போராடிப் போராடி கிராமத்துக்கான வசதிகளைப் பெற்றுள்ள வாச்சாத்தி கிராம மக்கள், 30 ஆண்டுகள் பல அச்சுறுத்தல்கள், அதிகார பலத்தைத் தாண்டி தங்களுக்கான நீதியைப் பெற்று, வெற்றி பெற்றுள்ளதாகப் பகிர்ந்துகொண்டனர்.
தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மேல்முறையீட்டை, செப்டம்பர் 29ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாச்சாத்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில், உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 2011ஆம் ஆண்டு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 17 பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்து வந்தார்.
இப்படியான நிலையில் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதி வேல்முருகன், ‘‘பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சுய தொழில் செய்ய உதவி செய்ய வேண்டும்,’’ என அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும், “பாதிக்கப்பட்டவர்கள் இறந்திருந்தால் அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதில் குற்றம் புரிந்தவர்களிடம் ₹5 லட்சம் வசூலிக்க வேண்டும்,” என்றும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்தத் தீர்ப்பு குறித்து கிராம மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய, பிபிசி தமிழ் வாச்சாத்தி கிராமத்திற்குச் சென்றிருந்தது.
இன்றும் மின் இணைப்பு இல்லாத வீடுகள்

காலை 9:30 மணிக்கு கிராமத்தை அடைந்தோம், கிராமத்தின் பெரும்பாலான மக்கள் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், ஊரே வெறிச்சோடி இருந்தது.
தமிழகத்தில் பல கிராமங்களில் குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாறிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலிலும், வாச்சாத்தியில் இன்னமும் கரும்புத்தட்டுகளால் வேயப்பட்ட குடிசைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ணில் பட்டன.
ஊரின் நுழைவுப்பகுதியிலேயே துணை சுகாதாரம் நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊருக்குள் நூலகம் ஒன்றும் இருந்தது. இவற்றை எல்லாம் கடந்து, ‘எங்களை இந்த ஆலமரத்தின் அடியில் வைத்துதான் இத்தனை கொடூரங்களை அதிகாரிகள் நிகழத்தினர்,’ என, வாச்சாத்தி மக்கள் குறிப்பிட்ட அந்த ஊரின் பெரிய ஆலமரத்தின் அருகே சென்று மக்களுக்காகக் காத்திருந்தோம்.
நேரம் ஆக ஆக வெறிச்சோடியிருந்த அந்த இடத்துக்கு நெகிழி (பிளாஸ்டிக்) சேர்களுடன் அங்கு வந்த இரு முதியவர்கள் அவற்றை வரிசையாக அடுக்கிவிட்டுச் சென்றனர்.
ஆலமரத்தின் அருகே இன்னமும் வாச்சாத்தியில் நடந்த சம்பவத்தின் கதையைச் சொல்லும் வகையில், வாச்சாத்தி சம்பவத்தின் சாட்சியாக இருந்தது சிதிலமடைந்த ஒரு ஓட்டு வீடு.
நாம் அந்த வீட்டுக்கு அருகேயிருந்த சில வீடுகளுக்குச் சென்று, அங்குள்ள முதியவர்கள், பெண்களிடமும் ’இன்று வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதே, உங்களுக்குத் தெரியுமா?’ எனக் கேட்ட போது, ‘தீர்ப்பு வருதுனு சொன்னாங்க, கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்களும், எங்க (மலைவாழ் மக்கள் சங்கம்) சங்கத்து ஆளுங்களும் வந்துதான் என்னானு முழுசா எங்ககிட்ட சொல்லுவாங்க,’’ எனக் கூறினர்.
அந்த குக்கிராமத்தில் சில வீடுகளில் மின் இணைப்பு இல்லாமலும், மின் இணைப்புள்ள வீடுகள் சிலவற்றில் தொலைக்காட்சிகள்கூட இல்லாமல் இருந்ததைக் காண முடிந்தது.
தீர்ப்பு வந்ததும் மக்கள் கொண்டாட்டம்

வாச்சாத்தி வழக்கை ஆரம்பம் முதல் முன்னின்று நடத்தி வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கிராமத்துக்குள் நுழைந்து, மக்களை ஆலமரத்து அடியில் திரளச் செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலை 10:00 மணிக்கு தீர்ப்பு வெளியானதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீர்ப்பின் விபரங்களை சத்தமாகப் படித்தனர்.
அங்கு திரண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, வாழ்க்கையில் மாபெரும் வெற்றி அடைந்ததைப் போன்றதொரு மகிழ்ச்சியில், ஒருவரை ஒருவர் முகம் பார்த்து மகிழ்ந்தனர்.
கைதட்டி மகிழ்ந்து, வாங்கி வைத்திருந்த சாக்லேட்களை பரிமாறிக்கொண்டும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
அங்கு கூடியிருந்த பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாகக் கூறப்படும் 18 பெண்களில் சிலரிடம் பேசினோம்.
பிபிசி தமிழிடம் பேசிய செல்லம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ‘‘சந்தனக்கட்டை கடத்துறோம்னு பொய்யான குற்றச்சாட்ட சொல்லி, ஒட்டுமொத்த வாச்சாத்தி கிராமத்தையும் இந்த ஆலமரத்துக்கு அடியில வனத்துறை அதிகாரிங்க உக்காரவெச்சு, எங்க வாழ்க்கைய நாசமாக்கிட்டாங்க.
இங்க இருந்த 18 பெண்களை பார வண்டியில் ஏற்றி ஏரிக்கரைக்கு கூட்டிச் சென்று, பாலியல் வன்புணர்வு செய்தாங்க. அப்போ எனக்கு 13 வயது தான், பள்ளிக்கூடத்துல எட்டாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன்.
நான் அதிகாரிங்ககிட்ட கெஞ்சனேன் என்ன விட்டுறுங்க நான் ஸ்கூல் போற பொன்னுனு, ஆனாலும் என்னைய…,’’ என, தனக்கு நடந்ததை செல்லம்மாள் விவரிக்கும்போதே அவரின் கண்கள் குளமாகின.
கண்ணீரை சேலையால் துடைத்தபடி தழுதழுத்த குரலில் மீண்டும் பேசத் துவங்கிய செல்லம்மாள், ‘’18 பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சதோட நிக்காம, எங்க கிராமத்துல இருந்த எல்லோரையும், 30 பேரா பிரிச்சு பார வண்டியில ஏத்தி ஃபாரஸ்ட் அலுவலகம் கூட்டிட்டுப் போய் அடிச்சாங்க. என்னோட மாமா ஊர்க்கவுண்டர் பெருமாளை என் கண் முன்னாடியே மிகக் கொடூரமா தாக்குனாங்க.
இந்தச் சம்பவத்துல இருந்து மீள முடியாத நான், பள்ளிப்படிப்பைத் தொடர முடியாம கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். யாரும் என்னை திருமணம் செய்ய முன்வராத நிலையில, எங்க சொந்தத்துத்தலயே என்னோட நிலைமைய புரிஞ்சுகிட்ட ஒருத்தர் என்ன கல்யாணம் செய்தாரு. இப்பவும் பல நேரம் தூக்கம் வராது, எங்களுக்கு நடந்த கொடூர சம்பவம் மனசுல வந்து போகும்,’’ என்றார் வருத்தத்துடன்.
தீர்ப்பு குறித்தும், நிவாரணம் குறித்தும் பேசத் துவங்கிய செல்லம்மாள், ‘‘இப்படி எந்த குற்றமும் செய்யாத எங்களுக்கு சிறைக்குச் சென்று, நீதிமன்ற வாசலை ஏறி இறங்கி, பல அச்சுறுத்தலுக்கு மத்தியில இப்போது வென்றுள்ளோம்.
என்னோடு சேர்த்து, 18 பெண்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய், அரசுப்பணி கொடுக்க வேண்டும் என்று நீதிபதி சொன்னது எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.
ஆனாலும், 30 ஆண்டுகளாக நீதி கிடைக்கவில்லையே என்று மன உளைச்சலுக்கு ஆளாகி நிறைய பேரு இறந்துட்டாங்க. இப்ப எங்க ஊரில் இருப்பவர்கள் விவசாய கூலி வேலைக்கும், கேரளா, கோவை என இதர கூலி வேலைகளுக்கும் போறாங்க. எங்க ஊரில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரணும்,’’ என்கிறார் செல்லம்மாள்.
‘எங்களுக்கும் நிவாரணம் கொடுங்க’

பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுக்கும் நிவாரணம் வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைக்கின்றனர் பாதிக்கப்பட்ட பெண்கள்.
பிபிசி தமிழிடம் பேசிய இந்துமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ‘‘பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான, 18 பெண்களோடு சேர்த்து மொத்தம், 95 பெண்கள் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டார்கள்.
நானும் அந்த 95 பெண்களில் ஒருத்திதான். சம்பவம் நடந்தபோது வனத்துறை எங்களை அடித்து, மானபங்கப்படுத்தி, 90 நாள் சிறையில் வைத்திருந்தார்கள்.
கர்ப்பிணியாக இருந்த நான் அந்த மூன்று மாதங்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு சிறையில் இருந்து வெளியாகி ஊருக்கு வந்தேன். ஆனால், ஊரில் எங்கள் வீடு, கிணறு என எல்லாவற்றையும் அதிகாரிகள் சேதப்படுத்தியிருந்தார்கள். என்னுடைய ஆடு, மாடுகளைக் காணோம், என்ன ஆனது என்றே தெரியவில்லை,’’ என்றார்.
வருத்தத்துடன் தொடர்ந்த இந்துமதி, ‘‘அரசாங்கம் கொடுத்த, 30 ஆயிரம் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் நிவாரணம், மருத்துவச் செலவுக்கும், மீண்டும் குடிசை அமைக்கவும், மாடு, ஆடு வாங்கி வாழ்வதற்குமே சரியாக இருந்தது. இந்தச் சம்பவத்தில் என்னைப் போலவே நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 18 பெண்களுக்கு கொடுத்தது போலவே எங்களுக்கும் அரசு நிவாரணம் வழங்கி, உதவிகள் செய்ய வேண்டும்,’’ என்றார்.
இதே கோரிக்கையை முன்வைத்த சிவகாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஏற்கெனவே அரசு அறிவித்த நிவாரணம் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளதாகவும், பெயர், விலாசம் உள்ளிட்ட சில சிக்கல்களால் பலருக்கு இன்னமும் நிவாரணம் வந்து சேரவில்லை என்றும், இதை தமிழக அரசு இப்போதாவது விரைந்து கொடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார் அவர்.
‘புதிய நம்பிக்கை பிறந்துள்ளது’

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லி பாபு பிபிசி தமிழிடம் பேசும்போது, “வாச்சாத்தி சம்பவம் மலைவாழ் மக்கள் சங்கத்துக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தெரிய வந்தது.
அதன்பின், நாங்கள் இந்த வழக்கை நடத்தி, மக்களுடன் இறுதிவரை நின்று இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத் தந்துள்ளோம்.
அதிகாரிகளின் வெறித்தாண்டவத்திற்குப் பின் கிராமத்தில் எதுவுமே இல்லை. வீடுகள் சேதம், கிணறுகளில் கெரசின் என எதுவுமே பயன்படுத்தும் நிலையில் இல்லை.
அரசிடம் தொடர் கோரிக்கை வைத்து போராடிப் போராடி, சாலை, பள்ளிக்கூடம், சுகாதார நிலையம் என ஒவ்வொன்றையும் பெற்று, மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வைத்துள்ளோம்,’’ என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், ‘‘30 ஆண்டுகள் பல அச்சுறுத்தல்கள், அதிகார பலத்தைத் தாண்டி நாங்கள் எங்கள் நீதியைப் பெற்று, வெற்றி பெற்றுள்ளோம். இதுவரை விசாரித்த எந்த நீதிபதியும் எங்கள் கிராமத்திற்கு வந்து, பாதிக்கப்பட்ட மக்கள், இடங்களைப் பார்வையிடவில்லை.
வாச்சாத்தி கிராமத்திற்கு வந்த நீதிபதி வேல்முருகன், பாதிக்கப்பட்டவர்களைப் பார்வையிட்டு, சி.பி.ஐ விசாரணையில் குறிப்பிட்ட இடங்களைப் பார்த்து, எங்களுக்கான நீதியை வழங்கியுள்ளார்,” என்று தெரிவித்தார்.
மேலும், ம்பவம் நடந்தபோது இந்த வழக்கை முறையாகக் கையாளாமல் அலட்சியமாக இருந்த, அப்போதைய மாவட்ட ஆட்சியர், மாவட்ட போலீஸ் எஸ்.பி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிபதி கூறியதையும் தாங்கள் வரவேற்பதாகக் கூறினார்.
அதோடு, வாச்சாத்தியில் தற்போதும் நிலமின்றி, குடியிருக்க வீடின்றி பலரும் பல இன்னல்களுக்கு மத்தியில் உள்ளனர். வாச்சாத்தியின் வளர்ச்சிக்கு அரசு என்னென்ன செய்துள்ளது, இனி என்ன செய்யப் போகிறது என்ற கேள்விகளையும் நீதிபதி முன்வைத்துள்ளார்.
இதனால், “இங்கு அடிப்படைக் கட்டமைப்பு ஏற்படுத்த அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமென்று நம்புகிறோம்,’’ என்கிறார் டில்லி பாபு.
இந்த வழக்கின் தீர்ப்பு இந்தியாவிற்கே ஓர் எடுத்துக்காட்டு எனவும், இந்தத் தீர்ப்பால் பழங்குடியின மக்களிடையே புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார் அவர். மேலும், வாச்சாத்தி தீர்ப்பு தாமதமாக இருந்தாலும், மக்களுக்கு உரிய நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கிறார் டில்லி பாபு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com