Press "Enter" to skip to content

இந்தியா – ஆஸ்திரேலியா நாளை மோதல்: டிராவிட், ஷமியுடன் ரோஹித் சர்மா உரையாடியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நிறைவுறும் கட்டத்தை நெருங்கியுள்ளது. சாம்பியன் பட்டத்திற்காக ஆமதாபாத்தில் நரேந்திர மோதி மைதானத்தில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியை மைதானத்தில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்கள் திரண்டு நேரில் பார்க்கவிருக்கிறார்கள்.

உலகக்கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்ட இந்தியா, தொடக்கம் முதலே அபாரமாக ஆடி அனைத்து ஆட்டங்களிலும் எளிதாக வென்று இறுதிப்போட்டியை அடைந்திருக்கிறது. மறுபுறம் ஆஸ்திரேலிய அணியோ, முதலிரு போட்டிகளிலும் தோற்ற பிறகு எழுச்சி பெற்று தொடர் வெற்றிகளைக் குவித்து இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது. இரு அணிகளுமே சாம்பியன் பட்டத்தை வெல்ல தீவிரமாக தயாராகி வருகின்றன.

“டிராவிட்டிற்காக கோப்பை வெல்ல விரும்புகிறோம்”

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

நாளை இறுதிப்போட்டி என்னும் நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, இந்திய அணியின் தொடர் வெற்றியிலும், தனது மட்டையாட்டம்கிலும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆற்றிய பங்கை சுட்டிக்காட்டினார். “நான் தொடர்ந்து பேசும் தெளிவைப் பெறுவதில் அவரது (டிராவிடின்] பங்கு மிகப்பெரியது. சில விஷயங்களில் பயிற்சியாளருடன் ஒத்துப் போகாது என்பது இயல்புதான். ராகுல் டிராவிட் கிரிக்கெட் ஆடிய காலமும் தற்போதைய காலமும் மிகவும் மாறுபட்டதாக இருக்கிறது. எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை தந்துள்ளார் என்பதே அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் கூறுகிறது. “

பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில், 2022ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை இந்தியா முன்னேறியது, ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்தது. அதன் பின்னர் எழுச்சி பெற்று நடப்பு ஒருநாள் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட ராகுல் டிராவிட் எவ்வாறு உதவினார் என்பதையும் ரோஹித் சர்மா கூறினார்.

“கடினமான காலங்களில் வீரர்களுக்கு ஆதரவாக அவர் நின்றார், குறிப்பாக டி20 உலகக் கோப்பையின் போதும் அதற்குப் பிறகும்,” என்று கூறிய ரோஹித், “டி20 உலகக்கோப்பையில் நாங்கள் அரையிறுதி வரை நன்றாக முன்னேறிய நாங்கள் பின்னர் தோற்றோம். அதுபோன்ற சூழலில் அவர் எவ்வாறு எதிர்வினையாற்றினார்? நாங்கள் எப்படி விளையாட வேண்டும்? என்பதைப் பற்றி வீரர்களுக்கு எடுத்துக் கூறியது அவரைப் பற்றி உணர்த்தியது” என்றார்.

“இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் செய்தது மிகப்பெரியது. அவரும் உலகக்கோப்பையை வெல்லும் பெரிய தருணத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார். அவருக்காக அதை நாங்கள் செய்ய வேண்டும்.” என்று ரோகித் சர்மா கூறினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

ஷமியுடன் உரையாடியது என்ன? – ரோஹித் விளக்கம்

நடப்புத் தொடரில் இந்திய அணிக்கு மட்டையாட்டம்கில் முன்மாதிரியாக திகழும் ரோஹித் சர்மா, தொடக்கத்திலேயே அதிரடி காட்டி எதிரணி பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை குலைத்து, அணிக்கு வலுவான அடித்தளம் அமைக்கிறார். இந்திய அணியில் தொடக்கத்தில் சேர்க்கப்படாமல், நான்காவது போட்டிக்குப் பின்னர் அணிக்குள் புயலாக நுழைந்த முகமது ஷமி பந்துவீச்சில் பெரிய மாற்றத்தையே உண்டாக்கி விட்டார். 7 ஆட்டங்கள் மட்டுமே விளையாடியுள்ள அவர் 23 மட்டையிலக்குடுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார். ஆடும் லெவனில் விளையாட வாய்ப்பு கிடைக்காத தொடக்க ஆட்டங்களில் ஷமியுடன் தான் உரையாடியது பற்றியும் ரோஹித் எடுத்துரைத்தார்.

“உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டங்களில் விளையாடாதது அவருக்கு கடினமாக இருந்தது. ஆனால் அவர் அணிக்கானவராக இருந்தார். சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோருக்கு தன்னால் முடிந்த வழிகளில் அவர் உதவினார். அவர் அணிக்கான ஒரு வீரர் என்பதை அது காட்டுகிறது. தொடக்க போட்டிகளை அவர் ஏன் தவறவிட்டார் என்பது உள்பட எல்லாவற்றையும் பற்றி நாங்கள் அரட்டை அடித்தோம்.

பின்னர் அவர் தனது பந்துவீச்சில் என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். உலகக் கோப்பைக்கு முன்பும் இப்போதும் கூட ஷமி எந்த வகையான மனநிலையில் இருந்தார் என்பதை இது காட்டுகிறது. அணியில் இடம் பெறாமல் இருப்பதும் வெளியேறுவதும் அவ்வளவு எளிதானது அல்ல. நீங்கள் ஒரு குழு விளையாட்டை விளையாடும்போது, சில வீரர்கள் சில சந்தர்ப்பங்களை ஏன் தவறவிடுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். ஏனெனில் உங்கள் ஆடும் லெவனை தீர்மானிப்பதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. இது நீங்கள் உருவாக்க விரும்பும் ஆடும் லெவன் என்பது எதிரணி மற்றும் அணியின் சமநிலையைப் பொறுத்தது தான்.” என்று அவர் கூறினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

இந்திய ரசிகர்களை சமாளிக்க ஆஸி. புதிய வியூகம்

ரோஹித், ஷமி மற்றும் கோலி, ஸ்ரேயாஸ் உள்ளிட்ட மற்ற அணி வீரர்கள் கடைசி ஆட்டத்திலும் மாயாஜாலத்தை உருவாக்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. ஆனால் லீக் கட்டங்களில் தொடக்க தோல்விகளுக்குப் பிறகு எழுச்சி பெற்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேநேரத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு மட்டையாட்டம், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் வலுவாக உள்ள இந்திய அணியும், மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக ஆரவாரம் செய்யும் ரசிகர் கூட்டமும் பெரும் சவாலாகவே இருக்கும். இந்திய ரசிகர்களை சமாளிக்க என்ன உத்தி வகுத்துள்ளோம் என்பதை செய்தியாளர் சந்திப்பில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் விளக்கினார்.

“ரசிகர் கூட்டம் ஒரு பக்கச் சார்பாகவே இருக்கும் என்பது வெளிப்படை. ஆனால் விளையாட்டில் ஒரு பெரிய கூட்டம் அமைதியாக இருப்பதைக் கேட்பதை விட திருப்திகரமானது வேறு எதுவும் இல்லை. அதுதான் நாளை எங்களது நோக்கம். என்ன நடந்தாலும் சரி, நீங்கள் எந்த வருத்தமும் இல்லாமல் அந்த நாளை முடிக்கவே விரும்புவீர்கள்.” என்றார் கம்மின்ஸ்.

நடப்பு உலகக்கோப்பையில் இந்தியாவுடன் மோதிய லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்புள்ள முதன்மையான அணியாக இந்திய அணியே கிரிக்கெட் நிபுணர்களால் கணிக்கப்படுகிறது. அதேநேரத்தில், பேட் கம்மின்ஸோ, தங்களது அணி இன்னும் முழு திறனை வெளிப்படுத்தவில்லை என்பதால் இறுதிப்போட்டியில் உச்சக்கட்ட செயல் திறனை வெளிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயங்களில் ஒன்று, நாங்கள் முழுமையான விளையாட்டை விளையாடியதைப் போல் இன்னும் நான் உணரவில்லை. ஒருவேளை நெதர்லாந்திற்கு எதிராக இருக்கலாம், ஆனால் அதற்கு வெளியே பெரிய வெற்றிகள் எதுவும் இல்லை, ஒவ்வொரு வெற்றிக்கும் நாங்கள் போராட வேண்டியிருந்தது, மேலும் வெற்றிக்கான வழியை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம், மேலும் வெவ்வேறு வீரர்கள் வெவ்வேறு நேரங்களில் சிறப்பாக ஆடினார்கள். எந்தவொரு அணிக்கும் சவால் விடுவதற்கு நாங்கள் எப்போதும் சிறந்தவர்களாக இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்து, அந்த நம்பிக்கையை எடுத்துக்கொள்வதாக நினைக்கிறேன்.” என்று அவர் கூறினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம், Getty Images

ஆமதாபாத் ஆடுகளம் எப்படி?

ஆமதாபாத் ஆடுகளத்தை பரிசோதித்தது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிப்பதில் தனக்கு எந்த நிபுணத்துவமும் இல்லை என்று கம்மின்ஸ் ஒப்புக்கொண்டாலும் இறுதிப் போட்டி அதிக ஸ்கோர் கொண்டதாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவின் இரவு நேரத்தில் விளக்கு ஒளியில் பந்து வீச நேரிடுவது ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

“நாங்கள் விளையாடும் மற்ற பல இடங்களை விட இந்த நகரமும் மற்றும் இடமும் அதிக பனி கொண்டதாக தெரிகிறது. இது நாளைய போட்டி பற்றி சிந்திக்க வேண்டிய ஒன்று. அது ஆட்டத்தின் கடைசிப் பகுதியில் மட்டுமே இருக்கலாம். முதல் 20 ஓவர்களில் பந்து எங்கே ஸ்விங் ஆகும் என்று கணிப்பது முற்றிலும் வித்தியாசமானது.” என்று கம்மின்ஸ் குறிப்பிட்டார்.

ஒருநாள் உலகக்கோப்பையில் இரு அணிகளும் சந்தித்த 2003-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று மகுடம் சூடியது. அதற்குப் பதிலடியாக நாளை ஆஸ்திரேலியாவை வென்று இந்தியா மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று 140 கோடி இந்தியர்களும் விரும்புகின்றனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »