பட மூலாதாரம், Getty Images
தங்கத்தைப் பொருத்தவரை இந்தியா நெடும் வரலாற்றை கொண்டுள்ளது. தங்கத்தை கலாசார ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உலோகமாக, இந்திய மக்கள் வீடுகளிலும் அவர்களது இதயங்களிலும் வைத்து கொண்டாடுகின்றனர்.
“என் தங்கமே” என்றுதான் குழந்தைகளைக் கூட கொஞ்சுகின்றனர் மக்கள். அந்தளவு தங்கத்தை தங்களது வாழ்வில் உயரிய ஒன்றாக மதிக்கின்றனர். தங்கம் என்பது புனிதமான தகுதிகளை கொண்டுள்ளதாக மக்கள் நம்புவதால்தான் இந்தியாவில் தங்கத்துக்கு அதிக கிராக்கி உள்ளது.
உலக அளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்தியாவைப் போன்றே பிற உலக நாடுகளும் தங்கத்தை சேமிப்பாக வைக்கின்றன. எனவே தான் ஒரு நாட்டின் அரசு வங்கியில் தங்க கையிருப்பு எவ்வளவு என்பதை பொறுத்து அந்த நாட்டின் மீதான மதிப்பும் நிர்ணயிக்கப்படுகிறது.
ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்துக்கு பதிலாக தங்கத்தை கொண்டு தான் பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு ஆபாத்பாந்தவனாகவே பார்க்கப்படுகிறது. அப்படித்தான் வீடுகளிலும் திடீர் செலவு வரும் நாட்களில் தங்கம் ஒரு காக்கும் தேவதையாகவே மாறிவிடுகிறது.
தங்கத்தில் என்ன சிறப்பு?
தங்கம் ஒரு சிறப்பு உலோகமாகப் பார்க்கப்பட முக்கியக் காரணம் தங்கத்தின் மீதான சந்தை அபாயம் மிகக் குறைவு. அதாவது நீண்ட காலத்துக்கு முன் வாங்கிய தங்கம் விற்கும்போது நட்டமாகிவிட்டது என்ற சொல் இதுவரை வந்ததில்லை. அந்த அச்சம் இல்லாததால்தான், புனிதமான அல்லது நல்ல விசேஷம் நடக்கும் நாட்களில் தங்கத்தை வாங்கி முதலீடு செய்வதை இந்திய மக்கள் விரும்புகின்றனர்.
தற்போதைய தங்கம் விலை சரிவைப் பற்றி மேலும் அறிய மெட்ராஸ் தங்க ஆபரணம் மற்றும் வைர வணிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமாரை அணுகியது பிபிசி தமிழ். “கடந்த 6 மாத காலத்துக்கு முன்பு இருந்த மதிப்புக்கு தங்கம் விலை இறங்கி வந்திருக்கிறது. விலையிறக்கத்தை எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு வரப்பிரசாதமாகவே இது உள்ளது” எனக் கூறினார்
சர்வதேச சந்தையில் 2,000 டாலர் வரை விற்ற ஒரு அவுன்ஸ் (28.34 கிராம்) தங்கம், தற்போது 1,841 டாலர்கள் வரை குறைந்துள்ளது. “ கடந்த 6 மாதங்களாக அதிகபட்சம் ரூ.5,800-லிருந்து, குறைந்தபட்சம் ரூ.5,500 வரைக்குத்தான் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விற்பனையானது. ஆனால், தற்போது கிராம் ஒன்றுக்கு ரூ.5,356-ஆக விலை குறைந்துள்ளது. எனவே தங்கம் வாங்க இது நல்ல தருணம்.” எனக் கூறியுள்ளார் சாந்த குமார்.
தொடர்ந்து பேசிய அவர், “புரட்டாசி முடிந்தபின் விசேஷ நாட்கள் அதிகம் வரக்கூடும் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும். எனவே, விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.
தங்கத்தின் விலை குறைந்துள்ள வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறிய அவர் “ஒரு 10 பவுன் நகை வாங்க வேண்டும். இன்னும் விலை குறையட்டும், வாங்கிக் கொள்ளலாம் என நினைக்கும் வாடிக்கையாளர்கள், 6 பவுனைத் தற்போது வாங்கிக் கொண்டு, விலை ஏற்ற இறக்கத்துக்குக் காத்திருந்து பின்னர் மீதமுள்ள 4 பவுனை வாங்குவது பற்றி திட்டமிடலாம்” எனவும் அறிவுறுத்தினார் சாந்தகுமார்.
கையில் பணம் வைத்திருந்தால் தங்கம் வாங்க சரியான தருணம் என்றும், வங்கி லோன், தனிப்பட்ட கடன் வாங்கி முதலீடு செய்ய விரும்புவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து முதலீடு செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் தங்கம் இனி எந்தளவு ஏறும், இறங்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
சாமானியர்கள் எட்டாக்கனியாக தங்கம் இருப்பது ஏன்?
தங்கச் சுரங்கத்தில் இருந்து கஷ்டப்பட்டு வெட்டி எடுத்து, மண்ணை சேகரித்து, சுத்தப்படுத்தி, வடிகட்டி, தங்கத்தை பிரித்து, உருக்கி, கட்டியாக்கி, சந்தைப்படுத்தி, ஆபரணமாக்கி விற்பதில் செலவினங்கள் அதிகம் உள்ளதாகக் கூறினார்.
” 1990-95களில் 2,000 முதல் 2,500 ரூபாய்க்குத்தான் ஒரு சவரன் தங்கமே விற்பனையானது. அப்போதைய சுரங்க ஆள் கூலி ரூ.200. தற்போது ரூ.2,000. அப்போதைய கல்லெண்ணெய் விலை ரூ.30 தற்போது ரூ.100-ஐக் கடந்துவிட்டது. கோலார் தங்கச் சுரங்கத்தில் வெட்டி எடுக்கும் தங்கத்தைத் தான் இப்போதும், அதுவும் இத்தனை செலவினங்கள் போக விற்க வேண்டும் என்ற நிலை இருந்திருந்தால் தற்போது ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,500-ஐக் கடந்திருக்கும்” என்றார் சாந்தகுமார்.
எனவேதான் ஆப்ரிக்கா மற்றும் சீன சுரங்கங்களில் வெட்டி எடுக்கும் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்து விற்பதாகக் கூறினார்.

நகைச்சீட்டுக்கு மட்டும் ஆஃபர் ஏன்?
நகைச்சீட்டு போட்டால் மட்டும் செய்கூலி, சேதாரம் இல்லாமல் கொடுக்க முடிந்த நகை வியாபாரிகளால், ஏன் மொத்தமாக பணத்தைக் கொடுத்து வாங்கும் வாடிக்கையாளருக்கு அப்படி ஒரு ஆஃபர் கொடுக்க முடியவில்லை என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்தும் பதிலளித்தார் சாந்தகுமார்.
“ரூ.5,000 மாதாமாதம் ஒருவர் பணம் செலுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரைப் போன்றே ஒரு 100 பேர் அப்படி ஒவ்வொரு மாதமும் பணம் கொடுக்க, மாதத்துக்கு ரூ.5,00,000 கிடைக்கும். நகை வியாபாரிகள் அந்தப் பணத்தை அப்போதைய குறைந்த தங்க விலையைப் பயன்படுத்தி தொழில் சுழற்சியில் விட ஏதுவாக இருக்கும். அப்படி முன்கூட்டியே பணம் கொடுத்து சேமிப்பதாலும், முதலீட்டுக்கு உதவுவதாலும்தான், எங்களால் செய்கூலி, சேதாரத்தில் சலுகைகள் கொடுக்க முடிகிறது” என்றும் தெளிவுபடுத்தினார்.
தங்கத்துக்கும் அமெரிக்க டாலருக்கும் என்ன தொடர்பா?
இந்தியாவில் தங்கம் விலையும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் தங்கத்தின் விலையில் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஏனெனில் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரில் தான் தங்கம் மதிப்பிடப்படுகிறது. எனவே சந்தையில் தங்கம் விலையானது, அமெரிக்க டாலருடன் நேர்மாறான விகிதாச்சார தொடர்பை கொண்டுள்ளதாக பிபிசி தமிழிடம் விளக்கினார் முதலீட்டு ஆலோசகர் சதீஷ்.
“அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தால் தங்கம் விலை குறையும். அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தால் தங்கம் விலை அதிகரிக்கும்.” என அவர் குறிப்பிட்டார்.
உதாரணத்துக்கு இன்னும் எளிமையாக சொல்லப்போனால் உங்களிடம் ஒரு அமெரிக்க டாலர் உள்ளது என்றால் இந்திய மதிப்பில் சுமார் 80 ரூபாய் என வைத்துக்கொள்வோம்.ரூ.80 மதிப்பில் 100 கிராம் எடையில் சாக்லேட் நீங்கள் வாங்க செல்கிறீர்கள்.
நீங்கள் கடைக்கு செல்வதற்குள் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைகிறது. எனவே, உங்களிடம் உள்ள ஒரு டாலரின் மதிப்பு தற்போது 88 ரூபாயாக அதிகரிக்கிறது.
அப்படி இருப்பின் ஒரு டாலருக்கு நிகராக நீங்கள் சாக்லேட் வாங்க சென்று இருப்பீர்கள். ஆனால் அந்த சாக்லேட்டின் விலை குறைந்திருக்கும். 100 கிராம் சாக்லேட் வாங்க நினைத்த நீங்கள் 110 கிராம் சாக்லேட் வாங்கலாம். இப்படித்தான் அமெரிக்க டாலரின் மதிப்பை பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
நீண்ட கால முதலீட்டுக்கு தங்கம் சிறந்தது – ஏன்?
தங்கம் விலை குறைந்துள்ளதால் இது நீண்ட கால முதலீட்டுக்கான ஒரு வாய்ப்பாகவும் பாதுகாப்பாக பலன் ஈட்ட ஒரு சிறந்த தேர்வாகவும் தங்கம் அமைகிறது. மிகக் குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை ஆனது மாறக்கூடியதாக இருக்கலாம். ஆனால் மிக நீண்ட காலத்தில் அதன் மதிப்பு எப்போதுமே அதிகரித்திருக்கும்.
இதுபற்றி விளக்கிய முதலீட்டு ஆலோசகர் சதீஷ், “எத்தனையோ ஆண்டுகளாக பண வீக்கத்துக்கும், நாணய மதிப்பு குறைதலுக்கும் எதிரான சிறந்த பாதுகாப்பாக இருப்பது தங்கம் தான். எனவே அதனை முதலீடாக செய்வது பற்றி தற்போது யோசிப்பது நல்ல ஒரு மதிப்பையை ஈட்டி தரும்.” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ரஷ்யா-யுக்ரைன் போரின் எதிரொலியாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்ற பொருளாதார நெருக்கடி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்கு கிராக்கி அதிகரித்து அதன் விலையும் அதிகரித்துள்ளது. இந்தியாவும் கச்சா எண்ணெய் அதிகமாக இறக்குமதி செய்வதால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவாக உள்ளது. எனவே அமெரிக்க டாலரில் முதலீடு செய்ய மக்கள் அதிகம் விரும்புவதால் தங்கத்தின் மீதான ஆர்வம் குறைந்து விலையும் குறைந்துள்ளது.” என விளக்கம் அளித்தார்.
தங்கத்தை அலங்காரத்துக்காகவும் சமூகத்தில் ஒரு மதிப்பாக தங்களை காட்டிக் கொள்ளும் ஒரு ஆடம்பர உலோகமாகவும் இந்தியர்கள் கருதுகின்றனர். எனவே தான் அவர்கள் பெரும்பாலும் ஆபரணங்களாக தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். ஆனால் அதைவிட தங்கப்பத்திரம் முதலீட்டைப் பொறுத்தவரை அதிக லாபம் ஈட்டித் தரும். அது எப்படி? என்பதைப் பார்க்கலாம்.

தங்க பத்திரம் என்றால் என்ன?
தங்க பத்திரம் என்றால் பத்திரத்தின் நகல் தங்கத்தினால் ஆனது என்று இன்னமும் சில சாமானியர்கள் நம்பி கொண்டுள்ளனர். ஆனால் அது தங்கத்தினால் ஆன பத்திரம் இல்லை. மாறாக அதைவிட அதிக லாபம் ஈட்டிக் கொடுக்கும் பாதுகாப்பான ஒரு சேமிப்பு முறையாக தங்கப்பத்திரம் கருதப்படுகிறது
இதுபற்றி விளக்கமளித்தார் முதலீட்டு ஆலோசகர் சதீஷ். “தங்கத்தை ஃபிசிகல் முறையில் ஒரு ஆபரணமாகவோ, நாணயமாகவோ, கட்டியாகவோ வைத்துக் கொள்வதற்கு பதில் தங்க பத்திரமாக வாங்கிக் கொள்ளலாம் என இந்திய அரசாங்கம் 2015 நவம்பரில் அறிமுகப்படுத்தியது. முதலீட்டாளர்கள் வங்கிகளிலோ, பங்குச்சந்தை இணையதளங்களிலோ பணமாகவோ, செக், டிடி, மின்னணு பண பரிவர்த்தனை உள்ளிட்டவற்றின் மூலமும் தங்க பத்திரத்தை வாங்க முடியும்.” என்றார் அவர்.
உதாரணத்துக்கு ஒரு கிராம் தங்கப்பத்திரம் ஒருவர் வாங்குகிறார் என்றால் 8 ஆண்டுகள் கழித்து அப்போதைய ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பில் அவர் அந்த பத்திரத்தின் மதிப்புக்கு ஈடான தூய தங்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
2015 ஆம் ஆண்டு 24 கேரட் தூய்மையான தங்கத்தை ஒரு கிராம் தங்க பத்திரமாக ரூ.2,634 கொடுத்து ஒருவர் வாங்குகிறார். 8 ஆண்டுகள் கழித்து ரூ. 6,030 மதிப்பிலான தங்கத்தை பெறுவார். 8 ஆண்டுகளில் அந்த தங்கத்தின் மதிப்பு எவ்வளவு ஏறியதோ, அவ்வளவு மதிப்பில் அவருக்குத் தூய தங்கம் கிடைக்கும்.
அதே சமயம் 5 ஆண்டுகள் கழித்து அதற்கான நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு வட்டியாக 2.50% வட்டியும் வர தொடங்கும்.
தங்கத்தை ஆபரணமாகவோ, நாணயமாகவோ, கட்டியாகவோ வீட்டிலோ வைத்திருக்கும் போது அச்சம் எழலாம். நிம்மதியாக ஒரு உறவினர் வீட்டின் விசேஷ நிகழ்ச்சிக்குக் கூட சென்று வர முடியாது. என்னதான் கண்காணிப்பு தொலைக்காட்சி வைத்து கண்காணித்தாலும், அது திருடன் எந்த உருவில் வந்து திருடிச் சென்றான் என்றே காட்டித் தருமே தவிர திருட்டைத் தடுக்க முடியாது.
தங்கத்தை ஒரு சிறந்த முதலீடு வாய்ப்பாக கருதும் பலரும் அதை யார் பாதுகாப்பது என்ற அச்சத்தினால் கூட அதன் மீது முதலீடு செய்வதை தவிர்ப்பதும் உண்டு. வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால் அதற்கு ஆண்டுக்கு ஒரு கணிசமான தொகையை லாக்கர் வாடகையாக கொடுக்க வேண்டி வரும்.
ஆனால் தங்க பத்திரத்தை பொருத்தவரை அதைத் திருடினால்கூட நீங்களே சென்று கையெழுத்திட்டால்தான் அந்த தங்க பத்திரத்தை வாங்கவோ, விற்கவோ, பிறருக்கு கைமாற்றவோ அல்லது வங்கிகளில் அடகு வைத்து பணத்தையோ பெற முடியும். எனவே பாதுகாப்புக்கு தங்கப்பத்திரம் சிறந்த தேர்வாக இருக்கும்.
எனவே தான் மைய கட்டுப்பாட்டு வங்கி நீங்கள் தங்கத்தை ஒரு முதலீட்டு வாய்ப்பாக கருதுகிறீர்கள் என்றால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தங்கம் – தங்கப் பத்திரம் என்ன வித்தியாசம்?
ஒரு பவுன் தங்க நகை வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதை தங்கமாகவும், தங்கப் பத்திரமாகவும் வாங்கினால் என்னென்ன வித்யாசம் என்பதை தற்போது பார்க்கலாம்.
தங்கம் உத்தேச விலை
8 கிராம் தங்கம் விலை – ரூ.44,542
செய்கூலி (5%-15%) – ரூ. 6,681
சேதாரம் (15%-18%) – ரூ. 8,017
ஜிஎஸ்டி (தங்கம் 3% செய்கூலி 5%) – ரூ. 1,536
மொத்தம் – ரூ. 60,776
- தங்கத்தை விட ரூ.16,234 அதிகம் செலுத்த வேண்டும்.
- நாணயமாக வாங்கினாலும் சேதாரம், ஜிஎஸ்டி இருக்கும்.
தங்கப்பத்திரம் உத்தேச விலை
8 கிராம் தங்கம் – ரூ.44,542
என்னென்ன பலன்கள்?
செய்கூலி இல்லை
சேதாரம் இல்லை
ஜிஎஸ்டி வரி இல்லை.
வருமான வரிவிலக்கு சலுகை உண்டு.
5 ஆண்டுகளுக்குப் பின் ஆண்டுக்கு 2.50% வட்டி வருவாய் ஈட்டித்தரும்.
8 ஆண்டுகள் கழித்து அன்றைய தங்க மதிப்புக்கு ஈடான தங்கமும் கிடைக்கும்.
எவ்வளவு வாங்கலாம்?
- 1 கிராம் – 4 கிலோ வரை தனிநபர் தங்கப்பத்திரம் கூட வாங்கிக் கொள்ளலாம்.
- உடைட் போன்ற அரசால் குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் 20 கிலோ வரை தங்கப்பத்திரம் வாங்கிக் கொள்ளலாம்
- சாதாரண தங்கத்தைப் போன்றே இதை விற்கலாம், வங்கிகளில் அடகும் வைக்கலாம். கைமாற்றவும் செய்யலாம்.
- தங்க பத்திரமாக வாங்கும்போது உங்களுக்கு வரி விலக்கும் உண்டு என்றால் அது கூடுதல் சிறப்பு அம்சம் தான் என முதலீட்டு ஆலோசகர் சதீஷ் விளக்கமளித்தார்.

பட மூலாதாரம், Getty Images
சேமிப்பா? முதலீடா?
நீங்கள் மகளுக்கோ, மகனுக்கோ திருமணத்துக்காகவோ, விசேஷத்துக்காகவோ நகை சேர்ப்பவர்களாக இருக்கலாம். யாருக்கேனும் மொய், முறை, சீர் செய்யவதற்காக நகை சேர்ப்பவராக இருந்தாலும். பின்னாளில் ஒரு தொழில் மேம்பாட்டுக்கோ, இடம் வாங்கவோ, வீடு கட்டவோ, குழந்தைகளின் மேல் படிப்புக்காகவோ பணம் சேர்க்கவோ உங்கள் சேமிப்பை தங்கத்தில் முதலீடு செய்பவராக இருக்கலாம். நீங்கள் தங்க பத்திரத்தை ஒரு வாய்ப்பாக தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
கணினி மயமான தங்கம் கூட நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் உதாரணத்துக்கு paytm போன் பே, கூகுள் பே உள்ளிட்ட செயலிகளிலும் உங்களது இணைய வங்கி கணக்குகளிலும் கூட நீங்கள் SGB (Soverign Gold Bond) என்ற தங்க பத்திரம் வாங்கிக் கொள்ளலாம். அதன்மூலம் 50 ரூபாய் 100 ரூபாய் என தள்ளுபடியும் பெறலாம்.
Source: BBC.com