Press "Enter" to skip to content

வித்யா ராம்ராஜ்: பி.டி.உஷாவை சமன் செய்த இந்த கோவை பெண் யார்? வறுமையை மீறி சாதித்தது எப்படி?

பட மூலாதாரம், NITHYA RAMRAJ

இந்தியாவின் ‘தங்க மங்கை’ என அழைக்கப்படும் விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷாவின் 400 மீட்டர் தடை தாண்டுதல் தேசிய சாதனையை, 39 ஆண்டுகளுக்குப் பின் கோவையை சேர்ந்த வித்யா ராம்ராஜ் சமன் செய்து சாதனை படைத்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த ராம்ராஜ் (63) – மீனா (59) தம்பதியினருக்கு, இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்த வித்யா மற்றும் நித்யாவுக்கு தற்போது 25 வயதாகிறது.

இருவரும் இணைந்து தடகள போட்டிகளில் பங்கேற்று தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்துள்ளனர். இந்த நிலையில், வித்யா மற்றும் நித்யா ஆகிய இருவரும் தற்போது, சீனாவின் ஹாங்சோவில் நடந்து வரும், 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

பி.டி.உஷாவின் சாதனை என்ன?

இருவரும் போட்டிகளில் அசத்தலான திறமைகளை வெளிக்காட்டி வரும் நிலையில், செப்டம்பர் 2ம் தேதி நடந்த 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் அரையிறுதியில் வென்ற வித்யா ராம்ராஜ், இறுதிப்போட்டிக்கு தேர்வாகி அசத்தியுள்ளார்.

இந்த அரையிறுதியில் அவர் வெளிப்படுத்திய தனது ஆக்ரோஷமான திறமையால், இந்தியாவின் தங்க மங்கை என அழைக்கப்படும் பி.டி.உஷாவின், 400 மீட்டர் தடை தாண்டுதலின் தேசிய சாதனையான 55.42 விநாடிகளை சமன் செய்து அசத்தியுள்ளார்.

முன்னதாக, 1984ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பி.டி.உஷா, 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியை 55.42 விநாடிகளில் முடித்து, இந்தியாவின் தேசிய சாதனையாக பதிவு செய்திருந்தார்.

இந்திய தடகள வரலாற்றில் ‘தங்க மங்கை’ பி.டி.உஷாவின் இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. எவரும் இந்த சாதனையை சமன் கூட செய்யவில்லை. இந்நிலையில், 39 ஆண்டுகளுக்குப்பின் பி.டி.உஷாவின் இந்த சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார் வித்யா ராம்ராஜ்.

இறுதிப்போட்டிக்கு பயிற்சி பெற்று வருவதால், பிபிசி தமிழிடம் வித்யாவால் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அவருக்கு பதிலாக சீனாவில் போட்டியில் பங்கேற்றுள்ள வித்யாவின் சகோதரி நித்யா மற்றும் பயிற்சியாளர் நேபால் சிங் ராத்தோர் ஆகியோர் பிபிசி தமிழிடம் பேசினார்கள்.

வித்யாவின் வாழ்க்கைப் பயணம், விளையாட்டின் மீதான ஆர்வம் மற்றும் தற்போது படைத்துள்ள சாதனை குறித்து பகிர்ந்து கொண்டார் நித்யா.

வித்யா ராம்ராஜ்

பட மூலாதாரம், NITHYA RAMRAJ

‘என் அம்மா தான் காரணம்’

பிபிசி தமிழிடம் பேசிய நித்யா, ‘‘என் சகோதரி, பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் வித்யா பி.டி.உஷாவின் சாதனையை முறியடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

எங்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஏழ்மையான குடும்பம். என் வீட்டில் நான், வித்யா, பெற்றோர் மற்றும் எங்கள் மூத்த அக்கா சத்யா ஆகியோர் உள்ளோம். மூத்த அக்காவுக்கு திருமணமாகிவிட்டது. அப்பா ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் டிரைவராக வேலை செய்து தான் எங்களை படிக்க வைத்தார். அம்மா வீட்டை கவனித்துக் கொள்வார். என் அம்மாவுக்கு சிறு வயதிலிருந்தே விளையாட்டு மீது அதீத ஆர்வம். ஆனால், பொருளாதார சூழலால் என் அம்மா படிக்க முடியவில்லை.

இரட்டையர்களான நாங்கள் 6ம் வகுப்பு படித்த போதே, ஹாக்கி விளையாட்டில் ஆர்வமாக பங்கேற்று விளையாடினோம். அப்போது, என் அம்மா நாங்கள் இருவரும் விளையாட்டுத்துறைக்கு சென்று சாதனை படைக்க வேண்டுமென்ற நோக்கத்தில், எங்களை விளையாட்டு விடுதியில் சேர்த்து விட்டனர். எங்களின் இந்த பயணத்துக்கு என் அம்மா தான் காரணம்,’’ என்றார் நித்யா.

வித்யா ராம்ராஜ்

பட மூலாதாரம், NITHYA RAMRAJ

அரசுப் பணியில் சகோதரிகள்!

மேலும், ‘‘இருவரும் 7 – 12ம் வகுப்பு வரையில் அங்கு தங்கி, தடை தாண்டுதல் மற்றும் ரிலே தடகளப்போட்டியை தேர்வு செய்து பயிற்சி பெற்றோம். இருவரும் ஒரே கல்லூரியில் பிபிஏ படித்தோம்.

கல்லூரியில் படித்த போதே, நான் தேசிய சீனியர் போட்டியில் வென்று, விளையாட்டு ஒதுக்கீட்டில், 2018ல் வருமான வரித்துறையில் மல்டி டாஸ்கிங் கிளார்க் பணியை பெற்றேன். என் சகோதரி வித்யா, தேசிய அளவிலான பல போட்டிகளில் தங்கம் வென்று, விளையாட்டு ஒதுக்கீட்டில், 2022ல் இந்திய தொடர்வண்டித் துறை துறையில் சீனியர் கிளார்க் ஆக வேலைக்குச் சேர்ந்தார். நாங்கள் வேலைக்கு வந்த பின், பல ஆண்டுகளாக எங்களுக்காக உழைத்த அப்பாவுக்கு ஓய்வு கொடுத்துள்ளோம்,’’ என்கிறார் நித்யா.

இருவரின் லட்சியம் மற்றும் இதுவரை கடந்து வந்த பாதை குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் நித்யா.

‘‘நாங்கள் எப்போதும் எந்த விஷயத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டோம். எனக்கு அவர், அவருக்கு நான் அப்படித்தான் இருப்போம். ரெண்டு பேரும் சேர்ந்து பயிற்சி எடுப்போம். உதவிகள் செய்து கொள்வதுடன், எங்களுக்கு எதுவானாலும் நாங்களே பார்த்துக் கொள்வோம். தொடக்கத்தில் நான் 100 மீட்டர் தடை தாண்டுதலை தேர்வு செய்த போது, வித்யா 400 மீட்டர் மற்றும் ரிலே போட்டியை தேர்வு செய்தார். இருவரும் ஒரே விளையாட்டு என்பதால் எங்களுக்கு நாங்களே ‘மோட்டிவேட்டராக’ இருந்து ஊக்குவித்துக் கொண்டு, பயிற்சி பெறுவோம்,’’ என்றார்.

‘பெற்றோர் ஒத்துழைத்தால் எதுவும் சாத்தியம்’

விளையாட்டில் உள்ள பெண்களுக்கு மிக விரைவில் திருமணம் செய்து வைப்பதை தவிர்த்தாலே, பல பெண்கள் சாதனை படைக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் நித்யா.

இது குறித்து விளக்கிய நித்யா, ‘‘சொந்தக்காரங்க, அருகில இருக்கறவங்க எல்லாம், பொண்ணுங்களுக்கு 25 வயசாச்சு இனியும் விளையாட்டுனு அனுப்பாம திருமணம் செய்து வைங்க என்று எல்லோரும் சொல்கின்றனர். ஆனால், என் அம்மாவும், அப்பாவும், எங்க மேல நம்பிக்கை வெச்சு, என் மகள்கள் நாட்டுக்காக தங்கப்பதக்கம் வெல்வார்கள் என்றும், அதன் பின் திருமணம் பற்றி யோசிக்கலாம் என்றும் எங்கள் இருவருக்கும் பெரிய அளவில் ஆதரவாக இருக்கின்றனர்.

ஒருவேளை நாங்களும் திருமணம் செய்திருந்தா, சாதனைகள் படைக்குறதும், விளையாட்டுல தொடர்ந்து முன்னேறுவதற்கும் பெரிய சிரமமான, சவாலானதாக இருந்திருக்கும்.

விளையாட்டுத் துறையில இருக்கும் பெண்களுக்கு, அவங்க பெற்றோர் முழு ஒத்துழைப்பு கொடுத்து, சிறிய வயதில் திருமணம் செய்து வைப்பதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு கொடுத்தால், பல பெண்கள் விளையாட்டில் சாதனை படைக்க முடியும், எதுவும் சாத்தியம் தான்,’’ என்கிறார் நித்யா.

எங்க ரெண்டு பேருக்கும், இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில விளையாடி தங்கப்பதக்கம் வெல்லவேண்டும், என் அம்மாவோட கனவை நாங்க ரெண்டு பேரும் நிறைவேற்ற வேண்டும், விளையாட்டில் பெரிய உச்சத்தைத் தொட வேண்டும், இதுதான் எங்கள் லட்சியம்,” என நம்பிக்கையுடன் நிறைவு செய்தார் நித்யா.

வித்யா ராம்ராஜ்

பட மூலாதாரம், NITHYA RAMRAJ

‘ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகிறார்கள்’

பிபிசி தமிழிடம் பேசிய வித்யா மற்றும் நித்யாவின் பயிற்சியாளரான நேபால் சிங் ராத்தோர், ‘‘வித்யா மற்றும் நித்யாவுக்கு நான் இரண்டு ஆண்டுகளாக பயிற்சியளித்து வருகிறேன். என்னைப் பொறுத்த வரையில், பி.டி.உஷாவின் சாதனையை வித்யா சமன் செய்தது, இத்தனை ஆண்டுகளில் வித்யா மேற்கொண்ட கடுமையான பயிற்சியின் வெளிப்பாடாக, வெற்றியாகவே நான் கருதுகிறேன். மற்ற வீரர்களைப்போல் அல்லாமல், வித்யா மற்றும் நித்யா இருவரும் மிகக்கடுமையாக, இடைவிடாது பயிற்சி மேற்கொண்டனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சண்டிகரில் நடந்த இந்தியன் கிராண்ட் ஃப்ரீ தடகள தொடரில், 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தை 55.43 விநாடிகளில் முடித்த வித்யாவால், வெறும், 0.01 மைக்ரோ விநாடியில் பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது, சமன் செய்துள்ளார். விரைவில் பி.டி.உஷாவின் சாதனையை வித்யா முறியடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது,’’ என்கிறார்.

இருவரையும் 2024 மற்றும் 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயார் செய்து வருவதாக கூறுகிறார் அவர்.

‘தினமும் 6 மணி நேரம் பயிற்சி’

மேலும் தொடர்ந்த நேபால் சிங் ராத்தோர், ‘‘நீண்ட கால இலக்கை அடைய, குறுகிய கால சிறு சிறு இலக்குகளில் வெற்றி பெறுவது தான் எங்களின் நோக்கம். அந்த வகையில், 2024 மற்றும் 2028 ஒலிம்பிக்கில் வித்யா மற்றும் நித்யாவை களமிறக்கி சாதனை படைக்க வேண்டுமென்பதே நோக்கம். இதனால், இருவரையும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயார் செய்து வருகிறேன்.

இன்று அவர்கள் படைக்கும் சாதனைகள் மற்றும் கடுமையான உழைப்பும், பயிற்சியும், ஒலிம்பிக் என்ற பெரிய இலக்கை நோக்கித்தான் பயணிக்கும். இதற்காக தினமும், 6 மணிநேரங்கள் வரையில் வாரத்தில், 6 நாட்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் விரைவில் இந்தியாவுக்காக சாதனை படைப்பார்கள்,’’ என்றார் நம்பிக்கையுடன்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »