Press "Enter" to skip to content

நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?

பட மூலாதாரம், ANI

  • எழுதியவர், அருணா ராய், சமூக சேவகர்
  • பதவி, பிபிசிக்காக

‘ஒவ்வொரு கைக்கும் வேலை கொடுங்கள், உழைப்புக்கு முழு விலை கொடுங்கள்’ – இது 1996 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் முழக்கமாக இருந்து வருகிறது.

வேலை வாய்ப்பு மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை சமநிலையற்ற சமுதாயத்தில் ஜனநாயக உரிமையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் அங்கீகரித்துள்ளது. நடைமுறையில் இது நூறு நாள் வேலை திட்டம் என்று மக்களால் அழைக்கப்படுகிறது.

வறுமை என்பது சமமற்ற சமூக-பொருளாதார நிலைமைகள் மற்றும் குறிப்பாக வேலையின்மை ஆகியவற்றின் விளைவாகும். கிராமப்புற வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முகம் இல்லை. அது காகிதத்தில் சில எண்கள் மற்றும் வளர்ச்சிக்கான அடிக்குறிப்பாகவே இருந்து வருகிறது.

இந்தியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் ‘முறைசாரா’ தொழிலாளர்களின் பங்களிப்பு பொருத்தமற்றது என நிராகரிக்கப்படுகிறது. ஆனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மனித உழைப்பை அங்கீகரித்து அரசியல் அமைப்பில் அதற்கென்று தனி இடம் கொடுத்தது.

இதன் மூலம், முதன்முறையாக, விளிம்புநிலை மக்களின் ஜனநாயக மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குரலை இந்தியா எதிர்கொண்டது.

2016 ஆம் ஆண்டில், ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்) ஒருமுறை பேசிய போது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MNREGA) இந்தியாவின் மிகப்பெரிய முற்போக்கான திட்டம் என்பது மட்டுமல்லாமல் முழு உலகிற்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது,” என்றார்.

இந்தியா சமத்துவமின்மையை எவ்வாறு குறைக்கலாம் அல்லது அகற்றலாம் என்ற கேள்விக்கு ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் இவ்வாறு கூறினார்.

மற்ற திட்டங்களிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கு முன், இடப்பெயர்வு மற்றும் அதனால் ஏற்பட்ட நெருக்கடிக்கு தீர்வு இல்லை. JRY, வேலைக்கு உணவு, பஞ்ச நிவாரணம் போன்ற பழைய வேலைவாய்ப்பு திட்டங்கள் காகிதங்களில் மட்டுமே இருந்தன.

இந்த பின்னணியில், 1990 களின் மத்தியில், பொது அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல பிரச்சாரங்கள் மகாராஷ்டிரா கிராமப்புற வேலை உறுதித் திட்டம் போன்ற வேலை உத்தரவாதச் சட்டத்தை கோரின.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் வேலை செய்வதற்கான உத்தரவாத உரிமையை விரிவுபடுத்தியது என்பதோடல்லாமல், உரிமைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முழுமையான கட்டமைப்பை வழங்கியது.

2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இது தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் ஒரு முக்கிய அங்கமாக மாறியது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) 2004 ஆம் ஆண்டில் தேசிய அளவிலான பொது குறைந்தபட்ச திட்டத்தின் மீதான விருப்பத்தை அறிவித்தது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் குறைந்தபட்ச ஊதியத்துடன் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.

வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம்

பட மூலாதாரம், ANAND DUTTA/BBC

மற்ற வறுமை ஒழிப்பு திட்டங்களிலிருந்து வேறுபட்ட திட்டம்

வேலையைக் கோருவதன் மூலம், ஒரு தொழிலாளி தனது குடியுரிமையை மற்றும் உரிமைகளை நிறுவுவதுடன், முடிவெடுப்பதில் பங்கேற்பாளராக மாறுகிறார்.

திருட்டு மற்றும் ஊழலைக் கண்டறிந்து தடுக்க கிராம சபையின் வழக்கமான சமூக தணிக்கை அறிமுகம் என்பது ஒரு குடிமகன் கருத்து மற்றும் நடைமுறை மட்டத்தில் கண்காணிப்பதாகும்.

தொழிலாளர்களின் உரிமைகள் சட்ட கட்டமைப்பிற்குள் இருந்தன. இது இந்தியாவின் வளர்ச்சி, பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பில் அவர்களை மேலும் சம பங்குதாரர்களாக மாற்றியது.

பொருளாதாரத்தில் மனித உழைப்பின் பங்களிப்பை அங்கீகரித்த முதல் சட்டம் இதுவாகும்.

முதன்முறையாக பஞ்சாயத்து மற்றும் கிராமசபை மூலம் பெறப்படும் நிதி அதிகரிக்கப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் நோக்கம் தேவையின் அடிப்படையில் வேலைக்கு உத்தரவாதம் அளிப்பது மற்றும் அதன் தேவைகளை பூர்த்தி செய்ய நெகிழ்வான நிதி ஆதாரத்தை உறுதி செய்வது ஆகும். இது இந்தியாவில் ஏழை மக்கள் இடம்பெயர்தல் பிரச்சனையைச் சரி செய்ய முயன்றது. அது தனது சொந்த இலக்குகளை நிர்ணயித்து, வேலை செய்ய விரும்புவோருக்கு குறைந்தபட்ச ஊதிய அடிப்படையில் வேலை வாய்ப்பை வழங்கியது.

பொருளாதார மந்தநிலையிலிருந்து மீள்வதில் முக்கிய பங்கு

அரசியலில் சம உரிமை அளித்தால் மட்டும் போதாது என்பதுடன் பொருளாதார மற்றும் சமூக சமத்துவத்தை தீர்ப்பது மிகவும் முக்கியம் என்று அம்பேத்கர் தொடர்ந்து கூறினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் அரசியலமைப்பின் பிரிவு 21 மற்றும் அரசாங்கக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில், மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) பகிர்ந்து கொள்வதற்கான வரைபடம் வரையப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் வறட்சி, கிராமப்புற துயரங்கள் மற்றும் பொதுமக்களின் வேலையின்மை ஆகியவற்றை தீர்க்க ஒரு முக்கியமான மற்றும் நிலையான தீர்வாகும். அது இப்போது நமது அரசியல் ‘தேசிய அளவில்’ முக்கியத்துவம் பெற்ற திட்டமாக மாற வேண்டும்.

2008 இல் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, ​​பொருளாதார மந்தநிலையை இந்தியா சமாளிக்க உதவியது.

கிராமப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது என்பதால் சந்தைகள் மந்தநிலையை சந்திக்கவில்லை. கோவிட் தொற்றுநோய் பாதிப்பின் போது தலைகீழ் இடம்பெயர்வு நடந்தது. இருப்பினும், ​​​​இந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் வீடு திரும்பிய கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு உயிர்நாடியாக மாறியது. இது முன்பு நிறைய விமர்சிக்கப்பட்டது.

இது கற்பனைக்கு எட்டாத பொருளாதார நெருக்கடியில் கூட நன்கு பரிசோதிக்கப்பட்ட மற்றும் நெறிப்படுத்தப்பட்ட வடிவமைப்பைக் கொண்டு உயிர்வாழ்வதற்கான தேவைகளை பூர்த்தி செய்தது.

துரதிர்ஷ்டவசமாக, பொதுமக்களை வறுமைக் கோட்டிற்கு மேலே கொண்டு வருவதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கும் இருந்த வாய்ப்பை அரசாங்கம் தவறவிட்டது.

வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம்

பட மூலாதாரம், ANAND DUTTA/BBC

ஊழலை ஒழிக்கிறோம் என்ற பெயரில், ஒட்டுமொத்த அமைப்பையும் முடக்கியது அரசு.

தாமதம் மற்றும் மறுப்பு என்பது ஒரு அணுகுமுறை – ஆனால் ஏழைகள் அன்றாட செலவுகளை சந்திக்க ஒவ்வொரு நாளும் வேலை செய்ய வேண்டும். ஊதியம் வழங்குவதில் தாமதம் தொழிலாளர்களை அதிலிருந்து விலக்கி, குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவாக இருந்தாலும், உடனடியாக ஊதியம் கிடைக்கும் பகுதிகளுக்கு தள்ளுகிறது.

பணம் செலுத்தாதது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது – மேற்கு வங்கத்தில் ஒரு கோடி தொழிலாளர்களுக்கு ஓராண்டாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேற்கு வங்க அரசில் நடந்ததாகக் கூறப்படும் பாரிய ஊழலுக்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் ஊழல்களுக்காக மக்களுக்கு இரட்டை தண்டனை வழங்கப்படுவது வருத்தமளிக்கிறது.

அதிகாரத்தை மறுக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது – வருகை மற்றும் ஊதியத்தை உறுதிப்படுத்த முற்றிலும் நடைமுறைக்கு மாறான NMMS பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து MNREGA தளங்களிலும், மேற்பார்வையாளர்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை தங்கள் தொலைபேசிகளில் இருந்து அனைத்து தொழிலாளர்களின் புகைப்படங்களையும் பதிவேற்ற வேண்டும், அவற்றில் பலவற்றில் நெட்வொர்க் மிகவும் பலவீனமாக உள்ளது அல்லது இல்லை. அவர்களின் பணியை பதிவு செய்ய முடியாததால், லட்சக்கணக்கான மக்களின் ஊதியம் பறிக்கப்பட்டது.

இந்திய அரசு போதிய நிதியை ஒதுக்காததால் 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் MNREGA திட்டம் அதாவது நூறு நாள் வேலை திட்டம் முடக்கப்பட்டுள்ளது.

திட்ட அமலாக்கத்தில் வெளிப்படைத்தன்மை, திட்டமிடலில் பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் பயனுள்ள சமூக தணிக்கை ஆகியவற்றை உறுதிப்படுத்த அரசு ஏஜென்சிகள் தவறிவிட்டன.

கிராமப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் உறுதியான நிர்வாகிகள் மற்றும் வழிமுறைகள் இருந்தபோதிலும், சட்டக் கட்டமைப்பிற்குள் ஏஜென்சிகளை பொறுப்புக்கூற வைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிட்டது. ஒரு வகையில், உரிமைகள் அடிப்படையிலான கட்டமைப்பில் இது ஒரு சாத்தியமும் சவாலும் ஆகும்.

MNREGA பற்றிய பத்து சிறப்பு விஷயங்கள்

1. MNREGA மூலம் வேலை செய்யும் உரிமைச் சட்டம் ஆகஸ்ட் 2005 இல் நிறைவேற்றப்பட்டது.

2. இந்த சட்டம் முதன்முதலில் 1991 இல் நரசிம்மராவ் அரசாங்கத்தின் போது முன்மொழியப்பட்டது.

3. MNREGA முன்பு இந்தியாவில் 625 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

4. இது 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டது.

5. இதன் கீழ், கிராமப்புறங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6. MNREGA திட்டத்தை செயல்படுத்துவது கிராம பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ளது.

7. வேலை தேடுபவர்களுக்கு ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் வேலை வழங்கப்படுகிறது என்பது மட்டுமில்லாமல் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறது.

8. விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வேலை கிடைக்காவிட்டால் விண்ணப்பதாரருக்கு வேலையின்மை உதவித்தொகை வழங்கவும் விதிமுறை உள்ளது.

9. மத்திய அரசால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, பிப்ரவரி 2, 2023 வரை, நாடு முழுவதும் பதினைந்து கோடியே ஆறு லட்சத்து எழுநூற்று ஒன்பது தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

10. நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை இருபத்தொன்பது கோடியே எழுபத்திரண்டு லட்சத்து முப்பத்து ஆறாயிரத்து அறுநூற்று நாற்பத்து ஏழாக உள்ளது.

வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம்

பட மூலாதாரம், TNRD.GOV.IN

காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு MNREGA ஒரு வாழும் உதாரணம் என்று 2015 இல் பிரதமர் மோதி கூறியிருந்தார். ராஜஸ்தானில் மட்டும் 74.3 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 1.08 கோடி பேர் 2020-21 ஆம் ஆண்டில் MNREGA இன் கீழ் பணிபுரிந்தனர்.

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியபோது, ​​​​வேலையின்மை மற்றும் பட்டினிக்கு இடையே ஒரு பாலமாக அது செயல்பட்டது.

ஆனால் இந்திய அரசாங்கத்தின் அணுகுமுறை பொறுப்பற்றதாகவே இருந்தது, 2021-2022 நிதியாண்டில் MNREGA நிதி ஒதுக்கீட்டை குறைத்தது.

MNREGA என்பது ஒரு தனிப்பட்ட கோரிக்கை சார்ந்த சட்டப் பொறிமுறையாகும், இது வரவு செலவுத் திட்டம் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படக்கூடாது.

2023-2024 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை MNREGA வுக்கு பொருளாதார அடியாக இருந்தது.

இந்த திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது நடப்பு நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.89 ஆயிரத்து 400 கோடியை விட 32 சதவீதம் குறைவாகும்.

இது மட்டுமின்றி, இது 2020-2021 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 1 லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரவு செலவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட பாதியாகும்.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசின் பல கோடி ரூபாய் நிலுவைத் தொகை அதிகரித்து வருகிறது.

வரவு செலவுத் திட்டம் மதிப்பீடுகள் மற்றும் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் வேண்டுமென்றே இந்தத் திட்டத்திற்கான நிதிப் பற்றாக்குறையை உருவாக்கி, கோடிக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் பணம் கிடைக்காமல் போய்விட்டது.

இந்த கொடூரமான சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், இது ‘கொத்தடிமை தொழிலாளர்களுக்கும்’ குறைவானது அல்ல என்றும், எனவே இது அரசியலமைப்பின் 23 வது பிரிவை மீறுவதாகும் என்றும் கூறியது.

2008 மற்றும் 2011 க்கு இடையில், இந்தத் திட்டத்திற்கான ஆண்டு ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதமாக இருந்தது.

திட்டம் செயல்படுத்தப்பட்டபோது அதை நெருக்கமாகப் பின்பற்றிய பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சிறிய பங்காக இருந்தாலும், இந்த ஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று மதிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு (2023) வரவு செலவுத் திட்டம் ஒதுக்கீடு ரூ.60 ஆயிரம் கோடி என்ற நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 சதவீதம் மட்டுமே.

எனவே, உண்மையான அடிப்படையில் இதுவே இதுவரை குறைந்த MNREGA திட்டத்திற்கான ஒதுக்கீடு ஆகும். வேலை வாய்ப்பு உத்தரவாதத்திற்கான மக்கள் நடவடிக்கை மற்றும் NREGA சங்கர்ஷ் மோர்ச்சா மதிப்பீடுகளின்படி, தற்போது இத்திட்டத்தின் கீழ் செயல்படும் பயனாளி ஒருவருக்கு சராசரியாக மாதம் 20 நாட்களுக்கும் குறைவான வேலை பெறுகிறார்.

இந்த வரவு செலவுத் திட்டம், தற்போதைய தேவையை பூர்த்தி செய்ய போதுமானது என்றும், தேவைப்பட்டால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

கடந்த காலத்தில் MNREGA செயல்படுத்தப்பட்டதைப் பார்த்தால், இந்த வாக்குறுதிகள் எவ்வளவு வெற்றுத்தனமானவை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

பங்கேற்பு ஜனநாயகம் ‘பயங்கரமானது.’ ஏனெனில் அது அதிகாரத்தையும் பொறுப்பு ஏற்பதையும் கட்டாயமாக்குகிறது. இதுமட்டுமின்றி அரசில் நிலவும் தார்மீக விரிசல்களை அம்பலப்படுத்துகிறது

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »