Press "Enter" to skip to content

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் கடைசி நாளில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், TWITTER

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், தனது ஆட்சிக் காலத்தில் கல்விக்கும் தொழில்துறை வளர்ச்சிக்கும் அளித்த முக்கியத்துவத்திற்காக எப்போதும் நினைவுகூரப்படுகிறார். இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்த 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அவர் காலமானார். அவரது கடைசி நாளில் என்ன நடந்தது?

இந்தியாவில் 1975 ஜூன் 25ஆம் தேதி நெருக்கடி நிலை அமலுக்கு வருவதாக பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். 1966இல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபோது, மொரார்ஜி தேசாய்க்கு பதிலாக இந்திரா காந்தி பிரதமராவதில் முக்கியப் பங்கு வகித்தவர் அப்போது இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த கு. காமராஜர்.

நெருக்கடி நிலை அமல்படுத்துவதற்கு முன்பாகவே, 1969இல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து, இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் எனப் பிரிந்துவிட்ட நிலையில், ஸ்தாபன காங்கிரசின் தலைவராக இருந்தார் காமராஜர். இந்திரா காந்தியின் இந்தச் செயல் அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அவருக்கு ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் இருந்த நிலையில், 1975ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு உடல்நிலை மெல்ல மெல்ல மோசமாகத் தொடங்கியது.

ஜூலையில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், முதலமைச்சர் மு. கருணாநிதி, ஆளுநர் கே.கே.ஷா ஆகியோர் அவரது வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தனர். அதற்குப் பிறகு சற்று உடல் நிலை தேறியது.

காமராஜரிடம் இந்திரா காந்தி கூறியது என்ன?

பட மூலாதாரம், TWITTER

காமராஜரிடம் இந்திரா காந்தி கூறியது என்ன?

அக்டோபர் 1ஆம் தேதி நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள். 1971க்குப் பிறகு, சிவாஜி கணேசனுக்கும் காமராஜருக்கும் இடைவெளி விழுந்திருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு சிவாஜியின் பிறந்த நாளில் காமராஜர் சென்று அவரை வாழ்த்த வேண்டுமென கட்சியின் மாநிலத் தலைவர் பா.ராமச்சந்திரன், குடந்தை ராமலிங்கம், குமரி அனந்தன் ஆகியோர் வற்புறுத்தினர்.

இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை கடைசிவரை அவருடைய உதவியாளராக இருந்த வைரவன், “காமராஜருடன் கால் நூற்றாண்டு” என்ற நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

அக்டோபர் 1ஆம் தேதியன்று, அவரை எட்டரை மணிக்கே தயாராகச் செய்து, மருத்துவர் ஜெயராமனை அழைத்து இன்சுலின் ஊசியும் போட ஏற்பாடு செய்யப்பட்டது. மாலையுடன் சத்யமூர்த்தி பவனில் காத்திருந்த பா. ராமச்சந்திரன், காரில் புறப்பட்டு காமராஜரின் திருமலைப் பிள்ளை இல்லத்திற்கு வந்தார்.

காமராஜர் அண்ணா

பட மூலாதாரம், X / Social Media

இருவரும் சென்று சிவாஜிக்கு மாலை அணிவித்து வாழ்த்திவிட்டுத் திரும்பினர். அடுத்த நாள் காந்தியின் பிறந்த நாள். நெருக்கடி நிலையை விலக்கிக்கொள்வதைப் பற்றி அன்று இந்திரா காந்தி அறிவிப்பார் என காமராஜர் எதிர்பார்த்ததாகக் குறிப்பிடுகிறார் வைரவன்.

அதாவது, கட்சிக்குள் காமராஜர் தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் யார் முதலமைச்சர் என்பதை அவர் முடிவு செய்யலாம். நெருக்கடி நிலையை விலக்கிவிட்டு தேர்தலை அறிவித்துவிடலாம் என காமராஜரிடம் இந்திரா கூறியிருந்ததாகச் சொல்கிறார் வைரவன்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் கடைசி நாளில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், TWITTER

காமராஜர் மீது பழ. நெடுமாறன் அதிருப்தி

அன்றைய தினம் டெல்லியில் நீண்ட நேரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்வது குறித்து எதையும் பேசவில்லை. கூடுதல் அதிர்ச்சியாக, மூத்த காங்கிரஸ் தலைவர் கிருபாளனியும் கைது செய்யப்பட்டார். ஆகவே இப்போதைக்கு நெருக்கடி நிலை நீங்கப் போவதில்லை என்பது காமராஜருக்குப் புரிந்தது.

இதனால், பழ. நெடுமாறன் தலைமையில் போராட்டத்தை அறிவிக்க நினைத்தார் காமராஜர். வைரவன் நெடுமாறனுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், சிவாஜியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்ததில் அதிருப்தியில் இருந்த நெடுமாறன் வரவில்லை என்கிறார் வைரவன்.

அன்றைய தினம் நடந்த வேறு சில சம்பவங்களை காமராஜரின் வாழ்க்கை வரலாற்று நூலான “காமராஜர் ஒரு சகாப்தம்” புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் ஆ. கோபண்ணா.

அக்டோபர் 2ஆம் தேதி காலை சட்டக் கல்லூரி விடுதி மாணவர்கள் 50 பேர் கொண்ட குழுவினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, காமராஜரை உடல்நலம் விசாரிக்க வந்திருந்தார்கள். அப்போது காமராஜர், தனது வீட்டின் முன்பக்கம் இருந்த அறையில் படுத்திருந்தார். மாணவர்கள் வந்திருப்பதை சத்தியமூர்த்தி பவன் நிர்வாகி வி.எஸ். வெங்கட்ராமன் காமராஜரிடம் தெரிவித்தார்.

“இந்தச் சின்ன அறையில் அவ்வளவு பேருக்கும் இடமில்லையே, நானே வெளியில் வருகிறேன்,” என்று சொல்லிய காமராஜர் வெங்கட்ராமனின் தோளைப் பிடித்தபடி வெளியில் வந்தார்.

அவரைப் பார்த்தவுடன் மாணவர்கள், “மகாத்மா காந்தி வாழ்க”, “காமராஜர் வாழ்க” என்று கோஷமிட்டனர். மூன்று நிமிடங்களுக்கு மேல் அவரால் நிற்க முடியவில்லை. மாணவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, அறைக்குத் திரும்பிவிட்டார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் கடைசி நாளில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், TWITTER

காமராஜரின் அறையில் அடித்த அழைப்பு மணியின் ஓசை

மதிய உணவு சாப்பிடும்போது, மேல்சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ராஜாராம் நாயுடுவுடன் கட்சி விஷயங்களைப் பேசியபடியே சாப்பிட்டார். அப்போது மாநிலத் தலைவர் பா. ராமச்சந்திரனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. வீட்டிற்கு வந்து தன்னைப் பார்த்துவிட்டுச் செல்லும்படி ராமச்சந்திரனிடம் தெரிவிக்கச் சொன்னார் காமராஜர்.

மதியம் இரண்டரை மணி. மதிய உணவை முடித்தார் காமராஜர். தலையில் லேசாக வியர்க்க ஆரம்பித்தது. அதற்குப் பிறகு தனது அறைக்குச் சென்று தூங்க ஆரம்பித்தார் காமராஜர். வைரவன் குளிக்கச் சென்றார்.

திடீரென காமராஜரின் அறையிலிருந்து அழைப்பு மணியின் ஓசை கேட்டது. குளிக்கச் சென்ற வைரவன் ஓடி வந்தார். கும்பகோணம் ரங்கராஜன் என்பவரும் அங்கிருந்தார். அவர், அவசரம் அவசரமாக மருத்துவரின் எண்ணை தொலைபேசி டைரக்டரியில் தேடிக்கொண்டிருந்தார்.

“அய்யாவுக்கு வியர்க்குதாம், டாக்டரை கூப்பிடச் சொல்கிறார்” என்றார் ரங்கராஜன். வைரவன் உள்ளே சென்று பார்த்தபோது, “என் தலையில் வியர்க்குது பாரு” என்றார். உடலில் சர்க்கரையின் அளவு குறைந்திருக்கலாம் என்று கருதிய வைரவன், “அய்யா, கொஞ்சம் சர்க்கரையை வாயில் போடுங்கள்,” என்றார்.

“வேண்டாம், எனக்கு மயக்கமெல்லாம் வருவது போலில்லை,” என்று சொன்ன காமராஜர், மருத்துவர் சௌரிராஜனை அழைக்கும்படி சொன்னார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் கடைசி நாளில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், TWITTER

உறங்கச் சென்ற காமராஜர்

சௌரி ராஜனை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அவர் வீட்டில் இல்லை என்பது தெரிந்தது. உடனே காமராஜரின் இன்னொரு மருத்துவரான ஜெயராமனை தொடர்பு கொண்டார் வைரவன். பிறகு காமராஜரே, ஜெயராமனிடம் பேசினார். ஜெயராமன் உடனடியாகப் புறப்பட்டு வருவதாகச் சொன்னார்.

“பிரஷர் பாக்கனும். பிபி மானிட்டரை எடுத்து வரும்படி டாக்டரிடம் சொல்,” என்றார் காமராஜர். பிறகு, “மருத்துவர் வரும் வரை சும்மா படுக்கிறேன். வந்தால் எழுப்பவும்” என்று கூறிவிட்டுப் படுத்தார்.

அவரது அறையை விட்டு வைரவன் வெளியேறப் போனபோது, “வைரவா, விளக்கை அணைச்சுட்டுப் போ” என்றார் காமராஜர். விளக்கை அணைத்துவிட்டு வெளியில் வந்த வைரன், மீண்டும் மருத்துவர் சௌரிராஜனை தொடர்புகொள்ள முயன்றார். அப்போதுதான் வீடு திரும்பியிருந்தார் சௌரிராஜன்.

காமராஜரின் உடல்நிலை குறித்த தகவலை வைரவன் சொல்லிவிட்டு, மருத்துவர் ஜெயராமன் வந்துகொண்டிருப்பதாகச் சொன்னார். சௌரிராஜன் தானும் வருவதாகச் சொல்லிவிட்டு, காரில் புறப்பட்டார். அவர் வீடு அருகில்தான் என்பதால், முதலில் வந்து சேர்ந்துவிட்டார். அப்போது மணி 3.15.

காமராஜரின் அறைக்குள் நுழைந்த சௌரிராஜன், “அய்யா” என்று அழைத்தார். ஆனால், அவரிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை. நாடியைப் பிடித்துப் பார்த்த மருத்துவர், “தலைவர் நம்மைவிட்டுப் போய்விட்டார்” என்று அலறியபடி வெளியில் ஓடி வந்தார். ஸ்டெதஸ்கோப்பை கீழே போட்டுவிட்டு, அழுதார்.

அஞ்சலில் செலுத்த அண்ணா சாலையில் கூடிய மக்கள் வெள்ளம்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் கடைசி நாளில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், TWITTER

அடுத்த சில நிமிடங்களில் வந்த மருத்துவர் ஜெயராமன், இந்தத் தகவலால் அதிர்ச்சி அடைந்தாலும் சில முயற்சிகளை மேற்கொண்டார். இதயத்தை மீண்டும் இயங்க வைக்க நெஞ்சை அழுத்திப் பார்த்தார். ஊசியும் போட்டுப் பார்த்தார். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் குழுயின் தலைவராக இருந்த பா. ராமச்சந்திரனுக்கும் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கும் ஆளுநர் ஷாவுக்கும் தகவல் சொல்லப்பட்டது. திருமலைப் பிள்ளை சாலையில் இருந்த வீட்டிற்கு வந்து முதலமைச்சர் அஞ்சலி செலுத்திய பிறகு, மாலை 5.30 மணியளவில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி மண்டபத்தில் உடல் வைக்கப்பட்டது.

பிறகு அடுத்த நாள் பிற்பகல் காமராஜரின் உடல் ராஜாஜி மண்டபத்தில் இருந்து ராணுவ வண்டியில் ஏற்பட்டது. அந்த வாகனத்தில் பா. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் ஆகியோர் ஏறிக்கொண்டனர். ஊர்வலம் புறப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி, முதலமைச்சர் மு. கருணாநிதி, ஆளுநர் ஷா ஆகியோரும் அந்த ஊர்வலத்தில் சென்றனர். அண்ணா சாலை முழுவதும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது.

காமராஜரின் உடலைத் தகனம் செய்ய கிண்டியில் காந்தி மண்டபத்திற்கு அருகில் இருந்த இடம் இரவோடு இரவாக சரிசெய்யப்பட்டிருந்தது. அங்கே வைத்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவருடைய உடலுக்கு காமராஜரின் சகோதரி நாகம்மாளின் பேரன் தீ மூட்டினார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »