைக் கல்லாகர்.

சீனாவின் “பொருளாதார அதிசயம் முடிந்துவிட்டது” என்பது தெளிவாகத் தெரிந்தால், கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்வினை “உண்மையில் நிரூபணமாகும்” என்கிறார் ரோலண்ட் ராஜா.

என்ன சொல்கிறார் அமெரிக்க அதிபர்?

ஆனால், சீனாவின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை முன்வைத்து அந்நாட்டின் அதிபர் ஜின்பிங்கை எதிர்மறையாக விமர்சிப்பதை உலக அளவில் ஏராளமானோர் நிராகரித்துள்ளனர்.

“நாட்டின் பொருளாதார பிரச்னைகளைக் கையாள்வதில் சீன அதிபர் ஷி ஜின்பிங் திறன்மிக்கவராகவே இருக்கிறார்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.

“தைவான் மீது சீனா படையெடுப்பதற்கு அதன் பொருளாதார சூழல் காரணமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. சீனாவிற்கு முன்பு இருந்த திறன் ஒருவேளை தற்போது இல்லாமல் இருக்கலாம்,” என்றும் அவர் கூறினார்.

2008 வரலாறு மீண்டும் திரும்புகிறதா?

இருப்பினும், பொருளாதாரத்தில் எதிர்பாராதவற்றை எதிர்பார்க்க வேண்டும் என்பதே வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதற்கு 2008இல் ஏற்பட்ட உலக அளவிலான பொருளாதார மந்தநிலையை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த 2007 -08ஆம் நிதியாண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல், உலகப் பொருளாதாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்ற சிலர் எதிர்பார்த்திருந்தனர் என்கிறார் சிங்கப்பூரில் உள்ள ஆசிய வர்த்தக மையத்தின் நிர்வாக இயக்குநர் டெபோரா எல்ம்ஸ்.

குறிப்பிட்ட அந்த நிதியாண்டில் அங்கு வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டிக்கு வீட்டுக் கடன்கள் அளிக்கப்பட்டதால் (Subprime Mortgages) வங்கிகள் நெருக்கடியைச் சந்தித்தன.

இந்த பொருளாதார மந்த நிலையின் தாக்கம், ‘நிதி தொற்று’ என்று கூறும் அளவுக்கு சில ஆய்வாளர்களைக் கவலைப்பட வைத்தது. அதேபோன்று தற்போது, சீன பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, முழுவீச்சில் சரிவுக்குச் சென்று, அதன் மூலம் உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சி தூண்டப்படலாம் என்றும் அவர்கள் அச்சப்படுகின்றனர்.

சீனா பொருளாதார நெருக்கடி

பட மூலாதாரம், GETTY IMAGES

அமெரிக்காவில் 2008இல் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் விளைவாக, பிரபல நிதி நிறுவனமான லெஹ்மன் பிரதர்ஸ் கடும் சரிவைச் சந்தித்தது. அதேபோன்று தற்போது சீன நிதி நிறுவனங்களும், வங்கிகளும் நெருக்கடியை சந்திக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனால், இவ்வாறு அச்சப்படத் தேவையில்லை என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக சீன மையத்தின் பொருளாதார நிபுணர் ஜார்ஜ் மேக்னஸ்.

அவரது கூற்றுப்படி, “சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக அந்நாட்டின் பெரிய வங்கிகள் சிக்கலை சந்திக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அமெரிக்க வங்கிகளைவிட, சீன வங்கிகள் வலுவான நிதி இருப்பைக் கொண்டுள்ளன,” என்று மேக்னஸ் கூறுகிறார்.

அவரது கூற்றை, எல்ம்ஸ் ஒப்புக் கொள்கிறார். “உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சீனாவின் நிதி கட்டமைப்பு ஆதிக்கம் செலுத்தவில்லை.

எனவே 2008இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை உலக அளவில் எதிரொலித்ததைப் போல், சீனாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள், உலகளாவிய அளவில் நேரடியாக எதிரொலிக்க வாய்பில்லை,” என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

அதேநேரம், “பொருளாதார ரீதியில் உலக நாடுகள் இன்று ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் பொருளாதாரத்தில் சக்திமிக்க ஒரு நாடு நெருக்கடியைச் சந்திக்கும்போது அது மற்ற நாடுகளையும் எதிர்பாராத விதத்தில் பாதிக்கிறது,” என்றும் எல்ம்ஸ் கூறுகிறார்.

அதற்காக, “உலக பொருளாதாரத்தில் 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடி. தற்போது மீண்டும் ஏற்படும் என்று நினைக்கவில்லை. ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சீனா போன்ற ஒரு நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, நாம் நினைத்துப் பார்க்காத வழிகளில்கூட உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்,” என்றும் அவர் அச்சம் தெரிவிக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »